பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-
    தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*

    பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*
    செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,


    எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்--
    செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*

    மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-
    தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே. 


    வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-
    ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

    துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,* 
    தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.


    ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-
    கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*

    நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-
    தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே. 


    வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்
    தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*

    மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-
    திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே.  


    காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-
    ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*

    நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,* 
    தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே. 


    கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-
    நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*

    குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-
    தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே.  


    பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து- 
    ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*

    தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*
    தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.


    கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*
    மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,* 

    மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*
    தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.    


    ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்- 
    சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*

    நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-
    நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)


    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*

    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)


    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*

    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   


    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       


    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.


    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*

    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 


    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  

    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  


    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*

    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.


    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*

    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே


    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*

    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  


    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*

    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   


    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)