பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    புள்உருஆகி நள்இருள் வந்த*  பூதனை மாள,*  இலங்கை-
    ஒள்எரி மண்டி உண்ணப் பணித்த*  ஊக்கம் அதனை நினைந்தோ,?*

    கள்அவிழ் கோதை காதலும்*  எங்கள் காரிகை மாதர் கருத்தும்,* 
    பிள்ளைதன் கையில் கிண்ணமே ஒக்கப்*  பேசுவது எந்தை பிரானே!  (2)


    மன்றில் மலிந்து கூத்து உவந்துஆடி*  மால்விடை ஏழும் அடர்த்து,*  ஆயர்-
    அன்று நடுங்க ஆநிரை காத்த*  ஆண்மை  கொலோ அறியேன் நான்,*

    நின்ற பிரானே! நீள்கடல் வண்ணா!*  நீஇவள் தன்னை நின் கோயில்,*
    முன்றில் எழுந்த முருங்கையில் தேனா*  முன் கைவளை கவர்ந்தாயே. 


    ஆர்மலி ஆழி சங்கொடு பற்றி*  ஆற்றலை ஆற்றல் மிகுத்து,* 
    கார்முகில் வண்ணா! கஞ்சனை முன்னம்*  கடந்தநின் கடுந்திறல் தானோ,*

    நேர்இழை மாதை நித்திலத் தொத்தை*   நெடுங் கடல் அமுதுஅனை யாளை,* 
    ஆர்எழில் வண்ணா! அம்கையில் வட்டுஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே.    


    மல்கிய தோளும் மான்உரி அதளும்*  உடையவர் தமக்கும்ஓர் பாகம்,*
    நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த*  கரதலத்து அமைதியின் கருத்தோ?*

    அல்லிஅம் கோதை அணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,* 
    சொல்லிஎன் நம்பி இவளை நீ உங்கள்*  தொண்டர் கைத் தண்டுஎன்றஆறே. 


    செருஅழியாத மன்னர்கள் மாள*  தேர்வலம் கொண்டு அவர் செல்லும்,*
    அருவழி வானம் அதர்படக் கண்ட*  ஆண்மைகொலோ? அறியேன் நான்,*

    திருமொழி எங்கள் தேமலர்க் கோதை*  சீர்மையை நினைந்திலை அந்தோ,* 
    பெருவழி நாவல் கனியினும் எளியள்*  இவள்எனப் பேசுகின்றாயே


    அரக்கியர் ஆகம் புல்என வில்லால்*  அணிமதிள் இலங்கையார் கோனைச்,*
    செருக்குஅழித்து அமரர் பணிய முன்நின்ற*  சேவகமோ? செய்ததுஇன்று*

    முருக்குஇதழ் வாய்ச்சி முன்கை வெண்சங்கம்*  கொண்டு முன்னே நின்று போகாய்,* 
    எருக்குஇலைக்குஆக எறிமழுஓச்சல்*   என்செய்வது? எந்தை பிரானே!  


    ஆழிஅம் திண்தேர் அரசர் வந்துஇறைஞ்ச*  அலைகடல் உலகம்முன் ஆண்ட,*
    பாழிஅம் தோள்ஓர் ஆயிரம் வீழ*  படைமழுப் பற்றிய வலியோ?*

    மாழைமென் நோக்கி மணிநிறம் கொண்டு வந்து*  முன்னே நின்று போகாய்,*
    கோழிவெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய்!*  குறுந்தடி? நெடுங்கடல் வண்ணா!


    பொருந்தலன் ஆகம்புள் உவந்துஏற*  வள்உகிரால் பிளந்து,*  அன்று- 
    பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த*  பெருமைகொலோ செய்தது இன்று,*

    பெருந்தடங் கண்ணி சுரும்புஉறு கோதை*  பெருமையை நினைந்திலை பேசில்,* 
    கருங்கடல் வண்ணா! கவுள்கொண்ட நீர்ஆம்*  இவள்எனக் கருதுகின்றாயே


    நீர்அழல் வான்ஆய் நெடுநிலம் கால்ஆய்*  நின்றநின் நீர்மையை நினைந்தோ?*
    சீர்கெழு கோதை என்அலதுஇலள் என்று*  அன்னதுஓர் தேற்றன்மை தானோ?*

