பிரபந்த தனியன்கள்
கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.
பாசுரங்கள்
அன்னம் செல்வீரும்* வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்*
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ* கண்ணன் வைகுந்தனோடு-
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி* அவரிடை நீர்-
இன்னம் செல்லீரோ,* இதுவோ தகவு? என்று இசைமின்களே!
இசைமின்கள் தூது என்று* இசைத்தால் இசையிலம்,* என் தலைமேல்-
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம்,* அம் பொன் மா மணிகள்-
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள்* சிமயம்
மிசை* மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே!
மேகங்களோ! உரையீர்,* திருமால் திருமேனி ஒக்கும்*
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்,* உயிர் அளிப்பான்-
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து* நும் தம்-
ஆகங்கள் நோவ,* வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே?
அருள் ஆர் திருச் சக்கரத்தால்* அகல் விசும்பும் நிலனும்*
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர்,* ஈங்கு ஓர் பெண்பால்-
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ?*
தெருளோம் அரவணையீர்,* இவள் மாமை சிதைக்கின்றதே.
சிதைக்கின்றது ஆழி* என்று ஆழியைச் சீறி,* தன் சீறடியால்-
உதைக்கின்ற நாயகம்* தன்னொடு மாலே,* உனது தண் தார்-
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்ப்*
பதைக்கின்ற மாதின்திறத்து* அறியேன் செயற்பாலதுவே.
பால் வாய்ப் பிறைப் பிள்ளை* ஒக்கலைக் கொண்டு,* பகல் இழந்த-
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை* உலகு அளந்த-
மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்*
சோல்வான் புகுந்து,* இது ஓர் பனி வாடை துழாகின்றதே.
துழா நெடும் சூழ் இருள் என்று,* தம் தண் தார் அது பெயரா-
எழா நெடு ஊழி* எழுந்த இக் காலத்தும்,* ஈங்கு இவளோ-
வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ!* இலங்கைக்-
குழா நெடு மாடம்,* இடித்த பிரானார் கொடுமைகளே!
கொடுங் கால் சிலையர்* நிரைகோள் உழவர், கொலையில் வெய்ய*
கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து,* அரு வினையேன்-
நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற*
தொடுங்கால் ஒசியும் இடை,* இளமான் சென்ற சூழ் கடமே.
கடம் ஆயினகள் கழித்து,* தன் கால் வன்மையால் பல நாள்*
தடம் ஆயின புக்கு* நீர் நிலைநின்ற தவம் இதுகொல்,*
குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து*
நடமாடிய பெருமான்,* உரு ஒத்தன நீலங்களே.
நீலத் தட வரைமேல்* புண்டரீக நெடுந் தடங்கள்-
போலப்,* பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும்,* பொங்கு முந்நீர்-
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்*
கோலம் கரிய பிரான்,* எம் பிரான் கண்ணின் கோலங்களே.
கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய,* குழாம் விரிந்த-
நீலக் கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன,* நேரிழையீர்!-
ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே*
ஏலப் புனைந்து என்னைமார்,* எம்மை நோக்குவது என்றுகொலோ!
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும்,* இவ்வாறு வெம்மை-
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம்,* ஓங்கு அசுரர்-
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்*
மன்றில் நிறை பழி தூற்றி,* நின்று என்னை வன் காற்று அடுமே.
வன் காற்று அறைய* ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த,*
மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன,* மண்ணும் விண்ணும்-
என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த*
தன் கால் பணிந்த என்பால்,* எம் பிரான தடங் கண்களே.
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே,*
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று,* மதி விகற்பால்-
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்*
எண்ணும் இடத்ததுவோ,* எம்பிரானது எழில் நிறமே?
நிறம் உயர் கோலமும்* பேரும் உருவும் இவைஇவை என்று,*
அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும்,* அங்கு அங்கு எல்லாம்-
உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும்*
பெற முயன்றார் இல்லையால்,* எம்பிரான பெருமையையே.
பெருங் கேழலார் தம்* பெருங் கண் மலர்ப் புண்டரீகம்* நம் மேல்-
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம்,* ஒருவர் நம் போல்-
வருங் கேழ்பவர் உளரே? தொல்லை வாழியம் சூழ் பிறப்பு*
மருங்கே வரப் பெறுமே,* சொல்லு வாழி மட நெஞ்சமே!
மட நெஞ்சம் என்றும் தமது என்றும்,* ஓர் கருமம் கருதி-
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும்,* அப்பொன்பெயரோன்-
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட* போய்-
திட நெஞ்சம் ஆய்,* எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே.
திரிகின்றது வட மாருதம்,* திங்கள் வெம் தீ முகந்து*
சொரிகின்றது அதுவும் அது* கண்ணன் விண்ணூர் தொழவே-
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை*
விரிகின்றது முழு மெய்யும்,* என் ஆம் கொல் என் மெல்லியற்கே?
