திவ்யதேச பாசுரங்கள்

  3684.   
  பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
  கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 
  தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
  தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  

      விளக்கம்  


  • நின் கோயில் சீய்த்து–திவ்ய தேசங்களிலே பண்ணுங் கைங்கரியங்களில் தலையானது இது. *வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே* என்று மேலுமருளிச் செய்வர். திருவலகிடுதல் மெழுகுதல் கோலமிடுதல் முதலிய செய்கைக்குக் கோயில் சீய்க்கை யென்று பெயர். இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கையாண்டானிதிஹாஸ் மொன்றுளது; அவரைப் பற்றி ஸ்ரீவசநபூஷணத்தில் "திருக்கண்ண மங்கையாண்டான ஸ்வவ்யாபாரத்தை விட்டான்" என்றருளிச் செய்யப் பட்டிருக்கின்றதன்றோ. அப்படிப்பட்டவவர் அவ்வூரில் ஒரு மகிழ மரத்தடியிலேயிருந்து திருவலகிடா நிற்கையில் உண்மையுணர்ச்சியற்ற வொருவன் 'எம்பெருமானே உபாயமென்றிருக்கிற அநந்ய ப்ரயோஜநர் இங்ஙனே கிலேசப்படுவது எதற்கா–' என்றானும்; அப்போது திருவலகிட்ட விடத்தையும் இடாத விடத்தையுங் காட்டி 'இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே இதற்கொரு பலமில்லை யென்று தோற்றியிருந்ததோ?' என்று பணித்தாராம் திருக்கண்ண மங்கையாண்டான். இங்கு அறிய வேண்டுவதாவது;–த்ருஷ்டப்ரயோஜந மென்றும் அத்ருஷ்ட ப்ரயோஜநமென்றும் ப்ரயோஜந மிருவகைப்படும். அத்ருஷ்ட ப்ரயோஜகத்திற்கொரு ஸாத்நாநூஷ்டாநம் பண்ணுமையே அநந்ய ப்ரயோஜநர்க்குற்றது. ஸன்னிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு ப்ரயோஜநாபேசைஷயின்றிக்கே செய்வதனால் ஒரு குறையுமில்லை; இது நிஷ்ப்ரயோஜநந்தானே யென்ன வேண்டா; திருவலகிடாதவிடம் கண்கொண்டு காண வொண்ணாதாயும், திருவலகிட்டவிடம் கண்ணுற்கான வினிதாயுமிருப்பதே ப்ரயோஜனம். இது அநந்ய ப்ரயோஜநத்வத்திற்கு விரோதியன்று என்பதாம். பல்படிகால் என்பதனால் வம்ச பரம்பரையாக இங்ஙனே கைங்கரியஞ்செய்யும் ஸந்தான மென்கிறது. தொண்டனேற்கு என்று ஒருமையாகச் சொல்லாமல் 'தொண்டரோர்க்கு' என்று பன்மையாகச் சொன்னது அநுபந்திகளையுங் கூட்டிக் கொண்டு சொன்னபடி. சோதிவாய் திறந்து பூவலருமாபோலே வாய்திறந்தொரு வார்த்தை யருளிச் செய்யவேணும். வாய் திறக்கும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்விளையும் அதுபயிக்க வேண்டிச் 'சோதிவாய்' என்கிறார். இங்கே ஈடு :– "*மாம் அக்ரூரேதி வசஷ்யதி*" யென்று வார்த்தையனவிலேயிற்கு அக்ரூரன் அநுபதித்தது தத்காலத்தில் திருமுகத்திற் செவ்வியும் உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு. உன் தாமரைக் கண்களால் நோக்காய்–வார்த்தையில் தோற்றாத பந்தமும் நோக்கிலே தெரியும்படி குளிர நோக்கியருளவேணுமென்கை. கோயிலில் பிள்ளை தேவப்பெருமாளரையா இப்பாட்டை ஸேவிக்கையில் *உன் தாமரைக் கண்களால் நோக்காய்* என்று ஒருவிசை சொல்லி நிறுத்தாதே 'நோக்காய் நோக்காய் நோக்காய்' என்று பலகாலும் ஒருவிசை கொண்டிருந்து மேலடியில் போகமாட்டாதே நின்றாராம் ; அப்போது கோஷ்டியில் வீற்றிருந்து அவரது திருத்தகப்பனாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து 'பிள்ளாய்! நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்டும்படி இங்ஙனே பலகாலும் சொல்லி நிப் பத்திக்கலாமோ? அழகிய மீற்றைத் தந்து நல்ல பாட்டைத் தந்து ஐச்வர்ய ஸந்தானங்களையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்னமும் நோக்காய் நோக்காய் நோக்கயென்றால் இது என்னே! மேலே பாடு என்றாராம்.


  3685.   
  குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன் 
  அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்
  படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்* 
  கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.  

