திவ்யதேச பாசுரங்கள்

  3475.   
  வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
  புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
  வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
  பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)

      விளக்கம்  


  • பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்ப பேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றான். கீழ்த்; திருவாய்மொழியில் இவள் சங்குசக்கரங்களென்று கைகூப்பும் என்று திருவாழி திருச்சங்கிலே பாவபந்த் காட்டினபடியாலும், தாமரைக்கண்ணெற்றே தளரும் என்று தாமரைக் கண்களிலே யீடுபாடு காட்டினபடியாலும் அந்த திவ்யாயுதங்களை ஏந்திக்கொண்டு வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந (ஸ்ரீரங்கராஜஸ்தவம். 2—59) என்றும் வன்காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காலகமலத் தடம்போல பொலிந்தன—எம்பிரான தடங்கண்களே என்றும் பேசலாம்படியாக திருக்கண்ணழகுடனே வந்து உள்ளே காட்சி தந்தனன்போலும்; அது முதலடியில் பேசப்படுகிறது. கீழே முகில் வண்ணனென்று ப்ரஸ்தாவித்தான்; அது முதலடியில் பேசப்படுகிறது. கீழே முகில் வண்ணதென்று ப்ரஸ்தாவித்தான்: அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையுடைத்தான சங்கையும், ஒரு விசேஷணமிட்டுச்சொல்லவேண்டாத படியான அழகையுடைத்தான திருவாழியையு மேந்திக்கொண்டு தாமரைக் கண்கள் பிறழவந்து பெரியதிருவடி திருந்தோளிலே யேறிச் சாரிகை வந்து என்னெஞ்சினுள்ளே யுலாவுகிறபடியைக் காணுங்கோளென்கிறாள். என்சொல்லிச் சொல்லுசேன்-என்ன பாசுரமிட்டு எத்தைச் சொல்லுவது என்கை. உங்கள் கண்ணுக்கு இலக்காகாதாப்போலே என் வாக்குக்கும் இலக்காகிறதில்லையே! என்கிறாள். “புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்” என்று பேசியாயிற்றே; இன்னமும் பேசவேண்டியது என்ன இருக்கிறதென்னில்; அதைப்பற்றி ஒரு மஹபாரதம் பேசவேண்டாவோ? அது மாட்டுகிறிலே னென்கிறாள். இனித் தான் செய்ய நினைத்த காரியத்தைப் பின்னடிகளிலே கூறுகின்றாள். வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழாவிளையாட்டொலியும் நிரந்தரமாகச் செல்லாநிற்கிற திருப்பேரையிலே சென்று சேர்வதே என்னுடைய பணியென்கிறாள். ‘வெள்ளச்சுக்கமவன்’ வெள்ளைச் சுகமவன்’ என்று இருவகையான பாடங்களையும் ஆசிரியர் திருவுள்ளம்பற்றுகிறார். முந்தின பாடத்தில் சுக வெள்ளத்தை யுடையவன் என்று பொருள். ஆனந்தவெள்ளத்தைத் தானுடையவன். (அல்லது) அதைஎனக்கு அளித்தவன் என்க. பிந்தின பாடத்தில் வெள்ளை யென்றது-மறுவற்ற என்றபடி. துன்பங் கலசாத இன்பமாயிப்பவனென்றவாறு. பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறா என்றது இத்திருப்பதிக்குச் சிறப்பான தொரு விசேஷணம். சிறுபிள்ளைகள திரண்டு விளையாடுவதென்பது எங்குமுண்டு; இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோயில் திருமுன்பேயாயிருக்கும். எம்பெருமான் தானும் அந்த விளையாட்டின் சுவையைக்காண ஆசைப்பட்டானாம்: எதிரே பெரியதிருவடி ஸன்னிதியிருந்து இடைச்சுவராயிருந்தபடியாலே அந்த விளையாட்டைக்காண மறைவாயிருக்கிறதே யென்று வருந்தி ‘கருடா! அப்பால் போ’ என்று பெருமாள் வெறுத்துரைத்தாராம். இந்த நிலைமை நாளைக்குங் காணலாம். இந்த திவ்ய தேசத்தில் திருநாமத்தைப் பற்றினவொரு ஆராய்ச்சி;- இப்பதிகத்தில் பாட்டுத்தோறும் தென் திருப்பேரை என்றே பல புத்தங்களிற பதிப்பித்திருக்கக் காண்கிறோம். இத்தலத்தின் ஒன்பதாவது பாட்டில் ஏர்வளவொண் கழனிப்பழனத் தென் திருப்பேரெயில் மாநகரே என்றிருப்பதும், அங்கு வியாக்கியானங்களில் “திருப்பேரெயிலாகிற மாநகரிலே” என்று வ்யத்தமாக அருளிச் செய்யப்பட்டிருப்பதும் காணத்தக்கது. அன்றியும், ஐந்து ஆறு ஏழாம் பாட்டுக்களில் பேரெயிற்கே’ மூலம் அமைந்திருக்கின்றது. இவ்விடங்களில் பேரையிற்கே’ என்றே பலரும் பதிப்பித்துள்ளார்களானாலும் அது பொருந்துமாவென்று விமர்ச்சிக்கவேணும். பேரை என்று தலத்தின் திருநாமமாய்விட்டால் அதனோடு வேற்றுமை யுருபுசேர்ந்தால் ‘பேரைக்கு என்றாகுமேயல்லது இன்சாரியை வந்து பேரையிற்கு என்றாகாது, ஐகாரவீற்றதான சொல்லின் பக்கத்தில் இன்சாரியை வருவதில்லை. நங்கை + கு நாரைக்கு, வாழை + கு, வாழைக்கு என்றிப்படி வருவதுண்டேயல்லது ‘நங்கையிற்கு நாரையிற்கு வாழை மென்று தோன்றவில்லை,பேரெயிற்கு என்றே ஆழ்வார் திருவாக்கில் திருவவததாக வழங்கி வருமதிலும் குற்றமில்லை. நாங்சுரை நாங்கை யென்றும், தஞ்சாவூரைத் தஞ்சை யென்றும், குடமூக்கூரைக் குடந்தையென்றும், அழுந்தூரை அழுந்தை யென்றும், நெல்வேலியை நெல்லை யென்றும் அயிந்திரபுரத்தை அயிந்தையென்றும் இங்ஙனே ஐகாரவீற்றதாக்கி வழங்கிவரும் முறைமையுண்டாதலா திருப்பேரெயிலுலீரைத் திருப்பேரையென வழங்கிவந்தது ஒக்கும். நூற்றெட்டுதிருப்பதி யந்தாதியிலும் ஈடு முதலிய வியாக்கியானங்களிலும் திருப்பேரை யென்று காண்பதில் குற்றமொன்றும் மில்லாதையினாலே திருத்தம் வேண்டா. திருவாய்மொழி மூலத்தில் மாத்திரம் பாசுரந்தோறும் ‘பேரெயில்’ என்பதே சுத்த பாடம். பேரை யென்றில்லை.


