கோவில் திருவாய்மொழி



    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*  அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து*  உன்தன்னைப்- 
    பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்*  குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா*  உன்தன்னோடு- 
    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது*  அறியாத பிள்ளைகளோம் அன்பினால்*  உன்தன்னைச்- 
    சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே*  இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்.  (2)


      சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து*  உன்- பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்* 
      பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து*  நீ- குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது* 
      இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா*  எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும்*  உன்தன்னோடு- 
      உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*  மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய். (2)      


        வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்*  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி* 
        அங்குப் பறைகொண்ட ஆற்றை*  அணி புதுவைப்- பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன* 
        சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே*  இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்* 
        செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். (2)       


          கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
          மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
          எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
          அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)


            கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்*  கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ,* 
            எழுந்தன மலர்அணைப் பள்ளிகொள் அன்னம்*  ஈன்பணி நனைந்த தம் இருசிறகு உதறி,*
            விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்*  வெள்எயிறுஉறஅதன் விடத்தினுக்கு அனுங்கி,* 
            அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.   


              சுடர்ஒளி பரந்தன சூழ்திசை எல்லாம்*  துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,* 
              படர்ஒளி பசுத்தனன் பனிமதி இவனோ*  பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்,*
              மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற*  வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ,* 
              அடல்ஒளி திகழ்தரு திகிரியந் தடக்கை*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  


                மேட்டுஇள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்*  வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்,* 
                ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்*  இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,*
                வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!*  மாமுனி வேள்வியைக் காத்து,*  அவ பிரதம்- 
                ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே!*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.


                  புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்*  போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,* 
                  கலந்தது குணதிசை கனைகடல் அரவம்*  களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,*
                  அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்*  அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா* 
                  இலங்கையர் கோன் வழிபாடு செய்கோயில்*  எம்பெருமான்!பள்ளி எழுந்து அருளாயே.


                    இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ?*  இறையவர் பதினொரு விடையரும் இவரோ?* 
                    மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?*  மருதரும் வசுக்களும் வந்து வந்துஈண்டி'*
                    புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் * குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்,*
                    அருவரை அனைய நின் கோயில்முன் இவரோ?*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே. 


                      அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ?*  அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?* 
                      இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ?*  எம்பெருமான் உன கோயிலின் வாசல்,*
                      சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க*  இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
                      அந்தரம் பார்இடம் இல்லை மற்றுஇதுவோ?*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.   


                        வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க*  மாநிதி கபிலைஒண் கண்ணாடி முதலா,* 
                        எம்பெருமான் படி மக்கலம் காண்டற்கு*  ஏற்பன ஆயின கொண்டுநன் முனிவர்,*
                        தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ?*  தோன்றினன் இரவியும் துலங்குஒளி பரப்பி,* 
                        அம்பரதலத்தில் நின்று அகல்கின்றது இருள்போய்*  அரங்கத்து அம்மா பள்ளி! எழுந்து அருளாயே.


                          ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
                          கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
                          மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
                          ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  


                            கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
                            துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
                            தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
                            அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)


                              அமலன் ஆதிபிரான்*  அடியார்க்கு  என்னை ஆட்படுத்த-
                              விமலன்,  *விண்ணவர் கோன்  *விரையார் பொழில் வேங்கடவன்,*
                              நிமலன் நின்மலன் நீதி வானவன்* நீள்மதில் அரங்கத்து அம்மான்,* திருக்- 
                              கமல பாதம் வந்து* என்கண்ணிணினுள்ளன ஒக்கின்றதே. (2)


                                கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
                                பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

                                நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
                                அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 



                                  நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
                                  மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

                                  தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
                                  பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*



                                    திரிதந்து ஆகிலும்*  தேவபிரான் உடைக்*
                                    கரிய கோலத்*  திருவுருக் காண்பன் நான்*

                                    பெரிய வண் குருகூர்*  நகர் நம்பிக்கு ஆள்-
                                    உரியனாய்*  அடியேன்*  பெற்ற நன்மையே*



                                      நன்மையால் மிக்க*  நான்மறையாளர்கள்*
                                      புன்மை ஆகக்*  கருதுவர் ஆதலில்*

                                      அன்னையாய் அத்தனாய்*  என்னை ஆண்டிடும்
                                      தன்மையான்*  சடகோபன் என் நம்பியே  

                                       



                                        நம்பினேன்*  பிறர் நன்பொருள் தன்னையும்*
                                        நம்பினேன்*  மடவாரையும் முன் எலாம்*
                                        செம்பொன் மாடத்*  திருக் குருகூர் நம்பிக்கு
                                        அன்பனாய்*  அடியேன்*  சதிர்த்தேன் இன்றே


                                          இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்*
                                          நின்று தன் புகழ் ஏத்த அருளினான் *
                                          குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி *
                                          என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.


                                            கண்டு கொண்டு என்னைக்*  காரிமாறப் பிரான் *
                                            பண்டை வல் வினை*  பாற்றி அருளினான்*
                                            எண் திசையும்*  அறிய இயம்புகேன்* 
                                            ஒண் தமிழ்ச்*  சடகோபன் அருளையே


                                              அருள் கொண்டாடும்*  அடியவர் இன்புற*
                                              அருளினான்*  அவ் அரு மறையின் பொருள்*
                                              அருள்கொண்டு*  ஆயிரம் இன் தமிழ் பாடினான்* 
                                              அருள் கண்டீர்*  இவ் உலகினில் மிக்கதே


                                                மிக்க வேதியர்*  வேதத்தின் உட்பொருள்*
                                                நிற்கப் பாடி*  என் நெஞ்சுள் நிறுத்தினான்*
                                                தக்க சீர்ச்*  சடகோபன் என் நம்பிக்கு*  ஆட்- 
                                                புக்க காதல்*  அடிமைப் பயன் அன்றே?


                                                  பயனன்று ஆகிலும்*  பாங்கலர் ஆகிலும்* 
                                                  செயல் நன்றாகத்  *திருத்திப் பணிகொள்வான்,*
                                                  குயில் நின்றார் பொழில் சூழ்  *குரு கூர்நம்பி,* 
                                                  முயல்கின்றேன்  *உன்தன் மொய்கழற்கு அன்பையே.  (2) 


                                                    அன்பன் தன்னை*  அடைந்தவர்கட்கு எல்லாம் 
                                                    அன்பன்*  தென் குருகூர்*  நகர் நம்பிக்கு*
                                                    அன்பனாய்*  மதுரகவி சொன்ன சொல் 
                                                    நம்புவார் பதி*  வைகுந்தம்*  காண்மினே   (2)