பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
பாசுரங்கள்
சிந்துரச் செம்பொடிப் போல்* திருமாலிருஞ்சோலை எங்கும்*
இந்திர கோபங்களே* எழுந்தும் பரந்திட்டனவால்*
மந்தரம் நாட்டி அன்று* மதுரக் கொழுஞ்சாறு கொண்ட*
சுந்தரத்தோளுடையான்* சுழலையினின்று உய்துங் கொலோ!* (2)
போர்க்களிறு பொரும்* மாலிருஞ்சோலை அம் பூம்புறவில்*
தார்க்கொடி முல்லைகளும்* தவள நகை காட்டுகின்ற*
கார்க்கொள் பிடாக்கள் நின்று* கழறிச் சிரிக்கத் தரியேன்*
ஆர்க்கு இடுகோ? தோழீ !* அவன் தார் செய்த பூசலையே*.
கருவிளை ஒண்மலர்காள்!* காயா மலர்காள்*
திருமால் உரு ஒளி காட்டுகின்றீர்* எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர்*
திரு விளையாடு திண் தோள்* திருமாலிருஞ்சோலை நம்பி*
வரிவளை இற் புகுந்து* வந்திபற்றும் வழக்கு உளதே*
பைம்பொழில் வாழ் குயில்காள்! மயில்காள்!* ஒண் கருவிளைகாள்*
வம்பக் களங்கனிகாள்!* வண்ணப் பூவை நறுமலர்காள்*
ஐம் பெரும் பாதகர்காள்!* அணி மாலிருஞ்சோலை நின்ற*
எம்பெருமானுடைய நிறம்* உங்களுக்கு என் செய்வதே?*
துங்க மலர்ப் பொழில் சூழ்* திருமாலிருஞ்சோலை நின்ற*
செங்கண் கருமுகிலின்* திருவுருப் போல்*
மலர்மேல் தொங்கிய வண்டினங்காள்!* தொகு பூஞ்சுனைகாள்!*
சுனையிற் தங்கு செந்தாமரைகாள்!* எனக்கு ஓர் சரண் சாற்றுமினே*
நாறு நறும் பொழில்* மாலிருஞ்சோலை நம்பிக்கு* நான்-
நூறு தடாவில் வெண்ணெய்* வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறு தடா நிறைந்த* அக்கார அடிசில் சொன்னேன்*
ஏறு திருவுடையான்* இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!* (2)
இன்று வந்து இத்தனையும்* அமுது செய்திடப் பெறில்* நான்-
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப்* பின்னும் ஆளும் செய்வன்*
தென்றல் மணம் கமழும்* திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான்
அடியேன் மனத்தே* வந்து நேர்படிலே*
காலை எழுந்திருந்து* கரிய குருவிக் கணங்கள்*
மாலின் வரவு சொல்லி* மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ*
சோலைமலைப் பெருமான்* துவாராபதி எம்பெருமான்*
ஆலின் இலைப் பெருமான்* அவன் வார்த்தை உரைக்கின்றதே*.
கோங்கு அலரும் பொழில்* மாலிருஞ்சோலையிற் கொன்றைகள் மேல்*
தூங்கு பொன் மாலைகளோடு* உடனாய் நின்று தூங்குகின்றேன்*
பூங்கொள் திருமுகத்து* மடுத்து ஊதிய சங்கு ஒலியும்*
சார்ங்க வில் நாண் ஒலியும்* தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ!*
சந்தொடு காரகிலும் சுமந்து* தடங்கள் பொருது*
வந்திழியும் சிலம்பாறு* உடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனைச்*
சுரும்பு ஆர் குழற் கோதை* தொகுத்து உரைத்த*
செந்தமிழ் பத்தும் வல்லார்* திருமாலடி சேர்வர்களே* (2)