  3476.   
  நானக் கருங்குழல் தோழிமீர்காள்!* அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,* 
  நான்இத் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்*  என்வசம் அன்றுஇதுஇராப்பகல்போய்,* 
  தேன்மொய்த்த பூம்பொழில் தண்பணைசூழ்*  தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,* 
  வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன்*  செங்கனி வாயின் திறத்ததுவே.

      விளக்கம்  


  • தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாள் கீழ்ப்பாட்டில் அவ்வளவிலே இத்தலைமகளுக்கு ஹிதஞ் சொல்லுகைக்காகத் தாய்மாரும் தோழிமாரும் அயற் சோரியுள்ளாருமாகத் திரண்டு வந்து சேர்ந்து நிற்க, உங்களுடைய ஹிதவார்த்தைகளைக் கேட்க அவகாசமில்லாதபடி. மகரநெடுங்குழைக்காதன் பக்கலிலே அவகாஹித்த என்னெஞ்சைமீட்கமாட்டுகின்றிலேன் காண்மின் என்கிறாள். நானக்கருங்குழலென்கிற அடைமொழி தோழிமார்களிடத்துப்போல அன்னையர்களிடத்தும் அயற் சேரியங்களிடத்தும் அந்வயிக்கக்கூடவது. நானம்-ஸூகந்த த்ரவ்யங்களாலுண்டான பரிமளம். அது பொருந்திய கருங்குழலையுடையீர்கள்! என் விளித்து அவர்களைப் பழிக்கிறபடியாம். நான் எம்பெருமானைப் பிரிந்து தலை சருகாய் வாடி வருந்திநிற்க. நீங்கள் பூ முடித்து நறுமணங்கமழ வந்து நிற்கின்றீர்களே! இதுவோ தகுதி யென்று பழியிட்டுப் பேசுகிறபடி. இவளோடொத்த இன்பதுன்பங்களையுடையவர்களாயிருக்க ப்ராப்தமாக இவள் வாடிக்கிடக்கிற நிலைமையிலே அவர்கள் பூச்சூடி நறுமணங்கமழவந்து. நிற்பது ஸம்பாவிதமோ வென்று இங்கே ஒரு சங்கை தோன்றக்கூடும். இந்த சங்கையை நம்பிள்ளை தாமே எடுத்துக்கொண்டு இரண்டுபடியாகக் பரிஹார மருளிச் செய்கிறார் காண்மின்;- (ஈட்டு ஸ்ரீஸூக்தி ) “ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ என்று இவளுடைய ஸூகதுக்ங்களே தங்களுக்கும் ஸூகதுக்கமாம் படியிருக்கையிறே தோழிமாராகையாவது; இவள் மயிர்முடி பேணாதே பரிமளம் காணில் முடியும்படியாயிருக்க இவர்கள் குழல் பேணிப் பரிமளங்கொண்டு காரியங் கொள்ளப்போகுமோவென்னில்; கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்க சாத்திக்கழிந்தபடியே ஸர்வ ஸவதானம் பண்ணுவது இவர்களுக்கே; அப்போது அவன் பண்ணின ப்ரஸாதாதிசயத்தாலே அது சருகானாலும் அவர்கள் மாறாதே வைத்துகொண்டிருப்பர்களே, அது இவளுக்கு ஸ்மாரகமாய் நலிகிறடி அன்றிக்கே இவர்கள் தாம் பரிமறங்கொண்டு காரியங் கொள்ளவும் வல்லவர்கள்: அதாவது தாங்கள் தளர்ந்து காட்டில் இவள் மிகவும் தளருமென்று ஒப்பித்துக்கொண்டிருப்பர்கள். தந்தாமுடைய பொறாமையும் பாரார்களாயிற்று இவளை, உஜ்ஜீவிப்பிக்கைக்காகஞ். பெருமாளிலும் க்லேசம் விஞ்சியிருக்கச் செய்தே பெருமாளுடைய ரக்ஷ்ணத்துக்காக இளைய பெருமாள் தம்மைப் பேணிக்கொண்டு தரித்திருந்தாப்போலே.” இத்யாதி. நான் இத்தனி நெஞ்சம் காக்கமாட்டேன்-உங்களுடைய ஹித வசனத்தை நான கேட்கமாட்டேனென்பது இதனாலே காண்மின்; என்சொற் கேளாதே என்னை விட்டசென்று திரிகிற எனது நெஞ்சை நான் மீட்கமுடிந்தாலன்றோ உங்கள் ஹிதவசனங்கேட்கலாவது. ‘உனக்கம் நமக்கும் இனி உறவில்லை’ என்று ஸம்ந்ஙயஸித்து நெஞ்சு போகாநிற்க, என்ன பரிகாரங்கொண்டு நான் உங்கள் ஹிதவசனங் கேட்பது? என்கிறாள். இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்தி; -“ஸம்ஸாரிகள் சப்தாதி விஷயங்களில் நின்றும் மீளமாட்டாதாப்போலேயிறே இவர் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டாதபடி. நெஞ்சம் காக்கமாட்டே னென்று சொல்லிவிடுவது ஒரு வார்த்தையோ? விதேயமான நெஞ்சை வசப்படுத்திக்கொள்ள முயலவேண்டாவோ வென்ன, என் வசமன்ற இது என்கிறாள். நெஞ்சுக்கு நான் வசப்பட்டிருக்க வேண்டியதாயிற்றே யல்லது எனக்;கு நெஞ்சு வசப்பட்டிருப்பதென்பதில்லை யென்றபடி.


  3477.   
  செங்கனி வாயின் திறத்ததாயும்*  செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்,* 
  சங்கொடு சக்கரம் கண்டுஉகந்தும்*  தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்,*
  திங்களும் நாளும் விழாஅறாத*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
  நங்கள்பிரானுக்குஎன் நெஞ்சம் தோழீ!* நாணும் நிறையும் இழந்ததுவே.     

