திவ்யதேச பாசுரங்கள்

  1148.   
  இருந்தண் மாநிலம் ஏனம்அது ஆய்*  வளைமருப்பினில் அகத்துஒடுக்கி* 
  கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்*  கமலநல்மலர்த்தேறல் அருந்தி*
  இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி*  அம் பொழிலூடே* 
  செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு*  திருவயிந்திரபுரமே. (2)   

      விளக்கம்  


  • “உளங்கனிந்திருக்கு மடியவர் தங்களுள்ளத்துள் ஊறிய தேன்” என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும், 2. “போந்ததென் னெஞ்சென்னும் பொண்வண்டு உனதடிப்போதிலொன் சீராந் தெளிதேனுன்டு அமர்ந்திடவேண்டி” என்கிறபடியே ஆசார்ய பாதர விந்த ஸேவை யாகிற மதுவைப் பருகுதலையே விரதமாக வுடைத்தாகியும், ஊர்த்த்வகதிக்கு ஸாதநமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கரிமஞ்ஞாநங்களை யுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர் களை வண்டாகச் சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் பகவத் பாகவத போக்யதைகளை அநுபவித்த ஆநந்தத்திற்குப் போக்குவீடாக, 3. “பண்கள் தலைக்கொள்ளப்பாடி” என்கிறபடியே நாரதமுனிவர் திருப்பாணாழ்வார்தம்பிராம்மார் முதலானாரைலப் போலே இசைபாடுவ துண்டாகையாலே”இன்னிசை முரன்றெழும்” என்றது.


  1149.   
  மின்னும் ஆழி அங்கையவன்*  செய்யவள் உறை தரு திரு மார்பன்* 
  பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய*  பரன் இடம் வரைச் சாரல்* 
  பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர*  பிணி அவிழ் கமலத்துத்* 
  தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு* திருவயிந்திரபுரமே. 

      விளக்கம்    1150.   
  வையம் ஏழும் உண்டு ஆல் இலை*  வைகிய மாயவன்*
  அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்*  மெய்தகு வரைச் சாரல்* 
  மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய*  முல்லை அம் கொடி ஆட* 
  செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு*  திருவயிந்திரபுரமே.

      விளக்கம்  


  • இத்திருப்பதியிலுள்ள தெய்வநாயகப் பெருமாளுக்கு (தாஸஸத்யன்) என்றொரு திருநாமமுண்டாகையால் ‘அடியவர்க்கு மெய்யன்’


  1151.   
  மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்தன்*  மார்புஅகம் இரு பிளவாக்* 
  கூறு கொண்டு அவன் குலமகற்கு*  இன் அருள் கொடுத்தவன் இடம்*
  மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை*  விசும்பு உற மணி நீழல்* 
  சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ்*  திருவயிந்திரபுரமே.   

      விளக்கம்  


  • குலமகற்கு = ‘குலம்’ என்ற சொல் சிறப்புப் பொருள் பெறும். மகன் +கு; மகற்கு. தகை விசும்பு = வினைத்தொகை; தகைகின்ற விசும்பு. இது அதிசயோக்தி.


  1152.   
  ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று*  அகல் இடம் அளந்து*
  ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்*  பொன் மலர் திகழ்*
  வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்*  குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி* 
  தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு*  திருவயிந்திரபுரமே.       

      விளக்கம்  


  • குரங்கு+இனம், குரக்கினம்; குரங்குகளைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். நின்றவா நில்லா நெஞ்சினை யுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷூத்ர பலார்த்திகளான ஸம்ஸாரிகளுக்கும் வாநரங்களுக்கும் ஸாம்யம் பொருந்துமன்றோ: இப்படிப்பட்ட ஸம்ஸாரிகள் விஷய போகங்களிலே மண்டித் திரியாநிற்கச் செய்தேயும் பலங்கனி போன்ற பகவத் குணங்களையும் இடையிடையே அநுபவித்து வாழும்படியைக் கூறியவாறு. வேங்கைமரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய இவற்றின் பூக்கள் பொன்னிறமா யிருக்குமாதலால் ‘ பொன்மலர்திகழ்’ என்றது. இம்மரங்களைச் சொன்னது (ஸ்வாபதேசத்தில்) நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்திரங்களைச் சொன்னபடி, “குதிகொடு” என்றதில், குதி-முதனிலைத் தொழிற் பெயர்: “கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்” என்றார்பெரியாழ்வாரும்.


