திவ்யதேச பாசுரங்கள்

  1108.   
  திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
  நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*
  குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
  உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   

      விளக்கம்  


  • திருமங்கையாழ்வாராகிய பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் திருவிடந்தைப் பெருமானிடத்திலே தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியையும், காதலின்படியே அநுபவம் கைகூடாமையாலே பலவகை விகாரங்களை அடைந்திருக்கிறபடியையும் ஒவ்வொரு பாட்டில் ஒவ்வொரு வகையாகப்பேசி ‘இப்படிப்பட்ட இப்பெண்பிள்ளை விஷயத்தில் நீ செய்ய நினைத்திருப்பது என்னே பிரானே!’ என்று கேட்பதாகச் செல்லுகிறது. உண்மையில், ஆழ்வாரைக்காட்டிலும் வேறுபட்ட ‘தாய்’ என்பவளொருத்தி இல்லாமையாலே ஆழ்வார் தாமே தம்முடைய காதலின் கிளர்த்தியை அந்யாபதேசத்தாலே பேசி ‘இப்படிப்பட்ட ப்ராவண்யமுடைய என்விஷயத்திலே உபேiக்ஷசெய்திடத் திருவுள்ளமோ! அன்றி அங்கீகரித்துக்கொள்ளவே திருவுள்ளமோ? இரண்டிலொன்றைச் சோதிவாய்திறந்து அருளிச் செய்யவேணும்’ என்று கேட்கிறாராயிருக்கிறது.


  1109.   
  துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
  குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*
  வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
  இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

      விளக்கம்  


  • இப்பாட்டால் ஆழ்வார் தாம் சொல்லிக்கொள்வதாவது:- பிரானே! இவ்வுலகில் என்னோடுகூட ஸஜாதீயர்களாயுள்ள மனிசரீடத்தில் எனக்கு நேசமுண்டாவதில்லை; அவர்களோடு உல்லாஸமாகப் பேசுவதற்கு விருப்பமுண்டாவதேயில்லை; தேஹத்தையே பேணித்திரிகின்ற பிராகிருதர்களோடு ஒப்புடையேனல்லேன்; ஊர்வம்புகளைப் பிதற்றிப் போதுபோக்குவாரைப் போலன்றியே எப்போதும் உனது திவ்யசேஷ்டிகளையே வாய்வெருவிக் கொண்டிருக்கிறேன்; என்னுடைய பேச்சுக்களை நீ ஆராய்ந்தால் நான் உன்பக்கல் கொண்டுள்ள வியாமோஹம் நன்கு புலப்படும்; என்வடிவைக் கண்டாயாகில் நான் உனது பிரிவை ஒருநொடிப்பொழுதும் ஆற்றகில்லேனென்பது விளங்கும்; இப்படிப்பட்ட என்னை நீ அபேஷிகிறாயோ, உபேஷிக்கிறாயே? சொல்லாய் பெருமானே! என்றாராயிற்று.


  1110.   
  சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
  போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*
  மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
  என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.

      விளக்கம்  


  • விரஹகாலத்தில் மாதர்களின் மேனியில் தோன்றும் பசலை நிறத்தைப் பொன்னிறமென்பர் கவிகள். பாசிபடர்ந்தாற்போன்ற நிறம். “வளைகளும் இறை நில்லா” என்பதனால் கைகள் துரும்பாக இளைத்தபடி சொல்லிற்றாம். ஏந்திழையிவளுக்கு = இழை என்று ஆபரணத்துக்குப் பெயர்; ஏந்துதல்-தரித்தல்; தரிக்கப்பட்ட ஆபரணத்தையுடைய இவள் விஷயத்திலே என்றதாயிற்று. இம்மகளை நான் ஆபரணங்களோடே நித்தியமாகக் காணவிரும்பி யிருக்கின்றேன்; உன்னுடைய ஸம்ச்லேஷம் வாய்த்தாலல்லது இந்த விருப்பம் நிறைவேறாதாகையால் இவளோடே ஸம்ச்லேஷித்து என்னை உகப்பிக்கவேணுமென்பது உள்ளுறை. பகவத்குணங்களை அநுஸந்தித்துக் கண்ணும் கண்ணீருமாயிருந்தாலும் மயிர்க் கூச்செறிந்திருத்தலுமே பக்தர்கட்கு ஆபரணமாகையால் ஏந்திழை யென்று அவற்றையுடையரானமை சொல்லுகிறதென்க.


