பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


    பட்டி மேய்ந்து ஓர் காரேறு*  பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய்* 
    இட்டீறு இட்டு விளையாடி*  இங்கே போதக் கண்டீரே?* 

    இட்டமான பசுக்களை*  இனிது மறித்து நீர் ஊட்டி* 
    விட்டுக் கொண்டு விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*. (2)


    அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்* 
    குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?* 

    கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை* 
    மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.          


    மாலாய்ப் பிறந்த நம்பியை*  மாலே செய்யும் மணாளனை* 
    ஏலாப் பொய்கள் உரைப்பானை*  இங்கே போதக் கண்டீரே?* 

    மேலால் பரந்த வெயில்காப்பான்*  வினதை சிறுவன் சிறகு என்னும்* 
    மேலாப்பின் கீழ் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*      


    கார்த் தண் கமலக் கண் என்னும்*  நெடுங்கயிறு படுத்தி*
    என்னை ஈர்த்துக் கொண்டு விளையாடும்*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 

    போர்த்த முத்தின் குப்பாயப்*  புகர் மால் யானைக் கன்றே போல்* 
    வேர்த்து நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*   


    மாதவன் என் மணியினை*  வலையிற் பிழைத்த பன்றி போல்* 
    ஏதும் ஒன்றும் கொளத் தாரா*  ஈசன்தன்னைக் கண்டீரே?* 

    பீதகஆடை உடை தாழ*  பெருங் கார்மேகக் கன்றே போல்* 
    வீதி ஆர வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)    


    தருமம் அறியாக் குறும்பனைத்*  தன் கைச் சார்ங்கம் அதுவே போல்* 
    புருவ வட்டம் அழகிய*  பொருத்தம் இலியைக் கண்டீரே?* 

    உருவு கரிதாய் முகம் சேய்தாய்*  உதயப் பருப்பதத்தின்மேல்* 
    விரியும் கதிரே போல்வானை*  விருந்தாவனத்தே கண்டோமே*            


    பொருத்தம் உடைய நம்பியைப்*  புறம்போல் உள்ளும் கரியானைக்* 
    கருத்தைப் பிழைத்து நின்ற*  அக் கரு மா முகிலைக் கண்டீரே?* 

    அருத்தித் தாரா கணங்களால்*  ஆரப் பெருகு வானம் போல்* 
    விருத்தம் பெரிதாய் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     


    வெளிய சங்கு ஒன்று உடையானைப்*  பீதக ஆடை உடையானை* 
    அளி நன்கு உடைய திருமாலை*  ஆழியானைக் கண்டீரே?* 

    களி வண்டு எங்கும் கலந்தாற்போல்*  கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்* 
    மிளிர நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*       


    நாட்டைப் படை என்று அயன் முதலாத்*  தந்த நளிர் மா மலர் உந்தி* 
    வீட்டைப் பண்ணி விளையாடும்*  விமலன்தன்னைக் கண்டீரே?* 

    காட்டை நாடித் தேனுகனும்*  களிறும் புள்ளும் உடன் மடிய* 
    வேட்டையாடி வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே* (2)


    பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்* 
    பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்* 

    மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்* 
    பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)