பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
    வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

    மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
    எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   


    எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
    ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*

    தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
    அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 


    அமைவு உடை அறநெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 
    அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*

    அமைவு உடை அமரரும்*  யாவையும் யாவரும் தான் ஆம்* 
    அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    


    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 
    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*

    பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 
    பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை இலது இல்லை பிணக்கே.  


    ஊனில் வாழ் உயிரே*  நல்லை போ உன்னைப் பெற்று,* 
    வான் உளார் பெருமான்*  மதுசூதன் என் அம்மான்,*

    தானும் யானும் எல்லாம்*  தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,* 
    தேனும் பாலும் நெய்யும்*  கன்னலும் அமுதும் ஒத்தே.  


    ஒத்தார் மிக்காரை*  இலையாய மாமாய,* 
    ஒத்தாய் எப் பொருட்கும் உயிர் ஆய்,*  என்னைப் பெற்ற- 

    அத் தாய் ஆய் தந்தை ஆய்*  அறியாதன அறிவித்து,* 
    அத்தா, நீ செய்தன*  அடியேன் அறியேனே.


    அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
    அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*

    அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
    அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.


    எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
    எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*

    எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
    எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  


    இனி யார் ஞானங்களால்*  எடுக்கல் எழாத எந்தாய்,* 
    கனிவார் வீட்டு இன்பமே*  என் கடல் படா அமுதே,*

    தனியேன் வாழ் முதலே*  பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்,* 
    நுனி ஆர் கோட்டில் வைத்தாய்*  நுன பாதம் சேர்ந்தேனே.


    சேர்ந்தார் தீவினைகட்கு*  அரு நஞ்சை திண் மதியை,* 
    தீர்ந்தார் தம் மனத்துப்*  பிரியாது அவர் உயிரைச்,*

    சோர்ந்தே புகல் கொடாச் சுடரை*  அரக்கியை மூக்கு- 
    ஈர்ந்தாயை,*  அடியேன் அடைந்தேன்*  முதல் முன்னமே.


    முன் நல் யாழ் பயில் நூல்*  நரம்பின் முதிர் சுவையே,* 
    பல் நலார் பயிலும்*  பரனே பவித்திரனே,*

    கன்னலே அமுதே*  கார் முகிலே என் கண்ணா,* 
    நின் அலால் இலேன்காண்*  என்னை நீ குறிக்கொள்ளே.


    குறிக்கொள் ஞானங்களால்*  எனை ஊழி செய் தவமும்,* 
    கிறிக்கொண்டு இப் பிறப்பே* சில நாளில் எய்தினன் யான்,*

    உறிக்கொண்ட வெண்ணெய் பால்*  ஒளித்து உண்ணும் அம்மான் பின்,* 
    நெறிக்கொண்ட நெஞ்சனாய்ப்*  பிறவித் துயர் கடிந்தே.


    கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
    படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*

    செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
    அடியேன் வாய்மடுத்துப்*  பருகிக் களித்தேனே. 


    களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
    ஒளிக்கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*

    துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
    அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே.


    குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
    குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*

    குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
    குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 


    ஒழிவு இல் காலம் எல்லாம்*  உடனாய் மன்னி,* 
    வழு இலா*  அடிமை செய்யவேண்டும் நாம்,*

    தெழி குரல் அருவித்*  திருவேங்கடத்து,* 
    எழில் கொள் சோதி*  எந்தை தந்தை தந்தைக்கே. (2)


    எந்தை தந்தை தந்தை*  தந்தை தந்தைக்கும் 
    முந்தை,*  வானவர் வானவர் கோனொடும்,* 

    சிந்து பூ மகிழும்*  திருவேங்கடத்து,* 
    அந்தம் இல் புகழ்க்*  கார் எழில் அண்ணலே.


    அண்ணல் மாயன்*  அணி கொள் செந்தாமரைக் 
    கண்ணன் செங்கனி,*  வாய்க் கருமாணிக்கம்,*

    தெள் நிறை சுனை நீர்த்,*  திருவேங்கடத்து,* 
    எண் இல் தொல் புகழ்*  வானவர் ஈசனே.


