பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பொன் இயல் கிண்கிணி*  சுட்டி புறங் கட்டித்* 
    தன் இயல் ஓசை*  சலன்-சலன் என்றிட*

    மின் இயல் மேகம்*  விரைந்து எதிர் வந்தாற்போல்* 
    என் இடைக்கு ஓட்டரா அச்சோ* அச்சோ 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  (2)


    செங்கமலப் பூவிற்*  தேன் உண்ணும் வண்டே போல்* 
    பங்கிகள் வந்து*  உன் பவளவாய் மொய்ப்ப*

    சங்கு வில் வாள் தண்டு*  சக்கரம் ஏந்திய* 
    அங்கைகளாலே வந்து அச்சோ அச்சோ* 
     ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ


    பஞ்சவர் தூதனாய்ப்*  பாரதம் கைசெய்து* 
    நஞ்சு உமிழ் நாகம்*  கிடந்த நற் பொய்கை புக்கு* 

    அஞ்சப் பணத்தின்மேல்*  பாய்ந்திட்டு அருள்செய்த* 
    அஞ்சனவண்ணனே!  அச்சோ அச்சோ* 
     ஆயர் பெருமானே!  அச்சோ அச்சோ


    நாறிய சாந்தம்*  நமக்கு இறை நல்கு என்னத்*
    தேறி அவளும்*  திருவுடம்பிற் பூச*

    ஊறிய கூனினை*   உள்ளே ஒடுங்க*  அன்று_
    ஏற உருவினாய்!  அச்சோ அச்சோ* 
     எம்பெருமான்!  வாராய் அச்சோ அச்சோ  


    கழல் மன்னர் சூழக்*  கதிர் போல் விளங்கி*
    எழலுற்று மீண்டே*  இருந்து உன்னை நோக்கும்*

    சுழலை பெரிது உடைத்*   துச்சோதனனை*
    அழல விழித்தானே!  அச்சோ அச்சோ*
    ஆழி அங் கையனே!  அச்சோ அச்சோ


    போர் ஒக்கப் பண்ணி*   இப் பூமிப்பொறை தீர்ப்பான்* 
    தேர் ஒக்க ஊர்ந்தாய்!*  செழுந்தார் விசயற்காய்* 

    கார் ஒக்கு மேனிக்*  கரும் பெருங் கண்ணனே!* 
    ஆரத் தழுவாய் வந்து அச்சோ அச்சோ* 
     ஆயர்கள் போரேறே!  அச்சோ அச்சோ 


    மிக்க பெரும்புகழ்*  மாவலி வேள்வியிற்*
    தக்கது இது அன்று என்று*  தானம் விலக்கிய* 

    சுக்கிரன் கண்ணைத்*  துரும்பாற் கிளறிய* 
    சக்கரக் கையனே!  அச்சோ அச்சோ*
     சங்கம் இடத்தானே!  அச்சோ அச்சோ


    என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*
    முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

    மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய* 
    மின்னு முடியனே!  அச்சோ அச்சோ* 
     வேங்கடவாணனே! அச்சோ அச்சோ  


    கண்ட கடலும்*  மலையும் உலகு ஏழும்*  
    முண்டத்துக்கு ஆற்றா*  முகில்வண்ணா ஓ!  என்று* 

    இண்டைச் சடைமுடி*  ஈசன் இரக்கொள்ள*  
    மண்டை நிறைத்தானே!  அச்சோ அச்சோ*
     மார்வில் மறுவனே! அச்சோ அச்சோ 


    துன்னிய பேரிருள்*  சூழ்ந்து உலகை மூட* 
    மன்னிய நான்மறை*  முற்றும் மறைந்திடப்*  

    பின் இவ் உலகினில்*  பேரிருள் நீங்க*  அன்று- 
    அன்னமது ஆனானே!  அச்சோ அச்சோ* 
     அருமறை தந்தானே!  அச்சோ அச்சோ      


    நச்சுவார் முன் நிற்கும்*  நாராயணன் தன்னை*
    அச்சோ வருக என்று*  ஆய்ச்சி உரைத்தன* 

    மச்சு அணி மாடப்*  புதுவைக்கோன் பட்டன் சொல்* 
    நிச்சலும் பாடுவார்*  நீள் விசும்பு ஆள்வரே  (2)


    தாயே தந்தை என்றும்*  தாரமே கிளை மக்கள் என்றும்* 
    நோயே பட்டொழிந்தேன்*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*

    வேய் ஏய் பூம் பொழில் சூழ்*  விரை ஆர் திருவேங்கடவா!*
    நாயேன் வந்து அடைந்தேன்*  நல்கி ஆள் என்னைக் கொண்டருளே. 


    மான் ஏய் கண் மடவார்*  மயக்கில் பட்டு மா நிலத்து* 
    நானே நானாவித*  நரகம் புகும் பாவம் செய்தேன்*

    தேன் ஏய் பூம் பொழில் சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் ஆனாய் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.    


    கொன்றேன் பல் உயிரை*  குறிக்கோள் ஒன்று இலாமையினால்* 
    என்றேனும் இரந்தார்க்கு*  இனிது ஆக உரைத்து அறியேன்*

    குன்று ஏய் மேகம் அதிர்*  குளிர் மா மலை வேங்கடவா!*
    அன்றே வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    குலம் தான் எத்தனையும்*  பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்* 
    நலம் தான் ஒன்றும் இலேன்*  நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்* 

    நிலம் தோய் நீள் முகில் சேர்*  நெறி ஆர் திருவேங்கடவா!* 
    அலந்தேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    எப் பாவம் பலவும்*  இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
    துப்பா! நின் அடியே*  தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*

    செப்பு ஆர் திண் வரை சூழ்*  திருவேங்கட மா மலை*
    என் அப்பா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    மண் ஆய் நீர் எரி கால்*  மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம்* 
    புண் ஆர் ஆக்கை தன்னுள்*  புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்* 

    விண் ஆர் நீள் சிகர*  விரைஆர் திருவேங்கடவா!*
    அண்ணா! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.            


