பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    மூவரில் முன்முதல்வன்*  முழங்குஆர் கடலுள்கிடந்து,* 
    பூவளர்உந்தி தன்னுள்*  புவனம் படைத்து உண்டுஉமிழ்ந்த,*

    தேவர்கள் நாயகனை*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கோவலர் கோவிந்தனை*  கொடிஏர்இடை கூடும்கொலோ!  (2)


    புனைவளர் பூம்பொழில் ஆர்*  பொன்னி சூழ் அரங்க நகருள்-
    முனைவனை,* மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னை,*

    சினைவளர் பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்றான்*
    கனைகழல் காணும்கொலோ?*  கயல் கண்ணி எம்காரிகையே!  (2)  


    உண்டு உலகுஏழினையும்*  ஒரு பாலகன் ஆல்இலைமேல்,*
    கண்துயில் கொண்டுஉகந்த*  கருமாணிக்க மாமலையை,* 

    திண்திறல் மாகரிசேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    அண்டரதம் கோவினை இன்று*  அணுகும் கொல்? என்ஆய்இழையே!   


    சிங்கம்அதுஆய் அவுணன்*  திறல்ஆகம்முன் கீண்டுஉகந்த,*
    பங்கய மாமலர்க் கண்*  பரனை எம் பரம்சுடரை,*

    திங்கள்நல் மாமுகில் சேர்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நங்கள் பிரானை இன்று*  நணுகும்கொல் என்நல்நுதலே!   


    தானவன் வேள்வி தன்னில்*  தனியே குறள்ஆய் நிமிர்ந்து,* 
    வானமும் மண்ணகமும்*  அளந்த திரி விக்கிரமன்,*

    தேன்அமர் பூம்பொழில் சூழ்*  திரமாலிருஞ் சோலைநின்ற,*
    வானவர் கோனை இன்று*  வணங்கித் தொழவல்லள் கொலோ!


    நேசம்இலாதவர்க்கும்*  நினையாதவர்க்கும் அரியான்,* 
    வாசமலர்ப் பொழில்சூழ்*  வடமா மதுரைப் பிறந்தான்,*

    தேசம்எல்லாம் வணங்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    கேசவ நம்பி தன்னைக்*  கெண்டை ஒண்கண்ணி காணும்கொலோ!  (2)


    புள்ளினை வாய்பிளந்து*  பொருமா கரி கொம்புஒசித்து,* 
    கள்ளச் சகடுஉதைத்த*  கருமாணிக்க ம மலையை,*

    தெள்அருவி கொழிக்கும்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    வள்ளலை வாள்நுதலாள்*  வணங்கித் தொழவல்லள் கொலோ! 


    பார்த்தனுக்கு அன்றுஅருளி*  பாரதத்து ஒருதேர்முன்நின்று,* 
    காத்தவன் தன்னை*  விண்ணோர் கருமாணிக்க மாமலையை,*

    தீர்த்தனை பூம்பொழில் சூழ்*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    மூர்த்தியைக் கைதொழவும்*  முடியும்கொல்? என்மொய்குழற்கே!


    வலம்புரி ஆழியனை*  வரைஆர் திரள்தோளன் தன்னை,* 
    புலம்புரி நூலவனை*  பொழில் வேங்கட வேதியனை,*

    சிலம்புஇயல் ஆறுஉடைய*  திருமாலிருஞ் சோலைநின்ற,*
    நலம்திகழ் நாரணனை*  நணுகும்கொல்?  என்நல்நுதலே!  (2)


    தேடற்கு அரியவனை*  திருமாலிருஞ் சோலை நின்ற,*
    ஆடல் பறவையனை*  அணிஆய்இழை காணும்என்று,*

    மாடக் கொடிமதிள் சூழ்*  மங்கையார் கலிகன்றிசொன்ன,*
    பாடல் பனுவல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே!   (2)  


    மல்லிகைகமழ் தென்றல் ஈரும்ஆலோ!*  வண்குறிஞ்சி இசைதவரும்ஆலோ* 
    செல்கதிர் மாலையும் மயக்கும்ஆலோ!*   செக்கர்நல் மேகங்கள் சிதைக்கும்ஆலோ*

    அல்லிஅம் தாமரைக் கண்ணன் எம்மான்*  ஆயர்கள்ஏறு அரிஏறு எம்மாயோன்* 
    புல்லிய முலைகளும் தோளும் கொண்டு*  புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!   (2)


    புகலிடம் அறிகிலம் தமியம்ஆலோ!  புலம்புறு மணிதென்றல் ஆம்பலாலோ* 
    பகலடுமாலைவண் சாந்தமாலோ!*  பஞ்சமம் முல்லைதண் வாடையாலோ*

    அகல்இடம் படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்து-  அளந்து*  எங்கும் அளிக்கின்ற ஆயன்மாயோன்* 
    இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்*  இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்?