  1111.   
  'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
  'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 
  தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
  ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

      விளக்கம்  


  • எம்பிரானே! உன்னைவிட்டுப் பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் போக்க முடியவில்லை; இவ்விருள் தருமா ஞாலத்திலே என்னை வைத்திட்டு ஞானவொளி மழுங்கச் செய்திருக்கிறாய்; ஞானமென்னும் நிறைவிளக்கு அணைந்து போயிருக்கிறது; ஸம்ஸாரஸாகரம் கொந்தளிக்கின்றது; இவ்வுலகத்துப் பொருள்களெல்லாம் எனக்குப் பாதகமாயிராநின்றன; உன்னிடத்தில் நான் பக்க வைத்ததனாலன்றோ இப்பாடுபட நேர்கின்றது. அந்த பக்தியை அகற்றிவிட்டால் உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்களைப் போலே நானும் சுகமே வாழ்வேனன்றோ; ஆகையாலே பக்தியைத் தவிர்த்துக் கொள்ளலாமென்றும் எனக்குத் தோன்றுகின்றது; பாவியேன் திறத்தில் என்ன திருவுளமோ? சொல்லவேணும் - என்று ஆழ்வார் தாம் விண்ணப்பஞ் செய்தாராயிற்று. என்பொன்னுக்கு = ‘பொன்’ என்ற சொல்லால் மகளைக் குறித்தது அன்பின் மிகுதியாலாம்.


  1112.   
  ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
  காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 
  பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
  ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          

      விளக்கம்  


  • ஏதலர்முன்னா = ஏதலரென்று சத்துரக்களுக்குப் பெயர்; ஆழ்வார்க்கு சத்துருக்கள் இங்கு ஆரென்னில்; ‘எம்பெருமானேஉபாயம்’ என்கிற தம்முடைய அத்யவஸா யத்திற்கு எதிர்த்தடையாக ‘கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களே அவனைப் பெறுவதற்கு ஸாதநம்’ என்று கொண்டிருக்கிற உபாயாந்தரநிஷ்டர்களை இங்கு ஏதலரென்கிறது ‘நம்முடைய முயற்சியால் நாம் பேறுபெற வேண்டியிருக்க அவனே உபாயமென்று மார்விலே கைவைத் துறங்கு வதும் ஒரு சாஸ்த்ரார்த்தமாகுமோ?’ என்றிருக்கும் ஸித்தோபாய விரோதிகளின் முன்னே என்னுடைய உறுதியைச் சிறப்பித்து எனக்கு உதவப்போகிறாயோ, அன்றி அவர்களுடைய கொள்கையை ஆதரித்து என்னை உதறிவிடப் போகிறாயோ என்று ஆழ்வார் வினவுகின்றாயிற்று.


  1113.   
  தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
  வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
  மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
  என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

      விளக்கம்  


  • இப்பெண்பிள்ளை ப்ரபந்நகுல மரியாதைக்குத் தகுந்தபடி வர்த்திக்கப் பார்க்கிறாளில்லை; சேஷபூதர் சேஷியினிடத்திலே பாரத்தை வைத்தபின்பு “களைவாய்துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே அவன் செய்தபடி செய்துகொள்க வென்று ஆறியிருப்பதே ப்ரபந்நகுல மரியாதையாகும்; இவள் அப்படி ஆறியிராமல் பதறுகின்றாளாகை யாலே தன்குடிக்கேதும் தக்கவா நினையாள்.


