பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*

    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)


    தோடுஅவிழ் நீலம் மணம் கொடுக்கும்*  சூழ்புனல்சூழ் குடந்தைக் கிடந்த,*
    சேடர்கொல் என்று தெரிக்க மாட்டேன்*  செஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி,*

    பாடக மெல்அடியார் வணங்க*  பல்மணி முத்தொடு இலங்குசோதி,*
    ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வேய்இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த*  மெய்ய மணாளர் இவ் வையம்எல்லாம்,*
    தாயின நாயகர் ஆவர் தோழீ!*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*

    சேய்இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்*  செவ்விய ஆகி மலர்ந்தசோதி,*
    ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்*  அச்சோ ஒருவர் அழகியவா!        


    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*

    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  


    கோழியும் கூடலும் கோயில் கொண்ட*  கோவலரே ஒப்பர் குன்றம்அன்ன,*
    பாழிஅம் தோளும் ஓர் நான்கு உடையர்*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்*  மாகடல் போன்றுஉளர் கையில்வெய்ய,*
    ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    வெம்சின வேழ மருப்புஒசித்த*  வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
    தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*   

    கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த*  காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,* 
    அஞ்சன மாமலையேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*

    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 


    மஞ்சுஉயர் மாமதி தீண்ட நீண்ட*  மாலிருஞ் சோலை மணாளர் வந்து,*  என்-
    நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்*  நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,*

    மஞ்சுஉயர் பொன்மலை மேல் எழுந்த*  மாமுகில் போன்றுஉளர் வந்துகாணீர்,* 
    அம்சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*

    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   


    அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
    கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-

    இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
    மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)


    பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
    கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 

    தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
    தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  


    குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
    அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்

    படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
    கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  


    கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
    தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*

    தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
    இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!


    புளிங்குடிக்கிடந்து வரகுணமங்கைஇருந்து*  வைகுந்தத்துள் நின்று* 
    தெளிந்தஎன்சிந்தை அகம்கழியாதே*  என்னைஆள்வாய் எனக்குஅருளி*

    நளிர்ந்தசீர்உலகம் மூன்றுடன்வியப்ப*  நாங்கள்கூத்துஆடி நின்றுஆர்ப்ப* 
    பளிங்குநீர் முகிலின்பவளம்போல்*  கனிவாய்சிவப்பநீ காணவாராயே   


    பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
    தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*

    பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
    கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  


    காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
    மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*

    காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
    காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  


    எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்* 
    செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*

    நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர* 
    இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 


    எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
    தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*

    திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
    இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.


    வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
    போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 

    சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
    கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 


    கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
    கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*

    வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
    கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    


    'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
    மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*

    நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
    ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)