பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்* 
    கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

    எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்* 
    கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)


    ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*
    நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

    பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*
    ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே


    பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*
    காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

    ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-
    வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே


    உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்* 
    நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

    செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும் 
    அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே


    கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*
    தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

    விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*
    அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்


    கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*
    பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

    ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட* 
    வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே


    வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்* 
    ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

    பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்* 
    மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே


    பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்* 
    எத் திசையும்*  சயமரம் கோடித்து*

    மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*
    உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே


    கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்* 
    எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

    ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்* 
    மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.


    செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்* 
    மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

    மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப் 
    பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)   


    வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்*  பெருந் துயர் இடும்பையில் பிறந்து* 
    கூடினேன் கூடி இளையவர்தம்மோடு*  அவர் தரும் கலவியே கருதி 

    ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்*  உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து 
    நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)


    ஆவியே! அமுதே! என நினைந்து உருகி*  அவர் அவர் பணை முலை துணையாப்* 
    பாவியேன் உணராது எத்தனை பகலும்*  பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்* 

    தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்*  சூழ் புனல் குடந்தையே தொழுது*  
    என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)  


    சேமமே வேண்டி தீவினை பெருக்கி*  தெரிவைமார் உருவமே மருவி* 
    ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்*  ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்* 

    காமனார் தாதை நம்முடை அடிகள்*  தம் அடைந்தார் மனத்து இருப்பார்* 
    நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம்.


    வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி*  வேல்கணார் கலவியே கருதி* 
    நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்*  என் செய்கேன்? நெடு விசும்பு அணவும்*

    பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட*  பாழியான் ஆழியான் அருளே* 
    நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். 


    கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்*  கண்டவா திரிதந்தேனேலும்* 
    தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்*  சிக்கெனத் திருவருள் பெற்றேன்* 

    உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்*  உடம்பு எலாம் கண்ண நீர் சோர* 
    நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்*  நாராயணா என்னும் நாமம்.       


    எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்*  எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்* 
    அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி*  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்* 

    வம்பு உலாம் சோலை மா மதிள்*  தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி* 
    நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2)      


    இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்*  இன்னது ஓர் தன்மை என்று உணரீர்* 
    கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்*  கண்டவா தொண்டரைப் பாடும்* 

    சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்*  சூழ் புனல் குடந்தையே தொழுமின்* 
    நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்*  நாராயணா என்னும் நாமம். 


    கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்*  கருத்துளே திருத்தினேன் மனத்தை* 
    பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை*  பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்*

    செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்*  செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி* 
    நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்*  நாராயணா என்னும் நாமம்.


    குலம் தரும் செல்வம் தந்திடும்*  அடியார் படு துயர் ஆயின எல்லாம்* 
    நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்*  அருளொடு பெரு நிலம் அளிக்கும்* 

    வலம் தரும் மற்றும் தந்திடும்*  பெற்ற தாயினும் ஆயின செய்யும்* 
    நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்*  நாராயணா என்னும் நாமம். (2)       


    மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
    செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை*  இவை கொண்டு சிக்கென தொண்டீர்!*

    துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்*  துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்* 
    நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு*  நாராயணா என்னும் நாமம் (2)          


    உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
    மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*

    அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
    துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   


    மனன்அகம் மலம் அற*  மலர்மிசை எழுதரும்* 
    மனன் உணர்வு அளவு இலன்,*  பொறி உணர்வு அவை இலன்* 

    இனன் உணர், முழு நலம்,*  எதிர் நிகழ் கழிவினும்* 
    இனன் இலன் எனன் உயிர்,*  மிகுநரை இலனே. 


    இலன் அது உடையன் இது*  என நினைவு அரியவன்* 
    நிலனிடை விசும்பிடை*  உருவினன் அருவினன்*

    புலனொடு புலன் அலன்,*  ஒழிவு இலன் பரந்த*  அந்- 
    நலன் உடை ஒருவனை*  நணுகினம் நாமே.*


    நாம் அவன் இவன் உவன்,*  அவள் இவள் உவள் எவள்* 
    தாம் அவர் இவர் உவர்,*  அது இது உது எது*

    வீமவை இவை உவை,*  அவை நலம், தீங்கு அவை* 
    ஆமவை ஆயவை ஆய்*  நின்ற அவரே.*


    அவரவர் தமதமது*  அறிவு அறி வகைவகை* 
    அவரவர் இறையவர்*  என அடி அடைவர்கள்*

    அவரவர் இறையவர்*  குறைவு இலர் இறையவர்* 
    அவரவர் விதிவழி*  அடைய நின்றனரே.  


    நின்றனர் இருந்தனர்*  கிடந்தனர் திரிந்தனர்* 
    நின்றிலர் இருந்திலர்*  கிடந்திலர் திரிந்திலர்* 

    என்றும் ஓர் இயல்வினர்*  என நினைவு அரியவர்* 
    என்றும் ஓர் இயல்வொடு*  நின்ற எம் திடரே.


    திட விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசைப்*
    படர் பொருள் முழுவதும் ஆய்*  அவைஅவைதொறும்* 

    உடல்மிசை உயிர் எனக்*  கரந்து எங்கும் பரந்துளன்* 
    சுடர் மிகு சுருதியுள்*  இவை உண்ட சுரனே.     


    சுரர் அறிவு அரு நிலை*  விண் முதல் முழுவதும்* 
    வரன் முதலாய் அவை*  முழுது உண்ட பரபரன்*

    புரம் ஒரு மூன்று எரித்து*  அமரர்க்கும் அறிவியந்து* 
    அரன் அயன் என*  உலகு அழித்து அமைத்து உளனே.


    உளன் எனில் உளன் அவன்*  உருவம் இவ் உருவுகள்* 
    உளன் அலன் எனில், அவன்*  அருவம் இவ் அருவுகள்* 

    உளன் என இலன் என*  இவை குணம் உடைமையில்* 
    உளன் இரு தகைமையொடு*  ஒழிவு இலன் பரந்தே.


    பரந்த தண் பரவையுள்*  நீர்தொறும் பரந்துளன்* 
    பரந்த அண்டம் இது என:*  நிலம் விசும்பு ஒழிவு அறக்*

    கரந்த சில் இடந்தொறும்*  இடம் திகழ் பொருள்தொறும்* 
    கரந்து எங்கும் பரந்துளன்:*  இவை உண்ட கரனே.   


    கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
    வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*

    பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
    நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)