பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *  ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்* 
    பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே!*

    செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி*  செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக* 
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.(2)  


    கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*  குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய்!* 
    மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி*  மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக்*

    காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக்*  கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே!* 
    ஆள! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை* ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
    தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 

    விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
    அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள*  வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!* 
    கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்*  கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!* 

    தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்*  என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
    ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.  


    மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார்*  வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி*  ஒருங்கு- 
    ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை*  ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!* 

    முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன்*  முன்ன முகத்து அணிஆர் மொய்குழல்கள் அலைய* 
    அத்த! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.


    காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!*  கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே* 
    தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*  துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 

    ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை*  அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!* 
    ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே  


    துப்பு உடை ஆயர்கள் தம் சொல் வழுவாது ஒருகால்*  தூய கருங்குழல் நற் தோகைமயில் அனைய* 
    நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய*  நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே!* 

    தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்*  தனி ஒரு தேர் கடவித்தாயொடு கூட்டிய*  என்- 
    அப்ப! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 


    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 

    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 


    பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்*  பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
    கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்*  கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக* 

    நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே*   நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ* 
    ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.    


    செங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்*  சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும்*  அரையிற்- 
    தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்*  பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்* 

    மங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்*  மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக* 
    எங்கள் குடிக்கு அரசே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே. 


    அன்னமும் மின் உருவும் ஆளரியும் குறளும்*  ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே! 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று* 

    அன்னநடை மடவாள் அசோதை உகந்த பரிசு*  ஆன புகழ்ப் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்* 
    இன்னிசை மாலைகள் இப் பத்தும் வல்லார்* உலகில்- எண்திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.  


    வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்* 
    அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்* 

    ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்! 


    சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து* 
    புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா* 

    அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!*  
    வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!     


    சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்* 
    காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்* 

    வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   


    வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை* 
    நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து* 

    எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி* 
    நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    


    இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று* 
    நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை* 

    கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி* 
    நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து*  திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு* 
    ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன்*  உணர்விலேன் ஆதலால் நமனார்*

    பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன்*  பரமனே! பாற்கடல் கிடந்தாய்!* 
    நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்* 
    துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

    வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!* 
    வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!            


    ஏவினார் கலியார் நலிக என்று*  என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
    ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*

    பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு*  உன் பாதமே பரவி நான் பணிந்து*
    என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!


    ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி*  உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்*
    தான் உடைக் குரம்பை பிரியும்போது*  உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்* 

    தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே!*  திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய்!* 
    நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!         


    ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*
    இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

    காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்* 
    ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)      


    பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*

    பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)


    மதுவார் தண் அம் துழாயான்*  முது வேத முதலவனுக்கு*

    எதுவே? என்பணி? என்னாது*  அதுவே ஆள் செய்யும் ஈடே


    ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*

    பாடும் என் நா அவன் பாடல்*  ஆடும் என் அங்கம் அணங்கே.


    அணங்கு என ஆடும் என் அங்கம்*  வணங்கி வழிபடும் ஈசன்*

    பிணங்கி அமரர் பிதற்றும்*  குணங்கெழு கொள்கையினானே*


    கொள்கை கொளாமை இலாதான்*  எள்கல் இராகம் இலாதான்*

    விள்கை விள்ளாமை விரும்பி*   உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.


    அமுதம் அமரர்கட்கு ஈந்த*  நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

    அமுதிலும் ஆற்ற இனியன்*  நிமிர் திரை நீள் கடலானே.


    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  தோள்கள் தலை துணிசெய்தான்*

    தாள்கள் தலையில் வணங்கி*  நாள்கள் தலைக்கழிமின்னே.


    கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின் அவனை தொழுதால்*

    வழி நின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே.


    தரும அரும் பயன் ஆய*  திருமகளார் தனிக் கேள்வன்*

    பெருமை உடைய பிரானார்*  இருமை வினை கடிவாரே. 


    கடிவார் தீய வினைகள்*  நொடியாரும் அளவைக்கண்*

    கொடியா அடு புள் உயர்த்த*  வடிவு ஆர் மாதவனாரே.


    மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*

    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.