பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)


    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 


    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)


    எம்கானல் அகம்கழிவாய்*  இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்* 
    செங்கால மடநாராய்!*  திருமூழிக்களத்து உறையும்*

    கொங்குஆர் பூந்துழாய்முடி*  எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்* 
    நும்கால்கள் என்தலைமேல்*  கெழுமீரோ நுமரோடே.  (2)


    நுமரோடும் பிரியாதே*  நீரும் நும் சேவலுமாய்* 
    அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*

    எமராலும் பழிப்புண்டு*  இங்கு என்தம்மால் இழிப்புண்டு* 
    தமரோடுஅங்கு உறைவார்க்குத்*  தக்கிலமே! கேளீரே.


    தக்கிலமே கேளீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேரும்* 
    கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!*  குளிர் மூழிக்களத்து உறையும்*

    செக்கமலத்துஅலர் போலும்*  கண்கைகால் செங்கனிவாய்* 
    அக்கமலத்துஇலைப்போலும்*  திருமேனி அடிகளுக்கே.


    திருமேனி அடிகளுக்குத்*  தீவினையேன் விடுதூதாய்* 
    திருமூழிக்களம் என்னும்*  செழுநகர்வாய் அணிமுகில்காள்*

    திருமேனி அவட்குஅருளீர்*  என்றக்கால் உம்மைத்தன்* 
    திருமேனி ஒளிஅகற்றி*  தெளிவிசும்பு கடியுமே?   


    தெளிவிசும்பு கடிதுஓடி*  தீவளைத்து மின்இலகும்* 
    ஒளிமுகில்காள்!*  திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*

    தெளிவிசும்பு திருநாடாத்*  தீவினையேன் மனத்துஉறையும்* 
    துளிவார்கள்குழலார்க்கு*  என்தூதுஉரைத்தல் செப்புமினே.


    தூதுஉரைத்தல் செப்புமின்கள்*  தூமொழிவாய் வண்டுஇனங்காள்*  
    போதுஇரைத்து மதுநுகரும்*  பொழில் மூழிக்களத்துஉறையும்* 

    மாதரைத்தம் மார்வகத்தே*  வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*  
    தூதுஉரைத்தல் செப்புதிரேல்*  சுடர்வளையும் கலையுமே.


    சுடர்வளையும் கலையும்கொண்டு*  அருவினையேன் தோள்துறந்த*  
    படர்புகழான்*  திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்* 

    சுடர்பவள வாயனைக்கண்டு*  ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*  
    படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!*  எனக்கு ஒன்று பணியீரே. 


    எனக்குஒன்று பணியீர்கள்*  இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*  
    மனக்குஇன்பம் படமேவும்*  வண்டுஇனங்காள்! தும்பிகாள்* 

    கனக்கொள் திண்மதிள்புடைசூழ்*  திருமூழிக் களத்துஉறையும்*  
    புனக்கொள் காயாமேனிப்*  பூந்துழாய் முடியார்க்கே.


    பூந்துழாய் முடியார்க்கு*  பொன்ஆழிக் கையாருக்கு* 
    ஏந்துநீர் இளம்குருகே!*  திருமூழிக்களத்தாருக்கு*

    ஏந்துபூண் முலைபயந்து*  என்இணைமலர்க்கண் நீர்ததும்ப* 
    தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்*  தகவுஅன்றுஎன்று உரையீரே   


    தகவுஅன்றுஎன்று உரையீர்கள்*  தடம்புனல்வாய் இரைதேர்ந்து* 
    மிகஇன்பம் படமேவும்*  மேல்நடைய அன்னங்காள்*

    மிகமேனி மெலிவுஎய்தி*  மேகலையும் ஈடுஅழிந்து*  என் 
    அகமேனி ஒழியாமே*  திருமூழிக் களத்தார்க்கே.


    ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்*  ஒண்சுடரை* 
    ஒழிவுஇல்லா அணிமழலைக்*  கிளிமொழியாள் அலற்றியசொல்* 

    வழுஇல்லா வண்குருகூர்ச்*  சடகோபன் வாய்ந்துஉரைத்த*  
    அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்*  நோய் அறுக்குமே   (2)