பிரபந்த தனியன்கள்

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

   பாசுரங்கள்


    அடர்பொன் முடியானை*  ஆயிரம் பேரானை 
    சுடர்கொள் சுடர்ஆழி யானை,*  -இடர்கடியும்-

    மாதா பிதாவாக*  வைத்தேன் எனதுஉள்ளே* 
    யாதுஆகில் யாதே இனி?


    இனிநின்று நின்பெருமை*  யான்உரைப்பது என்னே,* 
    தனிநின்ற சார்வுஇலா மூர்த்தி,*  -பனிநீர்-

    அகத்துஉலவு*  செஞ்சடையான் ஆகத்தான்,*  நான்கு- 
    முகத்தான் நின்உந்தி முதல்.  


    முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,*  ஒன்றே- 
    முதல்ஆகும்*  மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-

    நிகர்இலகு கார்உருவா!*  நின்அகத்தது அன்றே,* 
    புகர்இலகு தாமரையின் பூ? 


    பூவையும் காயாவும்*  நீலமும் பூக்கின்ற,* 
    காவி மலர்என்றும் காண்தோறும்,*  -பாவியேன்-

    மெல்ஆவி*  மெய்மிகவே பூரிக்கும்,*  அவ்வவை- 
    எல்லாம் பிரான்உருவே என்று.


    என்றும் ஒருநாள்*  ஒழியாமை யான்இரந்தால்,* 
    ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-

    குடைஆக*  ஆகாத்த கோவலனார்,*  நெஞ்சே!- 
    புடைதான் பெரிதே புவி.  


    புவியும் இருவிசும்பும் நின்அகத்த,*  நீஎன்- 
    செவியின் வழிபுகுந்து*  என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-

    யான்பெரியன் நீபெரியை*  என்பதனை யார்அறிவார்,* 
    ஊன்பருகு நேமியாய்! உள்ளு.


    உள்ளிலும் உள்ளம் தடிக்கும்*  வினைப்படலம்,* 
    விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,*  -உள்ள-

    உலகுஅளவும் யானும்*  உளன்ஆவன் என்கொல்* 
    உலகுஅளந்த மூர்த்தி! உரை. 


    உரைக்கில்ஓர் சுற்றத்தார்*  உற்றார் என்றுஆரே? 
    இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,*  -உரைப்புஎல்லாம்-

    நின்அன்றி*  மற்றுஇலேன் கண்டாய்,*  எனதுஉயிர்க்குஓர்- 
    சொல்நன்றி ஆகும் துணை.


    துணைநாள் பெருங்கிளையும்*  தொல்குலமும்,*  சுற்றத்து- 
    இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,*  கணைநாணில்-

    ஓவாத் தொழில்சார்ங்கன்*  தொல்சீரை நல்நெஞ்சே,* 
    ஓவாத ஊணாக உண். 


    உள்நாட்டுத் தேசுஅன்றே!*  ஊழ்வினையை அஞ்சுமே,* 
    விண்நாட்டை ஒன்றுஆக மெச்சுமே,*-மண்நாட்டில்-

    ஆர்ஆகி*  எவ்இழிவிற்று ஆனாலும்,*  ஆழிஅங்கைப்- 
    பேர்ஆயற்கு ஆள்ஆம் பிறப்பு?


    பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
    இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-

    ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
    பாதமே ஏத்தாப் பகல்? 


    பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
    இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-

    தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
    செழும்பரவை மேயார் தெரிந்து.


    தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்*  தீவினையேன்,*  வாளா- 
    இருந்தொழிந்தேன்*  கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-

    அம்மானை*  அந்நான்று பின்தொடர்ந்த*  ஆழிஅங்கை- 
    அம்மானை ஏத்தாது அயர்த்து.


    அயர்ப்பாய் அயராப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்* 
    உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-

    அல்லவே செய்கிறுதி*  நெஞ்சமே! அஞ்சினேன்* 
    மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.


    வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
    தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*

    எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
    தங்கத்தான்ஆ மேலும் தங்கு.


    தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
    எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-

    தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
    கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  


    கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
    பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

    சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
    என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 


    இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
    எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

    கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
    மொய்கழலே ஏத்த முயல் (2)