பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    காவார் மடல்பெண்ணை*  அன்றில்அரி குரலும்,*
    ஏவாயின் ஊடுஇயங்கும்*  எஃகின் கொடிதாலோ,*

    பூஆர் மணம்கமழும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    பாவாய்! இதுநமக்குஓர்*  பான்மையே ஆகாதே.   (2)


    முன்னம் குறள்உருஆய்*  மூவடிமண் கொண்டுஅளந்த,*
    மன்னன் சரிதைக்கே*  மால்ஆகி பொன்பயந்தேன்,*

    பொன்னம் கழிக்கானல்*  புள்இனங்காள்! புல்லாணி* 
    அன்னம்ஆய் நூல்பயந்தாற்கு*  ஆங்குஇதனைச் செப்புமினே


    வவ்வி துழாய்அதன்மேல்*  சென்ற தனிநெஞ்சம்,*
    செவ்வி அறியாது*  நிற்கும்கொல் நித்திலங்கள்*

    பவ்வத் திரைஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தெய்வச் சிலையாற்கு*  என் சிந்தைநோய் செப்புமினே. 


    பரிய இரணியனது ஆகம்*  அணிஉகிரால்,*
    அரிஉருஆய்க் கீண்டான் அருள்*  தந்தவா!  நமக்கு,*

    பொருதிரைகள் போந்துஉலவு*  புல்லாணி கைதொழுதேன்,* 
    அரிமலர்க்கண் நீர்ததும்ப*  அம்துகிலும் நில்லாவே.   


    வில்லால் இலங்கை மலங்க*  சரம்துரந்த,*
    வல்லாளன் பின்போன*  நெஞ்சம் வரும் அளவும்,*

    எல்லாரும் என்தன்னை*  ஏசிலும் பேசிடினும்,* 
    புல்லாணி எம்பெருமான்*  பொய் கேட்டுஇருந்தேனே   (2)


    சுழன்றுஇலங்கு வெம்கதிரோன்*  தேரோடும் போய்மறைந்தான்,* 
    அழன்று கொடிதுஆகி*  அம்சுடரோன் தான்அடுமால்,* 

    செழுந்தடம் பூஞ்சோலை சூழ்*  புல்லாணி கைதொழுதேன்,*  
    இழந்திருந்தேன் என்தன்*  எழில்நிறமும் சங்குமே.       


    கனைஆர் இடிகுரலின்*  கார்மணியின் நாஆடல்,*
    தினையேனும் நில்லாது*  தீயில் கொடிதாலோ,*

    புனைஆர் மணிமாடப்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    வினையேன்மேல் வேலையும்*  வெம்தழலே வீசுமே.


    தூம்புஉடைக்கை வேழம்*  வெருவ மருப்புஒசித்த*
    பாம்பின் அணையான்*  அருள்தந்தவா நமக்கு,*

    பூஞ்செருந்தி பொன்சொரியும்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    தேம்பல் இளம்பிறையும்*  என்தனக்கு ஓர்வெம்தழலே. 


    வேதமும் வேள்வியும்*  விண்ணும் இருசுடரும்,* 
    ஆதியும் ஆனான்*  அருள் தந்தவா நமக்கு,*

    போதுஅலரும் புன்னைசூழ்*  புல்லாணி கைதொழுதேன்,* 
    ஓதமும் நானும்*  உறங்காது இருந்தேனே. 


    பொன்அலரும் புன்னைசூழ்*  புல்லாணி அம்மானை*
    மின்இடையார் வேட்கைநோய் கூர*  இருந்ததனை,*

    கல்நவிலும் திண்தோள்*  கலியன் ஒலிவல்லார்,*
    மன்னவர்ஆய் மண்ஆண்டு*  வான்நாடும் முன்னுவரே   (2)


    மையார்கருங்கண்ணி*  கமல மலர்மேல்* 
    செய்யாள் திருமார்வினில்சேர்*  திருமாலே*

    வெய்யார்சுடர்ஆழி*  சுரிசங்கம்ஏந்தும்*  
    கையா உன்னைக்காணக்*  கருதும் என்கண்ணே.    (2)


    கண்ணேஉன்னைக் காணக்கருதி*  என்நெஞ்சம் 
    எண்ணேகொண்ட*  சிந்தையதாய்  நின்றுஇயம்பும்*

    விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்புஅரியாயை* 
    நண்ணாது  ஒழியேன் என்று*  நான் அழைப்பனே


    அழைக்கின்ற அடிநாயேன்*  நாய்கூழை வாலால்* 
    குழைக்கின்றது போல*  என்உள்ளம் குழையும்*

    மழைக்கு அன்றுகுன்றம் எடுத்து*  ஆநிரைகாத்தாய். 
    பிழைக்கின்றதுஅருள்என்று*  பேதுறுவனே


    உறுவது இதுஎன்று*  உனக்கு ஆள்பட்டு*  நின்கண் 
    பெறுவது எதுகொல்என்று*  பேதையேன் நெஞ்சம்*

    மறுகல்செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்* 
    அறிவதுஅரிய*  அரியாய அம்மானே!    


    அரியாய அம்மானை*  அமரர் பிரானை* 
    பெரியானை*  பிரமனை முன்படைத்தானை*

    வரிவாள் அரவின்அணைப்*  பள்ளிகொள்கின்ற* 
    கரியான்கழல் காணக்*  கருதும் கருத்தே.


    கருத்தே உன்னைக்*  காணக்கருதி*  என்நெஞ்சத்து 
    இருத்தாக இருத்தினேன்*  தேவர்கட்குஎல்லாம்*

    விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி*  உயரத்து 
    ஒருத்தா*  உன்னைஉள்ளும்*  என்உள்ளம் உகந்தே


    உகந்தேஉன்னை*  உள்ளும் என்உள்ளத்து அகம்பால்* 
    அகம்தான் அமர்ந்தே*  இடம்கொண்ட அமலா*

    மிகும்தானவன் மார்வுஅகலம்*  இருகூறா* 
    நகந்தாய் நரசிங்கம்அதுஆய உருவே!


    உருவாகிய*  ஆறுசமயங்கட்குஎல்லாம்* 
    பொருவாகி நின்றான்*  அவன் எல்லாப்பொருட்கும்*

    அருவாகிய ஆதியை*  தேவர்கட்குஎல்லாம்* 
    கருவாகிய கண்ணனை*  கண்டுகொண்டேனே.


    கண்டுகொண்டு*  என்கண்இணை ஆரக்களித்து* 
    பண்டைவினையாயின*  பற்றோடுஅறுத்து*

    தொண்டர்க்கு அமுதுஉண்ணச்*  சொல்மாலைகள் சொன்னேன்* 
    அண்டத்துஅமரர் பெருமான்!* அடியேனே.       


    அடியான் இவன்என்று*  எனக்குஆர்அருள்செய்யும் 
    நெடியானை*  நிறைபுகழ் அம்சிறைப்*  புள்ளின்

    கொடியானை*  குன்றாமல்*  உலகம்அளந்த 
    அடியானை*  அடைந்து அடியேன்*  உய்ந்தவாறே


    ஆறாமதயானை*  அடர்த்தவன்தன்னை* 
    சேறுஆர்வயல்*  தென்குருகூர்ச் சடகோபன்*

    நூறேசொன்ன*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    ஏறேதரும்*  வானவர்தம் இன்உயிர்க்கே   (2)