மெல்லியல் ஆக்கைக் கிருமிக்,* குருவில் மிளிர்தந்து ஆங்கே*
செல்லிய செல்கைத்து உலகை என் காணும்,* என்னாலும் தன்னைச்-
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன்?*
பல்லியின் சொல்லும் சொல்லாக்* கொள்வதோ உண்டு பண்டுபண்டே.
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும்,* இப் பாய் இருள் போல்-
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம்,* காள வண்ண-
வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன்*
உண்டும் உமிழ்ந்தும் கடாய,* மண் நேர் அன்ன ஒள் நுதலே!
ஒள் நுதல் மாமை* ஒளி பயவாமை, விரைந்து நம் தேர்*
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று,* தேன் நவின்ற-
விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய்*
மண் முதல் சேர்வுற்று,* அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே.
மலை கொண்டு மத்தா அரவால்* சுழற்றிய மாயப் பிரான்.*
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல்,* பரதர்-
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையா*
துலை கொண்டு தாயம் கிளர்ந்து,* கொள்வான் ஒத்து அழைக்கின்றதே.
அழைக்கும் கருங் கடல்* வெண் திரைக் கைக்கொண்டு போய்,* அலர்வாய்-
மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற,* மண் மாதர் விண்வாய்-
அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய்*
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே!
வார் ஆயின முலையாள் இவள்* வானோர் தலைமகன் ஆம்,*
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது,* தெய்வத் தண் அம் துழாய்த்-
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும்* கீழ்-
வேர் ஆயினும்,* நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே.
வீசும் சிறகால் பறத்தீர்,* விண் நாடு நுங்கட்கு எளிது*
பேசும் படி அன்ன பேசியும் போவது,* நெய் தொடு உண்டு-
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்*
மாசு இல் மலர் அடிக்கீழ்,* எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே
வண்டுகளோ! வம்மின்* நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ*
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம்,* ஏனம் ஒன்றாய்-
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல்*
விண்டு கள் வாரும்,* மலர் உளவோ நும் வியலிடத்தே?
வியலிடம் உண்ட பிரானார்* விடுத்த திருவருளால்,*
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி,* ஓர் தண் தென்றல் வந்து-
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்*
புயலுடை நீர்மையினால்,* தடவிற்று என் புலன் கலனே.
புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை,* வல்லி ஒன்றால்-
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன,* கண்ணன் கையால்-
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்*
கலக்குண்ட நான்று கண்டார்,* எம்மை யாரும் கழறலரே.
கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று,* ஒரு கழல் போய்-
நிழல் தர* எல்லா விசும்பும் நிறைந்தது,* நீண்ட அண்டத்து-
உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா*
அழறு அலர் தாமரைக் கண்ணன்,* என்னோ இங்கு அளக்கின்றதே?
அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல்,* அம் தண்ணம் துழாய்க்கு-
உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள,* ஓங்கு முந்நீர்-
வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன்*
தளப் பெரு நீள் முறுவல்,* செய்ய வாய தட முலையே.
முலையோ முழு முற்றும் போந்தில,* மொய் பூங் குழல் குறிய-
கலையோ அரை இல்லை நாவோ குழறும்,* கடல் மண் எல்லாம்-
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே!* பெருமான்-
மலையோ* திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே? (2)
வாசகம் செய்வது நம்பரமே?* தொல்லை வானவர் தம்-
நாயகன்* நாயகர் எல்லாம் தொழும் அவன்,* ஞாலம் முற்றும்-
வேய் அகம் ஆயினும் சோராவகை* இரண்டே அடியால்-
தாயவன்,* ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே.
இறையோ இரக்கினும்* ஈங்கு ஓர் பெண்பால்,* எனவும் இரங்காது,-
அறையோ! என* நின்று அதிரும் கருங்கடல்,* ஈங்கு இவள் தன்-
நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி* காப்பு அரிதால்-
முறையோ,* அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே!
வண்ணம் சிவந்துள* வான் நாடு அமரும் குளிர் விழிய,*
தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன,* தாம் இவையோ-
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு*
எண்ணம் புகுந்து,* அடியேனொடு இக் காலம் இருக்கின்றவே.
இருக்கு ஆர் மொழியால்* நெறி இழுக்காமை,* உலகு அளந்த-
திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர்,* யாமும் அவா-
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்*
கருக்காய் கடிப்பவர் போல்,* திருநாமச் சொல் கற்றனமே.
கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று,* ஒரோ கருமம்-
உற்றுப் பயின்று செவியொடு உசாவி,* உலகம் எல்லாம்-
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்*
உற்றும் உறாதும்,* மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே!