      விளக்கம்  


  • நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத்திலீந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி. கீழ்பாட்டில் “தோழிமீர்கள் அன்னையர்காள் அயற் சேரியீர்காள்” என்று எல்லாரையும் விளித்துக்கூறியவள இப்பாட்டில் தோழியைமாத்திரம் விளித்துக் கூறுகையாலே. மற்ற பேர்களெல்லாரும் இவளைத் திருத்த நம்மாலாகாதென்று கைவாங்கி அப்பால் போய்விட்டார்களென்பது தெரிகின்றது. தோழி அங்ஙனே போகமாட்டாதவளாகையாலே உடனிருந்து ஹிதஞ் சொல்லவே, அவளுக்கு மறுமாற்ற முரைக்கிறபடி. செங்கனிவாய், திருவடி, சங்கு சக்கரம், திருக்கண் ஆகிற நான்கிலே நெஞ்சு அகப்பட்டமை மன்னடிகளிற் கூறப்படுகிறது. செங்கனிவாய் முதலான நான்கையும் சேரக்சொல்லி இவற்றிலே யென்னெஞ்சு ஈடபட்டது என்னாதே செங்கனிவாயின் திறத்ததாயும் என்று ஒரு வாக்கியமாகவும் இங்ஙனே பல வாக்கியங்களாகச் சொன்னது என்னென்னில்; “தோள் கண்டாள் தோளகண்டார் தொடுகழற்கமல மன்ன தாள்கண்டார் தடக்கை கண்டாருமஃதே” என்றாற்போல ஆழ்வார் தருவுள்ளமானது தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொர அவயவந்தன்னிலும் தனித்தனி வடிவுகொண்டு ஒவ்வொரு அவயவந்தன்னிலும் தனித்தனியே சுழியாபரியென்பானொருத்தன் ஒரு ஸூக்ருதமடியாக ஐம்பது வடிவு கொண்டானிறே; அவ்வளவல்லவிறே இவள் கலந்த விஷயம் பண்ண வல்லது. அவன் வ்யக்திதோலும் பரிஸமாப்ய வர்த்திக்கமாபோலேயாயிற்று இதுவும் அவயங்கள் தோறும் தனித்தனி அகப்பட வல்லபடி.” ஸௌபரி விருத்தாந்தம்:-ஸௌபரி என்கிற ஒரு மாமுனிவன் நீர்நிலையிலிருந்து கொண்டு தவம் புரியா நின்றவளவில் அங்கு மீன்களெல்லாம் கூடிக்களித்து விளையாடா நின்றமையைக் கண்ணுற்று ‘நாமும் இப்படி குடும்ப வாழ்க்கையிற் கூடி நின்று சிற்றின்பம் நுகர்ந்து களிக்கவேணும்’ என்று ஆவல் கொண்டு மாந்தாதா என்னும் அரசனுக்குப் பல பெண்கள் இருப்பதாக உணர்ந்து அவனிடம் சென்று தனக்குக் கன்னிகாதானஞ் செய்யுமாறு வேண்ட, அரசன் இவருடைய கிழத்தனத்தையும் குரூபத்தையுங் கண்டு இசையகில்லமால் பெண் கொடுக்க முடியாதென்று நம் வாயாற் சொன்னால் முனிவர் முனித்து சபித்துவிடக்கூடும்; பெண்களிருக்கு மிடத்தற்கு இவரை அனுப்புவோம்; இவரைக் கண்டு பெண்கள் காமுற்றார்களாகில் விவாஹம் செய்து கொள்ளட்டும்; இல்லையாகில் அவர்களே மறுத்துவிடட்டும்; நம்தலையில் பழி வேண்டா’ என்றெண்ணி முனிவரைப் பெண்களிருக்குமிடனுப்ப முனிவர் அங்குச் செல்லுமபோதே தமது தவ வலிமையால் திவ்ய ஸூந்தரமான ரூபத்தை ஏன்றுகொண்டு போய் அவர்கள் முன்னே நின்றவளவில் அங்கிருந்த ஐம்பது பெண்களும் நானே இவரை மணந்துகொள்வேன் நானே இவரை மணந்துகொள்வேன்’ என்று போட்டி போட்டுக்கொண்டு மேல்விழுந்தவாறே. முனிவர் அத்தனை பெண்களையம மணந்துகொள்ள் விரும்பிச் தமது தவவலிமையால் ஐம்பது வடிவமெடுத்து அப்பெண்களநைவரையும் விவாஹம் செய்து கொண்டு மகிழ்ந்திருந்தாரென்று புராணங்களில் இதிஹாஸம். ஆழ்வார் திருவுள்ளம் முதலிலே செங்கனி வாயில் ஈடுபட்டதாம்; ‘நங்காய்! நான் உன்னோடு கூடியிருநதாலென்ன? பிரிந்திருந்தாலென்ன? நான் உன் சரக்கனறோ’ என்று சொல்லத் தொடங்கி தழதழத்து வருகிற திருவாயிலே முந்துற முன்னம் அகப்பட்டதாயி;ற்று. அனந்தரம், பிரிவை ப்ரஸங்கித்துப் பேரநின்ற போது அதிராஜ்ஸூசகமாய் உபயவிபூதிநாத்னென்று தோற்றும்படியிருக்கிற திருவபிஷேகத்தைக்கண்டு தரைப்பட்டதாயிற்று பின்னை இன்னாரென்றறியேன் அன்னேயாழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை யின்னாரென்றாறியேன் என்று மதியமடக்கவரல்ல திருவாழிதிருச்சங்குகளி னழகிலே மூண்;டது. பெருங்கேழ (திருவித்தம்) என்னும்படி தம்மை இவ்வளவும் ஈடுபடுத்திக்கொண்டது திருக்கண்களே யென்றறிந்து அந்தத் தாமரைக்கண்களுக்கு அநந்யார்ஹமாயிற்று. திங்களும் நாளும் விழாவறாத-நித்யோத்ஸவ பகூஷாத்ஸவ மாஸோத்ஸவ ஸம்வத் ஸரோத்ஸவங்களென்று திவ்யதேசங்களிலே நடைபெறும் உத்ஸங்களுக்கு எல்லையில்லையே; அப்படிப்பட்ட உத்ஸவங்கள் அங்கே குறையற்றுச் செல்லாநிற்க அங்கே வாழ்வதைவிட்டு இங்கே துயரற்றிருக்குமோ என்னெஞ்சு என்கிறாள். “வீற்றிருந்த நாங்கள் பிரானுக்கு” என்கிற சொற்சேர்த்தியழகைத திருவுள்ளம்பற்றி நம்பி;ள்ளை யருளிச்செய்வது பாரீர்;-“இவ்விருப்பு நமக்காக்கொண்டிருக்கிற உபகாரகனுக்கு. இவ்விருப்பு பாபம் பண்ணின ஸம்ஸாரிகளுக்காகவின்றே.’


