பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.
பாசுரங்கள்
தை ஒரு திங்களும் தரை விளக்கி* தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து* அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*
உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி* உன்னையும் உம்பியையும் தொழுதேன்*
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை* வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)
வெள்ளை நுண் மணல்கொண்டு தெரு அணிந்து* வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து*
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து* முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா*
கள் அவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு* கடல்வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி*
புள்ளினை வாய் பிளந்தான் எனப்து ஓர்* இலக்கினிற் புக என்னை எய்கிற்றியே.
மத்த நன் நறுமலர் முருக்க மலர் கொண்டு* முப்போதும் உன் அடி வணங்கித்*
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து* வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே*
கொத்து அலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு* கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி*
வித்தகன் வேங்கட வாணன் என்னும்* விளக்கினிற் புக என்னை விதிக்கிற்றியே*
சுவரில் புராண! நின் பேர் எழுதிச்* சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்*
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்* காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா*
அவரைப் பிராயம் தொடங்கி* என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்*
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்* தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.
வானிடை வாழும் அவ் வானவர்க்கு* மறையவர் வேள்வியில் வகுத்த அவி*
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து* கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப*
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று* உன்னித்து எழுந்த என் தட முலைகள்*
மானிடவர்க்கு என்று பேச்சுப் படில்* வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!*
உருவு உடையார் இளையார்கள் நல்லார்* ஓத்து வல்லார்களைக் கொண்டு* வைகல்-
தெருவிடை எதிர்கொண்டு* பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா*
கருவுடை முகில் வண்ணன் காயாவண்ணன்* கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்*
திரு உடை முகத்தினிற் திருக் கண்களால்* திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய்*
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து* கட்டி அரிசி அவல் அமைத்து*
வாய் உடை மறையவர் மந்திரத்தால்* மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்*
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன்* திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்*
சாய் உடை வயிறும் என் தட முலையும்* தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே*
மாசு உடை உடம்பொடு தலை உலறி* வாய்ப்புறம் வெளுத்து ஒருபோதும் உண்டு*
தேசு உடைத் திறல் உடைக் காமதேவா!* நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்*
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்* பெண்மையைத் தலை உடைத்து ஆக்கும் வண்ணம்*
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும்* இப்பேறு எனக்கு அருளு கண்டாய்*
தொழுது முப்போதும் உன் அடி வணங்கித்* தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்*
பழுது இன்றிப் பாற்கடல் வண்ணனுக்கே* பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்*
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க* ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்*
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து* ஊட்டம் இன்றித் துரந்தால் ஒக்குமே*
கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்* கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற*
மருப்பினை ஒசித்துப் புள் வாய்பிளந்த* மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று*
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும்* புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை*
விருப்பு உடை இன்தமிழ் மாலை வல்லார்* விண்ணவர் கோன் அடி நண்ணுவரே* (2)