திவ்யதேச பாசுரங்கள்

  2315.   
  அன்று இவ்உலகம்*  அளந்த அசைவேகொல்,*
  நின்றுஇருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
  கிடந்தானை*  கேடுஇல்சீரானை,*  முன் கஞ்சைக்
  கடந்தானை*  நெஞ்சமே! காண்.   

      விளக்கம்  


  • திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம். அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம். “கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.