பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,* 
    சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

    அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-
    செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2) 


    கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
    துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

    குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
    திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே  


    வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,* 
    மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

    போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,* 
    சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
    பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

    ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
    சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.


    மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*
    பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*
    செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  


    மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-
    குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

    குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*
    செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,* 
    பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

    கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,* 
    தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 


    அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு- 
    பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

    வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,* 
    திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே


    பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*
    மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

    துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,* 
    தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.


    கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,* 
    சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

    மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
    உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2) 


    கொண்ட பெண்டிர் மக்கள்உற்றார்*  சுற்றத்தவர் பிறரும்* 
    கண்டதோடு பட்டதுஅல்லால்*  காதல்மற்றுயாதும்இல்லை*

    எண்திசையும் கீழும்மேலும்*  முற்றவும் உண்டபிரான்* 
    தொண்டரோமாய் உய்யலல்லால்*  இல்லைகண்டீர் துணையே  (2)


    துணையும் சார்வும்ஆகுவார்போல்*  சுற்றத்தவர்பிறரும்* 
    அணையவந்த ஆக்கம்உண்டேல்*  அட்டைகள்போல் சுவைப்பர்*

    கணைஒன்றாலே ஏழ்மரமும் எய்த*  எம்கார்முகிலைப்* 
    புணைஎன்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர்பொருளே.  


    பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்* 
    இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*

    மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு* 
    அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.


    அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்* 
    இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*

    வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*
    சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே. 


    சதுரம்என்று தம்மைத்தாமே*  சம்மதித்து இன்மொழியார்* 
    மதுரபோகம் துற்றவரே*  வைகிமற்றுஒன்றுஉறுவர்*

    அதிர்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப்பிறந்தாற்கு* 
    எதிர்கொள்ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர் இன்பமே. 


    இல்லைகண்டீர் இன்பம்அந்தோ!*  உள்ளது நினையாதே* 
    தொல்லையார்கள் எத்தனைவர்*  தோன்றிக் கழிந்தொழிந்தார்?*

    மல்லை மூதூர்*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    சொல்லிஉய்யப் போகல்அல்லால்*  மற்றொன்றுஇல்லைசுருக்கே.


    மற்றொன்றுஇல்லை சுருங்கச்சொன்னோம்*  மாநிலத்துஎவ்உயிர்க்கும்* 
    சிற்றவேண்டா சிந்திப்பேஅமையும்*  கண்டீர்கள்அந்தோ!*

    குற்றம்அன்றுஎங்கள் பெற்றத்தாயன்*  வடமதுரைப்பிறந்தான்* 
    குற்றம்இல்சீர் கற்றுவைகல்*  வாழ்தல்கண்டீர்குணமே. 


    வாழ்தல்கண்டீர் குணம்இது அந்தோ!*  மாயவன் அடிபரவிப்* 
    போழ்துபோக உள்ளகிற்கும்*  புன்மைஇலாதவர்க்கு*

    வாழ்துணையா*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே* 
    வீழ்துணையாப் போம்இதனில்*  யாதும்இல்லைமிக்கதே. 


    யாதும்இல்லை மிக்குஅதனில்*  என்றுஎன்று அதுகருதி* 
    காதுசெய்வான் கூதைசெய்து*  கடைமுறை வாழ்க்கையும்போம்*

    மாதுகிலின் கொடிக்கொள்மாட*  வடமதுரைப்பிறந்த* 
    தாதுசேர்தோள் கண்ணன் அல்லால்*  இல்லை கண்டீர் சரணே.


    கண்ணன் அல்லால் இல்லைகண்டீர்*  சரண்அதுநிற்கவந்து* 
    மண்ணின் பாரம் நீக்குதற்கே*  வடமதுரைப்பிறந்தான்*

    திண்ணமாநும் உடைமை உண்டேல்*  அவன்அடி சேர்த்துஉய்ம்மினோ* 
    எண்ணவேண்டா நும்மதுஆதும்*  அவன்அன்றிமற்றுஇல்லையே.


    ஆதும்இல்லை மற்றுஅவனில்*  என்றுஅதுவே துணிந்து* 
    தாதுசேர்தோள் கண்ணனைக்*  குருகூர்ச்சடகோபன்சொன்ன*

    தீதுஇலாத ஒண்தமிழ்கள்*  இவைஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஓதவல்லபிராக்கள்*  நம்மை ஆளுடையார்கள் பண்டே.   (2)