திவ்யதேச பாசுரங்கள்

  741.   

  அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி* 
  வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்* 

  செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)       


      விளக்கம்    742.   
  வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி* 
  மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்* 
  செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* 
  அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.  

      விளக்கம்  


  • விச்வாமித்ர முனிவன் தனது வேள்வியைக் காக்கும்பொருட்டு தசரத சக்கரவர்த்தியினிடம் அநுமதி பெற்று இராமபிரானை இளையபெருமாளுடன் அழைத்துக்கொண்டு போனபொழுது அம்முனிவ னாச்ரமத்திற்குச் செல்லும் வழியிடையே மிக்க செருக்குடன் வந்து எதிர்த்த தாடகையை ஸ்ரீராமன் முனிவனது கட்டளைப்படி பெண்ணென்று பாராமற் போர்செய்து கொன்றது மன்றி, பின்பு முனிவன் செய்த யாகத்தில் தீங்குவிளைக்க வந்த ஸுபாஹூ முதலிய பல அரக்கர்களையுங் கொன்று மாரீசனை வாயவ்யாஸ்தரத்தினாற் கடலிலே தள்ளிவிட்டு யாகத்தை நிறைவேற்றுவித்தனன் என வரலாறு அறிக. (அந்தணர்கள் ஒரு மூவாயிரவர்.) நாங்கை நாலாயிரம் தில்லை மூவாயிரம் என்ற ப்ரஸித்தி காண்க. மூவாயிர நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காயசோதித், தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரக்கூடஞ்சென்று சேர்மின்களே என்றார் திருமங்கையாழ்வாரும்.


  743.   
  செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*  
  வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*
  தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
  எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*

      விளக்கம்  


  • நாபன்காமடிமில் எவ்வரி என்றே நாடெங்கும் ஓதுவர். அப்பாடத்துக்கு ஏவரி என்பது எவ்வரியென்று விகாரப்பட்டதெனக்கொண்டு ஏ-அம்பு தொடுப்பதற்கு உரிய வரி - நீண்ட என்று கஷ்டப்பட்டு பொருள் கொள்ளலாமாயினும், வேறொருத்தரால் அடக்கியாள வொண்ணாதே காணவே ப்ரதிபக்ஷம் முடியும்படியான ஸ்ரீசார்ங்கம். என்ற வியாக்கியானத்திற்கு அப்பாடம் சேராது. எவ்வரு என்றோதுவதே சிறக்கும். ஏவரு என்பது எதுகை நோக்கி எவ்வரு எனக்குறுக்கலும் விரித்தலுமாகிய விகாரங்களை யடைந்தது ஏவு-ஏவுதல்,அடக்கியாளுதல்; (முதனிலைத் தொழிற்பெயர்) அரு-ஒண்ணாத; எனவே, அடக்கியாள முடியாத என்றதாயிற்று. (இறைஞ்சுவா ரிணையடியே இறைஞ்சினேனே) இராமனுக்கு அடியவனான பரதனுக்குஅடிமை பூண்டொழுகின சத்ருக்நன் போலப் பாகவத தாஸனாக வேண்டுமென அவாவுகின்றார்.


  744.   
  தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்* 
  பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து* 
  சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே   

      விளக்கம்  


  • ஸ்ரீராமாவதாரத்திலே சித்ரகூட பர்வதத்தில் எழுந்தருளியிருந்த இருப்பைப் பிற்பட்டார் கேட்டு அநுபவிக்கப் பெறுவதேயன்றித் தாம்கண்டு அநுபவிக்க பெறாமல் கண்விடாய்த்து நிற்கிற குறைதீர எக்காலத்திலு முள்ளார் அநுபிவக்கைக்காக அங்ஙனமே தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கின்றனன் என்பது பின்னடிகளின் உட்கோள்.


