பிரபந்த தனியன்கள்
கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து
பாசுரங்கள்
சரணா மறைபயந்த* தாமரையானோடு,*
மரண்ஆய மன்உயிர்கட்கு எல்லாம்,* - அரண்ஆய-
பேர்ஆழி கொண்ட* பிரான்அன்றி மற்றுஅறியாது,*
ஓர்ஆழி சூழ்ந்த உலகு.
உலகும்* உலகுஇறந்த ஊழியும்,* ஒண்கேழ்-
விலகு கருங்கடலும் வெற்பும்,* - உலகினில்-
செந்தீயும்* மாருதமும் வானும்,* திருமால்தன்-
புந்தியில்ஆய புணர்ப்பு.
புணர்மருதின் ஊடுபோய்* பூங்குருந்தம் சாய்த்து,*
மணம்மருவ மால் விடைஏழ் செற்று,* - கணம்வெருவ-
ஏழ் உலகும் தாயினவும்* எண்திசையும் போயினவும்,*
சூழ்அரவப் பொங்குஅணையான் தோள்.
தோள்அவனை அல்லால் தொழா,* என் செவிஇரண்டும்-
கேள்அவனது இன்மொழியே* கேட்டிருக்கும்,* - நாநாளும்-
கோணா கணையான்* குரைகழலே கூறுவதே,*
நாணாமை நள்ளேன் நயம்
நயவேன் பிறர்பொருளை* நள்ளேன் கீழாரோடு,*
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்* - வியவேன்-
திருமாலை அல்லது* தெய்வம் என்றுஏத்தேன்,*
வரும்ஆறு என் என்மேல் வினை?
வினையால் அடர்ப்படார்* வெம்நரகில் சேரார்,*
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார்,* - நினைதற்கு-
அரியானை* சேயானை,* ஆயிரம்பேர்ச் செங்கண்-
கரியானைக்* கைதொழுதக் கால்
காலை எழுந்து* உலகம் கற்பனவும்,* கற்றுஉணர்ந்த-
மேலைத் தலைமறையோர்* வேட்பனவும்,* - வேலைக்கண்-
ஓர்ஆழி யான்அடியே* ஓதுவதும் ஓர்ப்பனவும்,*
பேர்ஆழி கொண்டான் பெயர்.
பெயரும் கருங்கடலே நோக்கும்ஆறு,* ஒண்பூ-
உயரும்* கதிரவனே நோக்கும்,* உயிரும்-
தருமனையே நோக்கும்* ஒண்தாமரையாள் கேள்வன்,*
ஒருவனையே நோக்கும் உணர்வு
உணர்வார் ஆர் உன்பெருமை?* ஊழி தோறுஊழி,*
உணர்வார் ஆர் உன்உருவம் தன்னை?,* உணர்வார்ஆர்-
விண்ணகத்தாய்!* மண்ணகத்தாய்!* வேங்கடத்தாய்!* நால்வேதப்-
பண்ணகத்தாய்!* நீகிடந்த பால்?
பாலன் தனதுஉருவாய்* ஏழ்உலகுஉண்டு,* ஆல்இலையின்-
மேல்அன்று நீவளர்ந்த மெய்என்பர்,* - ஆல்அன்று-
வேலை நீர்உள்ளதோ* விண்ணதோ? மண்ணதோ?*
சோலைசூழ் குன்றுஎடுத்தாய் சொல்லு
சொல்லும் தனையும்* தொழுமின் விழும்உடம்பு,*
செல்லும் தனையும் திருமாலை,* - நல்இதழ்த்-
தாமத்தால் வேள்வியால்* தந்திரத்தால் மந்திரத்தால்,*
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று.
நன்று பிணிமூப்புக்* கையகற்றி நான்குஊழி,*
நின்று நிலம்முழுதும் ஆண்டாலும்,* என்றும்-
விடல்ஆழி நெஞ்சமே!* வேண்டினேன் கண்டாய்,*
அடல்ஆழி கொண்டான் மாட்டுஅன்பு.
