திவ்யதேச பாசுரங்கள்

    2380.   
    தொட்ட படைஎட்டும்*  தோலாத வென்றியான்,* 
    அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று,* - குட்டத்துக்
    கோள்முதலை துஞ்ச*  குறித்துஎறிந்த சக்கரத்தான்* 
    தாள்முதலே நங்கட்குச் சார்வு  (2)

        விளக்கம்  


    • இப்பாட்டும் மேற்பாட்டும் காத்துப் பாசுரங்கள், திருக்கச்சி மாநகரில் திருக்கோயில் கொண்டிருக்கும் அஷ்டபுஜத் தெம்பெருமான் திருவடிகளே சரணம் என்கிறார். தொட்டபடை யெட்டும் தோலாத வென்றியான் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் திருவட்டபுயகரத் தெம்பெருமானை மங்களாசாஸ நஞ்செயும் திருப்பதிகத்தில் (2-8-3) “செம்பொன்னிலங்கு வலங்கை வாளி தின்சிலை தண்டொது சங்க மொள்வாள், உம்பரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே . . . அட்டபுயகரத்தே னென்றாரே“ என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும். 1. வாளி, 2. சிலை, 3. தணடு, 4. சங்கம், 5. வாள், 6. ஆழி, 7. கேடகம், 8. மலர் ஆக திவ்யாயுதங்களெட்டையும் திருவுள்ளம் பற்றித் தொட்டப்டை யெட்டும் என்கிறாரிங்கு. இப்படைகளைக்கொண்டு எங்கும் வெற்றியே பெற்றுனருவானென்கிறது. இவற்றைத் தரிக்குமிடத்து ஒரு ஆயாஸமின்றியே பூவேந்தினாற்போலே எந்தியிருப்பது தோன்ற, ‘தொட்ட‘ எனப்பட்டது. அட்ட புயகரத்தான் – அட்ட புயகரத்திலுள்ளவன் எறு பொருள். ‘அஷ்டபுஜன்‘ என்பது எம்பெருமானுடைய திருநாமம். எட்டுத் திருக்கைகளையுடையவன் என்று பொருள். க்ருஹம் என்னும் வடசொல் கரமெத்திரியும், ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் – அட்டபுயகரம். (திவ்யதேசத்தைச் சொன்னபடி) அவ்விடத்திலுள்ளவன் என்றதாயிற்று. ‘அட்ட புயவரகம்‘ என்பது அட்டபுயகரகம் என மருவிற்றென்றலும் பொருந்தும். அகரமாவது அக்ரஹாரம். திவ்யதேசத்தை முன்னிட்டே எம்பெருமானைப் பேசவேண்டுமென்னும் நியதி ஆழ்வார்கட்கு உள்ள தாதலால் ‘அஷ்டபுஜன்‘ என்னாமல் ‘அட்டபுயகரத்தான்‘ என்ன வேண்டிற்றென்ப. அப்பெருமான் பஞ்சேந்திரியங்களாகிற பலமுதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துடிக்கின்ற நம்மைக் காத்தருள வேண்டித் திருவட்டபுயகரத்திலே வந்து ஸந்நிதிபண்ணா நின்றான், அவன் திருவடிகளே தஞ்சம் – என்றாராயிற்று.


    1118.   
    திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
    முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 
    எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
    அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     

        விளக்கம்  


    • ஒரு பெரியவர் வந்து ஸேவைஸாதித்தார், அப்போதைய நிலைமை இப்படிப்பட்டிருந்ததென்கிறாள் பரகாலநாயகி; சிவனும் பிரமனும் கண்டு ஆச்சரியப்படும்படியாகவும், மூவுலகத்திலுள்ளவர்களும் அலையெறிகின்ற கடல்போல் ஸ்தோத்ர கோஷங்களைச் செய்துகொண்டு வணங்கவும், நெருப்புப் போன்ற உளைமயிர்களோடும் வாள்போன்ற கோரப்பற்களோடுங்கூடி, இரணியன் இருபிளவாம்படியாக நரசிங்கவுருக்கொண்டு தோற்றின இம்மஹாநுபாவர் ஆர்? என்று நான் கேட்டேன்; அதற்கு அவர் “நான் அட்ட புயகரத்தேன்-அட்டபுயகரத்தில் வஸிப்பவன் காண்; ‘ அன்றொருகால் ப்ரஹ்லாதனுக்காக வந்து உதவினமாத்திரமன்று; உனக்கு உதவுகைக்காக இங்கே வந்து ஸமயம் பார்த்து நிற்கிறவனன்றோ நான்’ - என்றார் -என்கிறாள்.


