பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்* பெருந் துயர் இடும்பையில் பிறந்து*
கூடினேன் கூடி இளையவர்தம்மோடு* அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்* உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
ஆவியே! அமுதே! என நினைந்து உருகி* அவர் அவர் பணை முலை துணையாப்*
பாவியேன் உணராது எத்தனை பகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்* சூழ் புனல் குடந்தையே தொழுது*
என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
சேமமே வேண்டி தீவினை பெருக்கி* தெரிவைமார் உருவமே மருவி*
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்* ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்*
காமனார் தாதை நம்முடை அடிகள்* தம் அடைந்தார் மனத்து இருப்பார்*
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி* வேல்கணார் கலவியே கருதி*
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்* என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட* பாழியான் ஆழியான் அருளே*
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்* கண்டவா திரிதந்தேனேலும்*
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்* சிக்கெனத் திருவருள் பெற்றேன்*
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்* உடம்பு எலாம் கண்ண நீர் சோர*
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்* நாராயணா என்னும் நாமம்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்* எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி* அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்*
வம்பு உலாம் சோலை மா மதிள்* தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி*
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்* இன்னது ஓர் தன்மை என்று உணரீர்*
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்* கண்டவா தொண்டரைப் பாடும்*
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்* சூழ் புனல் குடந்தையே தொழுமின்*
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்* நாராயணா என்னும் நாமம்.
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்* கருத்துளே திருத்தினேன் மனத்தை*
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை* பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்* செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி*
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்* நாராயணா என்னும் நாமம்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்* மங்கையார் வாள் கலிகன்றி*
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை* இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்* துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்*
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு* நாராயணா என்னும் நாமம் (2)
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட* வரி சிலை வளைவித்து*
அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற* இருந்த நல் இமயத்துள்*
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை* அகடு உற முகடு ஏறி*
பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய* அரு வரை அணை கட்டி*
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்* இருந்த நல் இமயத்து*
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன* வேழங்கள் துயர்கூர*
பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று* இளங்கொடிதிறத்து ஆயர்*
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்* இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்* மணி அறைமிசை வேழம்*
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர* ஒருவனது அகல் மார்வம் திறந்து*
வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்துள்*
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்* கிடந்து அருகு எரி வீசும்*
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரை செய் மாக் கடல் கிடந்தவன்* கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த*
அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்* அமர்ந்த நல் இமயத்து*
வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை* அளை மிகு தேன் தோய்த்துப்*
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்* பரமா என்று*
இணங்கி வானவர் மணி முடி பணிதர* இருந்த நல் இமயத்து*
மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற* நிமிர்ந்து அவை முகில் பற்றிப்*
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய* கறி வளர் கொடி துன்னிப்*
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய* பூம் பொழில் இமயத்துள்*
ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து* இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை* இரும் பசி அது கூர*
அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய* அருவரை இமயத்து*
பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று* எண்ணி நின்று இமையோர்கள்*
பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்* பிரிதி சென்று அடை நெஞ்சே!
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறு துயர் அடையாமல்*
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை* இருந்த நல் இமயத்து*
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற* தழல் புரை எழில் நோக்கி*
பேதை வண்டுகள் எரி என வெருவரு* பிரிதி சென்று அடை நெஞ்சே!
கரிய மா முகில் படலங்கள் கிடந்து* அவை முழங்கிட*
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு* பிரிதி எம் பெருமானை*
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்* கலியனது ஒலி மாலை*
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு* அரு வினை அடையாவே* (2)
முற்ற மூத்து கோல் துணையா* முன் அடி நோக்கி வளைந்து*
இற்ற கால் போல் தள்ளி மெள்ள* இருந்து அங்கு இளையாமுன்*
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான்* வதரி வணங்குதுமே.
முதுகு பற்றிக் கைத்தலத்தால்* முன் ஒரு கோல் ஊன்றி*
விதிர் விதிர்த்து கண் சுழன்று* மேல் கிளைகொண்டு இருமி*
இது என் அப்பர் மூத்த ஆறு என்று* இளையவர் ஏசாமுன்*
மது உண் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து* ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி*
நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று* நடுங்காமுன்*
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய்* ஆயிரம் நாமம் சொலி*
வெறி கொள் வண்டு பண்கள் பாடும்* வதரி வணங்குதுமே.