  3478.   
  இழந்த எம்மாமைத் திறத்துப் போன*  என்நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்,* 
  உழந்து இனியாரைக் கொண்டுஎன்உசாகோ?*  ஓதக் கடல்ஒலி போல*  எங்கும்
  எழுந்தநல் வேதத்துஒலி நின்றுஓங்கு*  தென்திருப்பேரெயில் வீற்றிருந்த,* 
  முழங்கு சங்கக்கையன் மாயத்துஆழ்ந்தேன்*  அன்னையர்காள் என்னை என்முனிந்தே?

      விளக்கம்  


  • தனது நெஞ்சு அங்கே போனதற்கு ஒரு காரணஞ் சொல்லுகிறாள் முதலடியில். கொங்கலர் தண்ணந்தழாய் முடியானுக்கு என் நங்கையிழந்தது மாமைநிறமே என்று ஏற்கனவே என் தாய் வருந்திக்கிடந்தா ஒன்றோ. இழந்த அந்த மாமை நிறத்தை நான மீட்டுக் கொணர்கிறேன் காண்மின் என்று சொல்லிப் போன நெஞ்சானது தானும் அங்கே கையொழிந்து நின்றது. எம்பெரமானிடத்திலுள்ளதை நாம கொள்ளை கொள்ளவேணுமேயல்லது நம்மிடத்திலுள்ளதொன்றை அவன் கொள்ளை கொள்ளுகையாவதென்? இதோ நான் போய் அதைக் கவர்ந்து வருகிறேன் காண்மின்’ என்று வீரவாதஞ் செய்துபோன் என்னெஞ்சு என்ன காரணமோ! அங்கே தகர்ப்புண்டது என்கிறாள். நெஞ்சு என்ன வேண்டுமிடத்து நெஞ்சினார் என்று உயர்வாகக் கூறியது பகவத் விஷயத்தில் யீடுபட்ட அதியசத்தைப் பற்ற. அன்னஞ் செல்வீரும்ஞ்ஞ். கண்ணன் வைகுந்தனோடு என்னெஞ்சிரைக் கண்டால் அவரிடை நீரின்னஞ் செல்லீரோ இதுவோ தகவென்றிசைமின்களே என்ற திருவிருத்தப் பாசுரம் இங்கே நினைக்கத்தக்கது. இழந்த மாமை நிறத்தை மீட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லி நெஞ்சு போயிற்று என்கிறவிதற்கு ஒரு கருத்துச் சொல்லவேணுமே; என் சொல்லலாயும் கவர்ந்தான்காணும் என்பதே இங்குச் கருத்து. உழந்தினியாரைக்கொண்டு என் உசாகோ?-நெஞ்சு நம்மோடே யிருந்தாலன்றோ யாரோடாவது எதையாவது பேசிப் போதுபோக்கலாம். நெஞ்சு பறியுண்டார்க்குக் காலசேஷபம் பண்ண விரகுண்டோ வென்கிறாள். உழந்து என்றது வருந்தியென்றபடி. சிரமப்பட்டாகிலும் எவரோடேயிழந்த பின்பு இனி துக்கப்பட்டு ஆரோடே கூட எத்தைச் சொல்லி நான் காலம் போக்குவதென்கிறாள்;. அசோகவனத்திலே பிராட்டிக்கு த்ரிஜடை ஸரமை என்கிறாலும் சிலர் உசாத்துணையாயினர்; எனக்காவார் இந்நிலத்தில் ஒருத்தருமில்லையே யென்கிறாள். “ஆரைக்கொண்டு என்னுசாகோ” என்றவிடத்து நம்பிள்ளையீடு காண்மின்;- “தேஹாத்மாபிமாநிக ப்ரஹ்மேசாநாதிகளைக் கொண்டு போது போக்கவோ? ஈச்வரோஹ மென்றிருக்கிற ராயிருக்கிற நித்யஸூரிகளைக் கொண்டு போது போக்கவேர் இத்தகையை உரிசூறை கொண்டுபோனவனைக் கொண்டு போதுபோக்கவோ? ஆரைக்கொண்டு எத்தை யுசாவுவது?” தன்னுடைய காலசேஷபமிருக்கும்படியைச் சொல்லுகிறாள் ஒதக்கடலொலி யென்று தொங்கி ஒதங்கிளர்ந்த கடல்போலே யிருந்துள்ள வேதகோஷமானது எங்கும் பரம்பாநின்ற தென்கிருப்பேரெயில் வீற்றிருந்த முழங்குசங்கக் தையனான் எப்பெருமானுடைய ஸ்மித வீஷணுதிகளிலே மீள வொண்ணாதபடி அகப்பட்டேன்; இவை யிருக்கும்படியென்! என்று எப்போதும் நினைந்துருகியிருப்பதே என்னுடைய காலசேஷபம் என்றாருளாயிற்று.


  3479.   
  முனிந்து சகடம் உதைத்து மாயப்  பேய்முலைஉண்டு* மருதுஇடைபோய்,* 
  கனிந்த விளவுக்குக் கன்றுஎறிந்த*  கண்ண பிரானுக்குஎன் பெண்மை தோற்றேன்,*
  முனிந்துஇனி என்செய்தீர் அன்னைமீர்காள்!*  முன்னிஅவன் வந்து வீற்றிருந்த,* 
  கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே*  காலம் பெறஎன்னைக் காட்டுமினே  