  745.   
  வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
  கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*
  சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
  தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

      விளக்கம்  


  • உரை:1

   இராமபிரான் பரசுராமனிடமிருந்து விஷ்ணுதநுஸ்ஸைப் பெற்று அவனை வென்றபோது அங்குவந்து தன்னைக் கொண்டாடிய தேவர்களுள் வருணனிடத்திலே அவ்வில்லை கொடுத்து அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்து உரிய ஸமயத்தில் தன்னிடம் கொணர்ந்து கொடுக்குமாறு சொல்ல அங்ஙனமே அதனை வாங்கிச்சென்று நன்கு பாதுகாத்து வைத்திருந்த வருணன் பின்பு ஸ்ரீராமன் வநவாஸம்புக்குத் தண்டகாரணியத்தில் அகஸ்தியாச்ரமத்திற்கு எழுந்தருளினபொழுது அதனை அம்பறாத்தூணியுடனும் வாளுடனும் அம்முனிவர் தர பெருமாள் பெற்றுக் கொண்டனன் என்பது இங்கு அறியத்தக்கது. சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்தது இளைய பெருமாளின் செய்கையாயினும் அதனைப் பெருமாள் மேல் ஏற்றிச் சொன்னது, இராமனது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி இவன் செய்தனனாதலின் ப்ரயோஜ்ய கர்த்தாவின் வினையாதல்பற்றி யென்க. அன்றியும் என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால் அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனுடைய செயலை இராமன்மேல் ஒற்றுமை நயம்பற்றி ஏற்றிச் சொல்லுதல் தகுதியே. சூர்ப்பணகை ராமலக்ஷ்மணர்களிடம் வரும்போது அழகிய வடிவமெடுத்து வந்தனளாதலால் கலைவணக்கு நோக்கரக்கி என்றார். மானின் விழிபெற்ற மயில் வந்ததெனவந்தாள் என்றார் கம்பரும். இங்கே மூக்கு என்றது- மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.

   உரை:2

   விராதனைக் கொன்று தமிழ்முனிவன் தந்த வில்லை வாங்கிக் கொண்டு சூர்ப்பனகை மூக்கை அறுத்து கரதூஷணர்களையும் கொன்று மானைத் துரத்திச் சென்றவன்.


  746.   
  தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
  வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*
  சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே* 

      விளக்கம்  


  • “தனமருவு வைதேகி” என்றவிடத்து தனம் என்பதை ?????? மென்ற வடசொல்லின் விகாரமாகக் கொண்டு வேறுவகையாகவும் பொருள் கூறலாமாயினும் விஷொஸ்ரீ என்றபடி பெருமாளுக்கு மென்ற வடசொல் விகாரம்.


  747.   
  குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி* 
  எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
  திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*

      விளக்கம்  


  • கடலை அம்பபெய்திப் பிரித்து மறுகரையை அடைந்து அரக்கர்களையும் இலங்கை வேந்தனையும் கொன்று தம்பிக்கு அரசு கொடுத்து சீதையோடு சிம்மாசனத்தில் அமர்ந்தவன்.


  748.   
  அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்* 
  தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்* 
   
  செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*

      விளக்கம்  


  • ஆராவமுதமாகவுள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அங்ஙனமேயுள்ள அப்பிரானுடைய சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும் ஈடாகாதென்னுங் கருத்தால், இன்னமுதமதியோம் என்கிறார். இன்னமுதமதியோ மொன்றே என்றும் பாடமுண்டாம்: அமுதம் - அமுதத்தை, ஒன்று - ஒரு பொருளாக மதியோம் என்றவாறு. குசலவர் இராமாயண ப்ரவசநஞ்செய்து அதனால் உலகத்தை நன்னெறியில் உய்த்தலும், இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆளுதலும் தோன்ற உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.


  749.   
  செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த 
  நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் 
   
  திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் 
  உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே 

      விளக்கம்  


  • தன்னை அக்காலத்திற் காணப்பெறாத குறைதீரப் பிற்காலத்தார் காணும்படி தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில் அப்படிப்பட்ட திவ்விய மங்கள விக்ரஹத்தோடு நித்யவாஸம் செய்தருளாநின்ற எம்பெருமானை இறையும்மறவாது எப்பொழுதும் தியானிப்போமாகில் அக்காலத்தில் எம்பெருமானை அநுபவிக்கப் பெற்றிலோமே! என்றுவரும் துன்பத்தை அடையமாட்டோம் என்றவாறு.