பீளை சோரக் கண் இடுங்கி* பித்து எழ மூத்து இருமி*
தாள்கள் நோவத் தம்மில் முட்டி* தள்ளி நடவாமுன்*
காளை ஆகி கன்று மேய்த்து* குன்று எடுத்து அன்று நின்றான*
வாளை பாயும் தண் தடம் சூழ்* வதரி வணங்குதுமே.
பண்டு காமர் ஆன ஆறும்* பாவையர் வாய் அமுதம்*
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி*
தண்டு காலா ஊன்றி ஊன்றி* தள்ளி நடவாமுன்*
வண்டு பாடும் தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி* இருமி இளைத்து*
உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப்* பேசி அயராமுன்*
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி* ஆழ் கடலைக் கடைந்த*
மைத்த சோதி எம்பெருமான்* வதரி வணங்குதுமே.
பப்ப அப்பர் மூத்த ஆறு* பாழ்ப்பது சீத் திரளை*
ஒப்ப ஐக்கள் போத உந்த* உன் தமர் காண்மின் என்று*
செப்பு நேர் மென் கொங்கை நல்லார்* தாம் சிரியாத முன்னம்*
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான்* வதரி வணங்குதுமே.
ஈசி போமின் ஈங்கு இரேல்மின்* இருமி இளைத்தீர்*
உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும்* குவளை அம் கண்ணியர்பால்*
நாசம் ஆன பாசம் விட்டு* நல் நெறி நோக்கல் உறில்*
வாசம் மல்கு தண் துழாயான்* வதரி வணங்குதுமே.
புலன்கள் நைய மெய்யில் மூத்து* போந்து இருந்து உள்ளம் எள்கி*
கலங்க ஐக்கள் போத உந்தி* கண்ட பிதற்றாமுன்*
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு* ஆயிரம் நாமம் சொலி*
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும்* வதரி வணங்குதுமே
வண்டு தண் தேன் உண்டு வாழும்* வதரி நெடு மாலைக்*
கண்டல் வேலி மங்கை வேந்தன்* கலியன் ஒலி மாலை*
கொண்டு தொண்டர் பாடி ஆடக்* கூடிடில் நீள் விசும்பில்*
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு* ஓர் ஆட்சி அறியோமே.
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து* அன்று இணை அடி இமையவர் வணங்க*
தானவன் ஆகம் தரணியில் புரளத்* தடஞ் சிலை குனித்த என் தலைவன்*
தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த* தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே. (2)
கானிடை உருவை சுடு சரம் துரந்து* கண்டு முன் கொடுந் தொழில் உரவோன்*
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப* உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்*
தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர்* சென்று சென்று இறைஞ்சிட*
பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின்* இரு நிதிக்கு இறைவனும்*
அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்* கொழுஞ் சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில்* வெண் துகில் கொடி என விரிந்து*
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே!* தொழுது எழு தொண்டர்கள் தமக்குப்*
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும்* பேர் அருளாளன் எம் பெருமான்*
அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும்* ஆரமும் வாரி வந்து*
அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன்* பெரு முலை சுவைத்திட*
பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட* வளர்ந்த என் தலைவன்*
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த* செம்பொன் செய் விலங்கலில் இலங்கு,*
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல்,* வதரி ஆச்சிரமத்து உள்ளானே
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து* ஒரு மறத் தொழில் புரிந்து*
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த* பனி முகில் வண்ணன் எம் பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த* கரு வரை பிளவு எழக் குத்தி*
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்*
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும்* எந்தை எம் அடிகள் எம் பெருமான்*
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க* ஆயிரம் முகத்தினால் அருளி*
மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த* மன்னவன் பொன் நிறத்து உரவோன்*
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா* உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்*
தான் முனிந்து இட்ட* வெம் திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க்* குரை கடல் உலகு உடன் அனைத்தும்*
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த* உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து* அங்கு அவனியாள் அலமரப்*
பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானே.