உண்ணாது உறங்காது* உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்*
எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம்,* எரி நீர் வளி வான்-
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்*
கண் ஆய் அருவினையேன்,* உயிர் ஆயின காவிகளே.
காவியும் நீலமும்* வேலும் கயலும் பலபல வென்று,*
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு,* அசுரைச் செற்ற-
மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்*
தூவி அம் பேடை அன்னாள்,* கண்கள் ஆய துணைமலரே.
மலர்ந்தே ஒழிந்தில* மாலையும் மாலைப் பொன் வாசிகையும்*
தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி,* பொரு கடல் சூழ்-
தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்!*
கலந்தார் வரவு எதிர் கொண்டு,* வன் கொன்றைகள் கார்த்தனவே.
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து,* வெல்வான்-
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை,* புவனி எல்லாம்-
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே?*
வார் ஏற்று இளமுலையாய்,* வருந்தேல் உன் வளைத்திறமே.
வாய்த் திருச் சக்கரத்து* எங்கள் வானவனார் முடிமேல்,*
வாய் நறுங் கண்ணித்* தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை,*
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க* எம்மை-
உளைவான் புகுந்து,* இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே.
ஊழிகள் ஆய்* உலகு ஏழும் உண்டான் என்றிலம்,* பழம் கண்டு-
ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு,* அஃதே கொண்டு அன்னை-
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்*
தோழிகளோ! உரையீர்,* எம்மை அம்மனை சூழ்கின்றவே.
சூழ்கின்ற கங்குல்* சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்,*
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க,* துழாய் மலர்க்கே-
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று*
வாழ்கின்ற ஆறு இதுவோ,* வந்து தோன்றிற்று வாலியதே.
வால் வெண் நிலவு* உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்,*
விண் சுரவி சுர முதிர் மாலை,* பரிதி வட்டம்-
போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும்*
சால்பின் தகைமைகொலாம்,* தமியாட்டி தளர்ந்ததுவே?
தளர்ந்தும் முறிந்தும்* வரு திரைப் பாயல்,* திரு நெடுங் கண்-
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும்,* மால் வரையைக்-
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்*
அளைந்து உண் சிறு பசுந் தென்றல்,* அந்தோ வந்து உலாகின்றதே!
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு* எம் ஆவியை ஊடுருவக்-
குலாகின்ற* வெஞ்சிலை வாள் முகத்தீர்,* குனி சங்கு இடறிப்-
புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான்* அடியார்-
நிலாகின்ற வைகுந்தமோ,* வையமோ நும் நிலையிடமே?
இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான்* எழில் ஆர் தண் துழாய்,*
வடம் போது இனையும் மட நெஞ்சமே,* நங்கள் வெள் வளைக்கே-
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்*
தடம் போது ஒடுங்க,* மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே.
திங்கள் அம் பிள்ளை புலம்ப* தன் செங்கோல் அரசு பட்ட*
செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை,* தென்பால் இலங்கை-
வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா*
நங்களை மாமை கொள்வான்,* வந்து தோன்றி நலிகின்றதே.
நலியும் நரகனை வீட்டிற்றும்,* வாணன் திண் தோல் துணித்த*
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல,* மை வரை போல்-
பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே*
மெலியும் மட நெஞ்சினார்,* தந்து போயின வேதனையே!
வேதனை வெண் புரி நூலனை,* விண்ணோர் பரவ நின்ற-
நாதனை* ஞாலம் விழுங்கும் அநாதனை,* ஞாலம் தத்தும்-
பாதனை பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும்*
சீதனையே தொழுவார்,* விண்ணுளாரிலும் சீரியரே.
சீர் அரசு ஆண்டு* தன் செங்கோல் சில நாள்* செலீஇக் கழிந்த,-
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு,* பார் அளந்த-
பேர் அரசே! எம் விசும்பு அரசே! எம்மை நீத்து வஞ்சித்த*
ஓர் அரசே! அருளாய்,* இருளாய் வந்து உறுகின்றதே.
உறுகின்ற கன்மங்கள்* மேலன ஓர்ப்பிலராய்,* இவளைப்-
பெறுகின்ற தாயர்* மெய்ந் நொந்து பெறார்கொல்* துழாய் குழல்வாய்த்-
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும்* சூழ்கின்றிலர்*
இறுகின்றதால் இவள் ஆகம்,* மெல் ஆவி எரி கொள்ளவே.
எரி கொள் செந் நாயிறு* இரண்டு உடனே உதய மலைவாய்,*
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள்,* மீண்டு அவற்றுள்-
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும்*
விரிவ சொல்லீர் இதுவோ,* வையம் முற்றும் விளரியதே?
