திவ்யதேச பாசுரங்கள்

  1128.   
  சொல்லுவன் சொல்பொருள் தான்அவைஆய்*  சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும்ஆய்* 
  நல்அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகுஆயகச்சி*
  பல்லவன் வில்லவன் என்று உலகில்*  பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன்*
  மல்லையர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. (2)     

      விளக்கம்  


  • உலகத்திலுள்ள ஸகல ஸாநாந்ய சப்தங்களாலும் விசேஷசப்தமாகிய வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவனும், ஞானேந்திரியங்கள் ஐந்தாலும் அநுபவிக்கக்கூடியவனும்,படைத்தல் காத்தல் அழித்தலென்னும் முத்தொழில்களையும் முன்றுருக்கொண்டு நிர்வஹிக்குமவனுமான எம்பெருமான் கச்சித்திருப்பதியிலே பல்லவராஜனுடைய கைங்கரியங்களுக்குக் கொள்கலமான பரமேச்சுர விண்ணகரத்திலே எழுந்தருளியுள்ளான்----என்றாராயிற்று. சொல்லு என்றவிடத்து, உசுரம்-சாரியை; சொல் என்றபடி: சொல்லாவது உலகத்தில் வழங்கப்படும் சப்தராசிகள். கல் மண் முதலிய சொற்களெல்லாம் அவ்வப்பொருள்களுள் அந்தராத்மாவாய் உறைபவனான எம்பெருமானளவும் சொல்லிநிற்குமென்பது வேதாந்திகளின் கொள்கை. இது, வடமொழியில் அபர்யவஸாநவ்ருத்தி எனப்படும். இனி வன்சொல்லாவது என்றுமழியாமல் வலிதாயிருக்கக்கூடிய சப்தம்: அதுதான் வேதம்.


  1129.   
  கார் மன்னு நீள் விசும்பும்*  கடலும் சுடரும் நிலனும் மலையும்*
  தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்*  தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  தேர் மன்னு தென்னவனை முனையில்*  செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்,* 
  பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.          

      விளக்கம்  


  • விசும்பு, கடல், சுடர், நிலம், மலை முதலான பொருள்கள் உந்திக்கமலத்திலே மன்னியிருக்கையாவது இவற்றுக்கெல்லாம் பிறப்பிடமா யிருக்கை. இத்தால்---உலகங்களைப்படைப்பவனான நான்முகக் கடவுளைப் பிறப்பித்த உந்திக் கமலத்தை யுடையவன் என்பதாகக் கொள்க. உந்தித்தார்--தார்என்று புஷ்பத்துக்கும் பெயர்.


  1130.   
  உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்*  ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள்* 
  வரம் தரு மா மணிவண்ணன் இடம்*  மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல்*  நெடு வாயில் உக செருவில் முன நாள்* 
  பரந்தவன் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.   

      விளக்கம்  


  • திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான்மீது சயனித் தருள்பவனும் திருலத்திமாலையில் பேரருளாளப் பெருமாளாய் வரதராஜன் என்று திருநாமம்புண்டு ஸேவை ஸாகிப்பவனுமான எம்பெருமானே பரமேச்சுரவிண்ணகரத்தில் ஸ்ரீகைகுண்ட நாதனாகக் காட்சி தந்தருள்கிறானென்கிறார்;. மண்ணையிலிருந்த சத்துருக்கள் இவ்வரசனது வேற்படையின் வாயிலே மாண்டொழிந்தனராம். உக---உகுதலாவது பொடியாய்ப் போதல்.


  1131.   
  அண்டமும் எண் திசையும் நிலனும்*  அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன்*
  எந்தை பிரானது இடம்*  ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  விண்டவர் இண்டைக் குழாமுடனே*  விரைந்தார் இரிய செருவில் முனிந்து* 
  பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே. 

      விளக்கம்  


  • “செருவில் வளைத்தான்” என்று கூட்டி அந்வயித்து, செரு---போர்செய்கின்றவில் வில்லை, வளைத்தான் என்றுரைப்பாருமுண்டு. வளைத்தான் என்பதற்கு, சூழ்ந்துகொண்டானென்றும் பொருளுண்டாகையால், சிதறியோட வேண்டும்படி பகைவரை ஆக்ரமித்துக் கொண்டானென்றும் உரைக்கலாம்


  1132.   
  தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்*  துயர் தீர்த்து அரவம் வெருவ*
  முனநாள் பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்*  திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
  பாம்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுர விண்ணகரம்அதுவே.