    பார்கெழு பவ்வத்துஆர் அமுதுஅனை*  பாவையைப் பாவம் செய்தேனுக்கு,* 
    ஆர்அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்ஆக*  நின் மனத்து வைத்தாயே


    வேட்டத்தைக் கருதாது அடிஇணை வணங்கி*  மெய்ம்மையே நின்று எம்பெருமானை,* 
    வாள்திறல் தானை மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன்வாய் ஒலிகள்,*

    தோட்டுஅலர் பைந்தார்ச் சுடர்முடியானைப்*  பழமொழியால் பணிந்து உரைத்த,*
    பாட்டுஇவை பாட பத்திமை பெருகிச்*  சித்தமும் திருவொடு மிகுமே  (2) 


    சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  
    ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

    ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 
    வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே.  (2)


    நாரணன் தமரைக் கண்டுஉகந்து*  நல்நீர்முகில்* 
    பூரண பொன்குடம்*  பூரித்தது உயர்விண்ணில்*

    நீரணி கடல்கள்*  நின்றுஆர்த்தன*  நெடுவரைத்- 
    தோரணம் நிரைத்து*  எங்கும் தொழுதனர்உலகே.


    தொழுதனர் உலகர்கள்*  தூபநல் மலர்மழை- 
    பொழிவனர்*  பூமிஅன்று அளந்தவன் தமர்முன்னே*

    எழுமின்என்று இருமருங்குஇசைத்தனர்*  முனிவர்கள்* 
    வழிஇது வைகுந்தர்க்கு என்று*  வந்து எதிரே. 


    எதிர்எதிர் இமையவர்*  இருப்பிடம் வகுத்தனர்* 
    கதிரவர்அவரவர்*  கைந்நிரை காட்டினர்*

    அதிர்குரல் முரசங்கள்*  அலைகடல் முழக்குஒத்த* 
    மதுவிரி துழாய்முடி*  மாதவன் தமர்க்கே.


    மாதவன் தமர்என்று*  வாசலில் வானவர்* 
    போதுமின் எமதுஇடம்*  புகுதுக என்றலும்*

    கீதங்கள் பாடினர்*  கின்னரர் கெருடர்கள்* 
    வேதநல் வாயவர்*  வேள்விஉள் மடுத்தே.  


    வேள்விஉள் மடுத்தலும்*  விரைகமழ் நறும்புகை* 
    காளங்கள் வலம்புரி*  கலந்துஎங்கும் இசைத்தனர்*

    ஆள்மின்கள் வானகம்*  ஆழியான் தமர் என்று* 
    வாள்ஒண் கண்மடந்தையர்*  வாழ்த்தினர் மகிழ்ந்தே.


    மடந்தையர் வாழ்த்தலும்*  மருதரும் வசுக்களும்* 
    தொடர்ந்து எங்கும்*  தோத்திரம் சொல்லினர்*  தொடுகடல்-

    கிடந்த எம்கேசவன்*  கிளர்ஒளி மணிமுடி* 
    குடந்தை எம்கோவலன்*  குடிஅடி யார்க்கே


    குடிஅடியார் இவர்*  கோவிந்தன் தனக்குஎன்று* 
    முடிஉடை வானவர்*  முறைமுறை எதிர்கொள்ள*

    கொடிஅணி நெடுமதிள்*  கோபுரம் குறுகினர்* 
    வடிவுஉடை மாதவன்*  வைகுந்தம் புகவே.     


    வைகுந்தம் புகுதலும்*  வாசலில் வானவர்*  
    வைகுந்தன் தமர்எமர்*  எமதுஇடம் புகுதஎன்று*

    வைகுந்தத்து அமரரும்*  முனிவரும் வியந்தனர்* 
    வைகுந்தம் புகுவது*  மண்ணவர் விதியே.


    விதிவகை புகுந்தனர்என்று*  நல்வேதியர்* 
    பதியினில் பாங்கினில்*  பாதங்கள் கழுவினர்*

    நிதியும் நல்சுண்ணமும்*  நிறைகுட விளக்கமும்* 
    மதிமுக மடந்தையர்*  ஏந்தினர் வந்தே.


    வந்துஅவர் எதிர்கொள்ள*  மாமணி மண்டபத்து* 
    அந்தம்இல் பேரின்பத்து*  அடியரோடு இருந்தமை*

    கொந்துஅலர் பொழில்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்- 
    சந்தங்கள்ஆயிரத்து*  இவைவல்லார் முனிவரே.   (2)