பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
    திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*

    ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
    கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.


    கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
    எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*

    மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
    விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.


    எம்பிரானை*  எந்தை தந்தை தந்தைக்கும்- 
    தம்பிரானை,*  தண் தாமரைக் கண்ணனை,*

    கொம்பு அராவு*  நுண் நேர் இடை மார்பனை,* 
    எம்பிரானைத் தொழாய்*  மட நெஞ்சமே.


    நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
    என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*

    மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
    துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.


    கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
    எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*

    உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
    கொண்டானைக்,*  கண்டுகொண்டனை நீயுமே.   


    நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல்மற்றோர். 
    நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 

    தாயும் தந்தையும் ஆய்*  இவ் உலகினில்,* 
    வாயும் ஈசன்*  மணிவண்ணன் எந்தையே.  


    எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
    சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*

    எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
    சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே.


    செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
    மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*

    அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
    நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே.


    நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
    செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*

    உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
    எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?


    மறப்பும் ஞானமும்*  நான் ஒன்று உணர்ந்திலன்,* 
    மறக்கும் என்று*  செந்தாமரைக் கண்ணொடு,*

    மறப்பு அற என் உள்ளே*  மன்னினான் தன்னை,* 
    மறப்பனோ? இனி*  யான் என் மணியையே.   


    மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
    அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.   


    கிளர் ஒளி இளமை*  கெடுவதன் முன்னம்,* 
    வளர் ஒளி மாயோன்*  மருவிய கோயில்,*

    வளர் இளம் பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    தளர்வு இலர் ஆகிச்*  சார்வது சதிரே.  


    சதிர் இள மடவார்*  தாழ்ச்சியை மதியாது,* 
    அதிர் குரல் சங்கத்து*  அழகர் தம் கோயில்,*

    மதி தவழ் குடுமி*  மாலிருஞ்சோலைப்,* 
    பதியது ஏத்தி*  எழுவது பயனே.    


    பயன் அல்ல செய்து*  பயன் இல்லை நெஞ்சே,* 
    புயல் மழை வண்ணர்*  புரிந்து உறை கோயில்,*

    மயல் மிகு பொழில் சூழ்*  மாலிருஞ்சோலை,* 
    அயல்மலை அடைவது*  அது கருமமே.


    கரும வன் பாசம்*  கழித்து உழன்று உய்யவே,* 
    பெருமலை எடுத்தான்*  பீடு உறை கோயில்,*

    வரு மழை தவழும்*  மாலிருஞ்சோலைத்,* 
    திருமலை அதுவே*  அடைவது திறமே.   


    திறம் உடை வலத்தால்*  தீவினை பெருக்காது,* 
    அறம் முயல் ஆழிப்*  படையவன் கோயில்,*

    மறு இல் வண் சுனை சூழ்*  மாலிருஞ்சோலைப்,* 
    புறமலை சாரப்*  போவது கிறியே.


    கிறி என நினைமின்*  கீழ்மை செய்யாதே,* 
    உறி அமர் வெண்ணெய்*  உண்டவன் கோயில்,*

    மறியொடு பிணை சேர்*  மாலிருஞ்சோலை,* 
    நெறி பட அதுவே*  நினைவது நலமே.


    நலம் என நினைமின்*  நரகு அழுந்தாதே,* 
    நிலம் முனம் இடந்தான்*  நீடு உறை கோயில்,*

    மலம் அறு மதி சேர்*  மாலிருஞ்சோலை,* 
    வலம் முறை எய்தி,*  மருவுதல் வலமே.


    வலஞ்செய்து வைகல்*  வலம் கழியாதே,* 
    வலஞ்செய்யும் ஆய*  மாயவன் கோயில்,*

    வலஞ்செய்யும் வானோர்*  மாலிருஞ்சோலை,,* 
    வலஞ்செய்து நாளும்*  மருவுதல் வழக்கே.


