பிரபந்த தனியன்கள்

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

   பாசுரங்கள்


    சில்மொழி நோயோ*  கழி பெருந் தெய்வம்,*  இந் நோய் இனது என்று-
    இல் மொழி கேட்கும்*  இளந் தெய்வம் அன்று இது*  வேல! நில் நீ- 

    என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான்
    சொல் மொழி, மாலை*  அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே. 


    சூட்டு நல் மாலைகள்*  தூயன ஏந்தி,*  விண்ணோர்கள் நல் நீர்-
    ஆட்டி*  அம் தூபம் தராநிற்கவே அங்கு,*  ஓர் மாயையினால்- 

    ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன்*
    கோட்டிடை ஆடினை கூத்து*  அடல் ஆயர் தம் கொம்பினுக்கே.


    கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம்*  வேட்டை கொண்டாட்டு- 
    அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர்*  புள் ஊரும் கள்வர்-

    தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன* 
    வம்பு ஆர் வினாச் சொல்லவோ,*  எம்மை வைத்தது இவ் வான் புனத்தே? 


    புனமோ? புனத்து அயலே*  வழிபோகும் அரு வினையேன்*
    மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர்,*  புண்டரீகத்து அம் கேழ்-

    வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும்*  தெய்வத்து-
    இனம் ஓர் அனையீர்களாய்,*  இவையோ நும் இயல்வுகளே?


    இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும்,*  ஒரோ குடங்கைக்-
    கயல் பாய்வன*  பெரு நீர்க் கண்கள் தம்மொடும்,*  குன்றம் ஒன்றால்-

    புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க்*
    கொயல்வாய் மலர்மேல்,*  மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே? 


    எம் கோல் வளை முதலா,*  கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்*
    செங்கோல் வளைவு விளைவிக்குமால்,*  திறல் சேர் அமரர்- 

    தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்*
    நம் கோன் உகக்கும் துழாய்,*  என் செய்யாது இனி நானிலத்தே?


    நானிலம் வாய்க் கொண்டு*  நல் நீர் அற மென்று கோது கொண்ட,*
    வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை,*  கடந்த பொன்னே!- 

    கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது* அம் பூந்-
    தேன் இளஞ் சோலை அப்பாலது,*  எப்பாலைக்கும் சேமத்ததே. 


    சேமம் செங்கோன் அருளே,*  செறுவாரும் நட்பு ஆகுவர் என்று- 
    ஏமம் பெற வையம்*  சொல்லும் மெய்யே,*  பண்டு எல்லாம் அறை கூய்- 

    யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த்*
    தாமம் புனைய,*  அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே.


    தண் அம் துழாய்*  வளை கொள்வது யாம் இழப்போம்,*  நடுவே-
    வண்ணம் துழாவி*  ஓர் வாடை உலாவும்,*  வள் வாய் அலகால்-

    புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா! அருளாய்*  
    எண்ணம் துழாவுமிடத்து,*  உளவோ பண்டும் இன்னன்னவே? 


    இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று* 
    அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும்,*  நீலம் உண்ட-

    மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா*
    அன்னன்ன நீர்மைகொலோ,*  குடிச் சீர்மை இல் அன்னங்களே! 


    அன்னம் செல்வீரும்*  வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்* 
    முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ*  கண்ணன் வைகுந்தனோடு-

    என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி*  அவரிடை நீர்-
    இன்னம் செல்லீரோ,*  இதுவோ தகவு? என்று இசைமின்களே!


    இசைமின்கள் தூது என்று*  இசைத்தால் இசையிலம்,*  என் தலைமேல்-
    அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்,*  அம் பொன் மா மணிகள்-

    திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள்*  சிமயம் 
    மிசை*  மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே!


    மேகங்களோ! உரையீர்,*  திருமால் திருமேனி ஒக்கும்*
    யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்,*  உயிர் அளிப்பான்- 

    மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து*  நும் தம்-
    ஆகங்கள் நோவ,*  வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே? 


    அருள் ஆர் திருச் சக்கரத்தால்*  அகல் விசும்பும் நிலனும்*
    இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்,*  ஈங்கு ஓர் பெண்பால்-

    பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?*
    தெருளோம் அரவணையீர்,*  இவள் மாமை சிதைக்கின்றதே.


    சிதைக்கின்றது ஆழி*  என்று ஆழியைச் சீறி,*  தன் சீறடியால்-
    உதைக்கின்ற நாயகம்*  தன்னொடு மாலே,*  உனது தண் தார்-

    ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்ப்* 
    பதைக்கின்ற மாதின்திறத்து*  அறியேன் செயற்பாலதுவே.