      விளக்கம்  


  • உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார். முன்னிரண்டடிகளால் தம்முடைய சேஷத்வப் பெருமையைப் பேசிக் கொள்ளுகிறார். குடிக்கிடத்தல், ஆக்கஞ் செய்தல், தீர்த்தவடிமைக் குற்றவேல் செய்தல் இங்குச் சொல்லப்படுகிறது. குடிக் கிடத்தலாவது–குலமரியாதை தப்பாதபடி வர்த்தித்தல் பரதாழ்வான் தலையிலே முடியை வைக்கப்புக "இசஷ்வாரு வம்சத்தவர்களில் மூத்தாரிருக்க இளையார் மூடி குடிறயரியர்" என்றான் அவன். அப்படியே ஆழ்வாரும் தம்முடைய சேஷத்வத்தைக் காத்துக் கொள்ளும் விஷயத்தில் குலமரியாதை தவறாதவரென்க. ஆசார்ய ஹருதயத்தில் பரதாழ்வானோடு ஆழ்வார்க்கு ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து "குடிக்கிடந்தகையறவும்" என்றருளிச் செய்ததுங் காண்க. ஆக்கஞ் செய்தலாவது–குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்குகை. ஆசார்ய ஹருதயத்தில் (82) *ஜநக தசுரத வஸீதேவ குலங்களுக்கு மூத்த பெண்ணும் நடுவிற் விள்ளையும் கடைக்குட்டியும்போலே இவரும் பிறந்து புகழு மாக்கமுமாக்கி அஞ்சிறையுமறுத்தார்* என்று விடத்து ஆழ்வார்க்கு பரதாழ்வானோடே ஸாம்யம் நிர்வஹிக்குமிடத்து ஆக்கஞ் செய்தல் என்கிறவிது எடுத்துக் காட்டப்பட்டது. அவ்விடத்து வியாக்கியானத்தில் மணவாள மாமுனிகளின் திவ்ய ஸூக்தி வருமாறு – 'ஸ்ரீ பரதாழ்வான் பிறந்து' ராஜ்யஞ் சரஹஞ்ச ராமஸ்ய தர்மம் வக்துமிஹார்ஹஸிஹ கதம் தசரதாஜ்ஜாதோ பவேத் ராஜ்யாபஹாரக: இத்யாதியாலே மூத்தாரிருக்க இளையார் முடிசூடக் கடவதன்றென்கிற குலமர்யாதையை நடத்தினவளன்றிக்கே, *ஐடிலம் சீரவஜநம் ப்ராஞ்ஜலிம் பதிதம் புவி* என்றும், *பங்கதிக்தஸ்து ஐடிலோ பரதஸ் த்வாம் ப்ரதீக்ஷதே* என்றும் சொல்லுகிறபடியே ஜ்யேஷ்டரான பெருமாளுடைய விச்லேஷத்தில் ஜடை புனைந்து வல்களையுடுத்து கண்ண நீராலுண்டான சேற்றிலே தரைக்கிடை கிடந்து குலத்துக்கு முன்பில்லாத ஏற்றத்தை யுண்டாக்கினாப் போலே ஆழ்வாரும் *குடிக்கிடந்து* என்கிறபடியே க்ஷத்வ குலமர்யாதை தப்பாதபடி னிற்நமாத்ர மன்றிக்கே, *ஆக்கஞ் செய்து* என்கிறபடியே சேஷி விரஹக்லேசாதிசயத்தாலே காண வாராயென்றென்று கண்ணும் வாயுந்துவர்ந்து, *கண்ண நீர் கைகளாவிறைத்து, *இட்ட காலிட்ட கையாம்படி நிச்சேஷ்டராய்த் தரைக்கிடைகடந்த ப்ரேமவிசேஷத்தாலே இக்குடிக்குப் பண்டில்லாத வேற்றத்தையுமுண்டாக்கினார்" என்று. நின் தீர்த்த படிமைக் குற்றவேல் செய்து–அடிமைக் குற்றேவலென்றும் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று மிரண்டுண்டு; எம்பெருமாள் திறத்துக் கைங்கர்யம் பண்ணுவது அடிமைக் குற்றேவல், அப்போது விஷயாந்தரங்களிலும் போக்யதாபுத்தி அநுவர்த்திருக்கவும் கூடும் ; அப்படியன்றிக்கே தன்னுடைய பரம போக்யதையாலே இதர புருஷார்த்தத்தில் நகையை அறவேயறுத்த அடிமைக் குற்றேவலுண்டு, அதற்குத் தீர்த்த வடிமைக் குற்றேவலென்று பெயர். தமாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு பரமாத்மநி யோரக்தோ விரபதோபரமாத்மநி என்னுமாபோலே, நாமும் சுதாசித் பகவத் விஷயத்திலே அடிமைக் குற்றேவல் செய்யா நின்றோமாகிலும் விஷயாந்தரங்களில் நசையும் கலசியிருக்கும். அவற்றைக் காரியுமிழ்ந்து செய்யும் குற்றேவலே தீர்த்த வடிமைக் குற்றேவேல். அதனை செய்து.


  3686.   
  கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*  
  தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*
  தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்* 
  இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!