    வழக்கு என நினைமின்*  வல்வினை மூழ்காது,* 
    அழக்கொடி அட்டான்*  அமர் பெருங்கோயில்,*

    மழக் களிற்று இனம் சேர்*  மாலிருஞ்சோலை,* 
    தொழக் கருதுவதே*  துணிவது சூதே.


    சூது என்று களவும்*  சூதும் செய்யாதே,* 
    வேதம் முன் விரித்தான்*  விரும்பிய கோயில்,*

    மாது உறு மயில் சேர்*  மாலிருஞ்சோலைப்,* 
    போது அவிழ் மலையே*  புகுவது பொருளே.     


    பொருள் என்று இவ் உலகம்*  படைத்தவன் புகழ்மேல்,* 
    மருள் இல் வண் குருகூர்*  வண் சடகோபன்,*

    தெருள் கொள்ளச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப் பத்து,* 
    அருளுடையவன் தாள்*  அணைவிக்கும் முடித்தே.


    சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு*  சங்கொடு சக்கரம்வில்,* 
    ஒண்மை உடைய உலக்கை ஒள்வாள்*  தண்டு கொண்டு புள் ஊர்ந்து,*  உலகில் 

    வன்மை உடைய அரக்கர்*  அசுரரை மாளப் படைபொருத,* 
    நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற*  நான் ஓர் குறைவு இலனே. (2)


    குறைவு இல் தடங்கடல் கோள் அரவு ஏறி*  தன் கோலச் செந்தாமரைக்கண்,* 
    உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த*  ஒளி மணி வண்ணன் கண்ணன்,*

    கறை அணி மூக்கு உடைப் புள்ளைக் கடாவி*  அசுரரைக் காய்ந்த அம்மான்,* 
    நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும்*  யான் ஒரு முட்டு இலனே.


    முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன்*  மூவுலகுக்கு உரிய,* 
    கட்டியை தேனை அமுதை*  நன்பாலை கனியை கரும்பு தன்னை,*

    மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி*  அவன் திறத்துப் 
    பட்ட பின்னை*  இறையாகிலும்*  யான் என் மனத்துப் பரிவு இலனே. 


    ',பரிவு இன்றி வாணனைக் காத்தும்'*  என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த* 
    திரிபுரம் செற்றவனும் மகனும்*  பின்னும் அங்கியும் போர் தொலைய,*

    பொருசிறைப் புள்ளைக் கடாவிய மாயனை*  ஆயனை பொன் சக்கரத்து
    அரியினை,*  அச்சுதனைப் பற்றி*  யான் இறையேனும் இடர் இலனே.


    இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில்*  எல்லா உலகும் கழிய,* 
    படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும்*  உடன் ஏற திண்தேர்கடவி,*

    சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்*  வைதிகன் பிள்ளைகளை,* 
    உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி*  ஒன்றும் துயர் இலனே.


    துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி*  நின்ற வண்ணம் நிற்கவே,* 
    துயரில் மலியும் மனிசர் பிறவியில்*  தோன்றி கண் காணவந்து,*

    துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில்*  புக உய்க்கும் அம்மான்,* 
    துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ்துற்ற*  யான் ஓர் துன்பம் இலனே.


    துன்பமும் இன்பமும் ஆகிய*  செய்வினை ஆய் உலகங்களும் ஆய்,* 
    இன்பம் இல் வெம் நரகு ஆகி*  இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய்

    மன் பல் உயிர்களும் ஆகி*  பலபல மாய மயக்குக்களால்,* 
    இன்புறும் இவ் விளையாட்டு உடையானைப் பெற்று*  ஏதும் அல்லல் இலனே. 


    அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும்*  அழகு அமர் சூழ் ஒளியன்,* 
    அல்லி மலர் மகள் போக மயக்குக்கள்*  ஆகியும் நிற்கும் அம்மான்,*

    எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு*  எல்லாக் கருமங்களும் செய்,* 
    எல்லை இல் மாயனை கண்ணனைத் தாள் பற்றி*  யான் ஓர் துக்கம் இலனே.


    துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி*  துழாய் அலங்கல் பெருமான்,* 
    மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து*  வேண்டும் உருவு கொண்டு,* 

    நக்க பிரானோடு அயன் முதலாக*  எல்லாரும் எவையும்,*  தன்னுள் 
    ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று*  ஒன்றும் தளர்வு இலனே.


    தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த*  தனிமுதல் ஞானம் ஒன்றாய்,* 
    அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால்*  அருவு ஆகி நிற்கும்,*

    வளர் ஒளி ஈசனை மூர்த்தியை*  பூதங்கள் ஐந்தை இருசுடரை,* 
    கிளர் ஒளி மாயனை கண்ணனைத் தாள்பற்றி*  யான் என்றும் கேடு இலனே.


    கேடு இல் விழுப் புகழ்க் கேசவனை*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பாடல் ஓர் ஆயிரத்துள்*  இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு,*  அவன் 

    நாடும் நகரமும் நன்குடன் காண*  நலனிடை ஊர்தி பண்ணி,* 
    வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தரும்*  ஒரு நாயகமே. (2)


    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
    அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 

    குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
    நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)


    நாடி நீர் வணங்கும் தெய்வமும்*  உம்மையும் முன்படைத்தான்,* 
    வீடு இல் சீர்ப்புகழ் ஆதிப்பிரான்*  அவன் மேவி உறைகோயில்,* 

    மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனைப்* 
    பாடி ஆடி பரவிச் செல்மின்கள்*  பல் உலகீர்! பரந்தே.       


    பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து*  அன்று உடனே விழுங்கி,* 
    கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது*  கண்டும் தெளியகில்லீர்,* 

    சிரங்களால் அமரர் வணங்கும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பரன் திறம் அன்றி பல் உலகீர்!*  தெய்வம் மற்று இல்லை பேசுமினே!   


    பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்*  பிறர்க்கும் 
    நாயகன் அவனே,*  கபால நல் மோக்கத்துக்*  கண்டுகொண்மின்,* 

    தேச மாமதிள் சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஈசன்பால் ஓர் அவம் பறைதல்*  என் ஆவது இலிங்கியர்க்கே?


    இலிங்கத்து இட்ட புராணத்தீரும்*  சமணரும் சாக்கியரும்* 
    வலிந்து வாது செய்வீர்களும்*  மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான்* 

    மலிந்து செந்நெல் கவரி வீசும்*  திருக்குருகூர் அதனுள்,* 
    பொலிந்து நின்ற பிரான் கண்டீர்*  ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே. (2)     


    போற்றி மற்று ஓர் தெய்வம்*  பேணப் புறத்திட்டு*  உம்மை இன்னே 
    தேற்றி வைத்தது*  எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே,* 

    சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர்*  அது அறிந்து அறிந்து ஓடுமினே.  


    ஓடி ஓடி பல பிறப்பும் பிறந்து*  மற்று ஓர் தெய்வம், 
    பாடி ஆடிப் பணிந்து*  பல்படிகால் வழி ஏறிக் கண்டீர்,*

    கூடி வானவர் ஏத்த நின்ற*  திருக்குருகூர் அதனுள்,* 
    ஆடு புள் கொடி ஆதி மூர்த்திக்கு*  அடிமைபுகுவதுவே


    புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட*  மார்க்கண்டேயன் அவனை* 
    நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது*  நாராயணன் அருளே*

    கொக்கு அலர் தடம் தாழை வேலித்*  திருக்குருகூர் அதனுள்* 
    மிக்க ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் விளம்புதிரே   


    விளம்பும் ஆறு சமயமும்*  அவைஆகியும் மற்றும் தன்பால்,* 
    அளந்து காண்டற்கு அரியன் ஆகிய*  ஆதிப்பிரான் அமரும்,* 

    வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய*  திருக்குருகூர் அதனை,* 
    உளம் கொள் ஞானத்து வைம்மின்*  உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.  


    உறுவது ஆவது எத்தேவும்*  எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,* 
    மறு இல் மூர்த்தியோடு ஒத்து*  இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,* 

    செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்* 
    குறிய மாண் உரு ஆகிய*  நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே. 