  750.   
  அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
  வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி* 
  சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* 
  என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*  

      விளக்கம்  


  • இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான் ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர். அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்களும் அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர். ஸ்ரீராமபிரான் பரமபதத்துக்கு சென்றபோழ்து சங்க சக்கரங்களிரண்டையும் தரிக்கிற மேற்பாற் கரமிரண்டுந்தோன்றப் பெற்றமை விளங்க அசுரர் தம்மைவென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்குந்தோன்ற என்றார். இந்த அடைமொழியை வீற்றிருந்த என்பதனோடாவது சித்ரகூடந்தன்னுள் நின்றான் என்பதனோடாவது இயைத்தலும் ஏற்கும். அடலரவப் பகையேறி என்றது, தன்தாமமேவி என்றதனோடும் அசுரர் தம்மை வென்று என்றதனோடும் இயைக்கத்தக்கது.


  751.   
  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* 
  எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* 
   
  கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* 
  நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*  

      விளக்கம்  


  • தில்லைத் திருச்சித்ரக்கூடத் தெம்பெருமான் விஷயமாக ஸ்ரீகுலசேகராழ்வார் அருளிச்செய்த பரமபோக்யமான இத்திருமொழியை ஒதவல்லவர்கள் எம்பெருமானருளாற் பரமபதமடைவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டினராயிற்று. ஸ்ரீராமகதை உலகத்திலுள்ளவளவும் தாம் ஜீவித்திருக்குமாறு ஸ்ரீராமனிடம் வரம்வேண்டிப் பெற்றவருமான திருவடி, இராமபிரான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவனைவிட்டு பிரியமாட்டாது மனமிரங்க அந்த உத்தம பக்த சிகாமணியை தானும் விடமாட்டாமல் ஸ்ரீராமன் அவருடனே சித்ரகூடத்தில் வந்து வீற்றிருக்கின்றனனாம்.


  1158.   
  ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து* 
  தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்* 
  கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்* 
  தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2) 

      விளக்கம்  


  • ‘இமையோருலகைத் தமதாக ஆளகிற்பீர்!, தில்லைத் திருச்சித்ரகூடஞ் சென்று சேர்மின்கள்; வாடவாடத் தவஞ்செய்யவேண்டா” என்கிறார். வேதங்களில் பி ராமணர்கள் யாகம் செய்தும் தானஞ்செய்தும் தவம்புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் என்று ஓதப்பட்டுள்ளது. சரீரத்தை வருத்தப்பட்டுச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் ‘அது தப்பிற்று; இது தப்பிற்று’ என்று சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்கவேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதைக் காட்டிலும் தில்லைத்திருச் சித்திரகூடத்தைச் சென்று சேர்ந்தால் அங்குள்ள எம்பெருமானுடைய திருவருளுக்கு இலக்காகி எளிதாக வாழலாமாகையால் அது செய்யுந்களென்று முமுக்ஷூக்களை நோக்கி உபதேசிக்கிறார்.


  1159.   
  காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*
  ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
  வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
  தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே.  

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் ‘உயிர்காவலிட்டு” என்றதை விவரிக்கிறார் “காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால் நுகரிந்து” என்று; இளம்பிஞ்சுகளைத் தின்றும் வெய்யிலிலும் காற்றிலுமுலர்ந்து பசையற்ற பழங்களைப் புசித்தும் வீசுகின்ற வெட்டிய காற்றைப் பருகியும் பஞ்சாக்நிமத்யத்தில் நின்று கொண்டு தவஞ்செய்தலாகிற வீண்தொழிலை விட்டிட்டுத் தில்லைத் திருச்சித்ர கூடஞ்சென்று சேர்மின்களென்கிறார். பிள்ளைப் பெருமாளையங்கார் இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றித் திருவரங்கக் கலம்பகத்தில் “காயிலை தின்றுங்கானிலுறைந்துங் கதிதேடித், தீபிடைநின்றும் பூவலம் வந்துந் திரிவீர்காள், தாயிலுமன்பன் பூமகள் நண்பன் தடநாகப், பாயன் முகுந்தன் கோயிலரங்கம் பணிவீரே” என்றருளிய பாசுரம் நோக்கத்தக்கது.


  1160.   
  வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த* 
  வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*
  பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த* 
  செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்    1161.   
  அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த* 
  பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்* 
  கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்* 
  திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. 