      விளக்கம்  


  • தொடர்ந்து குற்றவேல் செய்து தொல்லடிமை வழிவருந் தொண்டராம் ஆழ்வார். எம்பெருமான் போமிடமெடங்கும் இளையபெருமாளைப் போலே கூடவே திரிந்து 'இந்த நிலைமையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும், இந்த நிலையில் இன்ன கைங்கரியம் செய்ய வேணும்' என்று அந்தாங்கவடிமைகளைச் செய்து ஆத்மாவுக்கு ஸ்வாபாவிமாக அடிமையில் நின்றும் வழுவாதிருப்பவர் என்க. இப்படிப்பட்ட தொண்டரான தமக்கு அருள் வேணுமெனறு இரண்டாமடியால் பிரார்த்திக்கிறபடி. அருள் செய்ய வேண்டும் ப்ராகாரத்தைப் பின்னிரண்டடிகளால் விளக்குகிறார். தடங்கொள் தாமரைக்கண் விழிக்க வேணும், எழுந்திருக்க வேணும்; கைங்கரியங் கொள்ளுகைக்குத் தாமரைமங்கையோடு கூட விருக்க வேணும் என்னுடைய கோரிக்கையை நிறைவேற்றியருளும் வியாஜத்தினால் மூவுலகுந்தொழ வீற்றிருந்தருள வேணும் என்றிரக்கிறார். அர்ச்சாவதாரநிலை என்றைக்குமொருபடிப்பட்டே யிருக்கு மென்பதும் அது குலைக்க வொணணுததென்பதும் ஆழ்வாரறியாததன்று : அறிந்து வைத்தும் "நீ யெழுந்து–இருந்தருளாய்" என்று பிரார்த்திக்கிறார் – திருமழிசைப்பிரான் திருக்குடந்தையாராவமுதன் பக்கலிலே பிரார்த்தித்துப் பெற்றாரென்னும் ப்ரஸித்தியாலே *நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலமேனமாய், இடந்தமெய் குலுங்கவோ விலஞ்குமால் வரைச்சுரம், கடந்தகால பரந்த காவிரிக்கரைக் குடந்தையும் கிடந்தவாறு–எழுந்திருந்து பேசுவாழி சேகனே (திருச்சந்த விருத்தம்) என்ற பாசுரத்திலை திஹயமுணர்க.* அப்பாசுரத்தின் காயலாகவே யருளிச்செய்கிறார் கிடந்தநாள் கிடந்தாயெத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசைய = கிடையழகு காணவேணுமென்று ஆசைப்பட்ட வொருவனுக்காகக் கண்வளர்ந்தருளினாய்; இனியொருவன் வந்து "கிடந்தவாறெழுந்திருந்து பேசு" என்றால் அதற்குப் பிறகும் கிடந்தருளலாமோ? எழுந்திருக்க வேண்டியதன்றோ. [உன் திருவுடம்பகைய எத்தனை காலங்கிடத்தி] இடம்பலங் கொள்ளாதே ஏகாகாரமாக நெடுங்காலம் சயனமே செய்தருளினால் சாலவும் சிரமமாயிராதோ? ஸுகுமாரமான திருமேனிக்குத்தகுமோவிது. என்றைக்கோ வொருவன் பிரார்த்திதானென்று அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ? திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அவனுடைய வேண்டுகோலையே பார்க்குமித்தனையோ? திருமேனியின் ஸெளகுமார்யத்தையும் அடியேன் போல்லாருடைய வேண்டுகோளையும் கணிசிக்க வேண்டாவோ? கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த காரியமாராய்ந்தருள் என்று வேண்டினால் அங்ஙனமே செய்தருள வேண்டாலோ?


  3688.   
  பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்* 
  தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
  பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்* 
  கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  

      விளக்கம்  


  • *கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும். கீழ்ப் பாட்டில், பவளம் போல் கனிவாய் சிவப்பல் காண வரவேணுமென்றாரே; அவவளவிலும் பர்யாப்தியில்லாமையாலே இன்னமும் சில மநோரதங்களையும் விஜ்ஞாக்கிறாரிதில், பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்குமேலே பன்னிலாமுத்தல் தவழ்கதிர் முறுவல் செய்ய வேணும்; அதற்குமேலே திருக்கண் தாமரை தயங்க நின்றருளவும் வேணும் என்கிறார். பல்லாகிற நிலாமுத்து நிரையானது கதிர் உள்ளடங்காதே புறம்பேதவழும்படி புன்முறுவல் செய்யவேணுமென்கிறார். நிலாமுத்த மென்றது–ஒளியுடைய முத்துக்கோவை யென்றபடி. இனி மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்; முத்தம் என்று அதரத்தைச் சொன்னபடியாய், அதரத்திலே பல் நிலாக்கதிர் தவழும்படி என்று, முந்துற நாலடிவந்து, பின்னை அதுவும் மாட்டாதே ஸ்தப்தனாய் நிற்கும் நிலை காணவேண்டி 'நின் திருக்கண்தாமரை தயங்க நின்றருளாய்' என்கிறார். பின்னடிகளிரண்டும் விளி. நல்ல பவளப்படரின் கீழே சங்குகள் நிராபாதமாய் வர்த்திக்கப் பெற்ற தாமிரபர்ணியையுடைத்தான திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே! *நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய்! வாரா யென்னாரிடரை நீக்காய்* என்று கூயிழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய இடர் கெடும்படிபயாக மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளைத் தலைக்கட்டியருள வேணுமென்றோராயிற்று.