    ஆள் செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன்*  வண் குருகூர்நகரான்*
    நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன்*  மாறன் சடகோபன்,* 

    வேட்கையால் சொன்ன பாடல்*  ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்,* 
    மீட்சி இன்றி வைகுந்த மாநகர்*  மற்றது கையதுவே. (2)  


    பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும்*  பெரிய பாரதம் கைசெய்து*  ஐவர்க்குத்-
    திறங்கள் காட்டியிட்டுச்*  செய்து போன மாயங்களும்* 

    நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை*  நின்று நின்று உருக்கி உண்கின்ற*  இச்- 
    சிறந்தவான் சுடரே!*  உன்னை என்றுகொல் சேர்வதுவே!* (2)


    வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும்*  மாய மாவினை வாய் பிளந்ததும்* 
    மதுவை வார் குழலார்*  குரவை பிணைந்த குழகும்* 

    அது இது உது என்னலாவன அல்ல*  என்னை உன் செய்கை நைவிக்கும்* 
    முது வைய முதல்வா!*  உன்னை என்று தலைப்பெய்வனே?* 


    பெய்யும் பூங் குழல் பேய் முலை உண்ட*  பிள்ளைத் தேற்றமும்*  பேர்ந்து ஓர் சாடு இறச்- 
    செய்ய பாதம் ஒன்றால்*  செய்த நின் சிறுச் சேவகமும்* 

    நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள*  நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்க* 
    பையவே நிலையும் வந்து*  என் நெஞ்சை உருக்குங்களே*


    கள்ள வேடத்தைக் கொண்டு போய்*  புரம்புக்க ஆறும்*  கலந்து அசுரரை- 
    உள்ளம் பேதம் செய்திட்டு*  உயிர் உண்ட உபாயங்களும்* 

    வெள்ள நீர்ச் சடையானும்*  நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்* 
    உள்ளம் உள் குடைந்து*  என் உயிரை உருக்கி உண்ணுமே*.   


    உண்ண வானவர் கோனுக்கு*  ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்* 
    வண்ண மால் வரையை எடுத்து*  மழை காத்தலும்* 

    மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து*  கடந்து இடந்து மணந்த மாயங்கள்* 
    எண்ணும்தோறும் என் நெஞ்சு*  எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே*.


    நின்ற ஆறும் இருந்த ஆறும்/*  கிடந்த ஆறும் நினைப்பு அரியன* 
    ஒன்று அலா உருவு ஆய்*  அருவு ஆய நின் மாயங்கள்* 

    நின்று நின்று நினைக்கின்றேன்*  உன்னை எங்ஙனம் நினைகிற்பன்*  பாவியேற்கு- 
    ஒன்று நன்கு உரையாய்*  உலகம் உண்ட ஒண் சுடரே!*      


    ஒண் சுடரோடு இருளுமாய்*  நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து*  என்- 
    கண் கொளாவகை*  நீ கரந்து என்னைச் செய்கின்றன* 

    எண் கொள் சிந்தையுள் நைகின்றேன்*  என் கரிய மாணிக்கமே!*  என் கண்கட்குத்- 
    திண் கொள்ள ஒரு நாள்*  அருளாய் உன் திரு உருவே*.


    திரு உருவு கிடந்த ஆறும்*  கொப்பூழ்ச் செந்தாமரைமேல்*  திசைமுகன்- 
    கருவுள் வீற்றிருந்து*  படைத்திட்ட கருமங்களும்* 

    பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின்று நெக்கு* 
    அருவி சோரும் கண்ணீர்*  என் செய்கேன் அடியேனே!*     


    அடியை மூன்றை இரந்த ஆறும்*  அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும்- 
    முடிய*  ஈர் அடியால்*  முடித்துக்கொண்ட முக்கியமும் *

    நொடியுமாறு அவை கேட்கும்தோறும்*  என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும்* 
    கொடிய வல்வினையேன்*  உன்னை என்றுகொல் கூடுவதே?*    