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல்* வதரி ஆச்சிரமத்து உள்ளானை*
கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி* கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்*
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள்* வானவர் உலகு உடன் மருவி*
இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ்* இமையவர் ஆகுவர் தாமே. (2)
கலையும் கரியும் பரிமாவும்* திரியும் கானம் கடந்துபோய்*
சிலையும் கணையும் துணையாகச்* சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி* மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்து உகந்தான்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
கடம் சூழ் கரியும் பரிமாவும்* ஒலி மாத் தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை* பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில்* இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
உலவு திரையும் குல வரையும்* ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான்* வென்றி விறல் ஆழி வலவன்*
வானோர் தம் பெருமான்* மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்*
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஊரான் குடந்தை உத்தமன்* ஒரு கால் இரு கால் சிலை வளையத்*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான்* வற்றா வரு புனல் சூழ் பேரான்*
பேர் ஆயிரம் உடையான்* பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற* அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான்*
விளங்கு சுடர் ஆழி* விண்ணோர் பெருமான் நண்ணார்முன்*
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக்* கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகு ஆய* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாய் ஆய் வந்த பேய் உயிரும்* தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான்*
தூய வரி உருவின் குறளாய்ச் சென்று* மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தா என்று* உலகு ஏழும் தாயான்*
காயா மலர் வண்ணன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள்* அரி ஆய் பரிய இரணியனை*
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த* ஒருவன் தானே இரு சுடர் ஆய்*
வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய்* மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்*
தான் ஆய் தானும் ஆனான் தன்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
வெந்தார் என்பும் சுடு நீறும்* மெய்யில் பூசி கையகத்து*
ஓர் சந்து ஆர் தலைகொண்டு* உலகு ஏழும் திரியும்* பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன* இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்*
சந்து ஆர் பொழில் சூழ்ந்த* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தொண்டு ஆம் இனமும் இமையோரும்* துணை நூல் மார்வின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று* அணையும் கோயில் அருகு எல்லாம்*
வண்டு ஆர் பொழிலின் பழனத்து* வயலின் அயலே கயல் பாயத்*
தண் தாமரைகள் முகம் அலர்த்தும்* சாளக்கிராமம் அடை நெஞ்சே!
தாரா ஆரும் வயல் சூழ்ந்த* சாளக்கிராமத்து அடிகளை*
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார்* அமரர் நல் நாட்டு அரசு ஆளப்*
பேர் ஆயிரமும் ஓதுமின்கள்* அன்றி இவையே பிதற்றுமினே*
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்* மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழை எனக் கருதி* பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி* இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்* திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி* போக்கினேன் பொழுதினை வாளா*
அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!* வானவர்க்கு அரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து* சுரி குழல் மடந்தையர்திறத்துக்*
காதலே மிகுத்து கண்டவா* திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்* வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து* பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*
நம்பினார் இறந்தால்* நமன் தமர் பற்றி எற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை* பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று* இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!* நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*
கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்* படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து* திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்* உணர்விலேன் ஆதலால் நமனார்*
பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்* பரமனே! பாற்கடல் கிடந்தாய்!*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்* நீதி அல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே* துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா* வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*
வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி* உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
தான் உடைக் குரம்பை பிரியும்போது* உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்*
தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!* திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!*
நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி* எழுமினோ தொழுதும் என்று*
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்* நைமிசாரணியத்து* எந்தையைச் சிந்தையுள் வைத்து*
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்* மாலைதான் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்* உம்பரும் ஆகுவர் தாமே. (2)
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
அலைத்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த* கூர் உகிராளன் இடம்*
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்* வன் துடி வாய் கடுப்ப*
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத* சிங்கவேழ்குன்றமே.
ஏய்ந்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்* அன்றியும் நின்று அழலால்*
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்* சிங்கவேழ்குன்றமே.
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்* ஏதலன் இன் உயிரை வவ்வி*
ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
கவ்வும் நாயும் கழுகும்* உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
மென்ற பேழ்வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை* நீள் விசும்பூடு இரிய*
சென்று காண்டற்கு அரிய கோயில்* சிங்கவேழ்குன்றமே.
