பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    தவள இளம்பிறை துள்ளும்முந்நீர்*  தண்மலர்த் தென்றலோடு அன்றில்ஒன்றி- 
    துவள,* என் நெஞ்சகம் சோர ஈரும்*  சூழ்பனி நாள் துயிலாது  இருப்பேன்,*

    இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார்*  என்நலம் ஐந்தும்முன் கொண்டுபோன*
    குவளை மலர்நிற வண்ணர்மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்   (2)


    தாதுஅவிழ் மல்லிகை புல்லிவந்த*  தண்மதியின் இளவாடை இன்னே,* 
    ஊதை திரிதந்து உழறிஉண்ண*  ஓர்இரவும் உறங்கேன், உறங்கும்*  

    பேதையர் பேதைமையால் இருந்து*  பேசிலும் பேசுக பெய்வளையார்,*
    கோதை நறுமலர் மங்கைமார்வன்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 


    காலையும் மாலை ஒத்துண்டு*  கங்குல் நாழிகை ஊழியில் நீண்டுஉலாவும்,*
    போல்வதுஓர் தன்மை புகுந்துநிற்கும்*  பொங்குஅழலே ஒக்கும் வாடை சொல்லில்*

    மாலவன் மாமணி வண்ணன் மாயம்*  மற்றும் உள அவை வந்திடாமுன்,* 
    கோலமயில் பயிலும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    கருமணி பூண்டு வெண்நாகுஅணைந்து*  கார்இமில் ஏற்றுஅணர் தாழ்ந்துஉலாவும்,*
    ஒருமணி ஓசை என் உள்ளம் தள்ள*  ஓர் இரவும் உறங்காது இருப்பேன்,*

    பெருமணி வானவர் உச்சிவைத்த*  பேர்அருளாளன் பெருமைபேசி,* 
    குருமணி நீர்கொழிக்கும் புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  


    திண்திமில் ஏற்றின் மணியும்*  ஆயன் தீம்குழல் ஒசையும் தென்றலோடு,*
    கொண்டதுஓர் மாலையும் அந்தி ஈன்ற*  கோல இளம்பிறையோடு கூடி,*

    பண்டைய அல்ல இவை நமக்கு*  பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்,* 
    கொண்டல் மணிநிற வண்ணர் மன்னு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.


    எல்லியும் நன்பகலும் இருந்தே*  ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,* 
    நல்லர் அவர் திறம் நாம்அறியோம்,*  நாண்மடம் அச்சம் நமக்குஇங்குஇல்லை*

    வல்லன சொல்லி மகிழ்வரேலும்*   மாமணி வண்ணரை நாம்மறவோம்,* 
    கொல்லை வளர் இளமுல்லை புல்கு*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    செங்கண் நெடிய கரியமேனித்*  தேவர் ஒருவர் இங்கே புகுந்து,*  என்-
    அங்கம் மெலிய வளைகழல*  ஆதுகொலோ? என்று சொன்னபின்னை,*

    ஐங்கணை வில்லிதன் ஆண்மை என்னோடு*  ஆடும் அதனை அறியமாட்டேன்,* 
    கொங்குஅலர் தண்பணை சூழ்புறவின்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.   


    கேவலம் அன்று கடலின் ஓசை*  கேள்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,*  என்-
    ஆவி அளவும் அணைந்து நிற்கும்*  அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு,* 

    ஏவலம் காட்டி இவன்ஒருவன்*  இப்படியே புகுந்து எய்திடாமுன்,* 
    கோவலர் கூத்தன் குறிப்புஅறிந்து*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின். 


    சோத்துஎன நின்று தொழ இரங்கான்*  தொல்நலம் கொண்டுஎனக்கு இன்றுதாறும்* 
    போர்ப்பதுஓர் பொன்படம் தந்துபோனான்*  போயின ஊர்அறியேன்,*  என்கொங்கை-

    மூத்திடுகின்றன*  மற்றுஅவன் தன் மொய்அகலம் அணை யாதுவாளா,* 
    கூத்தன் இமையவர்கோன் விரும்பும்*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    செற்றவன் தென்இலங்கை மலங்க*  தேவர்பிரான் திருமாமகளைப்,*
    பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட*  பேர்அருளாளன் பெருமைபேசக்-

    கற்றவன்*  காமரு சீர்க் கலியன்*  கண்அகத்தும் மனத்தும் அகலாக்--
    கொற்றவன்,*  முற்று உலகுஆளி நின்ற*  குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்.  (2)


