பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
    தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*

    போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
    ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   


    துவர்ஆடை உடுத்து*  ஒருசெண்டு சிலுப்பி,* 
    கவர்ஆக முடித்து*  கலிக்கச்சுக் கட்டி,*

    சுவர்ஆர் கதவின் புறமே*  வந்து நின்றீர்,*
    இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!


    கருளக் கொடி ஒன்றுஉடையீர்!*  தனிப்பாகீர்,* 
    உருளச் சகடம் அது*  உறுக்கி நிமிர்த்தீர்,*

    மருளைக் கொடுபாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    இருளத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    நாமம் பலவும் உடை*  நாரண நம்பீ,* 
    தாமத் துளவம்*  மிக நாறிடுகின்றீர்,*

    காமன்எனப்பாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
    ஏமத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    சுற்றும் குழல்தாழ*  சுரிகை அணைத்து,* 
    மற்று பல*  மாமணி பொன்கொடுஅணிந்து,*

    முற்றம் புகுந்து*  முறுவல்செய்து நின்றீர்,*
    எற்றுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


    ஆன்ஆயரும்*  ஆநிரையும் அங்குஒழிய,* 
    கூன்ஆயதுஓர்*  கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*

    போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
    ஏனோர்கள் முன்என்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    மல்லே பொருத திரள்தோள்*  மணவாளீர்,* 
    அல்லே அறிந்தோம்*  நும் மனத்தின் கருத்தை,*

    சொல்லாது ஒழியீர்*  சொன்ன போதினால் வாரீர்*
    எல்லே இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    புக்குஆடுஅரவம்*  பிடித்துஆட்டும் புனிதீர்,* 
    இக்காலங்கள்*  யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*

    தக்கார் பலர்*  தேவிமார் சாலஉடையீர்,*
    எக்கே! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


    ஆடி அசைந்து*  ஆய்மடவாரொடு நீபோய்க்*
    கூடிக் குரவை*  பிணை கோமளப் பிள்ளாய்,*

    தேடி திருமாமகள்*  மண்மகள் நிற்ப,*
    ஏடி! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!   


    அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
    எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*

    கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
    சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 


    திருமாலிருஞ்சோலை மலை*  என்றேன் என்ன* 
    திருமால்வந்து*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    குருமா மணிஉந்து புனல்*  பொன்னித் தென்பால்* 
    திருமால்சென்று சேர்விடம்*  தென் திருப்பேரே.   (2)


    பேரே உறைகின்ற பிரான்*  இன்று வந்து* 
    பேரேன்என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்*

    கார்ஏழ் கடல்ஏழ்*  மலைஏழ் உலகு உண்டும்* 
    ஆராவயிற்றானை*  அடங்கப் பிடித்தேனே.


    பிடித்தேன் பிறவி கெடுத்தேன்*  பிணிசாரேன்* 
    மடித்தேன் மனைவாழ்க்கையுள்*  நிற்பதுஓர் மாயையை*

    கொடிக் கோபுரமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    அடிச்சேர்வது எனக்கு*  எளிதுஆயின வாறே.


    எளிதாயினவாறுஎன்று*  என்கண்கள் களிப்பக்* 
    களிதாகிய சிந்தையனாய்க்*  களிக்கின்றேன்*

    கிளிதாவிய சோலைகள்சூழ்*  திருப்பேரான்* 
    தெளிதாகிய*  சேண்விசும்பு தருவானே.


    வானே தருவான்*  எனக்காய் என்னோடுஒட்டி* 
    ஊன்ஏய் குரம்பை*  இதனுள் புகுந்து*  இன்று-

    தானே தடுமாற்ற*  வினைகள் தவிர்த்தான்* 
    தேனேய் பொழில்*  தென்திருப்பேர் நகரானே.


    திருப்பேர் நகரான்*  திருமாலிருஞ்சோலைப்* 
    பொருப்பே உறைகின்றபிரான்*  இன்றுவந்து*

    இருப்பேன் என்று*  என்நெஞ்சு நிறையப் புகுந்தான்* 
    விருப்பே பெற்று*  அமுதம்உண்டு களித்தேனே.  


    உண்டு களித்தேற்கு*  உம்பர்என் குறை*  மேலைத்- 
    தொண்டு உகளித்து*  அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்*

    வண்டு களிக்கும் பொழில்சூழ்*  திருப்பேரான்* 
    கண்டு களிப்ப*  கண்ணுள்நின்று அகலானே.


    கண்ணுள் நின்று அகலான்*  கருத்தின்கண் பெரியன்* 
    எண்ணில்நுண் பொருள்*  ஏழ்இசையின் சுவைதானே*

    வண்ணநல் மணிமாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    திண்ணம் என்மனத்துப்*  புகுந்தான் செறிந்துஇன்றே. 


    இன்று என்னைப் பொருளாக்கி*  தன்னை என்னுள் வைத்தான்* 
    அன்று என்னைப் புறம்போகப்*  புணர்த்தது என் செய்வான்?*

    குன்றுஎன்னத் திகழ்மாடங்கள்சூழ்*  திருப்பேரான்* 
    ஒன்று எனக்குஅருள்செய்ய*  உணர்த்தல்உற்றேனே. 


    உற்றேன் உகந்து பணிசெய்து*  உன்பாதம்- 
    பெற்றேன்*  ஈதே இன்னம்*  வேண்டுவது எந்தாய்*

    கற்றார் மறைவாணர்கள்சூழ்*  திருப்பேராற்கு* 
    அற்றார் அடியார் தமக்கு*  அல்லல் நில்லாவே.  (2)


    நில்லா அல்லல்*  நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்* 
    நல்லார் பலர்வாழ்*  குருகூர்ச் சடகோபன்*

    சொல்லார் தமிழ்*  ஆயிரத்துள் இவைபத்தும்- 
    வல்லார்*  தொண்டர்ஆள்வது*  சூழ்பொன் விசும்பே.  (2)