    ஈசன் வானவர்க்கு*  என்பன் என்றால்,*  அது 
    தேசமோ*  திருவேங்கடத்தானுக்கு?,* 

    நீசனேன்*  நிறைவு ஒன்றும் இலேன்,*  என்கண் 
    பாசம் வைத்த*  பரம் சுடர்ச் சோதிக்கே.


    சோதி ஆகி*  எல்லா உலகும் தொழும்,* 
    ஆதிமூர்த்தி என்றால்*  அளவு ஆகுமோ?,*

    வேதியர்*  முழு வேதத்து அமுதத்தை,* 
    தீது இல் சீர்த்*  திருவேங்கடத்தானையே.


    வேம் கடங்கள்*  மெய்மேல் வினை முற்றவும்,* 
    தாங்கள் தங்கட்கு*  நல்லனவே செய்வார்,*

    வேங்கடத்து உறைவார்க்கு*  நம என்னல்- 
    ஆம் கடமை,* அது சுமந்தார்கட்கே.


    சுமந்து மாமலர்*  நீர் சுடர் தூபம் கொண்டு,* 
    அமர்ந்து வானவர்*  வானவர் கோனொடும்,* 

    நமன்று எழும்*  திருவேங்கடம் நங்கட்குச்,* 
    சமன் கொள் வீடு தரும்*  தடங் குன்றமே.


    குன்றம் ஏந்திக்*  குளிர் மழை காத்தவன்,* 
    அன்று ஞாலம்*  அளந்த பிரான்,*  பரன்

    சென்று சேர்*  திருவேங்கட மா மலை,* 
    ஒன்றுமே தொழ*  நம் வினை ஓயுமே. (2)


    ஓயும் மூப்புப்*  பிறப்பு இறப்பு:பிணி,*
    வீயுமாறு செய்வான்*  திருவேங்கடத்து

    ஆயன்,*  நாள் மலர் ஆம்*  அடித்தாமரை,* 
    வாயுள்ளும்மனத்துள்ளும்*  வைப்பார்கட்கே.


    வைத்த நாள் வரை*  எல்லை குறுகிச் சென்று,* 
    எய்த்து இளைப்பதன்*  முன்னம் அடைமினோ,*

    பைத்த பாம்பு அணையான்*  திருவேங்கடம்,* 
    மொய்த்த சோலை*  மொய்பூந்தடந் தாழ்வரே.  


    தாள் பரப்பி*  மண் தாவிய ஈசனை,* 
    நீள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    கேழ் இல் ஆயிரத்து*  இப் பத்தும் வல்லவர்* 
    வாழ்வர் வாழ்வு எய்தி*  ஞாலம் புகழவே. (2)   


    கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
    கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 

    பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 


    பூசும் சாந்து என் நெஞ்சமே*  புனையும் கண்ணி எனதுடைய,* 
    வாசகம் செய் மாலையே*  வான் பட்டு ஆடையும் அஃதே,*

    தேசம் ஆன அணிகலனும்*  என் கைகூப்புச் செய்கையே,* 
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த*  எந்தை ஏக மூர்த்திக்கே.  


    ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
    ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 

    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. 


    மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த*  மாயப் பேய் உயிர்- 
    மாய்த்த,*  ஆய மாயனே! வாமனனே மாதவா,* 

    பூத்தண் மாலை கொண்டு*  உன்னைப் போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூத்தண் மாலை நெடுமுடிக்குப்*  புனையும் கண்ணி எனது உயிரே.  


    கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,* 
    எண் இல் பல்கலன்களும்*  ஏலும் ஆடையும் அஃதே,*

    நண்ணி மூவுலகும்*  நவிற்றும் கீர்த்தியும் அஃதே,* 
    கண்ணன் எம் பிரான் எம்மான்*  கால சக்கரத்தானுக்கே.   


    கால சக்கரத்தொடு*  வெண் சங்கம் கை ஏந்தினாய்,* 
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாராயணனே என்று என்று,* 

    ஓலம் இட்டு நான் அழைத்தால்*  ஒன்றும் வாராயாகிலும்,* 
    கோலம் ஆம் என் சென்னிக்கு*  உன் கமலம் அன்ன குரைகழலே.


    குரைகழல்கள் நீட்டி*  மண் கொண்ட கோல வாமனா,* 
    குரை கழல் கைகூப்புவார்கள்*  கூட நின்ற மாயனே,* 

    விரை கொள் பூவும் நீரும்கொண்டு*  ஏத்தமாட்டேனேலும்,*  உன் 
    உரை கொள் சோதித் திரு உருவம்*  என்னது ஆவி மேலதே.  


