பிரபந்த தனியன்கள்

என்பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்.

   பாசுரங்கள்


  மண்ணுலகம் ஆளேனே*  வானவர்க்கும் வானவனாய்,*
  விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே,*  - நண்ணித்-

  திருமாலை*  செங்கண் நெ.டியானை,*  எங்கள்-
  பெருமானை கைதொழுத பின்             


  பின்னால் அரு நரகம்*  சேராமல் பேதுறுவீர்,* 
  முன்னால் வணங்க முயல்மினோ,*  - பல் நூல்-

  அளந்தானை*  கார்க் கடல் சூழ் ஞாலத்தை,*  எல்லாம்-
  அளந்தான் அவன் சேவடி   


  அடியால் முன் கஞ்சனைச் செற்று,*  அமரர் ஏத்தும்-
  படியான்*  கொடிமேல் புள் கொண்டான்,*  - நெடியான் தன்-

  நாமமே ஏத்துமின்கள் ஏத்தினால்,*  தாம் வேண்டும்-
  காமமே காட்டும் கடிது.  


  கடிது கொடு நரகம்*  பிற்காலும் செய்கை,*
  கொடிது என்று அது கூடாமுன்னம்,*  - வடி சங்கம்-

  கொண்டானை*  கூந்தல் வாய் கீண்டானை,*  கொங்கை நஞ்சு-
  உண்டானை*  ஏத்துமினோ உற்று. 


  உற்று வணங்கித்*  தொழுமின் உலகு ஏழும்*
  முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்,*  - பற்றிப்-

  பொருந்தாதான் மார்பு இடந்து*  பூம் பாடகத்துள்-
  இருந்தானை,*  ஏத்தும் என் நெஞ்சு.    


  என் நெஞ்சம் மேயான்*  என் சென்னியான்,*  தானவனை-
  வல் நெஞ்சம்*  கீண்ட மணி வண்ணன்,*  முன்னம் சேய்-

  ஊழியான்*  ஊழி பெயர்த்தான்,*  உலகு ஏத்தும்-
  ஆழியான்*  அத்தியூரான்.


  அத்தியூரான்*  புள்ளை ஊர்வான்,*  அணி மணியின்-
  துத்தி சேர்*  நாகத்தின்மேல் துயில்வான்,*  - முத்தீ-

  மறை ஆவான்*  மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்*
  இறை ஆவான் எங்கள் பிரான். (2)


  எங்கள் பெருமான்*  இமையோர் தலைமகன்! நீ,* 
  செங்கண் நெடு மால் திருமார்பா,*  - பொங்கு-

  பட மூக்கின் ஆயிர வாய்ப்*  பாம்பு அணைமேல் சேர்ந்தாய்,* 
  குடமூக்குக் கோயிலாக் கொண்டு.   


  கொண்டு வளர்க்க*  குழவியாய்த் தான் வளர்ந்தது* 
  உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க,*  - கொண்டு-

  குடம் ஆடி*  கோவலனாய் மேவி,*  என் நெஞ்சம்-
  இடமாகக் கொண்ட இறை.           


  இறை எம் பெருமான் அருள் என்று*  இமையோர்-
  முறை நின்று*  மொய்ம் மலர்கள் தூவ,*  - அறை கழல-

  சேவடியான்*  செங்கண் நெடியான்,*  குறள் உருவாய்-
  மாவடிவின்*  மண் கொண்டான் மால். (2) 


  மாலே நெடியோனே!*  கண்ணனே,*  விண்ணவர்க்கு-
  மேலா!*  வியன் துழாய்க் கண்ணியனே,*  - மேலால்-

  விளவின் காய்*  கன்றினால் வீழ்த்தவனே,*  என் தன்-
  அளவு அன்றால்*  யானுடைய அன்பு. (2)