      விளக்கம்    1162.   
  கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
  தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்* 
  பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*
  புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்  


  • வங்கக் கடல் = வங்கமென்று கப்பலுக்குப் பெயர்; இனி என்ற அமரகோசத்தின்படி பங்கம் என்ற வடசொல் அலைக்கு வாசகமாகையால் அச்சொல்லே வங்கமெனத் திரிந்ததென்று கொண்டு ‘அலைகடல்’ என்று பொருள்கொள்வதும் பொருந்தும். ஸ்ரீதேவி, பூ தேவி, கீர்த்திதேவி என எம்பெருமானுக்கு மூன்று திவ்ய மஹிஷிகளாம்; இவர்களுள் முதல்தேவி எம்பெருமானுடைய வலப்பக்கத்தைப் பற்றினள்; இரண்டாந்தேவி இடப்பக்கத்தைப் பற்றினர்; (கீர்த்தியென்னும்) மூன்றாந்தேவி உலக முழுவதையும் இடமாகப் பற்றினால் என்று ஒரு சமத்காரம் பொலியப் பேசுகிறார்காண்மின். ஸ்ரீதேவி பூதேவிகட்கு வல்லபனென்று உலகம் நிறைந்த புகழ்பெற்றிருக்கிற எம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற தில்லைத் திருச்சித்ரகூட மென்றதாயிற்று. சேமம்-க்ஷேமம்.


  1163.   
  நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*
  இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*
  அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக* 
  செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்    1164.   
  மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த* 
  தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*
  கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்* 
  தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்  


  • பெரிய பிராட்டியர், பாற்கடல் கடையும்போது அதில் நின்றுந் தோன்றினவளாதலால் “நீர்பயந்த தெய்வத் திருமாமலர்மங்கை” என்றார். முகரம் - மீனுக்கும் முதலைக்கும் பெயர். கௌவை எனினும் கவ்வை எனினும் ஒக்கும்; பேரொலி என்று பொருள். (மதநீர்என்பாருஞ் சிலருண்டு.) சந்து-சந்தநமென்ற வடசொற் சிதைவு. நிலா-வெள்ளாறு; இத்தலத்திற் பெருகுவதொரு நதி.


  1165.   
  மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*
  ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*
  மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்* 
  தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்  


  • அணங்காயசோதி அணங்கு-தெய்வம். திவ்யமான சோதியையுடைய என்றபடி.


  1166.   
  செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
  அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*
  பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள* 
  திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

      விளக்கம்  


  • - மடவார் திறத்துச் சினமாவது - மடவார்நிமித்தமாக வுண்டாகிற பகை;. அதாவது என்னென்னில்; தான் ஒரு மாதரை ஆசைப்பட்டிருக்க மற்றொருவனும் அவளிடத்தே ஆசைவைத்து இவனை அருகு நாடவொட்டாமல் அடித்துத்தள்ள, எப்பாடுபட்டாவது அந்தமாதரைத் தான் பரிக்ரஹித்தே தீருவதென்கிற் தீவ்ரமான நோக்கத்தினால் மற்றவனைக் கொலைசெய்துவிடு மளவுந் துணிந்து நிற்கை. இப்படிப்பட்ட துணிவினால் செய்யப்படும் பாவங்கள் பகவத் ப்ராப்திக்கு இடையூறாதலால் அவற்றையகற்றி, தேவதைகட்கும் எட்டா நிலமாகிய பரமபதத்திற் சென்று சேர்ந்து நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று விருப்புற்றிருக் குமவர்களே! என்று அன்பர்களை விளிக்கிறார் முன்னடிகளில். ஆன்னவர்களை விளித்து, ‘நீங்கள் தில்லைத் திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்கள்’ என்று சொல்லுவதன் கருத்து இருவகையதாம். சித்திரகூடத்திலே நீங்கள் சிலகாலமாவது வாழ்ந்தால்தான் உங்கட்குப் பரமபதப்ராப்தி உண்டாகும் என்பதாக ஒருகருத்து; பரமபதத்துக்குப் போகவேணு மென்கிற விருப்பம் உங்கட்கு ஏதுக்காக?; வீணான அந்த விருப்பத்தை விட்டிட்டுத் சித்திரகூடம் சென்று சேர்ந்தீர்ளாகில் அவ்விடத்திருப்பே உங்கட்குப் பரமபத வாழ்ச்சியாங்கிடீர் என்பதாக மற்றொரு கருத்து.