    என்னது ஆவி மேலையாய்*  ஏர் கொள் ஏழ் உலகமும்,* 
    துன்னி முற்றும் ஆகி நின்ற*  சோதி ஞான மூர்த்தியாய்,* 

    உன்னது என்னது ஆவியும்,*  என்னது உன்னது ஆவியும்* 
    இன்ன வண்ணமே நின்றாய்*  என்று உரைக்க வல்லேனே?   


    உரைக்க வல்லேன் அல்லேன்*  உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்* 
    கரைக்கண் என்று செல்வன் நான்?*  காதல் மையல் ஏறினேன்,*

    புரைப்பு இலாத பரம்பரனே!*  பொய் இலாத பரஞ்சுடரே,* 
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த*  யானும் ஏத்தினேன்.       


    யானும் ஏத்தி*  ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,*  பின்னையும் 
    தானும் ஏத்திலும்*  தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும் ஆகித் தித்திப்ப,* 
    யானும் எம் பிரானையே ஏத்தினேன்*  யான் உய்வானே


    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
    செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*

    பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
    வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)


    மாசு அறு சோதி*  என் செய்ய வாய் மணிக்குன்றத்தை* 
    ஆசு அறு சீலனை*  ஆதி மூர்த்தியை நாடியே* 

    பாசறவு எய்தி*  அறிவு இழந்து எனை நாளையம்?* 
    ஏசு அறும் ஊரவர் கவ்வை*  தோழீ என் செய்யுமே?*     


    என் செய்யும் ஊரவர் கவ்வை*  தோழீ இனி நம்மை* 
    என் செய்ய தாமரைக் கண்ணன்*  என்னை நிறை கொண்டான்*

    முன் செய்ய மாமை இழந்து*  மேனி மெலிவு எய்தி* 
    என் செய்ய வாயும் கருங்கண்ணும்*  பயப்பு ஊர்ந்தவே*.           


    ஊர்ந்த சகடம்*  உதைத்த பாதத்தன்*  பேய்முலை- 
    சார்ந்து சுவைத்த செவ்வாயன்*  என்னை நிறை கொண்டான்*

    பேர்ந்தும் பெயர்ந்தும்*  அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்* 
    தீர்ந்த என் தோழீ!*  என் செய்யும் ஊரவர் கவ்வையே?* 


    ஊரவர் கவ்வை எரு இட்டு*  அன்னை சொல் நீர் படுத்து* 
    ஈர நெல் வித்தி முளைத்த*  நெஞ்சப் பெருஞ் செய்யுள்*

    பேர் அமர் காதல்*  கடல் புரைய விளைவித்த* 
    கார் அமர் மேனி*  நம் கண்ணன் தோழீ! கடியனே* 


    கடியன் கொடியன்*  நெடிய மால் உலகம் கொண்ட-
    அடியன்*  அறிவு அரு மேனி மாயத்தன்*  ஆகிலும்

    கொடிய என் நெஞ்சம்*  அவன் என்றே கிடக்கும் எல்லே* 
    துடி கொள் இடை மடத் தோழீ!*  அன்னை என் செய்யுமே?


    அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்* 
    என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*

    முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி- 
    மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.   


    வலையுள் அகப்படுத்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    அலை கடல் பள்ளி அம்மானை*  ஆழிப்பிரான் தன்னை* 

    கலை கொள் அகல் அல்குல் தோழீ!*  நம் கண்களால் கண்டு* 
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ?*  தையலார் முன்பே*.  


    பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து*  மருது இடை- 
    போய் முதல் சாய்த்து*  புள் வாய் பிளந்து களிறு அட்ட*

    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை*  எந் நாள்கொலோ* 
    யாம் உறுகின்றது தோழீ!*  அன்னையர் நாணவே?*      


    நாணும் நிறையும் கவர்ந்து*  என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு* 
    சேண் உயர் வானத்து இருக்கும்*  தேவ பிரான் தன்னை*

    ஆணை என் தோழீ!*  உலகுதோறு அலர் தூற்றி*  ஆம்- 
    கோணைகள் செய்து*  குதிரியாய் மடல் ஊர்துமே*.


