பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    எங்கானும் ஈதுஒப்பதுஓர் மாயம்உண்டே?*  நரநாரணன் ஆய் உலகத்து அறநூல்*
    சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  அதுஅன்றியும் செஞ்சுடரும் நிலனும்,*

    பொங்குஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக*  பொன்மிடறு அத்தனைபோது,*
    அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.   (2)


    குன்றுஒன்று மத்தா அரவம் அளவி*  குரைமாகடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-
    நின்று உண்டை கொண்டுஓட்டி வன்கூன் நிமிர*  நினைந்த பெருமான் அது அன்றியும்முன்,*

    நன்றுஉண்ட தொல்சீர் மகரக் கடல்ஏழ்*  மலைஏழ் உலகுஏழ் ஒழியாமை நம்பி,* 
    அன்றுஉண்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    உளைந்திட்டு எழுந்த மதுகைடவர்கள்*   உலப்புஇல் வலியார் அவர்பால்,*  வயிரம்-
    விளைந்திட்டது என்றுஎண்ணி விண்ணோர் பரவ*   அவர் நாள்ஒழித்த பெருமான் முனநாள்,*

    வளைந்திட்ட வில்லாளி வல் வாள்எயிற்று*  மலைபோல் அவுணன் உடல் வள்உகிரால்,*
    அளைந்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.  


    தளர்ந்திட்டு இமையோர் சரண் தாஎன*  தான் சரண்ஆய் முரண்ஆயவனை*  உகிரால்-
    பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த*  பெருமான் திருமால் விரிநீர் உலகை,*

    வளர்ந்திட்ட தொல்சீர் விறல் மாவலியை*  மண்கொள்ள வஞ்சித்து ஒருமாண் குறள்ஆய்,*
    அளந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நீண்டான் குறள்ஆய் நெடுவான்அளவும்*  அடியார் படும் ஆழ் துயர்ஆய எல்லாம்,*
    தீண்டாமை நினைந்து இமையோர் அளவும்*  செல வைத்த பிரான் அதுஅன்றியும்முன்,*

    வேண்டாமை நமன் தமர் என்தமரை*   வினவப் பெறுவார் அலர், என்று,* உலகுஏழ்-
    ஆண்டான்அவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே 


    பழித்திட்ட இன்பப் பயன் பற்றுஅறுத்துப்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    ஒழித்திட்டு அவரைத் தனக்குஆக்க வல்ல*  பெருமான் திருமால் அதுஅன்றியும்முன்,*

    தெழித்திட்டு எழுந்தே எதிர்நின்ற மன்னன்*  சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்*
    அழித்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே


    படைத்திட்டுஅது இவ்வையம் உய்ய முனநாள்*  பணிந்துஏத்த வல்லார் துயர்ஆய எல்லாம்,*
    துடைத்திட்டு அவரைத் தனக்குஆக்க என்னத்*  தெளியா அரக்கர் திறல்போய் அவிய,*

    மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா*  விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம,*  கடலை-
    அடைத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நெறித்திட்ட மென்கூழை நல்நேர்இழையோடு*  உடன்ஆய வில்என்ன வல்ஏய் அதனை,*
    இறுத்திட்டு அவள்இன்பம் அன்போடு அணைந்திட்டு*  இளங்கொற்றவன்ஆய் துளங்காத முந்நீர்,*

    செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன்*  செழுநீள் முடிதோளொடு தாள் துணிய,*
    அறுத்திட்டவன்காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.    


    சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங்கு அரிமா*  தொலைய பிரியாது சென்றுஎய்தி, எய்தாது*
    இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காத தன்வாய்*  இருகூறுசெய்த பெருமான் முனநாள்* 

    வரிந்திட்ட வில்லால் மரம்ஏழும் எய்து*  மலைபோல் உருவத்து ஓர்இராக்கதி மூக்கு,*
    அரிந்திட்டவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால்*  அளைவெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே.


    நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்*  வயிற்றை நிறைப்பான் உறிப்பால் தயிர்நெய்,*
    அன்றுஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி*  உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல்,*

    நன்றுஆய தொல்சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய்த தமிழ்மாலை வல்லார்,*
    என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி*  இமையோர்க்கும் அப்பால் செலஎய்துவாரே.   (2) 


    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*

    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)


    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*

    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.


    நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
    மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*

    விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
    எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!


    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*

    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.


    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*

    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 


    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*

    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 


    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*

    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.


    மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்* 
    கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*

    மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு* 
    எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே? 


    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*

    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 


    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*

    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.


    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*

    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)