    கூடி நீரைக் கடைந்த ஆறும்*  அமுதம் தேவர் உண்ண*  அசுரரை- 
    வீடும் வண்ணங்களே*  செய்து போன வித்தகமும்* 

    ஊடு புக்கு எனது ஆவியை*  உருக்கி உண்டிடுகின்ற*  நின் தன்னை- 
    நாடும் வண்ணம் சொல்லாய்*  நச்சு நாகு அணையானே!*


    நாகு அணைமிசை நம் பிரான்*  சரணே சரண் நமக்கு என்று*  நாள்தொறும்- 
    ஏக சிந்தையனாய்க்*  குருகூர்ச் சடகோபன் மாறன்* 

    ஆக நூற்ற அந்தாதி*  ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்* 
    மாக வைகுந்தத்து*  மகிழ்வு எய்துவர் வைகலுமே*.


    உலகம் உண்ட பெருவாயா!*  உலப்பு இல் கீர்த்தி அம்மானே,* 
    நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி!*  நெடியாய் அடியேன் ஆர் உயிரே,* 

    திலதம் உலகுக்கு ஆய் நின்ற*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    குல தொல் அடியேன் உன பாதம்* கூடும் ஆறு கூறாயே.


    கூறாய்  நீறு ஆய் நிலன் ஆகி*  கொடு வல் அசுரர் குலம் எல்லாம்,* 
    சீறா எரியும் திரு நேமி வலவா!*  தெய்வக் கோமானே,* 

    சேறார்  சுனைத் தாமரை செந்தீ மலரும்*  திருவேங்கடத்தானே,* 
    ஆறா அன்பில் அடியேன்*  உன் அடிசேர் வண்ணம் அருளாயே.


    வண்ணம் மருள் கொள் அணி மேக வண்ணா!*  மாய அம்மானே,*
    எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே!*  இமையோர் அதிபதியே,* 

    தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும்*  திருவேங்கடத்தானே,* 
    அண்ணலே! உன் அடிசேர*  அடியேற்கு ஆஆ என்னாயே!   


    ஆவா வென்னாது உலகத்தை அலைக்கும்*  அசுரர் வாழ் நாள்மேல்,* 
    தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா!*  திரு மா மகள் கேள்வா-

    தேவா*  சுரர்கள் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    பூ ஆர் கழல்கள் அருவினையேன்*  பொருந்துமாறு புணராயே.  


    புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
    புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*

    திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
    திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   


    ,எந்நாளே நாம் மண் அளந்த*  இணைத் தாமரைகள் காண்பதற்கு என்று,* 
    எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி*  இறைஞ்சி இனம் இனமாய்,*

    மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும்*  திருவேங்கடத்தானே,* 
    மெய்ந் நான் எய்தி எந்நாள்*  உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


    அடியேன் மேவி அமர்கின்ற அமுதே!*  இமையோர் அதிபதியே,* 
    கொடியா அடு புள் உடையானே!*  கோலக் கனிவாய்ப் பெருமானே,* 

    செடி ஆர் வினைகள் தீர் மருந்தே!*  திருவேங்கடத்து எம் பெருமானே,* 
    நொடி ஆர் பொழுதும் உன பாதம்*   காண நோலாது ஆற்றேனே


    நோலாது ஆற்றேன் உன பாதம்*  காண என்று நுண் உணர்வின்,* 
    நீல் ஆர் கண்டத்து அம்மானும்*  நிறை நான்முகனும் இந்திரனும்,* 

    சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    மாலாய் மயக்கி அடியேன்பால்*  வந்தாய் போலே வாராயே.         


    வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
    செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 

    சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
    அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.


    அகலகில்லேன் இறையும் என்று*  அலர்மேல் மங்கை உறை மார்பா,* 
    நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!*  என்னை ஆள்வானே,* 

    நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்*  திருவேங்கடத்தானே,* 
    புகல் ஒன்று இல்லா அடியேன்*  உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.        