  1153.   
  கூன் உலாவிய மடந்தைதன்*  கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
  கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்*  கவின் ஆரும்* 
  வான் உலாவிய மதி தவழ் மால் வரை*  மா மதிள் புடை சூழ* 
  தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய*  திருவயிந்திரபுரமே.        

      விளக்கம்  


  • சந்திரமண்டலத்தைளவும் ஓங்கின மலைகளாலும் மதிள்களாலும் பொழில்களாலும் சூழப்பெற்றதாம் இத்தலம், “மால்வரை மாமதிள்” என்றதை உம்மைத் தொகையாகக் கொள்ளாமல் உவமைத் தொகையாகக் கொண்டு, பெரிய மலைபோன்ற மதிள்களாற் சூழப்பெற்றதென்றலுமொன்று.


  1154.   
  மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்*  விலங்கலின்மிசை இலங்கை மன்னன்*
  நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்*  மணி வரை நீழல்* 
  அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்*  பெடையொடும் இனிது அமர* 
  செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு*  தண் திருவயிந்திரபுரமே.     

      விளக்கம்  


  • விலங்கலின் மிசையிலங்கை= ‘விலங்கல்’ என்று மலைக்குப் பெயர்; ஸூவேல பர்வதத்தின் மேலே த்ரிகூடத்தின்மீது இலங்காபுரி அமைக்கப்பட்டிருந்த தென்ப. அப்படிப்பட்ட இலங்கைக்கு அரசனாகையாலே ‘நமக்கு ஒருவராலும் ஒருநாளும் அழிவில்லை’ என்று மார்பு நெறித்துக் கிடந்தவனுடைய முடிகள் பத்தையும் நீறாக்கின பெருமிடுக்கன நித்யவாஸம் பண்ணுமிடம் திருவயிந்திரபுரம். (மணிவரை நிழலித்யாதி.) இத்தலம் மலைசூழ்ந்ததாதலால் அம்மலையினருகே செந்நெற் கழனிகளிலே தாமரைக் தடாகங்களுள்ளன; அங்குள்ள தாமரை மலர்களிரே அன்னப் பறவைகள் துணையோடும் பிரியாதே ரமிக்க, அதற்குப் பாங்காகச் சாமரம் வீசுமாபோலே செந்நெற் கதிர்கள் இனிது வீசுகின்றனவாம் அன்னமாவது, நீரும்பாலும் கலந்திருந்தால் அவற்றைப் பிரித்தெடுப்பதுபோல சாஸ்த்ரங்களில் ஸாரமாயும் அஸாரமாயு முள்ளவற்றைப் பகுத்தறிய வல்லவர்களாயும், “அன்னமதா யிருந்து அங்கு அறநூலுரைத்த” என்கிறபடியே ஹம்ஸரூபியாய் எம்பெருமான் சாஸ்த்ரங்களை யுபதேசத்தாப்போலே சிஷ்யர்களுக்கு சாஸ்த்ரங்களைக் கற்பிப்பவர்களாயும், ஸ்ரீஅன்னம் ஒரு போதும் சேற்றுநீரில் பொருந்தாது” என்கிறபடியே அன்னம் சேற்றில் பொருந்தாப்போலே “பிறப்பாம் பொல்லா வருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்து-அழுந்தார்” என்கிறபடியே ஸம்ஸாரமாகிற பெருஞ்சேற்றிலே பொருந்தாதவர் களாயுமிருக்கிற கூரத்தாழ்வான் போல்வராரான மஹான்களை அன்னமென்கிறது ஸ்வாபதேசத்தில். “பெடையோடும்” என் கையாலே க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்துகொண்டே பகவத் பாகவத விஷயங்களில் ப்ராவண்யமுற்றிருக்கும்படியைச் சொல்லுகிறது. “அரவிந்தத்தமளி” என்றது எம்பெருமானுடையவும் ஆசார்யனுடையவும் பாதாரவிந்தங்களைச் சொன்னபடி.