    பால் வாய்ப் பிறைப் பிள்ளை*  ஒக்கலைக் கொண்டு,*  பகல் இழந்த-
    மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை*  உலகு அளந்த-

    மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்*
    சோல்வான் புகுந்து,*  இது ஓர் பனி வாடை துழாகின்றதே.


    துழா நெடும் சூழ் இருள் என்று,*  தம் தண் தார் அது பெயரா- 
    எழா நெடு ஊழி*  எழுந்த இக் காலத்தும்,*  ஈங்கு இவளோ-

    வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ!*  இலங்கைக்-
    குழா நெடு மாடம்,*  இடித்த பிரானார் கொடுமைகளே! 


    கொடுங் கால் சிலையர்*  நிரைகோள் உழவர்,  கொலையில் வெய்ய*
    கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து,*  அரு வினையேன்-

    நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற* 
    தொடுங்கால் ஒசியும் இடை,*  இளமான் சென்ற சூழ் கடமே. 


    கடம் ஆயினகள் கழித்து,*  தன் கால் வன்மையால் பல நாள்*
    தடம் ஆயின புக்கு*  நீர் நிலைநின்ற தவம் இதுகொல்,* 

    குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து* 
    நடமாடிய பெருமான்,*  உரு ஒத்தன நீலங்களே.


    நீலத் தட வரைமேல்*  புண்டரீக நெடுந் தடங்கள்-
    போலப்,*  பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்,*  பொங்கு முந்நீர்-

    ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்* 
    கோலம் கரிய பிரான்,*  எம் பிரான் கண்ணின் கோலங்களே. 


    கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய,*  குழாம் விரிந்த-
    நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன,*  நேரிழையீர்!- 

    ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே*
    ஏலப் புனைந்து என்னைமார்,*  எம்மை நோக்குவது என்றுகொலோ!


    என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்,*  இவ்வாறு வெம்மை-
    ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்,*  ஓங்கு அசுரர்-

    பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்* 
    மன்றில் நிறை பழி தூற்றி,*  நின்று என்னை வன் காற்று அடுமே. 


    வன் காற்று அறைய*  ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த,*
    மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன,*  மண்ணும் விண்ணும்-

    என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த*
    தன் கால் பணிந்த என்பால்,*  எம் பிரான தடங் கண்களே. 


    கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே,* 
    வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று,*  மதி விகற்பால்-

    விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
    எண்ணும் இடத்ததுவோ,*  எம்பிரானது எழில் நிறமே?


    நிறம் உயர் கோலமும்*  பேரும் உருவும் இவைஇவை என்று,*
    அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும்,*  அங்கு அங்கு எல்லாம்-

    உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்*
    பெற முயன்றார் இல்லையால்,*  எம்பிரான பெருமையையே. 


    பெருங் கேழலார் தம்*  பெருங் கண் மலர்ப் புண்டரீகம்*  நம் மேல்-
    ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம்,*  ஒருவர் நம் போல்-

    வருங் கேழ்பவர் உளரே? தொல்லை வாழியம் சூழ் பிறப்பு*
    மருங்கே வரப் பெறுமே,*  சொல்லு வாழி மட நெஞ்சமே! 


    மட நெஞ்சம் என்றும் தமது என்றும்,*  ஓர் கருமம் கருதி- 
    விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்,*  அப்பொன்பெயரோன்-

    தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட*  போய்- 
    திட நெஞ்சம் ஆய்,*  எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே.


    திரிகின்றது வட மாருதம்,*  திங்கள் வெம் தீ முகந்து*
    சொரிகின்றது அதுவும் அது*  கண்ணன் விண்ணூர் தொழவே- 

    சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை*
    விரிகின்றது முழு மெய்யும்,*  என் ஆம் கொல் என் மெல்லியற்கே? 


    மெல்லியல் ஆக்கைக் கிருமிக்,*  குருவில் மிளிர்தந்து ஆங்கே*
    செல்லிய செல்கைத்து உலகை என் காணும்,*  என்னாலும் தன்னைச்-

    சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்?* 
    பல்லியின் சொல்லும் சொல்லாக்*  கொள்வதோ உண்டு பண்டுபண்டே.


    பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும்,*  இப் பாய் இருள் போல்- 
    கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம்,*  காள வண்ண-

    வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்*
    உண்டும் உமிழ்ந்தும் கடாய,*  மண் நேர் அன்ன ஒள் நுதலே! 


    ஒள் நுதல் மாமை*  ஒளி பயவாமை, விரைந்து நம் தேர்*
    நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று,*  தேன் நவின்ற-

    விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்*
    மண் முதல் சேர்வுற்று,*  அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே.