    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து*  அடியீர் வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்* 
    படிக் கேழ் இல்லாப் பெருமானைப்*  பழனக் குருகூர்ச் சடகோபன்,* 

    முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்*  திருவேங்கடத்துக்கு இவை பத்தும்,* 
    பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து*  பெரிய வானுள் நிலாவுவரே.


    இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,* 
    இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,* 

    அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)      


    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 

    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       


    கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,* 
    ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

    பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,* 
    நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!     


    வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற* 
    வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

    வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,* 
    வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.    


    மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,* 
    பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,* 

    மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.


    ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*
    அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,* 

    என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,* 
    நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.


    நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,* 
    நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்* 

    வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,* 
    வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே. 


    அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,* 
    நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,* 

    சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,* 
    ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.


    தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,* 
    நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,* 

    யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,* 
    மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே. 


    சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,* 
    சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,* 

    சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,* 
    சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.     


    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 

    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)   


    நெடுமாற்குஅடிமை செய்வேன்போல்*   அவனைக் கருத வஞ்சித்து* 
    தடுமாற்றுஅற்ற தீக்கதிகள்*  முற்றும்  தவிர்ந்த சதிர்நினைந்தால்*

    கொடுமாவினையேன் அவன்அடியார்  அடியே*  கூடும் இதுஅல்லால்* 
    விடுமாறுஎன்பதுஎன்? அந்தோ!*  வியன் மூவுலகு பெறினுமே?.  (2)


    வியன் மூவுலகு பெறினும்போய்*  தானே தானே ஆனாலும்* 
    புயல் மேகம்போல் திருமேனிஅம்மான்*  புனைபூம் கழல்அடிக்கீழ்ச்*

    சயமே அடிமை தலைநின்றார்*  திருத்தாள் வணங்கி*  இம்மையே 
    பயனே இன்பம் யான்பெற்றது*  உறுமோ பாவியேனுக்கே? 


    உறுமோ பாவியேனுக்கு*  இவ்உலகம் மூன்றும் உடன்நிறைய* 
    சிறுமாமேனி நிமிர்த்த*  என்செந்தாமரைக்கண் திருக்குறளன்*

    நறுமாவிரைநாள் மலர்அடிக்கீழ்ப்*   புகுதல் அன்றி அவன்அடியார்* 
    சிறுமா மனிசராய் என்னைஆண்டார்*  இங்கே திரியவே. 


    இங்கே திரிந்தேற்கு இழுக்குஉற்றுஎன்!*  இருமாநிலம் முன்உண்டுஉமிழ்ந்த* 
    செங்கோலத்த பவளவாய்ச்*  செந்தாமரைக்கண் என்அம்மான்*

    பொங்குஏழ் புகழ்கள் வாயவாய்*  புலன்கொள் வடிவு என்மனத்ததாய்* 
    அங்குஏய் மலர்கள் கையவாய்*  வழிபட்டுஓட அருளிலே?  


    வழிபட்டுஓட அருள்பெற்று*  மாயன் கோல மலர்அடிக்கீழ்ச்* 
    சுழிபட்டுஓடும் சுடர்ச்சோதி  வெள்ளத்து*  இன்புற்றுஇருந்தாலும்*

    இழிபட்டுஓடும் உடலினில்பிறந்து*  தன்சீர் யான்கற்று* 
    மொழிபட்டுஓடும் கவிஅமுதம்*  நுகர்ச்சி உறுமோ முழுதுமே?  


    நுகர்ச்சி உறுமோ மூவுலகின்*  வீடு பேறு தன்கேழ்இல்* 
    புகர்ச்செம்முகத்த களிறுஅட்ட*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நிகர்ச் செம்பங்கி எரிவிழிகள்*  நீண்ட அசுரர் உயிர்எல்லாம்* 
    தகர்த்துஉண்டுஉழலும் புள்பாகன்*  பெரிய தனிமாப் புகழே?  


