பிரபந்த தனியன்கள்
கைதைசேர் பூம்பொல்சூழ் கச்சிநகர் வந்துதித்த,
பொய்கைப் பிரான்கவிஞர் போரேறு, - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழந் தாதி,
படிவிளங்கச் செய்தான் பரிந்து
பாசுரங்கள்
வரத்தால் வலிநினைந்து* மாதவ! நின் பாதம்,*
சிரத்தால் வணங்கானாம் என்றே,* - உரத்தினால்-
ஈர்அரியாய்* நேர்வலியோன்ஆய இரணியனை,*
ஓர்அரியாய் நீஇடந்தது ஊன்?
ஊனக் குரம்பையின்* உள்புக்கு இருள்நீக்கி,*
ஞானச் சுடர்கொளீஇ நாள்தோறும்,* - ஏனத்து-
உருவாய் உலகுஇடந்த* ஊழியான் பாதம்,*
மருவாதார்க்கு உண்டாமோ வான்?
வான்ஆகி தீஆய்* மறிகடல்ஆய் மாருதம்ஆய்*
தேன்ஆகி பால்ஆம் திருமாலே,* - ஆன்ஆய்ச்சி-
வெண்ணெய் விழுங்க* நிறையுமே,* முன்ஒருநாள்-
மண்ணை உமிழ்ந்த வயிறு?
வயிறுஅழல வாள்உருவி* வந்தானை அஞ்ச*
எயிறுஇலக வாய்மடுத்தது என்நீ,* - பொறிஉகிரால்-
பூவடிவை ஈடுஅழித்த* பொன்ஆழிக் கையா நின்-
சேவடிமேல் ஈடுஅழிய செற்று?
செற்றுஎழுந்து தீவிழித்து* சென்ற இந்த ஏழுலகும்,*
மற்றுஇவை ஆஎன்று வாய்அங்காந்து,* முற்றும்-
மறையவற்குக் காட்டிய* மாயவனை அல்லால்,*
இறையேனும் ஏத்தாதுஎன் நா.
நாவாயில் உண்டே* 'நமோ நாரணா' என்று,*
ஓவாது உரைக்கும் உரைஉண்டே,* - மூவாத-
மாக்கதிக்கண் செல்லும்* வகைஉண்டே,* என்ஒருவர்-
தீக்கதிக்கண் செல்லும் திறம்?
திறம்பாது என்நெஞ்சமே!* செங்கண்மால் கண்டாய்,*
அறம்பாவம் என்றுஇரண்டும் ஆவான்,* புறம்தான்இம்-
மண்தான்* மறிகடல்தான் மாருதம்தான்,* வான்தானே,-
கண்டாய்* கடைக்கண் பிடி.
பிடிசேர் களிறுஅளித்த பேராளா,* உன்தன்-
அடிசேர்ந்து அருள்பெற்றாள் அன்றே,* - பொடிசேர்-
அனற்குஅங்கை ஏற்றான்* அவிர்சடைமேல் பாய்ந்த,*
புனல்கங்கை என்னும்பேர்ப் பொன்?
பொன்திகழும் மேனிப்* புரிசடைஅம் புண்ணியனும்,*
நின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-
இருவர்அங்கத்தால் திரிவரேலும்,* ஒருவன்-
ஒருவன் அங்கத்து என்றும் உளன்.
உளன்கண்டாய் நல்நெஞ்சே!* உத்தமன் என்றும்-
உளன்கண்டாய்,* உள்ளுவார் உள்ளத்து- உளன்கண்டாய்,*
வெள்ளத்தின் உள்ளானும்* வேங்கடத்து மேயானும்,*
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (2)
ஓர்அடியும் சாடுஉதைத்த* ஒண்மலர்ச் சேவடியும்,*
ஈர்அடியும் காணலாம் என்நெஞ்சே!* - ஓர்அடியில்-
தாயவனை கேசவனை* தண்துழாய் மாலைசேர்,*
மாயவனையே மனத்து வை (2)