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்* எயிற்றொடு இது எவ் உரு என்று*
இரிந்து வானோர் கலங்கி ஓட* இருந்த அம்மானது இடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று* நீள் நெறிவாய் உழுழை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்* சிங்கவேழ்குன்றமே.
முனைத்த சீற்றம் விண் சுடப் போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
கனைத்த தீயும் கல்லும் அல்லா* வில் உடை வேடரும் ஆய்*
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
நாத் தழும்ப நாஅன்முகனும்* ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
அங்கு ஓர் ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப* கல் அதர் வேய்ங்கழை போய்த்*
தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.
நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம் பெருமான்*
அல்லிமாதர் புல்க நின்ற* ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப* புல் இலை ஆர்த்து*
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத* சிங்கவேழ்குன்றமே.
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிஙக்வேழ்குன்று உடைய*
எங்கள் ஈசன் எம் பிரானை* இருந் தமிழ் நூல்புலவன்*
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்* வண்டு அரை தார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை* வல்லவர் தீது இலரே. (2)
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த* கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த* புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்* இணைத் தாமரை அடி எம் பிரான்*
கன்றி மாரி பொழிந்திட* கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்* திரு வேங்கடம் அடை நெஞ்சமே!
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்* இட வெந்தை மேவிய எம் பிரான்*
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்து உள்ளான்* இருஞ்சோலை மேவிய எம் பிரான்*
திண் கை மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றொடு*
திண் திறல் அரியாயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பாரும் நீர் எரி காற்றினோடு* ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற* பிறப்பிலி பெருகும் இடம்*
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்* சோரும் மா முகில் தோய்தர*
சேரும் வார் பொழில் சூழ்* எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!
அம்பரம் அனல் கால் நிலம் சலம்* ஆகி நின்ற அமரர்கோன்*
வம்பு உலாம் மலர்மேல்* மலி மட மங்கை தன் கொழுநன்அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம்தொறும்*
செம் புனம் அவை காவல் கொள்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேய் ஏய் பூம் பொழில் சூழ்* விரை ஆர் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
மான் ஏய் கண் மடவார்* மயக்கில் பட்டு மா நிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேன் ஏய் பூம் பொழில் சூழ்* திருவேங்கட மா மலை*
என் ஆனாய் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இலாமையினால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிது ஆக உரைத்து அறியேன்*
குன்று ஏய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறி ஆர் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பு ஆர் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை*
என் அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
மண் ஆய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்*
புண் ஆர் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்*
விண் ஆர் நீள் சிகர* விரைஆர் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயினபின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம் பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன்-எம் பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
பற்றேல் ஒன்றும் இலேன்* பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!
அற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய* எம் கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்*
பண் ஆர் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2)
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
இலங்கைப் பதிக்கு* அன்று இறை ஆய*
அரக்கர் குலம் கெட்டு அவர் மாள* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே.
நீர் ஆர் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந் தளிர்மேல்* துயில் எந்தாய்!*
சீர் ஆர்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே.
உண்டாய் உறிமேல்* நறு நெய் அமுது ஆக*
கொண்டாய் குறள் ஆய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய,
அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே.
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய,*
கோள் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கி* தன் இன் அருள் செய்யும் தலைவன்*
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே.
மான் ஏய் மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடிகொண்டு இருந்தாயே.
சேயன் அணியன்* என சிந்தையுள் நின்ற*
மாயன் மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ் சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திருவேங்கடம் மேய எந்தாய்!*
இனி யான் உனை* என்றும் விடேனே.
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள்தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள்தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே.
பிணக்கற அறுவகைச் சமயமும்* நெறி உள்ளி உரைத்த*
கணக்கு அறு நலத்தனன்* அந்தம் இல் ஆதி அம் பகவன்*
வணக்கு உடைத் தவநெறி* வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின், பசை அற!* அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே.
