விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பாலகன் என்று*  பரிபவம் செய்யேல்*  பண்டு ஓர் நாள்
  ஆலின் இலை வளர்ந்த*  சிறுக்கன் அவன் இவன்*
  மேல் எழப் பாய்ந்து*  பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்*
  மாலை மதியாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாலகன் என்று - ‘இவனொரு சிறுபயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல் - திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள் - முன்பொரு காலத்திலே
ஆலின் இலை - ஆலந்தளிரிலே
வளர்ந்த - கண்வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப்படுகிற

விளக்க உரை

உரை:1

சந்திரா! ஓயாமல் உன்னை அழைக்கச் செய்தேயும் நீ வாராமையினால் இவனொரு சிறுபிள்ளை தானே இவனுக்காக ஓடிவரவேணுமோ என்று அலட்சியமாக நினைக்கிறாய் என்பது தெரிகின்றது; இவனைச் சிறியவன் என்று நீ குறைவாக நினைக்கலாகாது; இவன் முன்னொரு காலத்தில் உலகங்களை எல்லாம் பிரளயங்கொள்ளாதபடி வயிற்றிலே வைத்துக் கொண்டு சிறு பசுங்குழந்தையாய் இருந்தவன்காண்; இப்படிப்பட்ட இவனை நீ அலட்சியஞ் செய்தால் இவன் உன்மேற் கோபங்கொண்டு பாய்ந்தெழுந்து உன்னைப் பிடித்துக்கொள்ளவுங் கூடும்; ஆகையால் இவனை அவமதியாமல் உடனே விரைந்தோடி வா என்கிறாள். பாலகன். பரிபவம் - வடசொற்கள். “பிடித்துக் கொள்வன்” “வெகுள்வன்” எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து பிடித்துக்கொள்ளும் என்றும் வெகுளும் என்றும் செய்யு மென்முற்று வந்தன.

உரை:2

பௌர்ணமி நாளில் பூத்திருக்கின்ற பூரண நிலவே! என்மகனை சிறிய மழலைதானே என்று எளிமையாய் எண்ணிவிடாதே. முன்னொரு காலத்தில், ஊழிப் பிரளயத்தின் போது, அண்டங்களனைத்தையும் தன் வயிற்றினுள் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, பங்கயப் பாதவிரலை பவள இதழால் சுவைத்துக்கொண்டே பிரளய நீரில் ஆலிலைமேல் சயனத்திருக்கோலத்தில் பாலமுகுந்தனாக மிதந்து வந்த அந்த சிறுவன்தான் இவன். இவனுக்குக் கோபம் வந்துவிட்டால், உன்னை ஒரே பாய்ச்சலில் எட்டிப் பறித்து, எங்கும் அசையவிடாமல் பிடித்துக் கொள்வான். அதற்காக நீ அச்சம் கொள்ளவும் தேவையில்லை; என்மகன் உன்னுடன் அன்பாக விளையாடுவான் அதனால் விரைந்தோடிவா வெண்மதியே!

English Translation

O, Big Moon! Do not think he is a mere child. Then in the past, he swallowed the Universe and slept on a fig leaf, know it. If he gets angry he can easily leap up and catch you. So cast aside your self-esteem and come on your own accord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்