  1115.   
  'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
  புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 
  குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
  இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)

      விளக்கம்  


  • ஆம்பல் என்ற சொல் பலபொருள்களுடையது; இங்கு இசைச் சூழலென்னும் பொருளது. குழலூதுபவன் கண்ணபிரானாயிருக்க, அலங்கெழுதடக்கையாயன் என்று ஹலாயு தனான பலராமனைச் சொல்லிற்றென்னென்னில்; 1. “ மீனோடாமை கேழலரிகுறளாய் முன்னு மிராமனாய்த்தானாய்ப், பின்னுமிராமனாய்த்தாமோதரனாய்க் கற்கியுமானான்” என்ற ஒற்றுமை நயம்தோற்றச் சொன்னபடி 2 “ அலம்புரிதடக்கையாயனே !” என்றார் கீழும்; 3. “அலமுமாழிப் படையுமுடையான்” என்பர் மேலும். குலங்கெழுகொல்லிக் கோமளவல்லி ஸ்ரீ ‘கொல்லி’ என்பதற்கே இலக்கனையால் கொல்லிமலையிலுள்ள பாவைபோன்றவள் என்று பொருள் கொள்ளலாம்; அன்றி, கொல்லி, சொல்லிமலையிலுள்ள, கோமளவல்லி--அழகிய கொடிபோன்ற பாவையையொத்தவள் என்றும் உரைக்கலாம், (கொல்லிப் பாவையைப்பற்றின விவரணம்; இத்திருப்பதிகத்தின் முதற்பாட்டினுரை யிற் காணத்தக்கது.)


  1116.   
  பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
  அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 
  மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
  என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!

      விளக்கம்  


  • பசலை நிறத்தைப்பற்றி குறுந்தொகையில்; ஒரு செய்யுளுண்டு. அதாவது-- “ஊருண்கேணி யுன்டுறைத் தொக்க பாசியன்றேபசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.” (399.) என்பதாம். ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலைநிறம்; தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்; அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்; அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலைநிறம் படரும்; ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித் தொடுவுழி - தொட்டவிடங்கள்தோறும். விடுவுழி விடுவுழி--விட்ட விடங்கள் தோறும். பரத்தலான்-வியாபிக்கிறபடியினாலே.) (இவ்வணங்கினுன்குற்ற நோயறியேன்.) எம்பெருமானே! இவளுக்கு இப்படிப்பட்ட மனோவியாதியுண்டானது உன்னுடைய கடாக்ஷ்த்தில் ஆசைப்பட்டா? புன்முறவலில் ஆசைப்பட்டா! திருமேனியோடணைய ஆசைப்பட்டா? என்று நிச்சயிக்க மாட்டுகிறிலேன் என்றவாறு.


  1117.   
  அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
  என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 
  மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
  பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        

      விளக்கம்  


  • கீழ் ஒன்பது பாட்டும் வேற்றுவாயாலே பேசி, இதில் கலியன் வாயொலிகள் என்கையாலே தம்முடைய பக்திப் பெருங்காதலைத் தாமே அந்யாபதேசத்தாலே பேசிக்கொண்டாரென்பது விளங்கும் . “உன் மனத்தா லென்னினைந்திருந்தாய்?” என்று பாசுரந்தோறும் எம்பெருமானை வினவிக்கொண்டேவந்தவர் அகற்கு ஒரு மறுமொழியும் பெறாமல் எங்ஙனே பதிகத்தை முடித்து விட்டார்? என்று சிலர் கேட்கலாம்; மறுமொழி பெற்றே முடித்தாரென்றுணர்க. “என்னினைந்திருந்தாய்?” என்று கேட்ட ஆழ்வாரை நோக்கி “நீர் கவலையற்றிரும்; உம்மை நாம் கைவிடுவோமோ? உம்மிடத்தில் பரிபூர்ணக்ருபை செய்வதாகவே திருவுள்ளம்பற்றி யிருக்கிறோம். இல்லையாகில் அங்குநின்றும் இங்குவந்து திருவிடவெந்தையிலே நிற்போமோ! அஞ்சாதே கொள்ளும், உமக்கு அருள்புரித்தோம்’ என்று எம்பெருமான் சோதிவாய் திறந்து அருளிச்செய்ததுகொண்டு தேறுதலடைந்து இத்திருமொழியைத் தலைரக் கட்டினரென்பது “அருளாயென்னு மின்தொண்டர்க்கின்னருள்புரியு மிடவெந்தை யெந்தைபிரானை” என்றவிதனால் நன்கு விளங்காநின்றதிறே.