    இன்னுயிர்சேவலும் நீரும் கூவிக்கொண்டு*  இங்கு எத்தனை* 
    என்னுயிர் நோவ மிழற்றேல்மின்*  குயில் பேடைகாள்*

    என்னுயிர்க் கண்ணபிரானை*  நீர் வரக்கூவுகிலீர்* 
    என்னுயிர் கூவிக்கொடுப்பார்க்கும்*  இத்தனை வேண்டுமோ?   (2)


    இத்தனை வேண்டுவதுஅன்றுஅந்தோ!*  அன்றில் பேடைகாள்* 
    எத்தனை நீரும் நும்சேவலும்*  கரைந்துஏங்குதிர்*

    வித்தகன் கோவிந்தன்*  மெய்யன்அல்லன் ஒருவர்க்கும்* 
    அத்தனைஆம் இனி*  என்உயிர் அவன்கையதே.


    அவன்கையதே எனதுஆர்உயிர்*  அன்றில் பேடைகாள்* 
    எவன்சொல்லி நீர்குடைந்துஆடுதிர்*  புடைசூழவே*

    தவம்செய்தில்லா*  வினையாட்டியேன் உயிர் இங்குஉண்டோ* 
    எவன்சொல்லி நிற்றும்*  நும்ஏங்கு கூக்குரல் கேட்டுமே. 


    கூக்குரல்கேட்டும்*  நம்கண்ணன் மாயன் வெளிப்படான்* 
    மேல்கிளை கொள்ளேல்மின்*  நீரும் சேவலும் கோழிகாள்*

    வாக்கும்மனமும்*  கருமமும் நமக்குஆங்கதே* 
    ஆக்கையும் ஆவியும்*  அந்தரம் நின்றுஉழலுமே


    அந்தரம் நின்றுஉழல்கின்ற*  யானுடைப் பூவைகாள்* 
    நும்திறத்துஏதும் இடைஇல்லை*  குழறேல்மினோ*

    இந்திரஞாலங்கள் காட்டி*  இவ்ஏழ்உலகும் கொண்ட* 
    நம் திருமார்பன்*  நம்ஆவி உண்ண நன்குஎண்ணினான். 


    நன்குஎண்ணி நான்வளர்த்த*  சிறுகிளிப்பைதலே* 
    இன்குரல் நீ மிழற்றேல்*  என்ஆர்உயிர்க் காகுத்தன்*

    நின்செய்ய வாய்ஒக்கும் வாயன்*  கண்ணன்கை காலினன்* 
    நின்பசும்சாம நிறத்தன்*  கூட்டுண்டு நீங்கினான். 


    கூட்டுண்டு நீங்கிய*  கோலத்தாமரைக் கண்செவ்வாய்* 
    வாட்டம்இல்என் கருமாணிக்கம்*  கண்ணன் மாயன்போல்*

    கோட்டிய வில்லொடு*  மின்னும் மேகக்குழாங்கள்காள்* 
    காட்டேல்மின் நும்உரு*  என்உயிர்க்கு அதுகாலனே.


    உயிர்க்குஅது காலன்என்று*  உம்மை யான்இரந்தேற்குநீர்* 
    குயில் பைதல்காள்*  கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்*

    தயிர்ப்பழஞ்சோற்றொடு*  பால்அடிசிலும் தந்து*  சொல் 
    பயிற்றிய நல்வளம்ஊட்டினீர்*  பண்புஉடையீரே!      


    பண்புடை வண்டொடு தும்பிகாள்*  பண்மிழற்றேல்மின்* 
    புண்புரை வேல்கொடு*  குத்தால்ஒக்கும் நும்இன்குரல்

    தண்பெருநீர்த் தடம்தாமரை*  மலர்ந்தால்ஒக்கும் 
    கண்பெரும்கண்ணன்*  நம்ஆவிஉண்டுஎழ நண்ணினான் 


    எழநண்ணி நாமும்*  நம்வானநாடனோடு ஒன்றினோம்* 
    பழன நல்நாரைக் குழாங்கள்காள்*  பயின்றுஎன்இனி*

    இழைநல்லஆக்கையும்*  பையவே புயக்குஅற்றது* 
    தழைநல்ல இன்பம் தலைப்பெய்து*  எங்கும் தழைக்கவே.   


    இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த*  பல்ஊழிக்குத்* 
    தன்புகழ்ஏத்தத்*  தனக்குஅருள் செய்தமாயனைத்*

    தென்குருகூர்ச் சடகோபன்*  சொல்ஆயிரத்துள் இவை* 
    ஒன்பதோடு ஒன்றுக்கும்*  மூவுலகும் உருகுமே   (2)