பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
    அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*

    சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
    வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)


    இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
    அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*

    விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே


    பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
    அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*

    கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
    மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
    நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*

    கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
    வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய*  மணிமுடி ஒருபதும் புரள,* 
    அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட*  அமர்செய்த அடிகள்தம் கோயில்,*

    பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப*   பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
    மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!    


    விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
    குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*

    தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
    மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
    தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
    மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
    பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*

    கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
    மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


    புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
    எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

    சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
    மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 


    வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
    தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*

    கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
    கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)


    அறுக்கும் வினையாயின*  ஆகத்து அவனை* 
    நிறுத்தும் மனத்துஒன்றிய*  சிந்தையினார்க்கு*

    வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    குறுக்கும்வகை உண்டுகொலோ*  கொடியேற்கே?  (2)


    கொடிஏர்இடைக்*  கோகனகத்தவள் கேள்வன்* 
    வடிவேல் தடம்கண்*  மடப்பின்னை மணாளன்*

    நெடியான்உறை சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    அடியேன் அணுகப்பெறும்நாள்*  எவைகொலோ!


    எவைகொல் அணுகப் பெறும்நாள்?'*  என்று எப்போதும்* 
    கவையில் மனம்இன்றி*  கண்ணீர்கள் கலுழ்வன்* 

    நவைஇல் திருநாரணன்சேர்*  திருநாவாய்*  
    அவையுள் புகலாவதுஓர்*  நாள் அறியேனே


    நாளேல் அறியேன்*  எனக்குஉள்ளன*  நானும் 
    மீளா அடிமைப்*  பணி செய்யப் புகுந்தேன்*

    நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வாள்ஏய் தடம்கண்*  மடப்பின்னை மணாளா!


    மணாளன் மலர்மங்கைக்கும்*  மண் மடந்தைக்கும்* 
    கண்ணாளன் உலகத்துஉயிர்*  தேவர்கட்குஎல்லாம்*

    விண்ணாளன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    கண்ஆரக் களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்டே?  


    கண்டே களிக்கின்றது*  இங்குஎன்று கொல்கண்கள்* 
    தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்*  துரிசுஇன்றி*

    வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்*  
    கொண்டே உறைகின்ற*  எம்கோவலர்கோவே!


    கோவாகிய*  மாவலியை நிலம்கொண்டாய்* 
    தேவாசுரம் செற்றவனே!*  திருமாலே*

    நாவாய்உறைகின்ற*  என்நாரணநம்பீ* 
    'ஆஆ அடியான்*  இவன் என்று அருளாயே. 


    அருளாது ஒழிவாய்*  அருள்செய்து*  அடியேனைப் 
    பொருளாக்கி*  உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*

    மருளேஇன்றி*  உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்* 
    தெருளேதரு*  தென்திருநாவாய் என்தேவே!  


    தேவர் முனிவர்க்குஎன்றும்*  காண்டற்குஅரியன்* 
    மூவர் முதல்வன்*  ஒருமூவுலகுஆளி*

    தேவன் விரும்பிஉறையும்*  திருநாவாய்* 
    யாவர் அணுகப்பெறுவார்*  இனிஅந்தோ!


    அந்தோ! அணுகப்பெறும்நாள்*  என்றுஎப்போதும்*  
    சிந்தை கலங்கித்*  திருமால் என்றுஅழைப்பன்*

    கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்*  திருநாவாய்* 
    வந்தே உறைகின்ற*  எம்மா மணிவண்ணா!.


    வண்ணம் மணிமாட*  நல்நாவாய் உள்ளானைத்*  
    திண்ணம் மதிள்*  தென்குருகூர்ச் சடகோபன்* 

    பண்ணார் தமிழ்*  ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*  
    மண்ணாண்டு*  மணம்கமழ்வர் மல்லிகையே.   (2)