    1119.   
    வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
    செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 
    வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
    அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   

        விளக்கம்  


    • 'வேதமுரைத்திமையோர் வணங்கும்” என்ற விசேஷணத்தைச் செந்தமிழ் பாடுவார்க்கு இயைக்கலாமென்பர் சிலர்.


    1120.   
    செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
    உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 
    வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
    இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 

        விளக்கம்  


    • அஷ்டபுஜனாகையாலே எட்டுத் திருக்கைகளிலும் எட்டு வஸ்துக்களையும் தரித்துக் கொண்டு வந்தமை சொல்லுகிறது முன்னடிகளில். 1. வாளி. 2. சிலை. 3. தண்டு. 4.சங்கம் 5. வாள். 6. ஆழி. 7.கேடகம் . 8.மலர் என்பன. கேடகம் எனினும் கெடயம் எனினும் கடகம் எனினும் ஒக்கும். மலர் என்பது ஆயதமன்றாகிலும் அழகுக்குடலாக ஏந்தினதாம். மன்மதன் மலர்களை ஆயதமாகவுடையனாதலால் மலர்க்கு ஆயதகோடியிலும் அந்வயமுண்டென்னலாம். எற்றே !-- இது எத்தன்மைத்து! என வியந்து கூறுவது. அன்று கம்ஸனுடைய அரண்மனை வாசலிற் புகும்போது தன்மேற் சீறிவந்த குவலயாபீடமென்னும் மதயானையின் கொம்பை முறித்து விலஷணமான வடிவழகு தோன்ற நின்றாப்போலே வந்து நிற்கிறாரே, இவர் ஆர்கொல்! என்ன, அட்டபுயகரத்தேன் என்றார்.


    1121.   
    மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
    அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 
    வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
    அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 

        விளக்கம்  



    1122.   
    கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
    மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*
    நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
    அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    

        விளக்கம்  


    • “கலைகள்” என்கிற சொல் பொதுவாக சாஸ்திரங்களை யெல்லாம் சொல்லுமாயினும், இவ்விடத்தில் பிரகரணபலத்தால் வேதாந்தபாகத்தைச் சொல்லுகிறது. வேதம் என்ற சொல் - கர்மகாண்டமும் ப்ரஹ்மகாண்டமுமாகிய உபயபாகத்திற்கும் பொதுவான சொல்லாயினும் இங்கே கர்மகாண்டத்தளவிலே நிற்கிறது, கலைகள் என்பதற்கு ப்ரஹ்மகாண்டத்தைப் பொருளாகக் கொண்டதனால். நீதிநூல்--இதிஹாஸங்களெல்லாம் நீதியையுணர்த்தும் நூல்களாம். கற்பம்--வேதங்களில் விதிக்கப்பட்ட கருமங்களை அநுஷ்டிக்க வேண்டிய முறைமைகளையுணர்த்தும் நூல் கல்பஸூத்ரமெனப்படும். சொல்--‘இது சுத்தமான சொல், இது அசுத்தமான சொல்’ என்று அறிவதற்கு உறுப்பான வியாகரண சாஸ்த்ரம். பொருள்--வேதங்களின் உண்மைப்பொருளை நன்கு விசாரித்து உணர்த்தும் நூலாகிய மீமாம்ஸை. ஆகிய இப்படிப்பட்ட சாஸ்த்ரங்களை யெல்லாம் தானான தன்மையினாலும் முனிவர்களை அநுப்ரவேசித்த தன்மையினாலும் வெளியிட்டவன் எம்பெருமானேயாவன்.