      விளக்கம்  


  • தென்திருப்பேரெயிலிலே என்னைக் கடுகக்கொண்டுசென்று சேர்ப்பதே தாய்மார்களான் வுங்களுக்கு உற்றது என்கிறாள். எம்பெருமானுடைய சில சேஷ்டிதங்களிலே தான் ஈடுபட்டமையை யுரைக்கின்றாள் முன்னடிகளில். அஸூரனால் ஆவேசிக்கப்பட்ட சகடத்தைத் தாளை நிமிர்த்துச் சாடியதென்ன; நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லவந்த பூதனையை முடித்ததென்ன, இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்துசென்று செய்த சேஷ்டையென்ன, வத்ஸாஸூரனைக்கொண்டு கபித்தாஸூரனை முடித்ததென்ன ஆக இந்த அபதானங்களிலே நெஞ்சைக் செலுத்திப் பெண்மையை யிழந்த நான் உங்கள் முனிவுக்கு இலக்காகிப் பயனென்கொல்? என்கிறாள். எம்பெருமான் அந்த சேஷ்டிதங்களைச் செய்தது தன்னை யீடுபடுத்திக் கொள்வதற்காகவே யென்றிருக்கிறாள். என் பெண்மை தோற்றேன் என்றது-பெண்கள் நிற்வேண்டிய நிலையிலே நிற்கமுடியாத படியாய்விட்டேன் எனறலாறு. நாண் மடம் அச்சம் பயிர்ப்பு என்னுமிவை நான்கும் பெண்டிர்க்கு உரிய இலக்கணமாதலால் இவை தவிரப் பெற்றே னென்கை. பயிர்ப்பு தவிரப் போகாதாகிலும் மற்ற மூன்றும் தவிர்ந்தமைக்குக் குறையில்லை. அன்னைமீர்காள்! இனி முனிந்து என் செய்தீர்-இனிமேல் என்னை மீட்கலாமென்றோ நீங்கள் நினைக்கின்றது? சகடமுதைத்து முதலான அவனது திவ்ய சேஷ்டிதங்களிலே நான் ஈடுபடுவதற்கு முன்னம் முனிந்தீர்களாகிலும் பயனுண்டாம்; இனி முனிந்து பயனென்? ஆனால் நாங்கள் செய்யவேண்டுவது என்னென்ன; அதற்குச் சொல்லுகிறாள்-முன்னியவன் வந்து வீற்றிருந்த வென்று தொடங்கி. தண்ணீர்க்குச் சொல்லுகிறாள்-முன்னியவன் வந்து வீற்றிருந்த வென்று தொடங்கி. தண்ணீர் பெருகிச்சென்ற பின் அணைகட்டப் பாராதே முந்துற முன்னம் என்னை அத்தலத்திலே கொண்டு சேர்ககப் பாருங்கோ ளென்கிறாள். “அவன் முன்னி வந்து வீற்றிருந்த” என்றும், “என்னைக் முன்னிக் காட்டுமினே” என்றும் அந்வயிக்கலாம். என்னைப் பெறுகைக்கு அவஸரப்ரதீக்ஷ்னாய்க் கொண்டு அவன் முன்னாடி வந்திருக்கு மிடமான’ என்பது முந்தின யோஜநையில் பொருள். நான் முடிவதற்கு முன்னமே என்னைக்கொண்டு சேருங்காளென்பது பிந்தன யோஜனையின் பொருள்.


  3480.   
  காலம் பெறஎன்னைக் காட்டுமின்கள்*  காதல் கடலின் மிகப் பெரிதால்,* 
  நீல முகில்வண்ணத்து எம்பெருமான்*  நிற்கும்முன்னே வந்துஎன் கைக்கும் எய்தான்,*
  ஞாலத்துஅவன் வந்து வீற்றிருந்த*  நான்மறையாளரும் வேள்வி ஓவா,* 
  கோலச் செந்நெற்கள் கவரி வீசும்*  கூடுபுனல் திருப்பேரெயிற்கே.  

      விளக்கம்  


  • ‘காலம்பெற வென்னைக் காட்டுமினே’ என்றாள். அது கேட்டவர்கள் ‘நங்காய்! அவர் இப்போயேன்றோ வேட்டைக் கெழுந்தருளினது; இப்போது நீ பதறிப் பானென்?’ என்று சொல்ல, ஐயோ! எனக்கோ அபிநிலேசம் மீதூர்ந்து செல்லா நின்றது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; வீணாக எதையுஞ் சொல்லிப் போதுபோக்தாதே இப்போதே யென்னைத் தென் திருப்பேரையிலே கொடுபுக்கு மகர நெடுங்குழைக் காதனைக் காட்டி ஸமாதானப்படுத்துங்கோனென்கிறாள். “(காலம்பெற வென்னைக் காட்டுமின்கள்) குடிக்கப் பரிஹாரமன்கிறாகிலும் எனக்குப் பரிஹாரம் இத்தில்லதில்லை” என்பது நம் பிள்ளையீடு. அப்பெருமாளை நான் காலதாமதமின்றிக் காணும்படி செய்யுங்கோளென்றபடி. அதற்குக் காரணம் கூறுகின்றது “காதல் கடலின் மிகப் பெரியதால்” என்று. கீழே ஐந்தாம் பத்தில் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி என்று தனது காதலைக் கடலோடொத்ததாகச் சொன்னாள்; இங்குக் கடவினும் விஞ்சியதாகச் சொல்லுகின்றாள்; மேலே எட்டாம்பாட்டில் என்காதல்-மண்டிணி ஞாலமு மேழ்கடலும நீள்விசும்புங் கழியப் பெரியதால் என்கிறாள்; முடிவில் சூழ்ந்ததனிற் பெரிய என்னல்லா என்று தத்வத்ரயத்தையும் விளாக்குலைகொண்ட காதலென்கிறது. இப்படி கனத்தகாதலையுடைய நான் எங்ஙனே பதறாது ஆறியிருக்கும்படி யென்கிறாள் போலும். நங்காய்! கடலின் மிகப்பெரியதாக வளர்கின்ற காதலை ஒருவாறு அடக்கி அளவுபடுத்த வேண்டாவோ? நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேட்டு எங்களோடே ஒழுகவேண்டாவோ? என்று தாய்மாரும் தோழிமாரும் சொல்ல, ‘நீலமுகில் வண்ணத் தெம்பெருமான் முன்னே வந்து நிற்கும்’ என்கிறார். அழகிய வடிவைக்கொண்டு அவன்முன்னே வந்து நிற்க. காதல் வளருகைக்கு வழியண்டாயிருந்ததே யல்லது அளவு படுகைக்கு வழியுண்டோ? அவன் முன்னேவந்து நின்றிலனாகில் நான் காதலையடக்கி உங்கள் வார்த்தையைக் கேட்க மாட்டேனோ? என்றாள். தங்காய்! நீலமுகில்வண்ணத் தெம்பெருமான் உன்முன்னே வந்து நின்றானாகில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு அவன்பிள்ளை நீ போலாமே, காலம் பெற வென்னைக் காட்டுமின்கள்’ என்று சொல்லுவதென்? என்று தாய் தோழியா கேட்க, என் கைக்கும் எய்தான் என்கிறாள். உருவெளிப்பாடேயல்லது வேறொன்றில்லையே; வார்த்தை சொல்லுதல் அணைத்தல் செய்யாமையேயன்று, என் கைக்கும் எட்டுகிறிலன்; ஆகையால் சொல்லுகிறேனென்றாள். எங்கே கொண்டுபோய்க் காட்டச் சொல்லுகிறாயென்ன. அதற்குப் பின்னடிகளாலே விடை கூறுகின்றாள். வெறும் உருவெளிப்பாடன்றியே கண்ணாலே கண்டநுபவிக்கலாம் திருப்பதிலே போகப்பார்த்தே னென்கிறாள். அவன் ஞாலத்து வந்து வீற்றிருந்த-நெடுஞ்தூரஞ் சென்று காணவேண்டாத பரமபதத்துச் செல்வமெல்லாம் இங்கே தோற்றும்படி வந்து வீற்றிருக்குமிடமன்றோ தென்திருப்பரை. அவ்வளவேயோ? தான்மறையாளரும் வேள்வி ஓவா-வேதவிததுக்களான பரமபாகவதர்களின் ஸமாராதனமும் நிரந்தரமாகச் செல்லுமிடமன்றோ. இவையொன்றுமில்லையாகிலும் திவ்யதேசத்தின் நிலவளமும் நீர்வளமுமே கண்ணாரக கண்டுகொண்டிருக்கப் போதுமேயென்கிறாள் ஈற்றடியால்.