  3689.   
  காய்சினப்பறவைஊர்ந்து*  பொன்மலையின் மீமிசைக் கார்முகில்போல* 
  மாசினமாலி மாலிமான்என்று*  அங்குஅவர் படக்கனன்று முன்நின்ற*
  காய்சினவேந்தே! கதிர்முடியானே!* கலிவயல் திருப்புளிங்குடியாய்* 
  காய்சினஆழி சங்குவாள் வில்தண்டுஏந்தி*  எம்இடர்கடிவானே!  

      விளக்கம்  


  • காய்சின வேந்தோ! விரோதிகளைக் காய்ந்து போடும் சினத்தையுடைய ஸ்வாமியே! என்றபடி,. இங்கு ஓர் ஆராய்ச்சி குறிக்கொள்ளத்தக்கது; திருப்புளிங்குடி யெம்பெருமானுக்குத் காய்சின வேந்து என்று திருநாமம். ஈட்டிலும் நம்பிள்ளை இது திருநாமமென்றே யெடுத்துக் காட்டியுள்ளார். இப்படியிருக்க, காய்சின வேந்து என்கிற இச்சொல்லைச் சிலர் 'காசினி வேந்து' என்று ஆக்கினதோடு நில்லாமல், காசினி யென்று பூமிக்குப் பெயராதலால் காசினி வேந்தென்றது பூமிக்கு அரசன் என்றவாறு என்று கொண்டு இத்தலத்தெம்பெருமானைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநரங்கூரைச் சேர்ந்த மாலைப் பூமிபாலன் என்கிற வட சொல்லால் வழங்கி வருகின்றனர். திருநாங்கூரைச் சேர்ந்த பதினொரு திருப்பதி களையுஞ் சேர்த்து "நத்தீப கடப்ரணர்த்தக மஹாகாருண்ய ரக்தாம்பக" இத்யாதியாக ஒரு ச்லோகம் இருப்பதுபோல, ஆழ்வார் திருநகரியைச் சார்ந்த நவ திருப்பதிகளையுஞ் சேர்த்து "வைகுண்ட நாத விஜயாஸந பூமிபால" இத்பாதியாக வொரு ச்லோகம் ப்ரஸித்தமாகவுள்ளது. இது மணவாள மாமுனிகள் அருளிச் செய்ததென்றும் சொல்லி வருகிறார்கள். ஈட்டிலருளிச்செய்த படிக்கு நேர்விரோதமாகக் காசினி வேந்தென்று பாடங்கொண்டு பூமிபாலனென்று அதற்கு ஸம்ஸ்கருதமாக்கி மணவாள மாமுனி களருளிச் செய்தாரென்றால் இது ஸம்பாவிதமாகுமோ? ஒரு வியாக்யானத்திலாவது காசினி வேந்தென்கிற பாடமும் அதற்குரிய பொருளும் காணப்படவில்லை. "காயுஞ் சினத்தையுடை வேந்தே!" என்றே ஸகல வியாக்யானங்களிலு முள்து. "இது திருநாமம்" என்று இருபத்தினாலாயிரப்படியிலும் ஈட்டிலும் விசேஷித்து அருளிச் செய்யப்பட்டுமிருக்கிறது. இங்ஙனேயிருக்க, விபரீதம் எங்ஙனே புகுந்ததென்று ப்ராமாணிக ப்ராஜ்ஞர்கள் ஆராயக்ககடவர்கள். உண்மை யென்ன வென்றால் காய்சின வேந்தென்பதைக் காசின வேந்தென்று வழங்கிவர, பிறகு அது காசினி வேந்தென்று வழங்கப்பட்டு, அதற்கு பூமிபாலனென்று அர்த்தமும் செய்யப்பட்டதாயிற்று. திவ்யப்ரபந்தத்திலும் வியாக்யானங்களிலும் பரிசய மற்றவர்களின் கணி இது. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபத்திலுள்ள திருத்தண்கால் என்னுந் திருப்பதியைத் திருத்தங்காவென்று வழங்கி வந்து ஸம்ஸ்க்ருத்தில் தங்கால சேஷத்ரமாக்கி ஸ்தல புராணமும் இட்டிருப்பதுபோல, இங்கும் பூமிபால சேஷத்ர மாஹாத்மிய மென்று ஒரு ஸ்தல புராணமும் தோன்றி யிருக்கக் கூடும். கதிர் முடியானே! – அடியார்களை ரக்ஷிப்பதற்கென்று நீ திருவபிஷேக மணிந்திருக்க, நான் இழக்கலாமோ வென்கிறார் போலும், கலிவயல் திருப்புளிங்குடியார்!= செழிப்புமிக்க வயலையுடை திருப்புளிங்குடியிலே திருக்கண்வளர்ந் தருளுமவனே! நீ இப்படி அணினாயிருக்க நானிழக்கலாமோ வென்கை. ஈற்றடியில் பஞ்சாயுதச் சேர்த்தியை யருளிச்செய்கிறார். *எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்* என்றாப்போலே அடியோங்களுடைய ஆபத்துக்களைப் போக்குகைக்காக நீ பஞ்சாயுதாழ்வார்களோடே கூடியிருக்க என் ப்ரதிவந்தகங்கள் என் செய்யும்? என்றவாறு.