    மலை கொண்டு மத்தா அரவால்*  சுழற்றிய மாயப் பிரான்.*
    அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல்,*  பரதர்-

    விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையா* 
    துலை கொண்டு தாயம் கிளர்ந்து,*  கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.


    அழைக்கும் கருங் கடல்*  வெண் திரைக் கைக்கொண்டு போய்,*  அலர்வாய்-
    மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற,*  மண் மாதர் விண்வாய்-

    அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய்* 
    மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே!


    வார் ஆயின முலையாள் இவள்*  வானோர் தலைமகன் ஆம்,*
    சீர் ஆயின தெய்வ நல் நோய் இது,*  தெய்வத் தண் அம் துழாய்த்-

    தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும்*  கீழ்-
    வேர் ஆயினும்,*  நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே


    வீசும் சிறகால் பறத்தீர்,*  விண் நாடு நுங்கட்கு எளிது* 
    பேசும் படி அன்ன பேசியும் போவது,*  நெய் தொடு உண்டு- 

    ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்*
    மாசு இல் மலர் அடிக்கீழ்,*  எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே


    வண்டுகளோ! வம்மின்*  நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ*
    உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்,*  ஏனம் ஒன்றாய்-

    மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்* 
    விண்டு கள் வாரும்,*  மலர் உளவோ நும் வியலிடத்தே? 


    வியலிடம் உண்ட பிரானார்*  விடுத்த திருவருளால்,*
    உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி,*  ஓர் தண் தென்றல் வந்து- 

    அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்*
    புயலுடை நீர்மையினால்,*  தடவிற்று என் புலன் கலனே.


    புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை,*  வல்லி ஒன்றால்-
    விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன,*  கண்ணன் கையால்-

    மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்* 
    கலக்குண்ட நான்று கண்டார்,*  எம்மை யாரும் கழறலரே. 


    கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று,*  ஒரு கழல் போய்-
    நிழல் தர*  எல்லா விசும்பும் நிறைந்தது,*  நீண்ட அண்டத்து-

    உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா*
    அழறு அலர் தாமரைக் கண்ணன்,*  என்னோ இங்கு அளக்கின்றதே? 


    அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல்,*  அம் தண்ணம் துழாய்க்கு-
    உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள,*  ஓங்கு முந்நீர்-

    வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்*
    தளப் பெரு நீள் முறுவல்,*  செய்ய வாய தட முலையே.


    முலையோ முழு முற்றும் போந்தில,*  மொய் பூங் குழல் குறிய- 
    கலையோ அரை இல்லை நாவோ குழறும்,*  கடல் மண் எல்லாம்-

    விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!*  பெருமான்-
    மலையோ*  திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)


    வாசகம் செய்வது நம்பரமே?*  தொல்லை வானவர் தம்-
    நாயகன்*  நாயகர் எல்லாம் தொழும் அவன்,*  ஞாலம் முற்றும்- 

    வேய் அகம் ஆயினும் சோராவகை*  இரண்டே அடியால்-
    தாயவன்,*  ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே.


    இறையோ இரக்கினும்*  ஈங்கு ஓர் பெண்பால்,*  எனவும் இரங்காது,- 
    அறையோ! என*  நின்று அதிரும் கருங்கடல்,*  ஈங்கு இவள் தன்-

    நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி*  காப்பு அரிதால்- 
    முறையோ,*  அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே!


    வண்ணம் சிவந்துள*  வான் நாடு அமரும் குளிர் விழிய,* 
    தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன,*  தாம் இவையோ- 

    கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு*
    எண்ணம் புகுந்து,*  அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே.


    இருக்கு ஆர் மொழியால்*  நெறி இழுக்காமை,* உலகு அளந்த-
    திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர்,*  யாமும் அவா-

    ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்* 
    கருக்காய் கடிப்பவர் போல்,*  திருநாமச் சொல் கற்றனமே. 


    கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று,*  ஒரோ கருமம்-
    உற்றுப் பயின்று செவியொடு உசாவி,*  உலகம் எல்லாம்-

    முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*
    உற்றும் உறாதும்,*  மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே!


    உண்ணாது உறங்காது*  உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
    எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம்,*  எரி நீர் வளி வான்-

    மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்*
    கண் ஆய் அருவினையேன்,*  உயிர் ஆயின காவிகளே. 


    காவியும் நீலமும்*  வேலும் கயலும் பலபல வென்று,*
    ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு,*  அசுரைச் செற்ற-

    மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்*
    தூவி அம் பேடை அன்னாள்,*  கண்கள் ஆய துணைமலரே. 