    1123.   
    எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*
    தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    

        விளக்கம்  


    • மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிடாதே உள்ளிழிந்து எவ்வளவுதூரம் ஆராய்ந்து பார்த்தாலும் இப்பெரியவருடைய படிகளொன்றும் தெரிகின்றதில்லை; இவர் இங்குவந்தது ஸ்த்ரிகளுடைய ஸர்வஸ்வத்தையும் கொள்ளை கொள்ளுதற்காகவேயாம்; இவருடைய வடிவோ பூவையும் காயாவும் நீலமும் மேகமும் போன்றுள்ளது; இப்படிப்பட்ட இவர் ஆர்? என்றேன்; நான்தான் அட்டபுயகரத்தேன் என்றார்---என்கிறாள். எங்ஙனும் என்ற விடத்துள்ள உம்மையைப்பிரித்து எண்ணில் என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. அறிகிலம்=அறியகில்லோம் என்றவாறு. ஏந்திழையார்சங்கும் மனமும்நிறைவுமெல்லாம் தம்மனவாகப் புகுந்து ஸ்ரீ ‘ஏந்திழையார்’ என்று பொதுவாக மாதர்களைச் சொல்லுகிறது; அவர்களுடைய சங்கும் மனமும் நிறைவும் தம்மனவாகப் புகுகையாவது -இவரைக்கண்டவுடனே விரும்பினபடி கலவிசெய்யப் பெறாமையாலே உடல் இளைத்துக் கைவளைகள் கழன்றொழியும்படியும், நெஞ்சு இவரிடத்திலேயே பதிந்திருக்கும்படியும் அடக்கத்தை விட்டுப் பதறி மேல்விழும்படியும் செய்து கொள்ளுகை. தம்மன--தம்முடையவை.


    1124.   
    முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
    சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 
    எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
    அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.

        விளக்கம்  


    • தேனொழுகுகின்ற திருத்துழாழ்மாலையைச் சாத்திக் கொண்டிருந்த அழகும் சந்தனக்காப்பு சாத்திக்கொண்டிருந்த அழகும்; என்ன சொல்லுவேன்!; அன்றியும், திருக்கண்களும் திருமார்பும் திருத்தோள்களும் திருப்பவளமும் சித்திரமெழுதவல்லவர்களால் எழுதப்பட்டவைபோன்று எவ்வகைக் குறையும் கூறவொண்ணாதபடி அழகு விஞ்சியிருந்தன; இப்படிப்பட்ட மஹாநுபாவர் யார்? என்றேன்; நான் தான் அட்டபுயகரத்தேன் என்றார்--என்கிறாள். (மேனி அஞ்சாந்து இழுசிய கோலம்.) முன்பு க்ருஷ்ணாவதாரத்தில் கூனியிடம் இரந்துபெற்ற அழகிய சந்தனத்தைப் பூசிக்கொண்டு பொலிந்த அழகை ஏட்டிலே கேட்டிருந்தோம்; இன்று நேரே காணப்பெற்றோம் என்கிறாள் போலும். ஓவிநல்லார் = சித்திரமெழுதுபவர்கட்கு ‘ஓவியர்’ என்று பெயர்; நல் ஓவியர் என்க. “ஓவினல்லார்” எனப்பாடங்கொண்டு, ‘ஓவில் நல்லார்’ என்று பிரித்து, ஓவில்--சித்திரமெழுதுவதில், நல்லார்--சிறந்தவர்கள் என்றுபொருள் கொள்வாருமுளர். “ஓவிநல்லாரெழுதிய” என்ற அடைமொழியைத் தாமரையிலே அந்வயித்து, சித்திரக்காரரால் எழுதப்பட்ட தாமரை யாதொன்றுண்டு, அதுபோன்ற திருக்கண்கள் என்றுரைப்பாருமுண்டு.