    தனிமாப் புகழே எஞ்ஞான்றும்*   நிற்கும் படியாத் தான்தோன்றி* 
    முனிமாப் பிரம முதல்வித்தாய்*  உலகம் மூன்றும் முளைப்பித்த*

    தனிமாத் தெய்வத் தளிர்அடிக்கீழ்ப்*  புகுதல் அன்றி அவன்அடியார்* 
    நனிமாக் கலவி இன்பமே*  நாளும் வாய்க்க நங்கட்கே


    நாளும் வாய்க்க நங்கட்கு*  நளிர்நீர்க் கடலைப் படைத்து*  தன் 
    தாளும் தோளும் முடிகளும்*  சமன் இலாத பலபரப்பி*

    நீளும் படர்பூங் கற்பகக்காவும்*  நிறைபல்நாயிற்றின்* 
    கோளும்உடைய மணிமலைபோல்*  கிடந்தான் தமர்கள் கூட்டமே.   


    தமர்கள் கூட்ட வல்வினையை*   நாசம் செய்யும் சதுமூர்த்தி* 
    அமர்கொள் ஆழி சங்குவாள்*  வில்தண்டுஆதி பல்படையன்*

    குமரன் கோல ஐங்கணைவேள்தாதை*  கோதுஇல் அடியார்தம்* 
    தமர்கள் தமர்கள் தமர்களாம்*  சதிரே வாய்க்க தமியேற்கே 


    வாய்க்க தமியேற்கு*  ஊழிதோறுஊழி ஊழி மாகாயாம்- 
    பூக்கொள் மேனி நான்குதோள்*  பொன்ஆழிக்கை என்அம்மான்*

    நீக்கம்இல்லா அடியார்தம்*  அடியார் அடியார் அடியார் எம் 
    கோக்கள்*  அவர்க்கே குடிகளாய்ச்  செல்லும்*  நல்ல கோட்பாடே  


    நல்ல கோட்பாட்டு உலகங்கள்*  மூன்றினுள்ளும் தான்நிறைந்த* 
    அல்லிக் கமலக் கண்ணனை*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    சொல்லப் பட்ட ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    நல்ல பதத்தால் மனைவாழ்வர்*  கொண்ட பெண்டீர் மக்களே.  (2)


    மாலைநண்ணித்*  தொழுதுஎழுமினோ வினைகெட* 
    காலைமாலை*  கமலமலர் இட்டு நீர்*

    வேலைமோதும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து* 
    ஆலின்மேல்ஆல் அமர்ந்தான்*  அடிஇணைகளே.   (2)


    கள்அவிழும் மலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்* 
    நள்ளிசேரும் வயல்சூழ்*  கிடங்கின்புடை*

    வெள்ளிஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    உள்ளி*  நாளும்தொழுது எழுமினோ தொண்டரே!   


    தொண்டர் நும்தம்*  துயர்போகநீர் கமாய்* 
    விண்டுவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வண்டுபாடும் பொழில்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அண்டவாணன்*  அமரர்பெருமானையே       


    மானைநோக்கி*  மடப்பின்னைதன் கேள்வனை* 
    தேனைவாடாமலர்இட்டு*  நீர்இறைஞ்சுமின்*

    வானைஉந்தும் மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம்* 
    தான்நயந்த பெருமான்*  சரண்ஆகுமே.


    சரணம்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    மரணம்ஆனால்*  வைகுந்தம் கொடுக்கும்பிரான்*

    அரண்அமைந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத் 
    தரணியாளன்*  தனதுஅன்பர்க்கு அன்புஆகுமே. 


    அன்பன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    செம்பொன்ஆகத்து*  அவுணன்உடல் கீண்டவன்,  

    நன்பொன்ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரத்து 
    அன்பன்*  நாளும் தன*  மெய்யர்க்கு மெய்யனே  


    மெய்யன்ஆகும்*  விரும்பித் தொழுவார்க்குஎல்லாம்* 
    பொய்யன்ஆகும்*  புறமே தொழுவார்க்குஎல்லாம்*

    செய்யில்வாளைஉகளும்*  திருக்கண்ணபுரத்து 
    ஐயன்*  ஆகத்துஅணைப்பார்கட்கு அணியனே.