  3481.   
  பேர்எயில் சூழ்கடல் தென்இலங்கை*  செற்றபிரான் வந்து வீற்றிருந்த,* 
  பேரெயிற்கே புக்குஎன்நெஞ்சம் நாடி*  பேர்த்து வரஎங்கும் காண மாட்டேன்,* 
  ஆரை இனிஇங்குஉடையம் தோழீ!* என்நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,* 
  ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?*  என்நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  

      விளக்கம்  


  • நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம். இராவணனைக் கொன்ற விஜயலக்ஷ்மியோடே தென்திருப்பேரையில் யெழுந்தருளியிருக்கிற இருப்பைக் கண்ட நெஞ்சு இன்னமும் மீண்டு வாராது; எனக்கு இங்கொரு துணையுமில்லை. துணையான எனது நெஞ்சை அழைக்க வல்லாருமில்லை; இங்கு ஆரைக்கொண்டு என்ன புருஷார்த்தம் ஸாதிப்பது? இனி என்னெஞ்சு போய்ச் சேர்ந்த தேசத்திலேயே நானும் போய்ச் சேருவதே தகுதி யென்கிறளாயிற்று. ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின;- “அஹஞ்ச அநுதமிஷயாமி லக்ஷ்மணென்ற கதாம்கதிம் என்ற பெருமாளைச் போல இப்பிராட்டியும் என்னெஞ்சு தரிக்கைக்கு விரகு பார்த்துத் திருப்பேரையிலே புக்கார்ப்போலே நானும் அங்கே புகுமத்தனை யென்கிறாள்” என்று. இராமபிரான் பதினோராயிரமாண்டு இவ்விபூதியிலே யெழுந்தருளியிருந்து பிறகு நித்யவிபூதியேறச் செல்ல நினைத்து முன்னம் இளையபெருமாளைப் பிரித்து பின்னை தம்பி போனவழியே நானும் போகிறனென்று உடனெழுந்தருளினதாக ஸ்ரீராமாயணத்திலுள்ள கதை இங்கே அநுஸந்தேயம். தென்னியலங்கை செற்றபிரான் வந்து வீற்றிருந்த என்றது-பெருமாள் விரோதி நிரஸநம் பண்ணின விடாய்தீர இங்கேவந்தார்; அவருடைய விடாய்கெட பார்த்தாரம் பரிஷஸ்ஜே என்றாப்போலே அனைத்து உபசாரங்கள் செய்ய என்னெஞ்சு ஏற்கனவே போயிற்றென்படியாம். இரண்டாமடிக்கு நம்பிள்ளையருளிச் செய்யுமது பாரீர்;- மீள வொண்ணாத லங்கையிலே புக்க திருவடியும் மீண்டுவந்தான்; அணித்தான இவ்வூரிலே புக்க நெஞ்சு மீண்டுவரக் காண்கிறிலேன். நெஞ்சுங்கூட வாராத பின்பு அவன் வாராமை சொல்ல வேண்டாவிறே.” எம்பெருமானுக்குத் தூதுவிட வேண்டியதுபோக, தமது நெஞ்சுக்கே தூது விட வேண்டும்படியான நிலைனையுமுண்டு ஆழ்வார்க்கு; திருவிருத்தில் அன்னஞ் செல்வீரு மென்கிற பாட்டிலே என்னெஞ்சினாரைக் கண்டாலென்னைச் சொல்லி....... இதுவோ தகவென் றிசைமின்களோ என்று நெஞ்சைக் குறித்துத் தூதுவிட்ட படியுமுண்டே; அங்ஙனே இப்போதும் தூதுவிடப்பார்த்து ஆரையினயிங்குடையம் தோழீ இத்யாதி பணித்தபடி. தூது செல்வார் கிடைத்து நெஞ்சு இங்கு மீண்டுவந்தாலும். எப்பெருமானும் இங்கு வந்து சேர்ந்தாலும், இங்கே ஸாதிக்ககூடிய பயன் என்கொல்? நானுண்டாக வேணுமே; இங்கு வெறுத்தரையான்றோ கிடக்கிறது என்கிறாள் ஈற்றடியின் முற்பகுதியினால். ஆகவேநெஞ்சு போனவழியே நானும் போகப் பார்க்கிறேனென்று தலைக்கட்டினாளாயிற்று.


