பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி 
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள், 
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை 
வேயர் பயந்த விளக்கு.
 
கட்டளைக் கலித்துறை
கோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும் 
சீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல் 
மாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய 
சோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.

   பாசுரங்கள்


  தெள்ளியார் பலர்* கைதொழும் தேவனார்* 
  வள்ளல்*  மாலிருஞ்சோலை மணாளனார்* 

  பள்ளி கொள்ளும் இடத்து*  அடி கொட்டிடக்* 
  கொள்ளுமாகில்*  நீ கூடிடு கூடலே!*  (2)       


  காட்டில் வேங்கடம்*  கண்ணபுர நகர்* 
  வாட்டம் இன்றி*  மகிழ்ந்து உறை வாமனன்* 

  ஓட்டரா வந்து*  என் கைப் பற்றித் தன்னொடும்* 
  கூட்டு மாகில்*  நீ கூடிடு கூடலே!* (2)


  பூ மகன் புகழ் வானவர்* போற்றுதற்கு* 
  ஆமகன் அணி வாணுதல்* தேவகி* 

  மா மகன் மிகு சீர்*  வசுதேவர்தம்* 
  கோமகன் வரில்*  கூடிடு கூடலே!*   


  ஆய்ச்சிமார்களும்*  ஆயரும் அஞ்சிட* 
  பூத்த நீள்*  கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து* 

  வாய்த்த காளியன்மேல்*  நடம் ஆடிய* 
  கூத்தனார்*  வரில் கூடிடு கூடலே*       


  மாட மாளிகை சூழ்*  மதுரைப் பதி* 
  நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு* 

  ஓடை மா*  மத யானை உதைத்தவன்* 
  கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*    


  அற்றவன்*  மருதம் முறிய நடை- 
  கற்றவன்*  கஞ்சனை வஞ்சனையிற்* 

  செற்றவன் திகழும்*  மதுரைப் பதிக்* 
  கொற்றவன் வரில்*  கூடிடு கூடலே!* 


  அன்று இன்னாதன செய்*  சிசுபாலனும்* 
  நின்ற நீள்*  மருதும் எருதும் புள்ளும்* 

  வென்றி வேல் விறல்*  கஞ்சனும் வீழ*  
  முன் கொன்றவன் வரில்*  கூடிடு கூடலே!*   


  ஆவல் அன்பு உடையார்*  தம் மனத்து அன்றி- 
  மேவலன் விரை சூழ்*  துவராபதிக்- 

  காவலன்,கன்று மேய்த்து விளையாடும்* 
  கோவலன்வரில்*  கூடிடு கூடலே!*

     கொண்ட கோலக்*  குறள் உருவாய்ச் சென்று* 
  பண்டு மாவலிதன்*  பெரு வேள்வியில்* 

  அண்டமும் நிலனும்*  அடி ஒன்றினால்* 
  கொண்டவன் வரில்*  கூடிடு கூடலே!*             
   


  பழகு நான்மறையின் பொருளாய்*  மதம் 
  ஒழுகு வாரணம்*  உய்ய அளித்த*  எம் 

  அழகனார்*  அணி ஆய்ச்சியர் சிந்தையுள்* 
  குழகனார் வரில்*  கூடிடு கூடலே!*   


  ஊடல் கூடல்*  உணர்தல் புணர்தலை* 
  நீடு நின்ற*  நிறை புகழ் ஆய்ச்சியர்* 

  கூடலைக்*  குழற் கோதை முன் கூறிய* 
  பாடல் பத்தும் வல்லார்க்கு*  இல்லை பாவமே* (2)