    அணியன்ஆகும்*  தனதாள் அடைந்தார்க்குஎல்லாம்* 
    பிணியும்சாரா*  பிறவிகெடுத்துஆளும்*

    மணிபொன் ஏய்ந்தமதிள்சூழ்*  திருக்கண்ணரம் 
    பணிமின்*  நாளும் பரமேட்டிதன் பாதமே


    பாதம்நாளும்*  பணிய தணியும்பிணி* 
    ஏதம்சாரா*  எனக்கேல் இனிஎன்குறை?*

    வேதநாவர் விரும்பும்*  திருக்கண்ணபுரத்து 
    ஆதியானை*  அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.  


    இல்லை அல்லல்*  எனக்கேல்இனி என்குறை? 
    அல்லிமாதர் அமரும்*  திருமார்பினன்*

    கல்லில் ஏய்ந்த மதிள்சூழ்*  திருக்கண்ணபுரம் 
    சொல்ல*  நாளும் துயர் பாடுசாராவே.   


    பாடுசாரா*  வினைபற்றுஅற வேண்டுவீர்* 
    மாடம்நீடு*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    பாடலானதமிழ்*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    பாடிஆடிப்*  பணிமின் அவன் தாள்களே   (2)


    முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
    கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*

    தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
    இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)


    மாயம்செய்யேல் என்னை*  உன்திருமார்வத்து மாலைநங்கை* 
    வாசம்செய் பூங்குழலாள்*  திருஆணை நின்ஆணை கண்டாய்*

    நேசம்செய்து உன்னோடு என்னை*  உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே* 
    கூசம்செய்யாது கொண்டாய்*  என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!


    கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!*  என்பொல்லாக் கருமாணிக்கமே!* 
    ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு*  நின்அலால் அறிகின்றி லேன்யான்*

    மேவித்தொழும் பிரமன் சிவன்*  இந்திரன் ஆதிக்குஎல்லாம்* 
    நாவிக் கமல முதல்கிழங்கே!*  உம்பர் அந்ததுவே.


    உம்பர்அம்தண் பாழேஓ!*  அதனுள்மிசை நீயேஓ* 
    அம்பரம் நல்சோதி!*  அதனுள் பிரமன் அரன் நீ*

    உம்பரும் யாதவரும் படைத்த*  முனிவன் அவன்நீ* 
    எம்பரம் சாதிக்கலுற்று*  என்னைப்போர விட்டிட்டாயே.  


    போரவிட்டிட்டு என்னை*  நீபுறம்போக்கலுற்றால்*  பின்னையான்- 
    ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!*  எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*

    தீர இரும்புஉண்ட நீரதுபோல*  என்ஆர்உயிரை- 
    ஆரப்பருக*  எனக்கு ஆராஅமுதுஆனாயே. 


    எனக்கு ஆராஅமுதாய்*  எனதுஆவியை இன்உயிரை* 
    மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்*  இனிஉண்டொழியாய்*

    புனக்காயாநிறத்த*  புண்டரீகக்கண் செங்கனிவாய்* 
    உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு*  அன்பா! என்அன்பேயோ!


    கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
    நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*

    கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
    நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)


    பெற்றுஇனிப் போக்குவனோ*  உன்னை என் தனிப்பேருயிரை* 
    உற்ற இருவினையாய்*  உயிராய்ப் பயன் ஆவையாய்*

    முற்றஇம் மூவுலகும்*  பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு* 
    முற்றக் கரந்துஒளித்தாய்!*  என்முதல் தனிவித்தேயோ!


    முதல்தனி வித்தேயோ!*  முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்* 
    முதல்தனி உன்னைஉன்னை*  எனைநாள் வந்து கூடுவன்நான்?*

    முதல்தனி அங்கும்இங்கும்*  முழுமுற்றுறுவாழ் பாழாய்* 
    முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவிலீஓ!   


    சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
    சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*

    சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
    சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)


    அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
    அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
    அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)