  3690.   
  எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்* 
  செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
  நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர* 
  இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 

      விளக்கம்  


  • உலகில் துர்ப்பலர்களென்றும் ப்ரபலர்களென்றும் இருவகுப்பினருளர் ப்ரபலர்கள் தங்களைத் தாங்களே ரக்ஷித்துக் கொள்ள வல்லவர்களென்பது கிடையாது; எப்படி துர்ப்பலர்கள் எம்பெருமானால் ரக்ஷிக்கப்பட வேண்டியவர்களோ, அப்படியே ப்ரபலர்களும் அவன் கைபார்த்திருக்கவேண்டியவர்களே–என்னு மர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு, அடியோங்கள் வாழும்படி எங்கள் கண் வட்டத்திலே ஒருநாள் இருக்கவேணுமென்று இரக்கிறார். ஆதியிலேயே *மயர்வற மதிநல மருளினன்யனவன்* என்று நான்பேசும்படிபாய என்னுடைய மயர்வையறுத்து என்னையடிமை கொண்டவனன்றோ நீ என்னுங்கருத்துப்படவருளி செய்கிறார். எம்மிடர்கடிந்து இங்கென்னையாள்வானே யென்று, இருள் தருமாஞாலமான விந்நிலத்திலேயன்றோ இவ்வுபகாரம் செய்தது! என்பது, இங்கு என்றதனால் காட்டப்படுகிறது. இப்படி ரக்ஷகனாவது எங்களுக்கு மாத்திரமல்ல; "ஈச்வரோஹம்" என்று செருக்கியிருக்கிற பிரமன் முதலிய தேவர்களுக்கும் நிர்வாஹகன் நீயேயன்றோ வென்கிறார் இமையவர் தமக்குமாங்கனையாய்! என்று. இப்படி துப்பலரோடு ப்ரபலரோடு வாசியற அனைவர்க்கும் ரக்ஷகன் நானேயென்னுமிடத்தை ஸர்வலோக ஸாக்ஷிகமாக நிருபித்துக் கொண்டு திருப்புளிங் குடியிலே சாய்ந்தருளா நிற்பவனே யென்கிறது இரண்டாமடி. தமக்குச் செய்தருள வேண்டுவதைப் பின்னடிகளாலருளிச் செய்கிறார். "இம்மடவுலர்காண நீ யொருநாள் எங்கள் கண் முகப்பேயிருந்திடாய்" என்பது பிரார்த்தனை. திருப்புளிங்குடியில்நின்று மெழுந்துவந்து திருப்புளியடியிலே ஸேவை தந்தருளவேணுமென்கிறார். ஒருநாளிருந்தால் போதுமோ வென்று கேட்வேண்டா பெருவிடாயன் 'நாக்குநனைக்கத் தண்ணீர்வேணும்' என்றால் அதற்கு அவ்வளவேயோ கருத்து "அதர்சநே தர்மநமாத்ரகாமா: த்ருஷ்ட்வா பரிஷ்வங்க ரஸைகலோலா" என்றான் ஒருமஹாகவி. முதலடியிலேயே ஆசாஸ்மஹே விக்ரஹயோ ரபேதம் என்று ஆசம்ஸிக்கவொண்ணாதே. அன்றிக்கே, இருந்திடாய் என்றது–சயனத்திருக்கோலத்தை விட்டு வீற்றிருந்த திருக்கோலத்தைக் காட்டியருளவேணுமென்று பிரார்த்திகிறரென்றுமாம். மூன்றாமடிக்கு ஆறாயிரப் படியருளிச் செயல் காண்மின்–"உனக்கு நல்லராயிருப்பார் நீ யிருந்தருளுமிருப்பைக் கண்டால் படும்பாடுகண்டு நாங்கள் வாழும் படியாக" என்று. 'நும்முடையடியர்' என்பதற்கு பர்யாயமாக 'நம்முடையடியர் என்பது உலகவழக்கு 'நம் அகத்தில் எல்லாரும் ஸெளக்கியந்தானே" என்றால் "நும் அகத்தில் '' என்று தானே பொருள்படும். 'எங்களைப் போன்ற அடியவர்கள் 'என்கிற பொருளிலும் 'நம்முடையடியர்' என்பதுண்டு. பக்தபாகவதர்களின் கவ்வையை–கோலாஹலத்தைக் கண்டு நாங்கள் களிக்கும் படியாக என்றதாயிற்று எம்பெருமான் எழுந்தருளியிருந்த ஸேவைஸாதிப்பது எப்படி உத்தேச்யமோ, அப்படியே அப்போது பாகவதர்கள் தங்களுடைய ஆனந்தபரீவாஹமாகச் செய்யும் கோலாஹலங்களைக் கண்டுகளிப்பதும் உத்தேச்யம்ம என்பது இங்குத் தெரிவிக்கப்படுகிறது. *நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குமாங்கே பொசியுமால்* என்றகணக்கிலே ஸம்ஸாரிகளும் காணம்படியாக வேணுமென்கிறார். இம்மடவுலகர் காண என்பதனால். இந்த ஸம்ஸாரத்தில் அறிவுகேடராய் இடக்கை வலக்கையறியா தவர்களாயிருப்பாரும் கண்ணாலேகாணும்படியாக வென்கை. 'மடவுலகர்' என்பதற்கு ஸ்வாபதேசம் ஆசார்யஹருதயத்தில் (142) "ஊரார் காட்டார் உலகர் கேவலைச் வர்யகாமஸ்வதந்த்ரர்" என்ற சூர்ணையில் காணத்தக்கது.