    1125.   
    மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
    அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 
    காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
    என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        

        விளக்கம்  


    • என்முன்னே வந்து தோற்றின பெரியவர் தனியராய் வந்திலர்; நித்யஸுரிகள் சுற்றிலும் சூழ்ந்து வணங்காநிற்க வந்தார்; வாயில் நல்வேதமோதும் வேதியரென்று விளங்கும்படி வேதங்களை ஓதிக்கொண்டு வந்தார்; அருகில் திருமகள் தேவியாகத் திகழ்ந்தனள்; இறாபுறத்திலும் திருவாழி திருச்சங்குகள் பொலிந்தன: கருநெய்தற்பூவோ! கடல்தானோ! என்னும்படியான வடிவு தோன்றிற்று; அவ்வடிவழகுக்கும் கண்ணழகுக்கும் எல்லை காணமுடியவேயில்லை: நம்முடைய பிராணண்தான் இங்ஙனே உருவெடுத்து வெளித்தோன்றுகின்றதோ என்று நினைக்கலாம்படி பரமப்ரிதிக்கு இலக்காயிருந்தார். இப்படி நித்யஸுரிகளும் பிராட்டிமாரும் திவ்யாயுதங்களும் திவ்யமங்கள விக்ரஹமும் ஸ்பஷ்டமாக விளங்கச்செய்தேயும் இவரை இன்னாரென் றறுதியிடமாட்டாத நான் இவரார் கொல்! என்றேன்; ‘நான் தான் அட்டபுககரத்தேன’; என்றார்--என்கிறாள். மடந்தை--பத்தொன்பது வயதுள்ள பெண்: பொதுவாகப் பெண்பாலுக்கும் பெயராக வழங்கும்:


    1126.   
    தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
    வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 
    நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
    அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   

        விளக்கம்  


    • என்னுடைய கைவளைகளும் என்னுடைய நெஞ்சமும் என் பக்கலில் சிறிதும் தங்குகின்றன வில்லை; அவரிடத்திலேயே சென்று சேர்ந்துவிட்டன; (அதாவது--உடம்பு மெலிந்து மூர்ச்சையுமடைந்தேன் என்றவாறு.) இப்படி என்னிடத்திலுள்ளவற்றையெல்லாம் கொள்ளைகொண்ட பின்பும் ‘ இவளிடத்தில் இன்னமும் ஏதாவது தங்கிகிருப்பதுண்டாகில் அதையும் கொள்வோம்’ என்றெண்ணி என் இ;டையை உற்றுநோக்கி ஏதோவொரு வார்த்தையும் வாய்விட்டுச் சொன்னார்; அவர் பார்க்கிற பார்வையோ கண்ணாலே கொளுத்துவதுபோல் கொடிதாயிராநின்றது; இவர் நம்மை ரக்ஷிக்க வந்தவரா? அல்லதுபக்ஷிக்க வந்தவரா என்று எனக்கு விளங்கவில்லை; இவரார் கொல்? என்று கேட்கவும் எனக்கு அச்சமுண்டாகிவிட்டது; என்னுடைய அச்சத்தைத் தெரிந்துகொண்டு அவர் தாமே ‘என்னை வேற்றுருவாக நினைத்து அஞ்சவேண்டர் நீ அஞ்சவேண்டாதபடி அட்டபுயகரத்திலே எனியனாய் வந்து நிற்கிறவனன்றோ நான்’ என்றார்--என்கிறாள், “என்வளையும் இவர்க்கு நில்ல!” என்றது - இவர்க்காகி, என்னிடத்திலே நில்லா என்றபடி. “இங்கே குடியிருப்பாய் அவர்க்காக வர்த்திக்கின்றனவா யிருந்தன” என்பது வியாக்கியான வருளிச்செயல். - (சத்தியம்) என்ற வடசொல் தஞ்சமெனத் திரிந்தது; உண்மையாக என்கை.


    1127.   
    மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
    தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 
    கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
    குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 

        விளக்கம்  


    • முற்காலத்தில் பலபல அரசர்கள் பல திவ்யதேசங்களை அபிமானித்து ஸநிநிதி ஜீர்ணோத்தாரணம் முதலிய சிறப்புகளைச் செய்துவந்தார்கள்; இத்திருவட்டபுகரத்தை வயிரமேக னென்னும் ஒரு தொண்டைநாட்டரசன் அபிமாநித்திருந்தமையால் அதனை யருளிச்செய்கிறார் முன்னடிகளில்.