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று* உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை*
உணர்ந்து உணர்ந்து உணரிலும்* இறைநிலை உணர்வு அரிது உயிர்காள்!*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* அரி அயன் அரன் என்னும் இவரை*
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து* இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே.
ஒன்று எனப் பல என* அறிவு அரும்வடிவினுள் நின்ற*
நன்று எழில் நாரணன்* நான்முகன் அரன் என்னும் இவரை*
ஒன்ற நும் மனத்து வைத்து* உள்ளி நும் இரு பசை அறுத்து*
நன்று என நலம் செய்வது* அவனிடை நம்முடை நாளே.
நாளும் நின்று அடு நம பழமை* அம் கொடுவினை உடனே
மாளும்* ஓர் குறைவு இல்லை;* மனன் அகம் மலம் அறக் கழுவி*
நாளும் நம் திரு உடை அடிகள் தம்* நலம் கழல் வணங்கி*
மாளும் ஓர் இடத்திலும்* வணக்கொடு மாள்வது வலமே.
வலத்தனன் திரிபுரம் எரித்தவன்,* இடம்பெறத் துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த* நல் உலகமும் தானும்
புலப்பட* பின்னும் தன் உலகத்தில்* அகத்தனன் தானே
சொலப் புகில்* இவை பின்னும் வயிற்று உள;* இவை அவன் துயக்கே.
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்* அமரரைத் துயக்கும்*
மயக்கு உடை மாயைகள்* வானிலும் பெரியன வல்லன்*
புயல் கரு நிறத்தனன்;* பெரு நிலங் கடந்த நல் அடிப் போது*
அயர்ப்பிலன் அலற்றுவன்* தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே.
அமரர்கள் தொழுது எழ* அலை கடல் கடைந்தவன் தன்னை*
அமர் பொழில் வளங் குருகூர்ச்* சடகோபன் குற்றேவல்கள்*
அமர் சுவை ஆயிரத்து* அவற்றினுள் இவை பத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில் சென்று* அறுவர் தம் பிறவி அம் சிறையே. (2)
அம்சிறைய மட நாராய்! அளியத்தாய்!* நீயும் நின்
அம்சிறைய சேவலுமாய்* ஆஆ என்று எனக்கு அருளி*
வெம்சிறைப் புள் உயர்த்தார்க்கு* என் விடு தூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன் வைக்கில்* வைப்புண்டால் என் செயுமோ? (2)
என் செய்ய தாமரைக்கண்* பெருமானார்க்கு என் தூதாய்*
என் செய்யும் உரைத்தக்கால்?* இனக் குயில்காள் நீர் அலிரே?*
முன் செய்த முழுவினையால்* திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன் செய்ய முயலாதேன்* அகல்வதுவோ? விதியினமே.
விதியினால் பெடை மணக்கும்* மென்நடைய அன்னங்காள்!*
மதியினால் குறள் மாணாய்* உலகு இரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல் வினையே* மாளாதோ? என்று ஒருத்தி*
மதி எல்லாம் உள் கலங்கி* மயங்குமால் என்னீரே!
என் நீர்மை கண்டு இரங்கி* இது தகாது என்னாத*
என் நீல முகில் வண்ணற்கு* என் சொல்லி யான் சொல்லுகேனோ?*
நன் நீர்மை இனி அவர்கண்* தங்காது என்று ஒரு வாய்ச்சொல்*
நன் நீல மகன்றில்காள்!* நல்குதிரோ? நல்கீரோ?
நல்கித் தான் காத்து அளிக்கும்* பொழில் ஏழும்; வினையேற்கே*
நல்கத் தான் ஆகாதோ?* நாரணனைக் கண்டக்கால்*
மல்கு நீர்ப் புனல் படப்பை* இரை தேர் வண் சிறு குருகே!*
மல்கு நீர்க் கண்ணேற்கு* ஓர் வாசகம் கொண்டு அருளாயே.
அருளாத நீர் அருளி* அவர் ஆவி துவராமுன்*
அருள் ஆழிப் புட்கடவீர்* அவர் வீதி ஒருநாள் என்று*
அருள் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
அருள் ஆழி வரி வண்டே!* யாமும் என் பிழைத்தோமே?
