திவ்யதேச பாசுரங்கள்

    2431.   
    கூற்றமும் சாரா*  கொடுவினையும் சாரா*  தீ 
    மாற்றமும்*  சாரா வகைஅறிந்தேன்*  ஆற்றங்
    கரைக் கிடக்கும்*  கண்ணன் கடல்கிடக்கும்*  மாயன் 
    உரைக்கிடக்கும்*  உள்ளத்து எனக்கு.

        விளக்கம்  


    • உரை:1

      “ஆற்றங்கரை கிடக்குங்கண்ணன்“ என்று திருக்காவேரியின் கரையிலுள்ள கபிஸ்தல மென்னுந் திருப்பதியிற் பள்ளிகொண்ட திருக்கோலமான எம்பெருமானை மங்களாசாஸநஞ் செய்வதாகப் பூர்வாசாரியர்கள் அருளிச்செய்வர். அத்திருப்பதிக்குப் பாடலான பாசுரம் நாலாயிரத் திவ்யப்ரபந்தங்களுள் இஃதொன்றேயாம். இப்பாசுரத்தில் கபிஸ்தலமென்கிற திருநாமம் ஸ்பஷ்டமாக இல்லையாயினும் ஆழ்வார் திருவுள்ளக்கருத்தைக் கண்டறிந்து கூறும் பேராற்றலுடைய ஸ்ரீமந்நாதமுனிகள் ஆளவந்தார். எம்பெருமானார் பட்டர் முதலான ஆசாரியர்கள் இது திருக்கவித்தலத்தை நோக்கின பாசுரமேயாகுமென்று நிர்வஹித்து வந்தார்களென்பது பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரான பிள்ளைப் பெருமாளையங்காராலும் தமது நூற்றெட்டுத் திருப்பதி யந்தாதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. “காணியு மில்லமுங் கைப்பொருளுமீன்றோரும், பேணிய வாழ்க்கையும் பேருறவும் – சேணிற், புவித்தலத்திலின்பமும் பொங்கரவமேறிக், கவித்தலத்திற்கண்டுயில்வோன் கால்“ என்கிற செய்யுள் அவ்வந்தாதியிலுள்ளது. * பதின்மருரைத்த பதியொரு நூற்றெட்டுக் துதிசெய்யப் பிறந்த அவ்வந்தாதியில் கவிஸ்தல விஷயமான இப்பாசுரம் சேர்ந்துள்ளதனால் “ஆற்றங்கரை கிடக்குங் கண்ணன்“ என்கிற இத்திருமழிசைப்பிரான் பாடல்கொண்டே அது கூறினர் என்பது விளங்கிற்றாம். பிரமன் முதலிய தேவர்களுக்கு ஆச்ரயணீயனாய்க்கொண்டு திருப்பாற்கடலில திருக்கண் வளர்ந்தருள்பவனே திருக்கவித்தலத்தில் ஸந்நிதிபண்ணியிரா நின்றான், இப்பெருமானே பண்டொருகால் பாரதப்போரில் தேர்த்தட்டில் நின்று அர்ஜுநனை வியாஜஸமாகக் கொண்டு அனைவர்க்கும் உஜ்ஜீவநமாக “***“ என்கிற சரமச்லோகத்தை யருளிச்செய்தன், அந்த திவ்யஸூக்தி எனது நெஞ்சிற்பதிந்திருப்பதனால் இனி நான் ஒருவகையான கெடுதலையும் அடையவழியில்லை என்றாராயிற்று. கண்ணபிரான் சரமச்லோகத்தில் நியமித்தபடியே ஸர்வ தர்மபரித்யாக பூர்வகமாய்ச் சரணாகதி பண்ணினவர் பக்கலில் ‘ஸர்வபா பேப்யா மோக்ஷயிஷ்யாமி‘ என்கிற தன்னுடைய பிரதிஜ்ஞை தவறமாட்டாதவனாகையாலும், அப்படியே நான் நிவ்ருத்தி தர்ம நிஷ்டனாயிருப்பதாலும் இனி ஒரு பாபமும் என்ன யணுகப்ராப்தியில்லை யென்றாவது.

      உரை:2

      மரணபயம், கொடியபாவங்கள், கெட்டவிஷயங்கள் போன்றவை யாதும் நம்மைஅணுகாமல்இருக்க-   புனிதமான திருக்காவேரிக்கரையான கபிஸ்தலத்திலே திருக்கண்வளர்ந்தருள்கிற எம்பெருமானை நமது உள்ளத்தேவைத்து இருத்தலே சரியான உபாயம்.