  3482.   
  கண்டதுவே கொண்டுஎல்லாரும் கூடி*  கார்க்கடல் வண்ணனோடு என்திறத்துக் 
  கொண்டு,*  அலர் தூற்றிற்றுஅது முதலாக்*  கொண்டஎன் காதல் உரைக்கில் தோழீ,*
  மண்திணி ஞாலமும் ஏழ்கடலும்*  நீள்விசும்பும் கழியப் பெரிதால்,* 
  தெண்திரை சூழ்ந்துஅவன் வீற்றிருந்த*  தென்திருப்பேரெயில் சேர்வன் சென்றே

      விளக்கம்  


  • ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள். கண்டதுவே கொண்டு என்பதற்கு ‘அப்பெருமானை நான் கண்ணாலே கண்ட மாத்திரத்தையே கொண்டு’ என்று பொருள் தோன்றக்கூடுமானாலும் அதுவன்று பொருள்; வெளியில் காணும் என் செயல்களையே கொண்டு என்று பொருள். அதாவது என்னெஞ்சினுள்ளே ஓடுகின்ற ஆசைப்பெருக்கை ஒருவனங் காணமுடியாதே; நான் வாயாற் சொல்லுகிற சில வார்த்தைகளையும் தொழுவது அழுவதான் சிவபடிகளையுமன்றோ இவ்வுலகர் காண்பது; என்மேனி மேலிந்திருப்பதையும் இவர்கள் காணக்கூடும். ஆக இவர்கள் காணுமிவ்வளவையே கொண்டு என்றவாறு. இந்த ப்ரத்யக்ஷ் பரிகவித நிமித்தங்களாலே எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்த்தியுண்டானதாகக் கூறி உலகர் பழிதூற்றுகின்றார்களே, இப்பழி தூற்றதலே வினைநீராக என் காதல் வளரத் தொடங்கிற்று; அங்ஙனம் வளாந்த காதலானது ஞானமும் கடலும் விசும்பும் ஆகிய இவையெல்லாம் ஏகதேசயென்னும்படி வளர்ந்திட்டது; இப்படிப்பட்ட பசியைக் கொண்டு நான எங்ஙனே ஆறியிருக்கும்படி; தென்திருப்பேரையில் சென்று சேர்ந்தே காதல் தீர அநுபவித்துக் களிப்பேனென்றதாயிற்று.


  3483.   
  சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
  நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
  கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
  ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 

      விளக்கம்  


  • ‘சேர்வன் சென்று’ என்றதையே இங்கு மீண்டும் அநுபாஷித்திருக்கையாலே தோழிமாரும் தாய்மாரும் அதை ஆசேஷபித்துக் கூறினமை புலப்படும் என்னுடையத் தோழிமீர்கள் அன்னையர்காள் என்றது—சேஷபித்துச் சொல்லுகிறபடி. நீங்கள் எனக்குத் தோழிமாராகவும் தாய்மாராகவும் வாய்த்தது அழகிதாயிருந்தது!. இதுவோ நீங்கள் எனக்கு ப்ரியமும் ஹிதமும் பார்ப்பது! என்று சேஷபிக்கிறபடி. என்னைத் தேற்றவேண்டா என்கையாலே அவர்கள் இவளைத்; தேற்றினது தெரிகின்றது; ‘அம்மா! நீ இங்ஙனம் பதறலாகாது, வருந்தலாகாது, அவன் தானே சடக்கென வருவான்காண்; வந்தபோது ஸேவிக்கப்ராப்தமென்றிருப்பதன்றோ தகுதி’ என்றிங்ஙனே பல சொல்லித் தேற்றினார்கள் போலும்; இங்ஙனே தேற்றுதல் வேண்டாவென்கிறாளாயிற்று. நானோ திண்ணிய அத்யவஸாய முடையவள்; என் திறத்தில் அறிவிலிகளான உங்களது பேச்சு பயன்படாதென்றவாறு. இதற்கு நீர்களுரைக்கின்றதென்? என்னுடைய நிலைமை உங்கட்குத் தெரியாமையில்லையே; எப்படிப்பட்ட நிலைமைக்கு எப்படிப்பட்ட வார்த்தை சொல்ல வேணுமென்பதுங்கூட அறியாத நீங்கள் அந்தோ! என் சொல்லுகிறீர்கள்? என்கிறாள். நீங்கள் சொல்லுமதைக் கேட்பதற்கு நெஞ்சு வேணுமே; மநஸ்ஸஹகாரமில்லாதவர்க்கு நீங்கள் பேசி என்ன பயன்? என்னெஞ்சு எங்கே புக்கதோ அங்கே போய்ச் சொல்லுங்கோளென்கிறாள். அம்மா! நெஞ்சு இங்கில்லை யென்கிறாயே, நெஞ்சில்லையாகில் இந்த வார்த்தை தானும் நீ சொல்லமுடியாதன்ளோ; எங்களைக் கண்டித்து நீ வார்த்தை சொல்லும் போதைக்கு நெஞ்சு உடனிருந்துதானே யாகாவேண்டும் என்று அவர்கள் சொல்ல, நிறைவு எனக்கில்லை என்கிறாள். அடக்கம் குடிபோயிற்றென்கை. உங்களொடு பேசுவதற்குரிய நெஞ்சு இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்பதற்குரிய நெஞ்சு வேறு, பேசு கைக்குரிய நெஞ்சு இருந்தாலும் உங்கள் பேச்சுக் கேட்கைக்குரிய நெஞ்சு இல்லை காண்மினென்கிறான் என்றுங்கொள்க. நெஞ்சும் நிறைவும் போனவிடம் சொல்லுகிறது பின்னடிகளில். கார்வண்ணன் என்பதற்து நம்பிள்ளையீடு; “தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாம் வடிவு படைத்தவன்” என்று. அப்பெருமானது திருமேனி நிறத்தில் நான் ஈடுபட்டவளாதலால் உங்கள்பேச்சு கேட்கமாட்டே னென்றவாறு. வெறும் வடிவழகுமாத்திரமே யல்ல; ஆபத்து வந்தால் ரக்ஷித்து விடுமவன் என்கிறது கார்க்கடல் ஞாலமுண்ட என்பதானால். இப்படிப்பட்ட எம்பெருமான் தன் பெருமையெல்லாம் தேற்றவந்து எழுந்தருளியிருக்குமிடமான நீர் நிலவளம் மிக்க திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேனத்தனை; உங்கள் தடைக்கு மீளமாட்டேன், அவ்வழியிலும் நிற்கமாட்டேன் என்றாளாயிற்று.


  3484.   
  நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்*  நாண்எனக்கு இல்லைஎன் தோழி மீர்காள்,* 
  சிகர மணிநெடு மாடம் நீடு*  தென்திருப் பேரெயில் வீற்றிருந்த,*
  மகர நெடுங்குழைக் காதன் மாயன்*  நூற்றுவரை அன்று மங்க நூற்ற,* 
  நிகர்இல் முகில்வண்ணன் நேமியான்*  என்  நெஞ்சம் கவர்ந்துஎனை ஊழியானே?     