  3691.   
  எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி* 
  தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
  திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா* 
  இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.

      விளக்கம்  


  • தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிக்கையாவது–நூறு பிராயம் புகுவீர், பொன்னாலே பூணூநூலிடுவீர் என்றாப்போலே சொல்லுகை. இவ்விடத்து ஈட்டில் "வங்கிப் புரத்து நம்பி விஜயஸ்வ என்ன, ஆண்டான் சொன்ன வார்த்தையை நினைப்பது" என்றுள்ளது. அவ்வைதிஹயமாவதென்னென்னில், வங்கிப்புரத்து நம்பி பெருமாளை ஸேவிக்க எழுந்தருளின வளவிலே ஒரு பக்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்களும் மற்றொரு பக்கத்தில் ஆய்ச்சிகளும் நின்று கொண்டு பெருமாளை ஸேவித்திருந்தார்களாம்; வங்கிப்புரத்து நம்பி ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்கிற பக்கமாக நில்லாமே ஆய்ச்சிகள் நிற்கிற பக்கமாக நின்றராம். அதை முதலியாண்டான் கண்டு இதென்ன? ஸ்ரீவைஷ்ணவர் திரளிலே சேராமல் ஆய்ச்சிகள் பக்கமாக நிற்கிறதேன்? என்று கேட்டாராம். அதற்கு நம்பி சொன்னாராம் எப்படியும் நாம் பலவகை யபிமானங்கொண்டு அஹங்காரமமாகாரயுக்தர் களாயிருப்போம், நம்மேல் பகவத்கடாக்ஷம் பாய்வது மேட்டு மடையாகவேயிருக்கும்; அவர்கள் உண்மையில் தாழ்சசி யுடையவர்களாயும் தாழ்ச்சி தோற்றப் பேசுமவர்களாயும் இருப்பவர்களாகையாலே அவர்கள்மேல் பகவத் கடாக்ஷம் பாய்வது பள்ள மடையாயிருக்குமென்று அவர்கள் பக்கமாகக் நின்றேன். என்று. ஆனாலும் எம்பெருமானை நோக்கி ஆய்ச்சிகள் போற்றும்படியையும் நம்பி போற்றும் படியையும் ஆண்டான் கண்டவராகையாலே இந்த வாசியையெடுத்துக் காட்ட வேமென்று திருவுள்ளம் பற்றி நம்பியை நோக்கி கேட்டராம்–'ஆய்ச்சிகள் சொன்னதென? தேவரீர் அருளிச் செய்ததென்?' என்று "பொன்னாலே பூணூநூலிடுவீர், நூறுபிராயம் புகுவீர், அழுத்தவிரட்டையெடுப்பீர் என்று ஆய்ய்சசிகள் சொன்னது; விஜயஸ்வ, விஜயீபவ இத்யாதிகள் அடியேன் சொன்ன வார்த்தை" என்று நம்பி சொல்ல, அதற்கு ஆண்டான் "அங்குப்போயும் முரட்டு ஸம்ஸ்க்ருதம் விட்டீரில்லையே; எங்கேயிருந்தாலும் நாம் நாமே; இங்கே யெழுந்தருளீர்" என்றருளிச் செய்தாராம். இதுதான் தங்களன்பாரத் தமது சொல்வலத்தால் பூசிப்பது. அது தன்னிலும் தலைத்தலைச் சிறந்து பூசிப்பதாவது–ஒருவர்க்கொருவர் மேல்விழுந்து மிகவும் ஆச்ரயித்துக் கொண்டாடுவது. இப்படிப்பட்ட ஸந்நிவேசங்களை யெல்லாம் ஆழ்வார் காண விரும்புகிறபடி, திங்கள்சேர் மாடத்திருப்புளிங்குடியாய்–சந்திரமண்டலத் தளவும் ஒங்கியிராநின்ற மாடங்களையுடைய திருப்புளிங்குயென்கிறவிது பொய்யுரையல்லவா? *பொய்யில் பாடலாயிரத்தில் இங்ஙனே பொய்புரை புகலாமா? என்று சிலர் சங்கிக்கக் கூடும்; கேண்மின்; அலங்கார சாஸ்த்ரத்தில் அதிசயோக்தியென்பதோர் அலங்காரமுண்டு. (தமிழர் உயர்வு நவிற்சியணி என்பர்) அதனை அப்ராப்த விஷயங்களில் உபயோகிப்பர் ஸாமாந்யசுவிகள் ஆழ்வார் போல்வார் ப்ராப்த விஷயமான பகவத் விஷயத்திலே உபயோகிப்பர்கள். அவர்களுடைய திருக்கண்களுக்கு அங்ஙனே காட்சி தந்தபடி. உயரலோங்கின மாடங்களுண்டாக வேணுமென்கிற ஆசம்ஸையினால் அருளிச் செய்கிற படியுமாகலாம். *அந்யத்ர அதத்குணோக்திர் பகவதி ந* என்று பட்டரருளிச் செய்கையாலே பகவத் விஷயத்தில் பொய்யுரை யென்பதற்கு ப்ரஸக்தியில்லை யென்க. திருவைகுந்தத்துள்ளாய் = புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து வைகுந்தத்துள் நின்று என்ற பாசுரத்தில் பேசப்பட்ட ஸ்ரீவைகுண்டமென்கிற அணித்தான திவ்ய தேசத்தைச் சொல்லுகிறபடி.


