பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    அக்கும் புலியின்*  அதளும் உடையார்*  அவர்ஒருவர்
    பக்கம் நிற்க நின்ற*  பண்பர்ஊர் போலும்*

    தக்க மரத்தின் தாழ்சினைஏறி,*  தாய்வாயில்-
    கொக்கின் பிள்ளை*  வெள்இறவு உண்ணும் குறுங்குடியே.  (2)


    துங்கஆர் அரவத் திரைவந்து உலவ*  தொடுகடலுள்,-
    பொங்குஆர் அரவில் துயிலும்*  புனிதர்ஊர் போலும்,*

    செங்கால் அன்னம்*  திகழ்தண் பணையில் பெடையோடும்,*
    கொங்குஆர் கமலத்து*  அலரில் சேரும் குறுங்குடியே.


    வாழக் கண்டோம்*  வந்து காண்மின் தொண்டீர்காள்,*
    கேழல் செங்கண்*  மாமுகில் வண்ணர் மருவும் ஊர்,*

    ஏழைச் செங்கால்*  இன்துணை நாரைக்கு இரை தேடி,* 
    கூழைப் பார்வைக்*  கார்வயல் மேயும் குறுங்குடியே. 


    சிரம்முன் ஐந்தும் ஐந்தும்*  சிந்தச் சென்று,*  அரக்கன்- 
    உரமும் கரமும் துணித்த*  உரவோன்ஊர் போலும்,*

    இரவும் பகலும்*  ஈன்தேன் முரல,*  மன்றுஎல்லாம்-
    குரவின் பூவே தான்*  மணம் நாறும் குறுங்குடியே.


    கவ்வைக் களிற்று மன்னர் மாள*  கலிமாத்தேர்-
    ஐவர்க்குஆய்,*  அன்றுஅமரில் உய்த்தான் ஊர்போலும்,*

    மைவைத்து இலங்கு*  கண்ணார் தங்கள் மொழிஒப்பான்,* 
    கொவ்வைக் கனிவாய்க்*  கிள்ளை பேசும் குறுங்குடியே.


    தீநீர் வண்ண*  மாமலர் கொண்டு விரை ஏந்தி,* 
    தூநீர் பரவித்*  தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!,*

    மாநீர் வண்ணர்*  மருவி உறையும்இடம்,*  வானில்-
    கூன்நீர் மதியை*  மாடம் தீண்டும் குறுங்குடியே..


    வல்லிச்சிறு நுண்இடையாரிடை*  நீர்வைக்கின்ற,*
    அல்லல் சிந்தை தவிர*  அடைமின் அடியீர்காள்!,*

    சொல்லில் திருவே அனையார் கனிவாய் எயிறுஒப்பான்,* 
    கொல்லை முல்லை*  மெல்அரும்பு ஈனும் குறுங்குடியே. 


    நார்ஆர்இண்டை*  நாள்மலர் கொண்டு நம்தமர்காள்,* 
    ஆரா அன்போடு*  எம்பெருமான் ஊர்அடைமின்கள்,*

    தாரா ஆரும்*  வார்புனல் மேய்ந்து வயல்வாழும்*
    கூர்வாய் நாரை*  பேடையொடு ஆடும் குறுங்குடியே.


    நின்ற வினையும் துயரும் கெட*  மாமலர்ஏந்தி,* 
    சென்று பணிமின் எழுமின்*  தொழுமின் தொண்டீர்காள்,*

    என்றும் இரவும் பகலும்*  வரிவண்டு இசைபாட,* 
    குன்றின் முல்லை*  மன்றிடை நாறும் குறுங்குடியே..


    சிலையால் இலங்கை செற்றான்*  மற்றுஓர் சினவேழம்,*
    கொலைஆர் கொம்பு கொண்டான் மேய*  குறுங்குடிமேல்,*

    கலைஆர் பனுவல் வல்லான்*  கலியன் ஒலிமாலை*
    நிலைஆர் பாடல் பாடப்*  பாவம் நில்லாவே  (2)


    உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
    பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*

    தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
    மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)


    நினைதொறும் சொல்லும்தொறும்*  நெஞ்சு இடிந்துஉகும்* 
    வினைகொள்சீர் பாடிலும்*  வேம்எனதுஆர்உயிர்*

    சுனைகொள் பூஞ்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பா* 
    நினைகிலேன் நான்உனக்கு*  ஆட்செய்யும் நீர்மையே.   


    நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
    ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 

    சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.


    அறிகிலேன் தன்னுள்*  அனைத்துஉலகும் நிற்க* 
    நெறிமையால் தானும்*  அவற்றுள் நிற்கும் பிரான்*

    வெறிகமழ்சோலைத்*  தென்காட்கரை என்அப்பன்* 
    சிறியவென்னாயிருண்ட திருஅருளே.


    திருவருள் செய்பவன்போல*  என்னுள்புகுந்து* 
    உருவமும் ஆருயிரும்*  உடனே உண்டான்*

    திருவளர்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
    கருவளர்மேனி*  என்கண்ணன் கள்வங்களே.


    என்கண்ணன் கள்வம்*  எனக்குச் செம்மாய்நிற்கும்* 
    அம்கண்ணன் உண்ட*  என்ஆர்உயிர்க்கோதுஇது*

    புன்கண்மை எய்தி*  புலம்பி இராப்பகல்* 
    என்கண்ணன் என்று*  அவன்காட்கரைஏத்துமே 


    காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
    வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*

    ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
    கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.


    கோள்உண்டான் அன்றிவந்து*  என்உயிர் தான்உண்டான்* 
    நாளும்நாள்வந்து*  என்னை முற்றவும் தான்உண்டான்*

    காளநீர்மேகத்*  தென்காட்கரை என்அப்பற்கு* 
    ஆள்அன்றேபட்டது*  என்ஆர்உயிர் பட்டதே. 


    ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
    பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*

    கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
    சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.


    வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
    ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்

    பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
    கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  


    கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
    கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*

    வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
    முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)