பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
    வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*

    நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
    கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)


    பொன்னை மாமணியை*  அணி ஆர்ந்ததுஓர்-
    மின்னை*  வேங்கடத்து உச்சியில் கண்டுபோய்*

    என்னை ஆளுடை ஈசனை*  எம்பிரான்-
    தன்னை*  யாம் சென்று காண்டும்*  தண்காவிலே.   (2)


    வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
    பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*

    மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
    ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே


    துளக்கம்இல் சுடரை*  அவுணன்உடல்-
    பிளக்கும் மைந்தனைப்*  பேரில் வணங்கிப்போய்*

    அளப்புஇல் ஆர்அமுதை*  அமரர்க்கு அருள்-
    விளக்கினைச்*  சென்று வெள்ளறைக் காண்டுமே.


    சுடலையில்*  சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
    நடலை தீர்த்தவனை*  நறையூர்க் கண்டு,*  என்-

    உடலையுள் புகுந்து*  உள்ளம் உருக்கிஉண்*
    விடலையைச் சென்று காண்டும்*  மெய்யத்துள்ளே.


    வானை ஆர்அமுதம்*  தந்த வள்ளலை* 
    தேனை நீள்வயல்*  சேறையில் கண்டுபோய்*

    ஆனை வாட்டி அருளும்*  அமரர்தம்-
    கோனை,*  யாம் குடந்தைச்சென்று காண்டுமே.


    கூந்தலார் மகிழ்*  கோவலன்ஆய்*  வெண்ணெய்-
    மாந்துஅழுந்தையில்*  கண்டு மகிழ்ந்துபோய்*

    பாந்தள் பாழியில்*  பள்ளி விரும்பிய*
    வேந்தனைச் சென்று காண்டும்*  வெஃகாவுளே


    பத்தர் ஆவியை*  பால்மதியை,*  அணித்-
    தொத்தை*  மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்*

    முத்தினை மணியை*  மணி மாணிக்க-
    வித்தினைச்,*  சென்று விண்ணகர்க் காண்டுமே


    கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-
    கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

    கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்* 
    நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே.  


    பெற்றமாளிகைப்*  பேரில் மணாளனை* 
    கற்ற நூல்*  கலிகன்றி உரைசெய்த*

    சொல்திறம்இவை*  சொல்லிய தொண்டர்கட்கு*
    அற்றம் இல்லை*  அண்டம் அவர்க்கு ஆட்சியே   (2)


    தாள தாமரைத்*  தடம்அணி வயல் திருமோகூர்* 
    நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று*  அசுரரைத் தகர்க்கும்*

    தோளும் நான்குஉடைச்*  சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்* 
    காள மேகத்தை அன்றி*  மற்றொன்றுஇலம் கதியே.  (2)


    இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்*  ஈன்தண் துழாயின்* 
    அலங்கலங்கண்ணி*  ஆயிரம் பேர்உடை அம்மான்*

    நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்*  திருமோகூர்* 
    நலங்கழல் அவன் அடிநிழல்*  தடமன்றி யாமே. 


    அன்றியாம் ஒரு புகலிடம்*  இலம் என்றுஎன்று அலற்றி* 
    நின்று நான்முகன் அரனொடு*  தேவர்கள் நாட*

    வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்*  திருமோகூர்* 
    நன்று நாம் இனி நணுகுதும்*  நமதுஇடர் கெடவே.  


    இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்*  என்றுஎன்று ஏத்தி* 
    சுடர்கொள் சோதியைத்*  தேவரும் முனிவரும் தொடர*

    படர்கொள் பாம்பணைப்*  பள்ளிகொள்வான் திருமோகூர்* 
    இடர் கெடவடி பரவுதும்*  தொண்டீர்! வம்மினே.  


    தொண்டீர்! வம்மின்*  நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்* 
    அண்டம் மூவுலகு அளந்தவன்*  அணி திருமோகூர்*

    எண் திசையும் ஈன்கரும்பொடு*  பெரும்செந்நெல் விளையக்* 
    கொண்ட கோயிலை வலஞ்செய்து*  இங்கு ஆடுதும் கூத்தே.


    கூத்தன் கோவலன்*  குதற்று வல்லசுரர்கள் கூற்றம்* 
    ஏத்தும் நங்கட்கும்*  அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*

    வாய்த்த தண்பணை வளவயல்சூழ்*  திருமோகூர்- 
    ஆத்தன்*  தாமரை அடிஅன்றி*  மற்றுஇலம் அரணே.        


    மற்றிலம் அரண்*  வான்பெரும் பாழ்தனி முதலாச்* 
    சுற்றும் நீர்படைத்து*  அதன்வழித் தொல்முனி முதலா*

    முற்றும் தேவரோடு*  உலகுசெய்வான் திருமோகூர்* 
    சுற்றிநாம் வலஞ்செய்ய*  நம் துயர்கெடும் கடிதே.


    துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து*  அடியவர் தொழுமின்* 
    உயர்கொள் சோலை*  ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*

    பெயர்கள் ஆயிரம்உடைய*  வல்லரக்கர் புக்குஅழுந்த* 
    தயரதன் பெற்ற*  மரகத மணித் தடத்தினையே.   


    மணித் தடத்தடி மலர்க்கண்கள்*  பவளச் செவ்வாய்* 
    அணிக்கொள் நால்தடம்தோள்*  தெய்வம் அசுரரை என்றும்*

    துணிக்கும் வல்அரட்டன்*  உறைபொழில் திருமோகூர்* 
    நணித்து நம்முடை நல்லரண்*  நாம் அடைந்தனமே.


    நாம்அடைந்த நல்அரண்*  நமக்குஎன்று நல்அமரர்* 
    தீமை செய்யும் வல்அசுரரை*  அஞ்சிச் சென்றுஅடைந்தால்*

    காமரூபம் கொண்டு*  எழுந்துஅளிப்பான் திருமோகூர்* 
    நாமமே நவின்று எண்ணுமின்*  ஏத்துமின் நமர்காள்! 


    ஏத்துமின் நமர்காள்*  என்றுதான் குடம்ஆடு- 
    கூத்தனைக்*  குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*

    வாய்த்த ஆயிரத்துள் இவை*  வண் திருமோகூர்க்கு* 
    ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு*  இடர் கெடுமே.   (2)