பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தன்னை நைவிக்கிலேன்*  வல்வினையேன் தொழுதும்எழு,*
    பொன்னை நைவிக்கும்*  அப்பூஞ் செருந்தி மணநீழல்வாய்,*

    என்னை நைவித்து*  எழில் கொண்டு அகன்ற பெருமான்இடம்,* 
    புன்னை முத்தம்பொழில் சூழ்ந்து*  அழகுஆய புல்லாணியே.  (2) 


    உருகி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    முருகுவண்டுஉன் மலர்க் கைதையின்*  நீழலில் முன்ஒருநாள்,*   

    பெருகுகா தன்மை என்உள்ளம்*  எய்தப் பிரிந்தான்இடம்,* 
    பொருதுமுந் நீர்கரைக்கே*  மணிஉந்து புல்லாணியே.     


    ஏது செய்தால் மறக்கேன்*  மனமே! தொழுதும் எழு,*
    தாது மல்கு தடம்சூழ் பொழில்*  தாழ்வர் தொடர்ந்து,*  பின்-

    பேதை நின்னைப் பிரியேன்இனி*  என்று அகன்றான்இடம்,* 
    போது நாளும் கமழும்*  பொழில்சூழ்ந்த புல்லாணியே.


    கொங்குஉண் வண்டே கரியாக வந்தான்*  கொடியேற்கு,*  முன்- 
    நங்கள்ஈசன்*  நமக்கே பணித்த மொழிசெய்திலன்*

    மங்கை நல்லாய்!  தொழுதும் எழு*  போய் அவன் மன்னும்ஊர்,* 
    பொங்கு முந்நீர் கரைக்கே*  மணி உந்து புல்லாணியே


    உணரில் உள்ளம் சுடுமால்*  வினையேன் தொழுதும் எழு,*
    துணரி நாழல் நறும்போது*  நம்சூழ் குழல்பெய்து,*  பின்- 

    தணரில் ஆவி தளரும்என*  அன்பு தந்தான்இடம்,* 
    புணரி ஓதம் பணில*  மணிஉந்து புல்லாணியே.  


    எள்கி நெஞ்சே! நினைந்து இங்கு இருந்துஎன்?*  தொழுதும் எழு,*
    வள்ளல் மாயன்*  மணிவண்ணன் எம்மான் மருவும்இடம்,*

    கள் அவிழும் மலர்க் காவியும்*  தூமடல் கைதையும்,* 
    புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த*  புல்லாணியே.   


    பரவி நெஞ்சே! தொழுதும்எழு*  போய் அவன் பாலம்ஆய்,*
    இரவும் நாளும் இனிகண் துயிலாது*  இருந்து என்பயன்?*

    விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,*  வெண்திரை*
    புரவி என்னப் புதம்செய்து*  வந்துஉந்து புல்லாணியே 


    அலமும் ஆழிப் படையும் உடையார்*  நமக்கு அன்பர்ஆய்,* 
    சலம்அதுஆகி தகவுஒன்று இலர்*  நாம் தொழுதும்எழு,*

    உலவு கால்நல் கழிஓங்கு*  தண்பைம் பொழிலூடு,*  இசை-
    புலவு கானல்*  களிவண்டுஇனம் பாடு புல்லாணியே. 


    ஓதி நாமம்குளித்து உச்சி தன்னால்,*  ஒளிமாமலர்ப்*
    பாதம் நாளும் பணிவோம்*  நமக்கே நலம்ஆதலின்,*

    ஆது தாரான்எனிலும் தரும்,*  அன்றியும் அன்பர்ஆய்ப்*
    போதும் மாதே! தொழுதும்*  அவன்மன்னு புல்லாணியே   


    இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும்*  எழில்தாமரைப்,*
    புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந்த*  அழகுஆய புல்லாணிமேல்*

    கலங்கல் இல்லாப் புகழான்*  கலியன் ஒலிமாலைகள்,*
    வலம்கொள் தொண்டர்க்கு இடம்ஆவது*  பாடுஇல் வைகுந்தமே  (2)


    ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
    பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*

    காராயின*  காளநல்மேனியினன்* 
    நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)


    அவனேஅகல்ஞாலம்*  படைத்துஇடந்தான்* 
    அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*

    அவனேஅவனும்*  அவனும்அவனும்* 
    அவனே மற்றுஎல்லாமும்*  அறிந்தனமே.


    அறிந்தனவேத*  அரும்பொருள்நூல்கள்* 
    அறிந்தனகொள்க*  அரும்பொருள்ஆதல்*

    அறிந்தனர்எல்லாம்*  அரியைவணங்கி* 
    அறிந்தனர்*  நோய்கள்அறுக்கும்மருந்தே.  


    மருந்தேநங்கள்*  போக மகிழ்ச்சிக்குஎன்று* 
    பெரும்தேவர் குழாங்கள்*  பிதற்றும்பிரான்*

    கரும்தேவன்எம்மான்*  கண்ணன்விண்உலகம்* 
    தரும்தேவனைச்*  சோரேல்கண்டாய்மனமே!


    மனமே! உன்னை*  வல்வினையேன்இரந்து* 
    கனமேசொல்லினேன்*  இதுசோரேல்கண்டாய்*

    புனம்மேவிய*  பூந்தண்துழாய் அலங்கல்* 
    இனம்ஏதும்இலானை*  அடைவதுமே.


    அடைவதும்அணியார்*  மலர்மங்கைதோள்* 
    மிடைவதும்*  அசுரர்க்குவெம்போர்களே*

    கடைவதும்*  கடலுள்அமுதம்*  என்மனம் 
    உடைவதும்*  அவற்கேஒருங்காகவே.


    ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
    ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*

    மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
    ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  


    இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
    ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*

    நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
    சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.


    தொழுதுமாமலர்*  நீர்சுடர்தூபம்கொண்டு* 
    எழுதும்என்னும்இது*  மிகைஆதலின்*

    பழுதுஇல்தொல்புகழ்ப்*  பாம்புஅணைப்பள்ளியாய்* 
    தழுவுமாறுஅறியேன்*  உனதாள்களே 


    தாளதாமரையான்*  உனதுஉந்தியான்* 
    வாள்கொள் நீளமழுஆளி*  உன்ஆகத்தான்*

    ஆளராய்த்தொழுவாரும்*  அமரர்கள்* 
    நாளும் என்புகழ்கோ*  உனசீலமே? 


    சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
    கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
    பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)