  3692.   
  வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம் 
  போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக* 
  சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்* 
  கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே! 

      விளக்கம்  


  • எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில் "மாஞாலத்திதனுளும்" என்கிற உம்மை–எம்பெருமானுடைய ஸெளருமார்யத்திற்கு இந்நிலத்திவிருப்பு தகுதியற்றது என்னுமிடத்தைக் காட்டித்தரும். வீற்றிடங்கொண்டு இருந்திடாய்=உன்னுடைய பெருமை தோற்ற இருந்தருள வேணுமென்றபடி. இதனுளும்–"உன்னைக் கொண்டு ஒரு கார்யமில்லாத இந்த ஸம்ஸாரத்திலே" என்பர் நம்பிள்ளை. உண்மையில் இந்த ஸம்ஸாரத்திலுள்ள பொருள்களையெல்லாம் ஹேயமென்று சிறிதும் பாராதே உகக்கிறோம். எம்பெருமானொருவனையே வெறுக்கிறோம். இப்படியிருந்தும் இங்கே வந்து நிற்பதுமிருப்பதும் கிடப்பதுமாயிருக்கிறானவன் தன்னுடைய பரமக்ருபையாலே "தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்து நிற்கிற விடம்" என்பது ஸ்ரீவசநபூஷணம். இருந்திடாய் = சாய்ந்தருளினபோதையழகு கண்டோம்; இருந்தருளும் போதை யழகுங்காணவேண்டாவோ? அதையுங் காட்டியருளாய் என்கிறார். இங்கே பட்டர் அருளிச் செய்வராம்– "இவையெல்லாம் நமக்குக் கோயிலே காணலாமிறே சாய்ந்தருளினவழகு பெரியபெருமாள் பக்கலிலே; நின்றருளினவழகு நம்பெருமாள் பக்கலிலே; இருப்பிலழகு பெரிய பிராட்டியார் பக்கலிலே" என்று. 'இருந்திடாய்' என்று நிர்ப்பந்திருக்கிறது எதற்காகவென்ன, அடியோம் போற்றி ஓவாநே கண்ணிணை குளிரப் புதுமலராகத்தைப் பருக என்கிறார். அடியோமென்றது–இவ்விருப்பைக் காண ஆசைப்பட்டிருக்கிற நாங்களென்றபடி, போற்றி–இவ்விருப்பு இங்ஙனே நித்யமாகச் செல்லவேணு மென்று மங்களாசாஸனம்பண்ணி யென்றபடி. புதுமல ராகத்தைக் கண்ணிணை குளிரப் பருக–செவ்விப்பூப்போலே ஸுகுமாரமாயிருக்கிற திருமேனியைக் கண்குளிர அநுபவிக்கும்படியாக புஷ்பஹாஸ ஸுகுமாரமான வடிவுக்கு "புது மலராகம்" என்று ஆழ்வார் திருநாமஞ்சாத்துகிறார். ஆகம்–திருமேனி ஆகத்தைக் காண என்னவேண்டியிருக்க 'ஆகத்தைப்பருக' என்றதுடிதேனும்பாலுங்கன்னலுமமுதமான திருமேனியை "லோசநாப்யாம் பிபந்நில" என்கிறபடியே பருகவேணுமென்னுமாசையே தமக்குள்ளமையைக் காடினபடி. உபநிஷத்தும் "ரஸோ வை ஸ:" என்று கூறினவிஷயமாகையாலே பருகத்தக்கதேயன்றோ,.


