பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    ஏத்துகின்றோம் நாத்தழும்ப*  இராமன் திருநாமம்* 
    சோத்தம் நம்பீ சுக்கிரீவா!*  உம்மைத் தொழுகின்றோம்*

    வார்த்தை பேசீர் எம்மை*  உங்கள் வானரம் கொல்லாமே* 
    கூத்தர் போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே   (2)


    எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்றுஎன்று அலற்றாதே* 
    அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*

    நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
    கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  


    ஞாலம் ஆளும் உங்கள் கோமான்*  எங்கள் இராவணற்குக்*
    காலன்ஆகி வந்தவா*  கண்டு அஞ்சி கருமுகில்போல்*

    நீலன் வாழ்க சுடேணன் வாழ்க*  அங்கதன் வாழ்கஎன்று*
    கோலம்ஆக ஆடுகின்றோம்*  குழமணி தூரமே 


    மணங்கள் நாறும் வார்குழலார்*  மாதர்கள் ஆதரத்தைப்*
    புணர்ந்த சிந்தைப் புன்மையாளன்*  பொன்ற வரிசிலையால்*

    கணங்கள்உண்ண வாளிஆண்ட*  காவலனுக்கு இளையோன்*
    குணங்கள் பாடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே


    வென்றி தந்தோம் மானம் வேண்டோம்*  தானம் எமக்குஆக*
    இன்று தம்மின் எங்கள் வாழ்நாள்*  எம்பெருமான் தமர்காள்*

    நின்று காணீர் கண்கள்ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
    குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே      


    கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-
    அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*

    வெல்ல கில்லாது அஞ்சினோம்காண்*  வெம்கதிரோன் சிறுவா,* 
    கொல்ல வேண்டா ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  


    மாற்றம்ஆவது இத்தனையே*  வம்மின் அரக்கர்உள்ளீர்* 
    சீற்றம் நும்மேல் தீர வேண்டின்*  சேவகம் பேசாதே*

    ஆற்றல் சான்ற தொல்பிறப்பின்*  அநுமனை வாழ்கஎன்று* 
    கூற்றம் அன்னார் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    கவள யானை பாய்புரவி*  தேரொடு அரக்கர்எல்லாம்-
    துவள,*  வென்ற வென்றியாளன்*  தன்தமர் கொல்லாமே*

    தவள மாடம் நீடுஅயோத்தி*  காவலன் தன்சிறுவன்*
    குவளை வண்ணன் காண ஆடீர்*  குழமணி தூரமே.


    ஏடுஒத்துஏந்தும் நீள்இலைவேல்*  எங்கள் இராவணனார்-
    ஓடிப் போனார்,*  நாங்கள் எய்த்தோம்*  உய்வதுஓர் காரணத்தால்*

    சூடிப் போந்தோம் உங்கள் கோமான்*  ஆணை தொடரேல்மின்* 
    கூடிக்கூடி ஆடுகின்றோம்*  குழமணி தூரமே.


    வென்ற தொல்சீர்த் தென்இலங்கை*  வெம்சமத்து*  அன்றுஅரக்கர்-
    குன்றம் அன்னார் ஆடி உய்ந்த*  குழமணி தூரத்தைக்*

    கன்றி நெய்ந்நீர் நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை*
    ஒன்றும்ஒன்றும் ஐந்தும் மூன்றும்*  பாடி நின்று ஆடுமினே   (2)


    வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
    காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*

    ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)


    தகவிலை தகவிலையே நீ கண்ணா!*   தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்* 
    சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்-   சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*

    அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு*   ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ* 
    மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்*   வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.


    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*   வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்* 
    யாவரும் துணைஇல்லை யான் இருந்து*  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*

    போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்*  பொருகயல் கண்இணை நீரும் நில்லா* 
    சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த*  இத் தொழுத்தையோம் தனிமை தானே.  


    தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-  துயரமும் நினைகிலை கோவிந்தா நின்- 
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பி*   துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*

    பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்*  பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு- 
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*


    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!* 
    பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ*   பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*

    மணிமிகு மார்பினில் முல்லைப் போது*  என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து 
    அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்  


    அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*  ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்* 
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்  பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*

    வடித்தடம் கண்இணை நீரும் நில்லா*   மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே* 
    வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*  வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே. 


    வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு*  வெள்வளை மேகலை கழன்று வீழ*
    தூமலர்க் கண்இணை முத்தம் சோர*  துணைமுலை பயந்து என தோள்கள் வாட*

    மாமணி வண்ணா! உன்செங்கமல  வண்ண*  மெல் மலரடி நோவ நீபோய்* 
    ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு*  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 


    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று*  ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்* 
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து*  கலவியும் நலியும் என்கை கழியேல்*

    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*  கைகளும் பீதக உடையும் காட்டி* 
    ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ*  உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  


    உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்*  திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்- 
    வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்*  எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*

    மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு*  நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ* 
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*  அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!


    அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!*  அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ* 
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்- 

    உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று-  ஊடுற என்னுடை ஆவி வேமால்* 
    திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*  செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே! 


    செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு*  அத்திருவடி திருவடிமேல்*  பொருநல்- 
    சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்*  வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*

    மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*  அவனொடும் பிரிவதற்கு இரங்கி*  தையல்- 
    அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்-  உரைத்தன*  இவையும் பத்து அவற்றின் சார்வே.   (2)