பிரபந்த தனியன்கள்

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.

   பாசுரங்கள்


  நின்று எதிராய*  நிரைமணித்தேர் வாணன்தோள்,* 
  ஒன்றிய ஈர்ஐஞ்ஞூறுஉடன் துணிய,* - வென்றுஇலங்கும்

  ஆர்படுவான் நேமி*  அரவுஅணையான் சேவடிக்கே,*
  நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு.


  நெஞ்சால்*  நினைப்புஅரியனேலும்*  நிலைப்பெற்று என்
  நெஞ்சமே! பேசாய்*  நினைக்குங்கால்,*- நெஞ்சத்துப்

  பேராது நிற்கும்*  பெருமானை என்கொலோ,* 
  ஓராது நிற்பது உணர்வு?


  உணரில் உணர்வுஅரியன்*  உள்ளம் புகுந்து*
  புணரிலும் காண்புஅரியன் உண்மை,* - இணர்அணைய

  கொங்குஅணைந்து வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
  எங்குஅணைந்து காண்டும் இனி?


  இனிஅவன் மாயன் என உரைப்பரேலும்,* 
  இனிஅவன் காண்புஅரியனேலும்,* - இனியவன்

  கள்ளத்தால் மண்கொண்டு*  விண்கடந்த பைங்கழலான்,* 
  உள்ளத்தின் உள்ளே உளன்.


  உளனாய*  நான்மறையின் உட்பொருளை,*  உள்ளத்து-
  உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்,* - உளனாய

  வண்தாமரை நெடுங்கண்*  மாயவனை யாவரே,*
  கண்டார் உகப்பர் கவி?


  கவியினார் கைபுனைந்து*  கண்ஆர் கழல்போய்,* 
  செவியின்ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார்,* - புவியினார்

  போற்றி உரைக்க*  பொலியுமே,*  பின்னைக்குஆய்
  ஏற்றுஉயிரை அட்டான் எழில்?


  எழில்கொண்ட*  மின்னுக் கொடிஎடுத்து,*  வேகத்-
  தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும்,* - எழில் கொண்ட

  நீர்மேகம் அன்ன*  நெடுமால் நிறம்போல,* 
  கார்வானம் காட்டும் கலந்து.


  கலந்து மணிஇமைக்கும் கண்ணா,*  நின் மேனி
  மலர்ந்து*  மரகதமே காட்டும்,* - நலம்திகழும்

  கொந்தின்வாய் வண்டுஅறையும்*  தண்துழாய்க் கோமானை,*
  அந்திவான் காட்டும் அது.


  அது நன்று இது தீதுஎன்று*  ஐயப்படாதே,* 
  மதுநின்ற தண்துழாய் மார்வன்,* - பொதுநின்ற*

  பொன்அம் கழலே தொழுமின்,*  முழுவினைகள்
  முன்னம் கழலும் முடிந்து.


  முடிந்த பொழுதில்*  குறவாணர்,*  ஏனம்
  படிந்துஉழுசால்*  பைந்தினைகள் வித்த,* - தடிந்துஎழுந்த

  வேய்ங்கழைபோய்*  விண்திறக்கும் வேங்கடமே,*  மேல்ஒருநாள்
  தீம்குழல்*   வாய் வைத்தான் சிலம்பு.


  சிலம்பும் செறிகழலும் சென்றுஇசைப்ப,*  விண்ஆறு 
  அலம்பிய சேவடிபோய்,*  அண்டம் - புலம்பியதோள்*

  எண்திசையும் சூழ*  இடம்போதாது என்கொலோ,*
  வண்துழாய் மால்அளந்த மண்?


  மண்உண்டும்*  பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய்,* 
  வெண்ணெய் விழுங்க வெகுண்டு,*  ஆய்ச்சி - கண்ணிக்

  கயிற்றினால் கட்ட*  தான் கட்டுண்டு இருந்தான்,* 
  வயிற்றினோடு ஆற்றா மகன். 


  மகன்ஒருவர்க்கு அல்லாத*  மாமேனி மாயன்,*
  மகன்ஆம் அவன்மகன் தன்*  காதல் மகனைச்*

  சிறைசெய்த வாணன்தோள்*  செற்றான் கழலே* 
  நிறைசெய்து என் நெஞ்சே! நினை.


  நினைத்துஉலகில் ஆர்தெளிவார்*  நீண்ட திருமால்,*
  அனைத்துஉலகும் உள்ஒடுக்கி ஆல்மேல்,* - கனைத்துஉலவு

  வெள்ளத்துஓர் பிள்ளையாய்*  மெள்ளத் துயின்றானை,*
  உள்ளத்தே வைநெஞ்சமே! உய்த்து.


  உய்த்துஉணர்வு என்னும்*  ஒளிகொள் விளக்குஏற்றி,* 
  வைத்துஅவனை நாடி வலைப்படுத்தேன்,* - மெத்தெனவே

  நின்றான் இருந்தான்*  கிடந்தான் என் நெஞ்சத்து,* 
  பொன்றாமை மாயன் புகுந்து.  


  புகுந்துஇலங்கும்*  அந்திப் பொழுதத்து,* அரியாய் 
  இகழ்ந்த*  இரணியனது ஆகம்,* - சுகிர்ந்துஎங்கும் 

  சிந்தப் பிளந்த*  திருமால் திருவடியே* 
  வந்தித்து என்நெஞ்சமே! வாழ்த்து.


  வாழ்த்திய வாயராய்*  வானோர் மணிமகுடம்* 
  தாழ்த்தி வணங்கத் தழும்பாமே,* - கேழ்த்த

  அடித்தாமரை*  மலர்மேல் மங்கை மணாளன்,* 
  அடித்தாமரைஆம் அலர்.   


  அலர்எடுத்த உந்தியான்*  ஆங்குஎழிலஆய,* 
  மலர்எடுத்த மாமேனி மாயன்,* - அலர்எடுத்த

  வண்ணத்தான் மாமலரான்*  வார்சடையான்*  என்றுஇவர்கட்கு 
  எண்ணத்தான்ஆமோ இமை? 


  இமம்சூழ் மலையும்*  இருவிசும்பும் காற்றும்,* 
  அமம்சூழ்ந்துஅற விளங்கித் தோன்றும்,* - நமன்சூழ்

  நரகத்து*  நம்மை நணுகாமல் காப்பான்,* 
  துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு.   


  தொட்ட படைஎட்டும்*  தோலாத வென்றியான்,* 
  அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்

  கோள்முதலை துஞ்ச*  குறித்துஎறிந்த சக்கரத்தான்* 
  தாள்முதலே நங்கட்குச் சார்வு  (2)


  சார்வு நமக்குஎன்றும் சக்கரத்தான்,*  தண்துழாய்த் 
  தார்வாழ்*  வரைமார்பன் தான்முயங்கும்,* - கார்ஆர்ந்த

  வான்அமரும் மின்இமைக்கும்*  வண்தாமரைநெடுங்கண்,* 
  தேன்அமரும் பூமேல் திரு.  (2)