    யாம் மடல் ஊர்ந்தும்*  எம் ஆழி அங்கைப் பிரான் உடை*
    தூ மடல் தண் அம் துழாய்*  மலர் கொண்டு சூடுவோம்*

    ஆம் மடம் இன்றி*  தெருவுதோறு அயல் தையலார்*
    நா மடங்காப் பழி தூற்றி*  நாடும் இரைக்கவே*.            


    இரைக்கும் கருங் கடல் வண்ணன்*  கண்ண பிரான் தன்னை* 
    விரைக் கொள் பொழில்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    நிரைக் கொள் அந்தாதி*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரைக்க வல்லார்க்கு*  வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம்*  (2)


    நல்குரவும் செல்வும்*  நரகும் சுவர்க்கமும் ஆய்* 
    வெல்பகையும் நட்பும்*  விடமும் அமுதமும் ஆய்* 

    பல்வகையும் பரந்த*  பெருமான் என்னை ஆள்வானை* 
    செல்வம் மல்குகுடித்*  திருவிண்ணகர்க் கண்டேனே*. (2) 


    கண்ட இன்பம் துன்பம்*  கலக்கங்களும் தேற்றமும் ஆய்* 
    தண்டமும் தண்மையும்*  தழலும் நிழலும் ஆய்* 

    கண்டுகோடற்கு அரிய*  பெருமான் என்னை ஆள்வான் ஊர்* 
    தெண் திரைப் புனல்சூழ்*  திருவிண்ணகர் நல் நகரே* 


    நகரமும் நாடுகளும்*  ஞானமும் மூடமும் ஆய்* 
    நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் ஆய்*  நிலன் ஆய் விசும்பு ஆய்* 

    சிகர மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை*  யாவர்க்கும் புண்ணியமே*.   


    புண்ணியம் பாவம்*  புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய்* 
    எண்ணம் ஆய் மறப்பு ஆய்*  உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய்* 

    திண்ண மாடங்கள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    கண்ணன் இன் அருளே*  கண்டுகொள்மின்கள் கைதவமே* 


    கைதவம் செம்மை*  கருமை வெளுமையும் ஆய்* 
    மெய் பொய் இளமை*  முதுமை புதுமை பழமையும் ஆய்* 

    செய்த திண் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பெய்த காவு கண்டீர்*  பெரும் தேவு உடை மூவுலகே*    


    மூவுலகங்களும் ஆய்*  அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு ஆய்* 
    பூவில் வாழ் மகள் ஆய்*  தவ்வை ஆய் புகழ் ஆய் பழி ஆய்* 

    தேவர் மேவித் தொழும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    பாவியேன் மனத்தே*  உறைகின்ற பரஞ்சுடரே*.


    பரம் சுடர் உடம்பு ஆய்*  அழுக்குப் பதித்த உடம்பு ஆய்* 
    கரந்தும் தோன்றியும் நின்றும்*  கைதவங்கள் செய்தும்*  விண்ணோர்- 

    சிரங்களால் வணங்கும்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    வரம் கொள் பாதம் அல்லால் இல்லை*  யாவர்க்கும் வன் சரணே*. 


    வன்சரண் சுரர்க்கு ஆய்*  அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய்* 
    தன்சரண் நிழற்கீழ்*  உலகம் வைத்தும் வையாதும் 

    தென்சரண் திசைக்குத்*  திருவிண்ணகர் சேர்ந்த பிரான்* 
    என்சரண் என் கண்ணன்*  என்னை ஆளுடை என் அப்பனே*


    என் அப்பன் எனக்கு ஆய்*  இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய்* 
    பொன் அப்பன் மணி அப்பன்*  முத்து அப்பன் அன் அப்பனும் ஆய்*

    மின்னப் பொன் மதிள் சூழ்*  திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்* 
    தன் ஒப்பார் இல் அப்பன்*  தந்தனன் தன தாள் நிழலே*. (2) 


    நிழல் வெய்யில் சிறுமை பெருமை*  குறுமை நெடுமையும் ஆய்* 
    சுழல்வன நிற்பன*  மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய்* 

    மழலை வாய் வண்டு வாழ்*  திருவிண்ணகர் மன்னு பிரான்* 
    கழல்கள் அன்றி*  மற்றோர் களைகண் இலம் காண்மின்களே*


    காண்மின்கள் உலகீர்! என்று கண்முகப்பே நிமிர்ந்த* 
    தாள் இணையன் தன்னைக்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 

    ஆணை ஆயிரத்துத்*  திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்* 
    கோணை இன்றி விண்ணோர்க்கு*  என்றும் ஆவர் குரவர்களே*. (2)        


    வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
    புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*

    வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
    பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)


    நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
    நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 

    தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
    வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.


    செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
    சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*

    திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     


    இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
    உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்

    எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
    முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?


    முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
    கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*

    முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
    கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  


    காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்*  காதல் கடலின் மிகப் பெரிதால்,* 
    நீல முகில்வண்ணத்து எம்பெருமான்*  நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*

    ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,* 
    கோலச் செந்நெற்கள் கவரி வீசும்*  கூடுபுனல் திருப்பேரெயிற்கே.  


    பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
    பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 

    ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
    ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  


    கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
    கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*

    மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
    தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே


    சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
    நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*

    கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
    ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 


    நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
    சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*

    மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
    நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     


    ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
    ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

    கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
    ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)


    அங்கும் இங்கும்*  வானவர் தானவர் யாவரும்* 
    எங்கும் இனையைஎன்று*  உன்னைஅறியகிலாதுஅலற்றி*

    அங்கம்சேரும்*  பூமகள் மண்மகள் ஆய்மகள்* 
    சங்குசக்கரக் கையவன் என்பர்*  சரணமே.  (2)


    சரணமாகிய*  நான்மறை நூல்களும் சாராதே* 
    மரணம் தோற்றம்*  வான்பிணி மூப்புஎன்றுஇவை மாய்த்தோம்*

    கரணப்பல்படை*  பற்றறஓடும் கனல்ஆழி* 
    அரணத்திண் படைஏந்திய*  ஈசற்கு ஆளாயே.


    ஆளும் ஆளார் ஆழியும்*  சங்கும் சுமப்பார்தாம்* 
    வாளும் வில்லும் கொண்டு*  பின் செல்வார் மற்றுஇல்லை*

    தாளும் தோளும்*  கைகளைஆரத் தொழக்காணேன்* 
    நாளும் நாளும் நாடுவன்*  அடியேன் ஞாலத்தே


    ஞாலம் போனகம்பற்றி*  ஓர்முற்றா உருஆகி* 
    ஆலம்பேர்இலை*  அன்னவசம்செய்யும் அம்மானே*

    காலம்பேர்வதுஓர்*  கார்இருள் ஊழி ஒத்துஉளதால்*  உன் 
    கோலம்கார்எழில்*  காணலுற்று ஆழும் கொடியேற்கே


    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*

    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.


    பணியாஅமரர்*  பணிவும் பண்பும் தாமேஆம்* 
    அணியார் ஆழியும்*  சங்கமும் ஏந்தும் அவர் காண்மின்*

    தணியா வெம்நோய்*  உலகில் தவிர்ப்பான்*  திருநீல 
    மணியார்மேனியோடு*  என்மனம் சூழவருவாரே. 


    வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
    திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*

    உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
    ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  


    என்றே என்னை*  உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்* 
    நின்றே ஆட்செய்ய*  நீகொண்டருள நினைப்பதுதான்*

    குன்றுஏழ் பார்ஏழ்*  சூழ்கடல்ஞாலம் முழுஏழும்* 
    நின்றே தாவிய*  நீள்கழல் ஆழித் திருமாலே!


    திருமால் நான்முகன்*  செஞ்சடையான் என்றுஇவர்கள்*  எம் 
    பெருமான் தன்மையை*  யார் அறிகிற்பார்? பேசிஎன்*

    ஒருமாமுதல்வா!*  ஊழிப்பிரான் என்னை ஆளுடைக்* 
    கருமாமேனியன்! என்பன்*  என்காதல் கலக்கவே. 


    கலக்கம் இல்லா*  நல்தவமுனிவர் கரைகண்டோர்* 
    துளக்கம் இல்லா*  வானவர் எல்லாம் தொழுவார்கள்*

    மலக்கம் எய்த*  மாகடல்தன்னைக் கடைந்தானை* 
    உலக்க நாம் புகழ்கிற்பது*  என்செய்வது உரையீரே.   


    உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
    வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)


    ஓராயிரமாய்*  உலகுஏழ்அளிக்கும்* 
    பேராயிரம்கொண்டதுஓர்*  பீடுஉடையன்*

    காராயின*  காளநல்மேனியினன்* 
    நாரயணன்*  நங்கள்பிரான்அவனே.   (2)


    அவனேஅகல்ஞாலம்*  படைத்துஇடந்தான்* 
    அவனேஅஃதுஉண்டுஉமிழ்ந்தான் அளந்தான்*

    அவனேஅவனும்*  அவனும்அவனும்* 
    அவனே மற்றுஎல்லாமும்*  அறிந்தனமே.


    அறிந்தனவேத*  அரும்பொருள்நூல்கள்* 
    அறிந்தனகொள்க*  அரும்பொருள்ஆதல்*

    அறிந்தனர்எல்லாம்*  அரியைவணங்கி* 
    அறிந்தனர்*  நோய்கள்அறுக்கும்மருந்தே.  


    மருந்தேநங்கள்*  போக மகிழ்ச்சிக்குஎன்று* 
    பெரும்தேவர் குழாங்கள்*  பிதற்றும்பிரான்*

    கரும்தேவன்எம்மான்*  கண்ணன்விண்உலகம்* 
    தரும்தேவனைச்*  சோரேல்கண்டாய்மனமே!


    மனமே! உன்னை*  வல்வினையேன்இரந்து* 
    கனமேசொல்லினேன்*  இதுசோரேல்கண்டாய்*

    புனம்மேவிய*  பூந்தண்துழாய் அலங்கல்* 
    இனம்ஏதும்இலானை*  அடைவதுமே.


    அடைவதும்அணியார்*  மலர்மங்கைதோள்* 
    மிடைவதும்*  அசுரர்க்குவெம்போர்களே*

    கடைவதும்*  கடலுள்அமுதம்*  என்மனம் 
    உடைவதும்*  அவற்கேஒருங்காகவே.


    ஆகம்சேர்*  நரசிங்கம்அதுஆகி ஓர்* 
    ஆகம்வள்உகிரால்*  பிளந்தான்உறை*

    மாகவைகுந்தம்*  காண்பதற்கு என்மனம்* 
    ஏகம்எண்ணும்*  இராப்பகல்இன்றியே   (2)  


    இன்றிப்போக*  இருவினையும்கெடுத்து* 
    ஒன்றியாக்கைபுகாமை*  உய்யக்கொள்வான்*

    நின்றவேங்கடம்*  நீள்நிலத்துஉள்ளது, 
    சென்றதேவர்கள்*  கைதொழுவார்களே.


    தொழுதுமாமலர்*  நீர்சுடர்தூபம்கொண்டு* 
    எழுதும்என்னும்இது*  மிகைஆதலின்*

    பழுதுஇல்தொல்புகழ்ப்*  பாம்புஅணைப்பள்ளியாய்* 
    தழுவுமாறுஅறியேன்*  உனதாள்களே 


    தாளதாமரையான்*  உனதுஉந்தியான்* 
    வாள்கொள் நீளமழுஆளி*  உன்ஆகத்தான்*

    ஆளராய்த்தொழுவாரும்*  அமரர்கள்* 
    நாளும் என்புகழ்கோ*  உனசீலமே? 


    சீலம்எல்லைஇலான்*  அடிமேல்*  அணி 
    கோலம்நீள்*  குருகூர்ச்சடகோபன்*  சொல்

    மாலைஆயிரத்துள்*  இவை பத்தினின் 
    பாலர்*  வைகுந்தம்ஏறுதல் பான்மையே  (2)


    வேய்மரு தோள்இணை மெலியும் ஆலோ!*   மெலிவும்என் தனிமையும் யாதும் நோக்காக்* 
    காமரு குயில்களும் கூவும் ஆலோ!*  கணமயில் அவைகலந்து ஆலும் ஆலோ*

    ஆமருவுஇன நிரை மேய்க்க நீபோக்கு*  ஒருபகல் ஆயிரம் ஊழிஆலோ* 
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ!*   தகவிலை தகவிலையே நீ கண்ணா!    (2)


    தகவிலை தகவிலையே நீ கண்ணா!*   தடமுலை புணர் தொறும் புணர்ச்சிக்குஆராச்* 
    சுகவெள்ளம் விசும்புஇறந்து அறிவை மூழ்கச்-   சூழ்ந்து அதுகனவுஎன நீங்கி ஆங்கே*

    அகஉயிர் அகம்அகம்தோறும் உள்புக்கு*   ஆவியின் பரம்அல்ல வேட்கை அந்தோ* 
    மிகமிக இனி உன்னைப் பிரிவைஆமால்*   வீவ நின் பசுநிரை மேய்க்கப் போக்கே.


    வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு*   வெவ்வுயிர் கொண்டு எனதுஆவி வேமால்* 
    யாவரும் துணைஇல்லை யான் இருந்து*  உன்அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்*

    போவதுஅன்று ஒருபகல் நீஅகன்றால்*  பொருகயல் கண்இணை நீரும் நில்லா* 
    சாவது இவ்ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த*  இத் தொழுத்தையோம் தனிமை தானே.  


    தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்-  துயரமும் நினைகிலை கோவிந்தா நின்- 
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பி*   துறந்து எம்மைஇட்டு அவை மேய்க்கப் போதி*

    பழுத்த நல்அமுதின் இன்சாற்று வெள்ளம்*  பாவியேன் மனம்அகம்தோறும் உள்புக்கு- 
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*


    பணிமொழி நினைதொறும் ஆவி வேமால்*  பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!* 
    பிணிஅவிழ் மல்லிகை வாடை தூவ*   பெருமத மாலையும் வந்தின்று ஆலோ!*

    மணிமிகு மார்பினில் முல்லைப் போது*  என்வனமுலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து 
    அணிமிகு தாமரைக் கையை அந்தோ!*  அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்  


    அடிச்சியோம் தலைமிசை நீஅணியாய்*  ஆழிஅம் கண்ணா! உன் கோலப் பாதம்* 
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும்  பலர் அதுநிற்க எம் பெண்மை ஆற்றோம்*

    வடித்தடம் கண்இணை நீரும் நில்லா*   மனமும்நில்லா எமக்கு அது தன்னாலே* 
    வெடிப்புநின் பசுநிரை மேய்க்கப் போக்கு*  வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கே. 


    வேம் எமதுஉயிர் அழல் மெழுகில்உக்கு*  வெள்வளை மேகலை கழன்று வீழ*
    தூமலர்க் கண்இணை முத்தம் சோர*  துணைமுலை பயந்து என தோள்கள் வாட*

    மாமணி வண்ணா! உன்செங்கமல  வண்ண*  மெல் மலரடி நோவ நீபோய்* 
    ஆமகிழ்ந்து உகந்துஅவை மேய்க்கின்று உன்னோடு*  அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? 


    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்குஎன்று*  ஆழும் என்ஆர்உயிர் ஆன்பின் போகேல்* 
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து*  கலவியும் நலியும் என்கை கழியேல்*

    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும்*  கைகளும் பீதக உடையும் காட்டி* 
    ஒசிசெய் நுண்இடைஇள ஆய்ச்சியர்நீ*  உகக்கும் நல்லவரொடும் உழிதராயே  


    உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன்*  திருவுள்ளம் இடர்கெடும்தோறும்* நாங்கள்- 
    வியக்க இன்புறுதும் எம்பெண்மை ஆற்றோம்*  எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்*

    மிகப்பல அசுரர்கள் வேண்டுஉருவம் கொண்டு*  நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ* 
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே*  அவத்தங்கள் விளையும் என்சொல்கொள் அந்தோ!


    அவத்தங்கள் விளையும் என்சொல்கொள்அந்தோ!*  அசுரர்கள் வன்கையர் கஞ்சன்ஏவ* 
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர்* தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்- 

    உவர்த்தலை உடன்திரி கிலையும் என்றுஎன்று-  ஊடுற என்னுடை ஆவி வேமால்* 
    திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி*  செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவே! 


    செங்கனி வாய்எங்கள் ஆயர் தேவு*  அத்திருவடி திருவடிமேல்*  பொருநல்- 
    சங்குஅணி துறைவன் வண்தென் குருகூர்*  வண்சட கோபன் சொல் ஆயிரத்துள்*

    மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை*  அவனொடும் பிரிவதற்கு இரங்கி*  தையல்- 
    அங்குஅவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான்-  உரைத்தன*  இவையும் பத்து அவற்றின் சார்வே.   (2)