விளரிக் குரல் அன்றில்* மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை,*
முளரிக் குரம்பை இதுஇதுவாக,* முகில் வண்ணன் பேர்-
கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்*
தளரின் கொலோ அறியேன்,* உய்யல் ஆவது இத் தையலுக்கே!
தையல் நல்லார்கள் குழாங்கள்* குழிய குழுவினுள்ளும்,*
ஐய நல்லார்கள் குழிய விழவினும்,* அங்கு அங்கு எல்லாம்-
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான்*
மைய வண்ணா! மணியே,* முத்தமே! என் தன் மாணிக்கமே!
மாணிக்கம் கொண்டு* குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி,*
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை,* உலகு அளந்த-
மாணிக்கமே! என் மரகதமே! மற்று ஒப்பாரை இல்லா*
ஆணிப்பொன்னே,* அடியேன் அடி ஆவி அடைக்கலமே!
அடைக் கலத்து ஓங்கு* கமலத்து அலர் அயன் சென்னி என்னும்,*
முடைக் கலத்து ஊண்* முன் அரனுக்கு நீக்கியை,* ஆழி சங்கம்-
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்*
புடைக்கலந்தானை, எம்மானை* என் சொல்லிப் புலம்புவனே?
புலம்பும் கன குரல்* போழ் வாய அன்றிலும், பூங் கழி பாய்ந்து*
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும்,* ஆங்கு அவை நின்-
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக* வையம்-
சிலம்பும்படி செய்வதே,* திருமால் இத் திருவினையே?
திருமால் உரு ஒக்கும் மேரு,* அம் மேருவில் செஞ்சுடரோன்*
திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும்,* அன்ன கண்டும்-
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்*
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,* எங்கே வரும் தீவினையே?
தீவினைக்கு ஆரு நஞ்சை* நல் வினைக்கு இன் அமுதத்தினை,*
பூவினை மேவிய தேவி மணாளனைm,* புன்மை எள்காது-
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை* அன்று உலகு ஈர் அடியால்-
தாவின ஏற்றை எம்மானை* எஞ்ஞான்று தலைப்பெய்வனே?
தலைப்பெய்து யான் உன்* திருவடி சூடும் தகைமையினால் ,*
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,* மாயம் செவ்வே-
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
தொலைப் பெய்த நேமி எந்தாய்,* தொல்லை ஊழி சுருங்கலதே.
சுருங்கு உறி வெண்ணெய்* தொடு உண்ட கள்வனை,* வையம் முற்றும்
ஒருங்குற உண்ட* பெரு வயிற்றாளனை,* மாவலிமாட்டு-
இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
பெருங் கிறியானை அல்லால்,* அடியேன் நெஞ்சம் பேணலதே.
பேண் நலம் இல்லா அரக்கர்* முந்நீர பெரும் பதிவாய்,*
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,* நின்னை விண்ணோர்-
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
காணலும் ஆம்கொல் என்றே,* வைகல் மாலையும் காலையுமே.
காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த* கங்குல் குறும்பர்*
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,* அன்ன கண்டும்-
காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து*
மாலை நல் நாவில் கொள்ளார்,* நினையார் அவன் மைப் படியே.
மைப் படி மேனியும்* செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,*
எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
அப்படி யானும் சொன்னேன்* அடியேன் மற்று யாது என்பனே.?
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,* அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்*
மூது ஆவியில் தடுமாறும்* உயிர் முன்னமே,* அதனால்-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
மாதாவினை பிதுவை,* திருமாலை வணங்குவனே. (2)
வணங்கும் துறைகள்* பல பல ஆக்கி,* மதி விகற்பால்-
பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,* அவை அவைதோறு-
அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்*
இணங்கும் நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே
எழுவதும் மீண்டே* படுவதும் பட்டு,* எனை ஊழிகள் போய்க்-
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,* இமையோர்கள் குழாம்-
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு*
கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,* உண்டோ கண்கள் துஞ்சுதலே?
துஞ்சா முனிவரும்* அல்லாதவரும் தொடர நின்ற,*
எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,* இமையோர் தமக்கும்-
தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
நெஞ்சால் நினைப்பு அரிதால்,* வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.
ஈனச் சொல் ஆயினும் ஆக,* எறி திரை வையம் முற்றும்*
ஏனத்து உருவாய் இடந்த பிரான்,* இருங் கற்பகம் சேர்-
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
ஞானப் பிரானை அல்லால் இல்லை* நான் கண்ட நல்லதுவே (2)
நல்லார் நவில் குருகூர் நகரான்,* திருமால் திருப் பேர்-
வல்லார்* அடிக் கண்ணி சூடிய* மாறன் விண்ணப்பம் செய்த-
சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
பொல்லா அருவினை* மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)