திவ்யதேச பாசுரங்கள்

    1731.   
    மிக்கானை*  மறைஆய் விரிந்த விளக்கை,*  என்னுள்-
    புக்கானை*  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
    தக்கானை கடிகைத்*  தடங்குன்றின் மிசைஇருந்த*
    அக்காரக் கனியை*  அடைந்து உய்ந்து போனேனே.   (2)

        விளக்கம்  


    • மிகுந்தவன்; ஸர்வஸ்மாத்பரன் என்றபடி. “மறையாய் விரிந்த விளக்கை” என்பதற்கு இரண்டு வகையான நிர்வாஹங்களுண்டு; “வேறொன்றால் காணவேண்டாதே தனக்குத்தானே ப்ரகாசமாயிருப்பது; ப்ரமாணங்களாலே அறியப் பார்க்குமன்று அவற்றாலே ப்ரகாசிக்கிற மேன்மைக்கு எல்லையின்றிக்கே யிருப்பது.” என்பது பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அருளிச்செயல். இதனால், எம்பெருமானே மறையாய் விரிந்தவன் என்றதாகிறது. ஆசார்யஹ்ருதயத்தின் முதல் சூர்ணிகையில் “மறையாய் விரிந்த துளக்கமில் விளக்கில் கொளுத்தின ப்ரதீபமான கலைகளை நீர்மையினாலருள் செய்தான்” என்றருளிச் செய்தபடியை நோக்குங்கால் மறையாய் விரிந்த விளக்கென்று அகாரத்தைச் சொல்லிற்றாக விளங்குகின்றது. அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானத்தில் அகாரபரமாகவே தெளிவாக வியாக்கியானம் செய்தருளப்பட்டிருக்கிறது. (எல்லா வாக்குக்களும் அகாரமே) என்கையாலே, அகாரந்தானே நான்மறைகளாகப் பரம்பிற்றென்ப. ஆக, ‘மறையாய் விரிந்த விளக்கு’ என்று அகாரத்தை சொல்லிற்றாகிலும் அகாரவாச்யனான எம்பெருமானே இவ்விடத்திற்குப் பொருள்; வாச்யவாசகபாவஸம்பந்தத்தைப் பற்றினது ஸாமாநாதிகரண்யம். ஆக, இரண்டுவகையான நிர்வாஹங்களும் அறியத்தக்கன. பொலிகின்ற பொன் மாலை = “கணபுரத்துப் பொன்மாலை போல் நின்றவன்” என்றார் பெரிய திருமடலிலும். தக்கான் = சோளஸம்ஹபுரமென்று வழங்கப்படுகிற திருக்கடிகைப்பதி யெம்பெருனுடைய திருநாமம். பரமதயாளு என்றபடி. கடிகைத் தடக்குன்று = என்னும் வடசொல் கடிகை யெனத்திரிந்தது நாழிகை என்றபடி. ஒருவர் ஒரு நாழிகைப்பொழுது இத்தலத்திலுறைந்தாலும் அவர்க்கு முத்தி கிடைக்குமாதலால் இத்தலத்திற்குக் கடிகை யென்று திருநாமமென்பர். இது சோளதேசம் போன்று வளம்மிக்கு நரசிங்கமூர்த்தி உறைதற்கு இடமாயிருத்தல் பற்றி சோளஸிம்ஹபுரமென்று வழங்கப்படும். சோளஸிம்ஹராஜனது புரமென்றும் பொருள் கூறுவர்.


    1736.   
    கண்ணார் கண்ணபுரம்*  கடிகை கடிகமழும்*
    தண்ணார் தாமரைசூழ்*  தலைச்சங்கம் மேல்திசையுள்*
    விண்ணோர் நாள்மதியை*  விரிகின்ற வெம்சுடரை*
    கண்ஆரக் கண்டுகொண்டு*  களிக்கின்றது இங்கு என்றுகொலோ?

        விளக்கம்  


    • திருக்கண்ணபுரத்திலும் திருக்கடிகையிலும் தலைச்சங்க மேல்திசையிலும் நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கின்ற எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு களிக்கப் பெறும் நாள் என்றைக்கோ என்று குதூஹலிக்கிறார். கண்ஆர் கண்ணபுரம் = வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே யிருக்கவேண்டும்படி மிக அழகிய திருக்கண்ணபுரம் என்றவாறு. அன்றியே, இடமுடைத்தான (விசாலமான) திருக்கண்ணபுரம் என்றுமாம். கண்-இடம். தலைச்சங்க மேல்திசையுள் விண்ணோர் நாண்மதியை = சோழநாட்டுத் திருப்பதிகளுள் ‘தலைச்சங்க நாண்மதியம்’ என்பது ஒரு திருப்பதி. (திருநாங்கூர் ஸமீபத்திலுள்ளது.) அங்குள்ள எம்பெருமானுக்கு ‘நாண்மதியப் பெருமாள்’ என்று திருநாமம். சிறந்த திருச்சங்கையேந்திய நாண்மதியப் பெருமானையுடைய தலமாதல் பற்றித் தலைச்சங்க நாண்மதியம் என்று திருநாமமென்பர். இது ‘தலைச்சங்காடு’ என்று வழங்கப்படும். ‘தலைச்சங்கநாடு’ என்பது மருவிற்றுப் போலும். தலைச்சங்கப் பெருமாளுடைய இருப்பிட மென்றவாறு. “கைப்பால் அலைச்சங்கமேந்த மணியரங்கத் தம்மான், தலைச்சங்க நாண்மதியத் தான்” என்பது ஐயங்காரது நூற்றெட்டுத் திருப்பதியந்தாதிப் பாசுரம். இத்தலத்திற்குப் பாடல் ஆழ்வார் திவ்யஸூக்திகளுள் இஃதொன்றும், பெரியதிருமடலில் “நன்னீர்த் தலைச்சங்க நாண்மதியை” என்பதும்.