  1167.   
  சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு* 
  ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*
  கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்* 
  பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

      விளக்கம்    1168.   
  வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு* 
  ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
  கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்* 
  சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2)  

      விளக்கம்  


  • ஒக்கலித்திட்டு என்ற வினையெச்சம் மேலே இரண்டாமடியோடு கூடக்கடவது; ஒக்கலித்திட்டாடல்செய்த குதிரை-நடைபழகுவதுபோல ஆடியசைந்துகொண்டுவந்த குதிரையென்க. “நன்மா” என்றது விபரிதலக்ஷணை, ‘நல்லபாம்பு’ என்னுமாபோலே. கூத்தனெனவருகின்றான் இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்திலும் ஈற்றடியில் வருநின்றானென்றும் வருவானென்றும் அருளிச்செய்யக் காண்கையாலே, ஆழ்வார் இத்திருப்பதிக்கொழுந்தருளின ஸமயம் பெருமாளுக்குத் திருவீதிப் புறப்பாடாக இருக்கலாமென்று சிலர் கூறுவதுண்டு.


  1169.   
  பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்* 
  மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*
  வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்* 
  தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.   

      விளக்கம்  


  • புலன்கெழு கோவியர்-கண் மனம் முதலிய இந்திரியங்களைக் கவர்கின்ற அழகிய வடிவுபடைத்த இடைச்சிகளென்கை. (கோபீ) என்ற வடசொல் பன்மையுருபேற்றுக் கோவியர்என்றாயிற்று, “பொலன்கெழு” என்ற பாடமும் உண்டென்று வியாக்கியானத்தினால் விளங்குகின்றது; பொலன்-பொன்மயமான நகைகளினால், கெழு-விளங்குகின்ற=என்க.


  1170.   
  பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
  எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*
  அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு* 
  திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  

      விளக்கம்  


  • சிலர் எளிமைக் குணத்திலே யீடுபட்டிருப்பார்கள். சிலர் மேன்மைக் குணத்திலே யீடு பட்ழருப்பர்களென்றுண்டே; அதன் படியே கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் வெண்ணெய் முதலியவற்றைக் களவாடி யமுது செய்த எளிமைக்குணத்திலே நெஞ்சிழிந்தவர்கள். ” அறியாதார்க்கு ஆனாயனாகிப்போய் ஆய்ப்பாடி, ஹியார்நறுவெண்ணெ யஜண்டுகந்தான் காணேடீ ” 1995. என்றார்போலே ஏசிப்பேசிப் போதுபோக்குவர்கள் ; மேன்மைக்குணத்திலீடுபட்டவர்கள் ” கானமருங் கல்லதர் போய்க் காடுறைந்த பொன்னடிக்கள், வானவர்தஞ்சென்னி மலர்கண்டாய் சாழலே, ” 1992, என்றாற்போலே பேசி வணங்கிக் கிடப்பார்கள். ஆகவிப்படி ஏசுகைக்கும் ஏத்துகைக்கும் உரிய எளிமை மேன்மைகள் விளங்க நின்ற பெருமான் அக்குணங்களிரண்டும் குன்றாமே ஸேவை ஸாதிக்குமிடம் சித்ரகூடம் என்றாராயிற்று.


  1171.   
  வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
  தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*
  முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்* 
  திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

      விளக்கம்  


  • தவளத் தமிழ் தாமரைப் பொய்கை தளைத்து அவிழ் - கட்டுண்டிருந்து (பிறகு) அவிழ்ந்த ” என்று பொருளாய் விகஸிந்தபடியைச் சொல்லிற்றுகிறது. தாமரைகள் புஷ்பிக்கக்கூடிய பொய்கை என்று கருத்து, இப்படிப்பட்ட பொய்கையையன்றோ காளியன் தன் விஷாக்கியினால் கொதிப்பித்துக் கொண்டு கிடந்தானென்கை, தடம் - வடசொல் கரை.


  1172.   
  பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து* 
  அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து* 
  உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று* 
  தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