என்பு இழை கோப்பது போலப்* பனி வாடை ஈர்கின்றது*
என் பிழையே நினைந்தருளி* அருளாத திருமாலார்க்கு*
என் பிழைத்தாள் திருவடியின்* தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்*
என்பிழைக்கும்? இளங் கிளியே!* யான் வளர்த்த நீ அலையே?
நீயலையே ? சிறு பூவாய்!* நெடுமாலார்க்கு என் தூதாய்*
நோய் எனது நுவல் என்ன,* நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணி மாமை* தளர்ந்தேன் நான்* இனி உனது-
வாய் அலகில் இன் அடிசில்* வைப்பாரை நாடாயே.
நாடாத மலர் நாடி* நாள்தோறும் நாரணன் தன்*
வாடாத மலர் அடிக்கீழ்* வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல்* வினை அற்றது என் செய்வதோ?*
ஊடாடு பனி வாடாய்!* உரைத்து ஈராய் எனது உடலே.
உடல் ஆழிப் பிறப்பு வீடு* உயிர் முதலா முற்றுமாய்க்*
கடல் ஆழி நீர் தோற்றி* அதனுள்ளே கண்வளரும்*
அடல் ஆழி அம்மானைக்* கண்டக்கால் இது சொல்லி*
விடல் ஆழி மட நெஞ்சே!* வினையோம் ஒன்றாம் அளவே.
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர்* பெருமான் கண்ணனை*
வள வயல் சூழ் வண் குருகூர்ச்* சடகோபன் வாய்ந்து உரைத்த*
அளவு இயன்ற அந்தாதி* ஆயிரத்துள் இப் பத்தின்*
வள உரையால் பெறலாகும்* வான் ஓங்கு பெரு வளமே. (2)
இவையும் அவையும் உவையும்* இவரும் அவரும் உவரும்,*
எவையும் எவரும் தன்னுளே* ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
அவையுள் தனிமுதல் எம்மான்* கண்ண பிரான் என் அமுதம்,*
சுவையன் திருவின் மணாளன்* என்னுடைச் சூழல் உளானே.
சூழல் பலபல வல்லான்* தொல்லை அம் காலத்து உலகைக்*
கேழல் ஒன்று ஆகி இடந்த* கேசவன் என்னுடை அம்மான்,*
வேழ மருப்பை ஒசித்தான்* விண்ணவர்க்கு எண்ணல் அரியான்*
ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்* அவன் என் அருகவிலானே.
அருகல் இலாய பெரும் சீர்* அமரர்கள் ஆதி முதல்வன்,*
கருகிய நீல நன் மேனி வண்ணன்* செந்தாமரைக் கண்ணன்,*
பொரு சிறைப் புள் உவந்து ஏறும்* பூமகளார் தனிக் கேள்வன்,*
ஒருகதியின் சுவை தந்திட்டு* ஒழிவு இலன் என்னோடு உடனே
நாவினுள் நின்று மலரும்* ஞானக் கலைகளுக்கு எல்லாம்,*
ஆவியும் ஆக்கையும் தானே* அழிப்போடு அளிப்பவன் தானே,*
பூ இயல் நால் தடம் தோளன்* பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,*
காவி நன் மேனிக் கமலக்* கண்ணன் என் கண்ணின் உளானே.
கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்* காண்பன் அவன் கண்களாலே,*
அமலங்கள் ஆக விழிக்கும்* ஐம்புலனும் அவன் மூர்த்தி,*
கமலத்து அயன் நம்பி தன்னைக்* கண்ணுதலானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தொடு உலகம்* ஆக்கி என் நெற்றி உளானே.
நெற்றியுள் நின்று என்னை ஆளும்* நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,*
கற்றைத் துழாய் முடிக் கோலக்* கண்ண பிரானைத் தொழுவார்,*
ஒற்றைப் பிறை அணிந்தானும்* நான்முகனும் இந்திரனும்,*
மற்றை அமரரும் எல்லாம் வந்து* எனது உச்சியுளானே.
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்* கண்ண பிரானுக்கு,*
இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*
இச் சொன்ன ஆயிரத்துள்ளே* இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,*
நிச்சலும் விண்ணப்பம் செய்ய* நீள் கழல் சென்னி பொருமே.