  3693.   
  கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்* 
  கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*
  வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்* 
  கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.    

      விளக்கம்  


  • கடுவினை நஞ்சே! என்னுடையமுதே! = ஒரு வஸ்துதானே சிலர்க்கு விஷமாயும் சிலர்க்கு அமுதமாயுமிராநின்றதாயிற்று. *வஞ்சஞ்செய் சஞ்சனுக்கு நஞ்சானனை* என்றார் திருமங்கை யாழ்வாரும் "என்னுடையமுதே" என்று சொல்லப்பட்ட இவ்வமுதம் எங்கிருக்கிறதென்ன, கலிவயல் திருப்புளிங்குடியாய்! என்கிறார். இங்கே ஈடு:– "இவ்வம்ருதத்துக்குக் கடல் கடைதல் ஸ்வர்க்கத்திலே போதல் செய்யவேண்டா; திருப்புளிங்குடியிலே ஸந்நிஹிதமாயிற்று இவ்வம்றுதம்" திருப்புளிங்குடியா யென்றழைத்து அவனுக்கு ஸமாசாரம் சொல்லுகிறார் பின்னடிகளால் வடிவழகுக்கு ஒப்பில்லாத பெரிய பிராட்டியாரும் ஸ்ரீபூமிப் பிராட்டியாரும் தங்களுடைய பரம ஸுகுமாரமான திருக்கைகளாலே பிடிக்கும்போதும் கூசிப்பிடிக்க வேண்டும்படி அத்யந்த ஸுகுமாரமான திருவடிகளை பாவியேனும் பிடிக்குமாறு என்னை அங்கேயழைத்துக் கொள்ளுதல், அன்றிக்கே இங்கே வந்தருளுதல் ஒருநாள் செய்ய வேமென்றாராயிற்று. கொடுவினையேனும் என்றது–ப்ராப்தியுடையேனாயும் அதில் போக்யதையை யறிந்த வனுயுமிருந்து வைத்து நெடுங்காலம் இழந்திருக்கும்படி கொடிய பாபத்தை யுடையேனான நானும் என்றபடி. கூவுதல் வருதல் செய்யாயே = இரண்டு காரியங்களை விகற்பித்துச் சொல்லுமிடங்களில் பெரிய காரியத்தை முன்னே சொல்லுவதும், சிறிய காரியத்தை பின்னே சொல்லுவதும் இயல்பு. எம்பெருமான் தானே வருவதென்பது பெரிய காரியமாயும், ஆழ்வாரைக் கூவிக் கொள்வதென்பது சிறிய காரியமாயுமிருப்பதால் "வருதல் கூவுதல் செய்யாயே" என்று சொல்ல ப்ராப்தமாயிருக்க, கூவுதல் வருதல் செய்யாயே யென்று சொல்லியிருப்பதேன்? என்று சங்கை தோன்றும் ; இதற்கு நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்– "முற்பட 'வருதல்' என்றிலராயிற்று அஸ்ஸமுதாயத்தைக் குலைக்க வொண்ணா தென்னுமத்தாலே" என்று. அதாவது, *வடிவிணையில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் ஸந்நிவேசத்தைத் தாமம் கண்டுகளிக்க ஆழ்வார் ஆசைப்பட்டவராகையாலே அந்தச் சேர்த்தி யழகைக் குலைக்க மனமில்லாமை பற்றி, வருதலை முன்னே சொல்லிற்றிலரென்கை.*


  3694.   
  'கூவுதல்வருதல் செய்திடாய்'என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை* 
  மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*
  நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்* 
  ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)

      விளக்கம்  


  • இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார். குரை கடல் கடைநதவன் தன்னைக் குறித்து 'கூவுதல் வருதல் செய்திடாய்' என்று பிரார்த்தித்த ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் அடியவர்க் கெளியனான எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தமாக நெஞ்சினுள்ளே யநுபவிக்கப்பெறுவர் என்றாராயிற்று,. திருவடி வருடவேணுமென்டிகிற அபிநிவேச மில்லாமலே ஸ்வப்ரயோஜனத்திலேயே ஊன்றியிருக்குமவர்களுக்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அமுதங்கொடுத்துக் காரியஞ் செய்யுமெம்பெருமாள் நம் அபேக்ஷிதம் செய்தருளத் தட்டில்லை யென்பது தோன்றுகைக்காகக் குரை கடல் கடைந்தவன் தன்னை என்றதிங்கு. "ஓவுதவின்றி" என்பதை 'ஒர்வார்' என்கிற வினை முற்றிலும் அந்வயிக்கலாம் உலகம். மூன்றளந்தானென்பதிலும் அந்வயிக்கலாம். குணாகுண நிரூபணம் பண்ணாதே அஸங்கோசமாக உலகங்களை யளந்தவனுடைய என்றபடி.