    தெரியேன் பாலகனாய்*  பல தீமைகள் செய்துமிட்டேன்* 
    பெரியேன் ஆயினபின்*  பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*

    கரி சேர் பூம் பொழில் சூழ்*  கன மா மலை வேங்கடவா!*
    அரியே! வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    நோற்றேன் பல் பிறவி*  நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்* 
    ஏற்றேன் இப் பிறப்பே*  இடர் உற்றனன்-எம் பெருமான்!* 

    கோல் தேன் பாய்ந்து ஒழுகும்*  குளிர் சோலை சூழ் வேங்கடவா!* 
    ஆற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    பற்றேல் ஒன்றும் இலேன்*  பாவமே செய்து பாவி ஆனேன்* 
    மற்றேல் ஒன்று அறியேன்* மாயனே எங்கள் மாதவனே!* 

    கல் தேன் பாய்ந்து ஒழுகும்*  கமலச் சுனை வேங்கடவா! 
    அற்றேன் வந்து அடைந்தேன்*  அடியேனை ஆட் கொண்டருளே.


    கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய*  எம் கார் வண்ணனை* 
    விண்ணோர் தாம் பரவும்*  பொழில் வேங்கட வேதியனை*

    திண் ஆர் மாடங்கள் சூழ்* திரு மங்கையர்கோன் கலியன்* 
    பண் ஆர் பாடல் பத்தும்*  பயில்வார்க்கு இல்லை பாவங்களே. (2) 


    இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
    எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*

    அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
    சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.


    சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
    கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*

    வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
    ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.


    அருகல் இலாய பெரும் சீர்*  அமரர்கள் ஆதி முதல்வன்,* 
    கருகிய நீல நன் மேனி வண்ணன்*  செந்தாமரைக் கண்ணன்,* 

    பொரு சிறைப் புள் உவந்து ஏறும்*  பூமகளார் தனிக் கேள்வன்,* 
    ஒருகதியின் சுவை தந்திட்டு*  ஒழிவு இலன் என்னோடு உடனே


    உடன் அமர் காதல் மகளிர்*  திருமகள் மண்மகள் ஆயர்- 
    மட மகள் என்று இவர் மூவர் ஆளும்*  உலகமும் மூன்றே,*

    உடன் அவை ஒக்க விழுங்கி*  ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,* 
    கடல் மலி மாயப் பெருமான்*  கண்ணன் என் ஒக்கலையானே.  


    ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச், 
    செக்கம் செக அன்று அவள்பால்*  உயிர் செக உண்ட பெருமான்,*

    நக்க பிரானோடு அயனும்*  இந்திரனும் முதலாக,* 
    ஒக்கவும் தோற்றிய ஈசன்*  மாயன் என் நெஞ்சின் உளானே.


    மாயன் என் நெஞ்சின் உள்ளான்*  மற்றும் எவர்க்கும் அதுவே,* 
    காயமும் சீவனும் தானே*  காலும் எரியும் அவனே,*

    சேயன் அணியன் எவர்க்கும்*  சிந்தைக்கும் கோசரம் அல்லன்,* 
    தூயன் துயக்கன் மயக்கன்*  என்னுடைத் தோளிணையானே.  


    தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்*  சுடர் முடி மேலும்,* 
    தாள் இணை மேலும் புனைந்த*  தண் அம் துழாய் உடை அம்மான்*

    கேள் இணை ஒன்றும் இலாதான்*  கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,* 
    நாள் அணைந்து ஒன்றும் அகலான்*  என்னுடை நாவின் உளானே.


    நாவினுள் நின்று மலரும்*  ஞானக் கலைகளுக்கு எல்லாம்,* 
    ஆவியும் ஆக்கையும் தானே*  அழிப்போடு அளிப்பவன் தானே,*

    பூ இயல் நால் தடம் தோளன்*  பொரு படை ஆழி சங்கு ஏந்தும்,* 
    காவி நன் மேனிக் கமலக்*  கண்ணன் என் கண்ணின் உளானே.


    கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்*  காண்பன் அவன் கண்களாலே,* 
    அமலங்கள் ஆக விழிக்கும்*  ஐம்புலனும் அவன் மூர்த்தி,*

    கமலத்து அயன் நம்பி தன்னைக்*  கண்ணுதலானொடும் தோற்றி* 
    அமலத் தெய்வத்தொடு உலகம்*  ஆக்கி என் நெற்றி உளானே.


    நெற்றியுள் நின்று என்னை ஆளும்*  நிரை மலர்ப் பாதங்கள் சூடிக்,* 
    கற்றைத் துழாய் முடிக் கோலக்*  கண்ண பிரானைத் தொழுவார்,* 

    ஒற்றைப் பிறை அணிந்தானும்*  நான்முகனும் இந்திரனும்,* 
    மற்றை அமரரும் எல்லாம் வந்து*  எனது உச்சியுளானே.


    உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்குக்*  கண்ண பிரானுக்கு,* 
    இச்சையுள் செல்ல உணர்த்தி* வண் குருகூர்ச் சடகோபன்,*

    இச் சொன்ன ஆயிரத்துள்ளே*  இவையும் ஓர் பத்து எம்பிராற்கு,* 
    நிச்சலும் விண்ணப்பம் செய்ய*  நீள் கழல் சென்னி பொருமே.