    மலர்ந்தே ஒழிந்தில*  மாலையும் மாலைப் பொன் வாசிகையும்*
    தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி,*  பொரு கடல் சூழ்-

    தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்!*
    கலந்தார் வரவு எதிர் கொண்டு,*  வன் கொன்றைகள் கார்த்தனவே. 


    கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,*  வெல்வான்-
    ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை,*  புவனி எல்லாம்-

    ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?*
    வார் ஏற்று இளமுலையாய்,*  வருந்தேல் உன் வளைத்திறமே. 


    வாய்த் திருச் சக்கரத்து*  எங்கள் வானவனார் முடிமேல்,*
    வாய் நறுங் கண்ணித்*  தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை,*

    வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க*  எம்மை-
    உளைவான் புகுந்து,*  இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே.


    ஊழிகள் ஆய்*  உலகு ஏழும் உண்டான் என்றிலம்,*  பழம் கண்டு-
    ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு,*  அஃதே கொண்டு அன்னை-

    நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்*
    தோழிகளோ! உரையீர்,*  எம்மை அம்மனை சூழ்கின்றவே. 


    சூழ்கின்ற கங்குல்*  சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்,*
    போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க,*  துழாய் மலர்க்கே-

    தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று*
    வாழ்கின்ற ஆறு இதுவோ,*  வந்து தோன்றிற்று வாலியதே.


    வால் வெண் நிலவு*  உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்,*
    விண் சுரவி சுர முதிர் மாலை,*  பரிதி வட்டம்-

    போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்* 
    சால்பின் தகைமைகொலாம்,*  தமியாட்டி தளர்ந்ததுவே? 


    தளர்ந்தும் முறிந்தும்*  வரு திரைப் பாயல்,*  திரு நெடுங் கண்-
    வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,*  மால் வரையைக்-

    கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்*
    அளைந்து உண் சிறு பசுந் தென்றல்,*  அந்தோ வந்து உலாகின்றதே!


    உலாகின்ற கெண்டை ஒளி அம்பு*  எம் ஆவியை ஊடுருவக்-
    குலாகின்ற*  வெஞ்சிலை வாள் முகத்தீர்,*  குனி சங்கு இடறிப்-

    புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான்*  அடியார்-
    நிலாகின்ற வைகுந்தமோ,*  வையமோ நும் நிலையிடமே?


    இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான்*  எழில் ஆர் தண் துழாய்,*
    வடம் போது இனையும் மட நெஞ்சமே,*  நங்கள் வெள் வளைக்கே-

    விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்*
    தடம் போது ஒடுங்க,*  மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே. 


    திங்கள் அம் பிள்ளை புலம்ப*  தன் செங்கோல் அரசு பட்ட*
    செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை,*  தென்பால் இலங்கை-

    வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா*
    நங்களை மாமை கொள்வான்,*  வந்து தோன்றி நலிகின்றதே. 


    நலியும் நரகனை வீட்டிற்றும்,*  வாணன் திண் தோல் துணித்த*
    வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல,*  மை வரை போல்-

    பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே*
    மெலியும் மட நெஞ்சினார்,*  தந்து போயின வேதனையே! 


    வேதனை வெண் புரி நூலனை,*  விண்ணோர் பரவ நின்ற-
    நாதனை*  ஞாலம் விழுங்கும் அநாதனை,*  ஞாலம் தத்தும்-

    பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்*
    சீதனையே தொழுவார்,*  விண்ணுளாரிலும் சீரியரே. 


    சீர் அரசு ஆண்டு*  தன் செங்கோல் சில நாள்*  செலீஇக் கழிந்த,- 
    பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு,*  பார் அளந்த- 

    பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த* 
    ஓர் அரசே! அருளாய்,*  இருளாய் வந்து உறுகின்றதே.


    உறுகின்ற கன்மங்கள்*  மேலன ஓர்ப்பிலராய்,*  இவளைப்-
    பெறுகின்ற தாயர்*  மெய்ந் நொந்து பெறார்கொல்*  துழாய் குழல்வாய்த்-

    துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்*  சூழ்கின்றிலர்* 
    இறுகின்றதால் இவள் ஆகம்,*  மெல் ஆவி எரி கொள்ளவே.


    எரி கொள் செந் நாயிறு*  இரண்டு உடனே உதய மலைவாய்,* 
    விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள்,*  மீண்டு அவற்றுள்-

    எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*
    விரிவ சொல்லீர் இதுவோ,*  வையம் முற்றும் விளரியதே? 