அன்புஆழியானை* அணுகுஎன்னும், நா அவன்தன்*
பண்புஆழித் தோள்பரவி ஏத்துஎன்னும்,* முன்புஊழி-
காணானைக்* காண்என்னும் கண்செவி கேள்என்னும்*
பூண்ஆரம் பூண்டான் புகழ்.
புகழ்வாய் பழிப்பாய்* நீ பூந்துழாயானை,*
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே,* - திகழ்நீர்க்-
கடலும் மலையும்* இருவிசும்பும் காற்றும்,*
உடலும் உயிரும் ஏற்றான்.
ஏற்றான் புள்ஊர்ந்தான்* எயில்எரித்தான் மார்வுஇடந்தான்*
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான்,* - கூற்றுஒருபால்-
மங்கையான்* பூமகளான் வார்சடையான்,* நீள்முடியான்-
கங்கையான்* நீள்கழலான் காப்பு.
காப்பு உன்னைஉன்னக்* கழியும் அருவினைகள்,*
ஆப்பு உன்னைஉன்ன அவிழ்ந்தொழியும்* - மூப்புஉன்னைச்-
சிந்திப்பார்க்கு* இல்லை திருமாலே,* நின்அடியை-
வந்திப்பார்* காண்பர் வழி.
வழிநின்று* நின்னைத் தொழுவார்,* வழுவா-
மொழிநின்ற மூர்த்தியரே ஆவர்,* - பழுதுஒன்றும்-
வாராத வண்ணமே* விண்கொடுக்கும்,* மண்அளந்த-
சீரான் திருவேங்கடம்.
வேங்கடமும்* விண்ணகரும் வெஃகாவும்,* அஃகாத-
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்நகரும்,* - நான்குஇடத்தும்-
நின்றான் இருந்தான்* கிடந்தான் நடந்தானே,*
என்றால் கெடுமாம் இடர்
இடர் ஆர் படுவார்?* எழுநெஞ்சே,* வேழம்-
தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த,* - படம்உடைய-
பைந்நாகப் பள்ளியான்* பாதமே கைதொழுதும்,*
கொய்ந்நாகப் பூம்போது கொண்டு
கொண்டானை அல்லால்* கொடுத்தாரை யார்பழிப்பார்,*
'மண்தா' எனஇரந்து மாவலியை,* ஒண்தாரை-
நீர்அங்கை தோய* நிமிர்ந்திலையே,* நீள்விசும்பில்-
ஆரம்கை தோய அடுத்து?
அடுத்த கடும்பகைஞற்கு* ஆற்றேன் என்றுஓடி,*
படுத்த பெரும்பாழி சூழ்ந்த - விடத்துஅரவை,*
வல்லாளன் கைக்கொடுத்த* மாமேனி மாயவனுக்கு,*
அல்லாதும் ஆவரோ ஆள்?
ஆள்அமர் வென்றி* அடுகளத்துள் அந்நான்று,*
வாள்அமர் வேண்டி வரைநட்டு,* - நீள்அரவைச்-
சுற்றிக் கடைந்தான்* பெயர்அன்றே,* தொல் நரகைப்-
பற்றிக் கடத்தும் படை?
படைஆரும் வாள்கண்ணார்* பாரசிநாள்,* பைம்பூந்-
தொடையலோடு ஏந்திய தூபம்,* - இடைஇடையில்-
மீன்மாய* மாசூணும் வேங்கடமே,* மேல்ஒருநாள்-
மான்மாய* எய்தான் வரை
வரைகுடைதோள் காம்புஆக* ஆநிரைகாத்து,* ஆயர்-
நிரைவிடைஏழ்* செற்றஆறு என்னே,* - உரவுஉடைய-
நீர்ஆழி உள்கிடந்து* நேர்ஆம் நிசாசரர்மேல்,*
பேர்ஆழி கொண்ட பிரான்?
பிரான்! உன் பெருமை* பிறர் ஆர்அறிவார்?,*
உராஅய் உலகுஅளந்த நான்று,* - வராகத்து-
எயிற்றுஅளவு* போதாஆறு என்கொலோ,* எந்தை-
அடிக்குஅளவு போந்த படி?