    இனிஇருந்து என்உயிர் காக்குமாறென்*  இணைமுலை நமுக நுண்இடை நுடங்க* 
    துனிஇரும்கலவி செய்து ஆகம்தோய்ந்து*   துறந்துஎம்மை இட்டுஅகல் கண்ணன்கள்வன்*  

    தனிஇளம்சிங்கம் எம்மாயன்வாரான்*   தாமரைக் ண்ணும் செவ்வாயும் நீலப்* 
    பனிஇரும்குழல்களும் நான்கு தோளும்*  பாவியேன் மனத்தே நின்றுஈரும்ஆலோ!  


    பாவியேன் மனத்தே நின்றுஈருமாலோ!*  வாடை தண்வாடை வெவ்வாயாலோ* 
    மேவுதண்மதியம் வெம்மதியமாலோ!*  மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ*

    தூவிஅம் புள்உடைத் தெய்வ வண்டுதுதைந்த*  எம்பெண்மைஅம் பூஇதுதாலோ* 
    ஆவியின் பரம்அல்ல வகைகள்ஆலோ!*  யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*


    யாமுடை நெஞ்சமும் துணைஅன்றுஆலோ!*  ஆ புகுமாலையும் ஆகின்றுஆலோ,* 
    யாமுடை ஆயன்தன் மனம் கல்ஆலோ!*  அவனுடைத் தீம்குழல் ஈரும்ஆலோ*

    யாமுடைத் துணைஎன்னும் தோழிமாரும்*   எம்மில் முன்அவனுக்கு மாய்வர்ஆலோ* 
    யாமுடை ஆர்உயிர் காக்குமாறுஎன்?  அவனுடை அருள் பெறும்போது அரிதே.


    அவனுடைஅருள் பெறும்போது அரிதால்*  அவ்அருள்அல்லன அருளும் அல்ல* 
    அவன்அருள் பெறுமளவு ஆவிநில்லாது*  அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்*

    சிவனொடு பிரமன் வண் திருமடந்தை*  சேர்திருஆகம் எம்ஆவிஈரும்* 
    எவன் இனிப்புகும்இடம்? எவன் செய்கேனோ?  ஆருக்குஎன் சொல்லுகேன் அன்னைமீர்காள்!   


    ஆருக்குஎன் சொல்லுகேன்? அன்னைமீர்காள்!*  ஆர்உயிர் அளவுஅன்று இக்கூர்தண்வாடை* 
    கார்ஒக்கும்மேனி நம்கண்ணன் கள்வம்*   கவர்ந்த அத்தனிநெஞ்சம் அவன்கண் அஃதே*

    சீர்உற்றஅகில் புகையாழ்நரம்பு*  பஞ்சமம்தண் பசும்சாந்துஅணைந்து* 
    போர்உற்றவாடைதண் மல்லிகைப்பூப்*   புதுமணம்முகந்துகொண்டு எறியும்ஆலோ!


    புதுமணம் முகந்துகொண்டு எறியும்ஆலோ!*  பொங்குஇளவாடை புன்செக்கர்ஆலோ* 
    அதுமணந்துஅகன்றநம் கண்ணன்கள்வம்*   கண்ணனில் கொடிது இனிஅதனில்உம்பர்*  

    மதுமண மல்லிகை மந்தக்கோவை*  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து* 
    அதுமணந்து இன்அருள் ஆய்ச்சியர்க்கே*  ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!     


    ஊதும் அத்தீம்குழற்கே உய்யேன்நான்!*  அதுமொழிந்துஇடை இடைதன் செய்கோலத்* 
    தூதுசெய் கண்கள் கொண்டுஒன்று பேசி*  தூமொழி இசைகள் கொண்டு ஒன்றுநோக்கி*

    பேதுறு முகம்செய்து நொந்துநொந்து*  பேதைநெஞ்சுஅறவுஅறப் பாடும்பாட்டை* 
    யாதும்ஒன்று அறிகிலம் அம்மஅம்ம!*  மாலையும்வந்தது மாயன்வாரான். 


    மாலையும்வந்தது மாயன்வாரான்*  மாமணிபுலம்ப வல்ஏறுஅணைந்த*
    கோல நல்நாகுகள் உகளும்ஆலோ!  கொடியன குழல்களும் குழறும்ஆலோ*

    வால்ஒளி வளர்முல்லை கருமுகைகள்*   மல்லிகை அலம்பி வண்டுஆலும்ஆலோ*
    வேலையும் விசும்பில் விண்டுஅலறும்ஆலோ!*  என்சொல்லி உய்வன் இங்கு அவனைவிட்டே?  


    அவனைவிட்டுஅகன்று உயிர்ஆற்றகில்லா*  அணிஇழைஆய்ச்சியர் மாலைப்பூசல்* 
    அவனைவிட்டு அகல்வதற்கே இரங்கி*  அணிகுருகூர்ச் சடகோபன்மாறன்*

    அவனிஉண்டு உமிழ்ந்தவன் மேல்உரைத்த*   ஆயிரத்துள் இவை பத்தும்கொண்டு* 
    அவனியுள் அலற்றிநின்று உய்ம்மின் தொண்டீர்!   அச்சொன்ன மாலை நண்ணித்தொழுதே!    (2)