    விளரிக் குரல் அன்றில்*  மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை,*
    முளரிக் குரம்பை இதுஇதுவாக,*  முகில் வண்ணன் பேர்-

    கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்* 
    தளரின் கொலோ அறியேன்,*  உய்யல் ஆவது இத் தையலுக்கே!


    தையல் நல்லார்கள் குழாங்கள்*  குழிய குழுவினுள்ளும்,* 
    ஐய நல்லார்கள் குழிய விழவினும்,*  அங்கு அங்கு எல்லாம்-

    கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்* 
    மைய வண்ணா! மணியே,*  முத்தமே! என் தன் மாணிக்கமே! 


    மாணிக்கம் கொண்டு*  குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி,* 
    ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை,*  உலகு அளந்த-

    மாணிக்கமே! என் மரகதமே! மற்று ஒப்பாரை இல்லா*
    ஆணிப்பொன்னே,*  அடியேன் அடி ஆவி அடைக்கலமே!


    அடைக் கலத்து ஓங்கு*  கமலத்து அலர் அயன் சென்னி என்னும்,*
    முடைக் கலத்து ஊண்*  முன் அரனுக்கு நீக்கியை,*  ஆழி சங்கம்-

    படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்*
    புடைக்கலந்தானை, எம்மானை*  என் சொல்லிப் புலம்புவனே? 


    புலம்பும் கன குரல்*  போழ் வாய அன்றிலும், பூங் கழி பாய்ந்து*
    அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும்,*  ஆங்கு அவை நின்-

    வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக*  வையம்-
    சிலம்பும்படி செய்வதே,*  திருமால் இத் திருவினையே?


    திருமால் உரு ஒக்கும் மேரு,*  அம் மேருவில் செஞ்சுடரோன்*
    திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும்,*  அன்ன கண்டும்- 

    திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்*
    திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,*  எங்கே வரும் தீவினையே?


    தீவினைக்கு ஆரு நஞ்சை*  நல் வினைக்கு இன் அமுதத்தினை,* 
    பூவினை மேவிய தேவி மணாளனைm,*  புன்மை எள்காது-

    ஆவினை மேய்க்கும் வல் ஆயனை*  அன்று உலகு ஈர் அடியால்-
    தாவின ஏற்றை எம்மானை*  எஞ்ஞான்று தலைப்பெய்வனே?


    தலைப்பெய்து யான் உன்*  திருவடி சூடும் தகைமையினால் ,*
    நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,*  மாயம் செவ்வே-

    நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
    தொலைப் பெய்த நேமி எந்தாய்,*  தொல்லை ஊழி சுருங்கலதே. 


    சுருங்கு உறி வெண்ணெய்*  தொடு உண்ட கள்வனை,*  வையம் முற்றும்
    ஒருங்குற உண்ட*  பெரு வயிற்றாளனை,*  மாவலிமாட்டு-

    இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
    பெருங் கிறியானை அல்லால்,*  அடியேன் நெஞ்சம் பேணலதே.


    பேண் நலம் இல்லா அரக்கர்*  முந்நீர பெரும் பதிவாய்,*
    நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,*  நின்னை விண்ணோர்- 

    தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
    காணலும் ஆம்கொல் என்றே,*  வைகல் மாலையும் காலையுமே.


    காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த*  கங்குல் குறும்பர்*
    மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,*  அன்ன கண்டும்- 
     

    காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து* 
    மாலை நல் நாவில் கொள்ளார்,*  நினையார் அவன் மைப் படியே.


    மைப் படி மேனியும்*  செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
    மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,* 

    எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
    அப்படி யானும் சொன்னேன்*  அடியேன் மற்று யாது என்பனே.? 


    யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
    மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 

    யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
    மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)


    வணங்கும் துறைகள்*  பல பல ஆக்கி,*  மதி விகற்பால்-
    பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,*  அவை அவைதோறு-

    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்* 
    இணங்கும் நின்னோரை இல்லாய்,*  நின்கண் வேட்கை எழுவிப்பனே


    எழுவதும் மீண்டே*  படுவதும் பட்டு,*  எனை ஊழிகள் போய்க்-
    கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,*  இமையோர்கள் குழாம்-

    தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு* 
    கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,*  உண்டோ கண்கள் துஞ்சுதலே? 


    துஞ்சா முனிவரும்*  அல்லாதவரும் தொடர நின்ற,*
    எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,*  இமையோர் தமக்கும்- 

    தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
    நெஞ்சால் நினைப்பு அரிதால்,*  வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.


    ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
    ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-

    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
    ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 


    நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
    வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-

    சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
    பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)