      விளக்கம்  


  • “தென்னவனை” என்றவிடத்து- ஐகாரம் அசை. பாம்புடை-ஒவ்வொரு அரசனுக்கு ஒவ்வொன்று த்வஜமாயிருக்கும்: பல்லவராஜன் நாகலோகத்தளவுஞ் சென்று வந்தவனென்பதற்கு அறிகுறியாக நாகத்தைக் கொடியாகவுடையனாயிருப்பவனாம். (குருவம்சத்து அரசர்களில் துரியோதனன் அரவுநீள்கொடியோன் எனப்படுவன்.)


  1133.   
  திண் படைக் கோளரியின் உரு ஆய்*  திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
  புண் படப் போழ்ந்த பிரானது இடம்*  பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப*  விடை வெல் கொடி வேல்படை முன் உயர்த்த* 
  பண்பு உடைப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.   

      விளக்கம்  


  • பல்லவராஜனுடைய பெருமேன்மையைப் பேசுகிற மூன்றாமடியின் பிற்பகுதியில்“விடவெல் கொடி” என்றும், “விடை வெல்கொடி” என்றும், “விறல் வெல்கொடி” என்றும்மூன்று வகையான பாடங்கள் உள்ளனவாக வியாக்கியானம் காண்கிறது. முந்தின பாடத்தில்விடம் என்றது விஷமுடைத்தான நாகத்தைச் சொன்னபடியாய் நாகக்கொடியோன் என்றதாகிறது. இரண்டாவது பாடமே பெரும்பான்மையாக வழங்குகின்றது: விடை என்று இளம் பாம்புக்கும் பெயருண்டென்று பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார். எருது என்னும் பொருளையேகொண்டாலும் குறையில்லை: பல்லவனுக்கு ஆதிகாலமாக விருஷபக்கொடி இருந்ததென்றும், பின்பு நாகலோகத்தளவுஞ் சென்று வென்றுவந்தது காரணமாக நாகக்கொடி உண்டாயிற்றென்றும் வரலாறு உள்ளதாகச் சொல்லக் கேள்வியுண்டு, திண்படை - நரஸிம்ஹமூர்த்திக்கு நகங்கள் தவிர வேறு ஆயதமொன்று மில்லாமையினால் அந்த நகங்களையே இங்குத் திண்படை யென்கிறார்.


  1134.   
  இலகிய நீள் முடி மாவலி தன்பெரு வேள்வியில்*  மாண் உரு ஆய் முன நாள்* 
  சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  உலகு உடை மன்னவன் தென்னவனைக்*  கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ, 
  பல படை சாய வென்றான் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம்அதுவே.            

      விளக்கம்  


  • சலமொடு-‘ஜலம்’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால். மாவலியானவன் தத்தம் பண்ணுதற்காக விட்ட நீர்த்தாரையுடனே என்று பொருளாம்: ‘‘ரு’ என்ற வடசொல் சலமெனத் திரிந்ததென்று கொண்டால் க்ருத்ரிமவகையினால் என்றதாகிறது. சிறிய வடிவைக் காட்டிப் பெரிய வடிவாலே அளந்துகொண்ட க்ருத்ரிமம். பாண்டியராஜனுடைய நகரங்களுள் ஒன்றான கருவுடையும் பல்லவராஜன் வென்று கைக்கொண்டபடியைப் பின்னடிகளில் பேசினாராயிற்று.


  1135.   
  குடைத் திறல் மன்னவன் ஆய்*  ஒருகால் குரங்கைப் படையா*
  மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்*  அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி*
  விடைத் திறல் வில்லவன் நென்மெலியில்*  வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த* 
  படைத் திறல் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே.     

      விளக்கம்    1136.   
  பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து*  முன்னே ஒருகால் செருவில் உருமின்* 
  மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான்*  தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி* 
  கறை உடை வாள் மற மன்னர் கெட*  கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப்* 
  பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகரம் அதுவே. 

      விளக்கம்  


  • நப்பின்னையை அடைய விரும்பிய பெருமான் ஏழுகாளைகளை நெற்றியை உடையவளாதலால் பெருமான் அவளை அடைய விரும்பினான்.


  1137.   
  பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்கோன் பணிந்த*  பரமேச்சுரவிண்ணகர்மேல்* 
  கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம்தலைவன்*  கலிகன்றி குன்றாது உரைத்த* 
  சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்*  திரு மா மகள் தன் அருளால்*
  உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்*  செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே. (2)        

      விளக்கம்