படிகண்டு அறிதியே* பாம்புஅணையினான்,* புள்-
கொடி கண்டுஅறிதியே? கூறாய்,* - வடிவில்-
பொறிஐந்தும் உள்அடக்கி* போதொடு நீர்ஏந்தி,*
நெறிநின்ற நெஞ்சமே! நீ
நீயும் திருமகளும் நின்றாயால்,* குன்றுஎடுத்துப்-
பாயும்* பனிமறுத்த பண்பாளா,* - வாசல்-
கடைகழியா உள்புகா* காமர்பூங் கோவல்*
இடைகழியே பற்றி இனி.
இனியார் புகுவார்* எழுநரக வாசல்?*
முனியாது மூரித்தாள் கோமின்,* - கனிசாயக்-
கன்றுஎறிந்த தோளான்* கனைகழலே காண்பதற்கு,*
நன்குஅறிந்த நாவலம்சூழ் நாடு.
நாடிலும்* நின்அடியே நாடுவன்,* நாள்தோறும்-
பாடிலும்* நின்புகழே பாடுவன்,* சூடிலும்-
பொன்ஆழி ஏந்தினான்* பொன்அடியே சூடுவேற்கு,*
என்ஆகில் என்னே எனக்கு?
எனக்குஆவார்* ஆர்ஒருவரே,* எம்பெருமான்-
தனக்குஆவான்* தானே மற்றுஅல்லால்,* - புனக்காயாம்-
பூமேனி காணப்* பொதிஅவிழும் பூவைப்பூ,*
மாமேனி காட்டும் வரம்
வரத்தால் வலிநினைந்து* மாதவ! நின் பாதம்,*
சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-
ஈர்அரியாய்* நேர்வலியோன்ஆய இரணியனை,*
ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?
ஊனக் குரம்பையின்* உள்புக்கு இருள்நீக்கி,*
ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-
உருவாய் உலகுஇடந்த* ஊழியான் பாதம்,*
மருவாதார்க்கு உண்டாமோ வான்?
வான்ஆகி தீஆய்* மறிகடல்ஆய் மாருதம்ஆய்*
தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-
வெண்ணெய் விழுங்க* நிறையுமே,* முன்ஒருநாள்-
மண்ணை உமிழ்ந்த வயிறு?
வயிறுஅழல வாள்உருவி* வந்தானை அஞ்ச*
எயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-
பூவடிவை ஈடுஅழித்த* பொன்ஆழிக் கையா நின்-
சேவடிமேல் ஈடுஅழிய செற்று?
செற்றுஎழுந்து தீவிழித்து* சென்ற இந்த ஏழுலகும்,*
மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,* முற்றும்-
மறையவற்குக் காட்டிய* மாயவனை அல்லால்,*
இறையேனும் ஏத்தாதுஎன் நா.
நாவாயில் உண்டே* 'நமோ நாரணா' என்று,*
ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்* வகைஉண்டே,* என்ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்?
திறம்பாது என்நெஞ்சமே!* செங்கண்மால் கண்டாய்,*
அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,* புறம்தான்இம்-
மண்தான்* மறிகடல்தான் மாருதம்தான்,* வான்தானே,-
கண்டாய்* கடைக்கண் பிடி.
பிடிசேர் களிறுஅளித்த பேராளா,* உன்தன்-
அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-
அனற்குஅங்கை ஏற்றான்* அவிர்சடைமேல் பாய்ந்த,*
புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்?
பொன்திகழும் மேனிப்* புரிசடைஅம் புண்ணியனும்,*
நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-
இருவர்அங்கத்தால் திரிவரேலும்,* ஒருவன்-
ஒருவன் அங்கத்து என்றும் உளன்.
உளன்கண்டாய் நல்நெஞ்சே!* உத்தமன் என்றும்-
உளன்கண்டாய்,* உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
வெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2)
ஓர்அடியும் சாடுஉதைத்த* ஒண்மலர்ச் சேவடியும்,*
ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-
தாயவனை கேசவனை* தண்துழாய் மாலைசேர்,*
மாயவனையே மனத்து வை (2)