  1155.   
  விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்*  வில் இறுத்து*  அடல் மழைக்கு- 
  நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்*  நிலவிய இடம் தடம் ஆர்* 
  வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு*  மலை வளர் அகில் உந்தித்* 
  திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.  

      விளக்கம்  


  • (தடமார்வரைவள மித்யாதி) ஆறுகள் பெரு வெள்ளமாய்ப் பெருகும்போது யானைத் தந்தங்களையும் அகில் மரங்களையும் மற்றும் பலப்பல மணிமாணிக்கங்களையும் கொழித்துக்கொண்டு வருகிற வழக்கமாகையாலும் அங்ஙனமே கவிகளும் கவிபாடுகிற வழக்கமையாலும், இங்கே கருடநதி ப்ரவஹிக்கும்படியை வருணிக்கிறாராயிற்று.


  1156.   
  வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*  விசயனுக்கு ஆய்*
  மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்*  குலவு தண் வரைச் சாரல்* 
  கால் கொள் கண் கொடி கைஎழ*  கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்* 
  சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு*  திருவயிந்திரபுரமே.       

      விளக்கம்  


  • மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலரும் எதிரிகளாய் நிறைந்து கிடந்த பாரதயுத்தத்திலே பீஷ்ம த்தோணாதிகளான மஹாவீரர் பிரயோகித்த ஆக்நோயஸ்த்ரம் முதலியவற்றால் அர்ஜூநனது தேர்அழிந்துபோகாதபடி தனது திருவடிகளின் ஸம்பந்தத்தாலே உறுதியாயிருக்கச்செய்து, அந்த அர்ஜூநனால் தாங்கமுடியாத அஸ்த்ர சஸ்த்ரங்கள் வந்தால் தன் மார்பிலே ஏற்றுக் கொள்ளும்படி அவன் தேரின் முன்புறத்திலே ஸாரதியாய்த் தங்கியிருந்து வெற்றி பெறுவித்த வீரன் வாழுமிடம் திருவயிந்திபுரம். அஃது எப்படிப்பட்ட தென்னில் வெற்றிலைத் தோட்டங்களும் பாக்குச் சோலைகளும் நீர்வாய்ப்புள்ள கழனிகளும் நிறையப்பெற்றது.


  1157.   
  மூவர் ஆகிய ஒருவனை*  மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை* 
  தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச*  தண் திருவயிந்திரபுரத்து* 
  மேவு சோதியை வேல் வலவன்*  கலிகன்றி விரித்து உரைத்த* 
  பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்*  பாவங்கள் பயிலாவே  (2)

      விளக்கம்    1345.   
  முடி உடை அமரர்க்கு இடர் செய்யும்*  அசுரர் தம் பெருமானை*  அன்று அரி ஆய் 
  மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட* மாயனார் மன்னிய கோயில்*
  படியிடை மாடத்து அடியிடைத் தூணில்*  பதித்த பல் மணிகளின் ஒளியால்* 
  விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய*  திருவெள்ளியங்குடி அதுவே.    

      விளக்கம்  


  • இத்தலத்தில் திருமாளிகைகள் எல்லாம் நவமணிகள் அழுத்தப் பெற்றிருத்தலால் அவற்றின் ஒளி இடைவிடாது விளங்காநின்றமையால் ‘இப்போது பகல், இப்போது இரவு’ என்று அறியக் கூடவில்லையென்பன பின்னடிகள். இங்ஙனே வருணித்தல் பொய்யுரையாகா தோவென்று சிலர் சங்கிப்பர்; இத்தலம் இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்ததாக அமைய வேணும் என்னுமாவல் ஆழ்வார்க்கு உள்ளதாதலால் அதுதோன்ற இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க. ஆதராதிசயத்தினால் சிறப்பித்துக் கூறுதல் தகும்.