      விளக்கம்  


  • சென்று சேர்வேன், சென்று சேர்வேனென்று பலகாலுஞ் சொன்ன பராங்குச நாயகியை நோக்கி ‘அம்மா! நீயே சென்று சேர்ந்தாயாகில் ஊரும் நாடும் மற்றுமெல்லாரும் உன்னைப் பழி சொல்லாரோ’ என்று தோழிமார் சொல்ல, ‘அப்படி பழி சொல்லுவாரையன்றோ நான் தேடுகிறது’ என்று இவள் சொல்ல ‘பழி சொன்னால் உனக்கு லஜ்ஜையாகாதோ?” என்று பின்னையும் தோழிமார் கேட்க, அவனுடைய அழகினாலும் ஆச்சர்ய திவ்ய சேஷ்டிதங்களாலும் என்னுடைய நெஞ்சும் லஜ்ஜையும் அவஹரிக்கப்பட்டு எத்தனையோ காலமாயிற்யே!, ஆதலால் இனித் தென்திருப்பேரையிலே நானே போகத் தடையென்? என்கிறாள். நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்-என்பதற்கு நகரம் முதலான விடங்களிலே சென்று எம்பெருமானைத் தேடுவேன் என்று பொருள்படவுங்ட கூடும்; அதுவன்று பொருள். “படை வீட்டிலும் நாட்டிலும் பத்தநாதிகளிலும் பழி சொல்லுவாரைத் தேடுவேன்” என்பது பூருவர்களின் வியாக்கியானம். எம்பெருமானை நான் தேடுகிறேனல்லேன், பழி சொல்லுவாரையே தேடுகிறேனென்கிறாள். அதாவதென்னென்னில்; பழி சொல்லுகிறவர்கள் அவனையும் இவளையும் சேர்த்தன்றோ பழி சொல்லுவது; அதுதானே இவளுக்கும் பரமபோக்யமென்று காட்டினபடி. அவனோடு எனக்குச் சேர்த்தியில்லையேயாகிலும் பழிசொல்லுவாருடைய கருத்தாலேயாகிலும் சேர்த்தி நேர்கின்றதே, அதுவேயெனக்கு உவப்பு என்கிறாள் போலும் பழிக்கு அஞ்சவேண்டியிருக்க, பழி சொல்லுவாரைத் தேடுகிறேனென்கிறவிது ஸ்த்ரீத்வ லகூணத்திற்குப் பொருந்துமோ வென்ன, நாணெனக்கில்லை யென்கிறாள். அப்படியா? இந்தநிலைமை எப்போது முதற்கொண்டு? என்றார்கள்; அதற்கு விடையளிக்கிறாள் மேல் மூன்றடிகளால். மகர நெடுங்குழைக் காத னென்று இத்தலத்தெம்பெருமான் திருநாமம். மகராயத கர்ணபாச: என்று வடமொழி வழக்கு இங்கே ஒரு சிறிய ஆராய்ச்சி; மகரநெடுங்குழைக்காதன் என்று ஆழ்வாரருளிச் செய்ததனால் அத்திருநாமம் வழங்கலாயிற்றா? அல்லது, ஏற்கனவே வழக்கத்திலிருந்த திருநாமத்தை ஆழ்வார் எடுத்துரைத்தாரா? என்று சிலர் கேட்பதுண்டு. இரண்டுபடியும் ஸம்பாவிதமேயென்பர்; பெரியயேரர். இந்த விசாரம் இத்தலத்தெம்பெருமான் திறத்தில் மாத்திரம் செய்வதென்று. மற்றும் :பலதலத் தெம்பெருமான்களின் திருநாமங்களும் அருளிச் செயலிலுள்ளபடியே வழங்கி வருகின்றன எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று; திருமோகூரில் தடாகத்தைத் தாளதாமரையென்றும், வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரையென்றும், அவ்விடத்துச் சோலையொன்றைப் தேனமாம்பொழி லென்றும், திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும், திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும் இங்ஙனேயுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும். ஆழ்வார் திருவாக்குக்களை மூலமாகக் கொண்டே இவ்வழக்குகள் தோன்றின வென்னலாம். “நூற்றுவரையன்று மங்கநூற்ற” என்ற சொற்சேர்த்தியை நோக்கி இங்கு நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர்-“துர்யோதநாதிகளை வெல்ல எண்ணினாற்போலே என்னெஞ்சை அபஹரிக்கைக்கு எத்தனை காலமெண்ணினானே?”


  3485.   
  ஊழிதோறுஊழி உருவும் பேரும்  செய்கையும்*  வேறவன் வையம் காக்கும்,* 
  ஆழிநீர் வண்ணனை அச்சுதனை*  அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
  கேழில் அந்தாதி ஓர்ஆயிரத்துள்*  இவை திருப்பேரெயில் மேய பத்தும்,* 
  ஆழிஅங்கையனை ஏத்த வல்லார்*  அவர்அடிமைத் திறத்து ஆழியாரே.  (2)

      விளக்கம்  


  • இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். எம்பெருமானுக்கு ஸ்வத: நாமம் ரூபம் ஒன்றுமில்லையாயினும் ஆச்ரிதர்க்காக அவற்றைப் பரிக்ர ஹிப்பதுண்டே; அங்ஙனம் பரிக்ரஹிப்பதுதான் ஒவ்வொரு யுகத்திலே ஒவ்வொரு வகையாயிருக்கும். யுகந்தோறும் ஆச்ரித ரக்ஷ்ணத்துக் கீடான ரூபநாம சேஷ்டைகளை வெவ்வேறெயுடையனாய்க் கொண்டு ஜகத்தை ரக்ஷிக்குமவனான ஆழி நீர்வண்ணனை யச்சுதனைப் பற்றி ஆழ்வார் ரருளிச்செய்த ஒப்பிலாத ஆயிரத்தினுள் இவை பத்தையுங் கொண்டு ஸர்வச்வரனைத் துதிக்க வல்லவர்கள் நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தில் அபிஷிக்ராவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று. வியாக்கியானங்க ளெல்லாவற்றையும் ஊன்றி நோக்குமிடத்து மூன்றாமடியில் ‘மேயபத்தால்” என்கிற பாடம் சிறக்குமென்று தோன்றுகிறது. “அடிமைத் திறத்து ஆழியாரே” என்பதற்கு இரண்டு வகையான பொருள் கூறுவர்; ஆழியார்-ஆழ்ந்தவர்கள். (அல்லது) திருவாழியாழ்வானைப் போன்றவர்கள். கருதுமிடம் பொருது—கைவந்த சக்கரத்தன். என்கிறபடியே திருவாழியாழ்வான் எம்பெருமான் திருவுள்ளம் பற்றுமிடமெங்குஞ் சென்று பணிசெய்து வருமா போலே விடுத்ததிசக் கருமந் திருத்துமவர்கள் என்றபடி.