      விளக்கம்  


  • திருவாய்ப்பாடித் திருவீதியிலே கண்ணபிரான் எழுந்தருளும் போது பார்த்தால், ” கார்காலத்துக் காளமேகந்தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்று சிலர்க்கு உத்ப்ரேக்ஷிக்கலாம்படியிருக்கும், முத்துவடங்கள் முதலிய ஆபரணங்களை அணிந்து கொண்டு செல்வதைப் பார்த்தால் முத்துக்கள் மலிந்த கருங்கடல் தான் இங்ஙனே வடிவெடுத்து நடந்து செல்லுகின்றதோ! என்றும், அருவிகள் விளங்குகின்ற பொன்மலைகள் பல கூடி இங்ஙனே உருவெடுத்து நடந்து செல்லுகின்றனவோ! என்றும் சிலர்க்கு உத்ப்ரேக்ஷிக்கலாம்படியிருக்கும். ஆகவிப்படி உத்ப்ரேக்ஷிக்கத்தக்க வடிவழகு வாய்ந்து, நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணர்வதற்குக் கொண்ட கோலத்துடனே வீதியார வரும் போது யாதொரு அழகு விளங்கிற்றே. அவ்வழகைப் பின்புள்ளாரும் ஸேவித்து மகிழும்படி ஸேவைஸாதிக்குமிடம் திருச்சித்ரகூடம் என்றாராயிற்று. பருவக்கருமுகில் - பருவமாவது காலம் அதாவது இங்கு மாரிகாலம். இரண்டாமடியில் பொன் மலையைச் சொன்னதால் ஆபரணச் சேர்த்தி விவக்ஷிதமென்க. ” பலபலவேயாபரணம் ” 2834, என்பவாதலால் ” ஆயிரம் பொன்மலை யொத்து ” என்றார்.


  1173.   
  எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்* 
  உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*
  வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல* 
  தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2)  

      விளக்கம்  


  • மூன்றாமடியில் “வையத்தெவரும்” என்பதே பாடம். அரும்பதவுரைகாரர் “வையத்தேவரும்” என்று பாடங்கொண்டு நிலத்தேவர்களான பிராமணர்களென்று பொருளுரைத்து பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளத்திற்குப் பொருந்தாது ஓசையின்பமும் சிதையும். அணங்கெழுமாமலைபோலே - அணங்கெழுதலாவது தெய்வாவேசம் பெறுதல். “காய்சினப் பறவையூர்ந்து பொன்மலையின் மீமிசைக் கார்முகில்” போல் 3573. என்றார்போலே பொன் போல் மேனியனான கருடன் மீது கரிய திருமால் வீற்றிருப்பது பொன்மலையினுச்சியில் காளமேகம் படிந்தாற் போன்றிருத்தலால் ” மாமலைபோலே தெய்வப்புள் ” என்றார்.


  1174.   
  ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல* 
  மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*
  அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்* 
  தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

      விளக்கம்    1175.   
  பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ* 
  அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*
  பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்* 
  சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

      விளக்கம்  


  • பொன்பேயரோன் - வடமொழியில் ” ஹிரண்யம் ” என்பதற்குப் ” பொன் ” என்று பொருளாதலால் ஹிரண்யனென்னும் பெயருடைய அசுரனைப் பொன் பெயரோனென்கிறது. ஆகவே இது லக்ஷித லக்ஷணைஃ ஆயிரந்தோளெழுந்தாட - பரமபாகவத விரோதியான இரணியனைப் புடைப்பதிலே திருக்கைகளுக்குண்டான பதற்றத்தைப் பலமுகமாக்கி வருணித்த படி. கான்ற என்னும் பெயரெச்சத்தில் கால் என்பது வினைப்பகுதி.


  1176.   
  கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்* 
  பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*
  ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*
  மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

      விளக்கம்  


  • கீழ் எட்டுப்பாசுரங்களிலும் விபவாவதாரப்படிகளை அநுஸந்தித்துப் பேசினார் இவ்வளவிலே சித்திரகூடத் தெம்பெருமான் ஆழ்வார்பக்கலிலே திருவுள்ளமுவந்து, ஆழ்வீர்!, நீர் ஒவ்வொரு பாசுரத்திலும் வருவான் வருவான் வருவான் என்று பேசிக் கொண்டு வருகிறீராகையாலே நம்முடைய புறப்பாடு காண்கையில் உமக்கு ஆவல் அதிகரித்திருப்பதாக அறிகின்றேன், உமக்காக நான் இன்று ஒரு புறப்பாடு காட்டுகிறேன், கண்டுகளித்துக் கவிபாடும், என்று சொல்லி நாச்சிமார்களுடனே பெரிய திருவோலக்கமாகப் புறப்பாடு கண்டருள. அதனை ஸேவித்து மகிழ்ந்து பேசுகிறதுபோலேயிருக்கிறது இப்பாசுரம். திருமேனி காளமேகம் போன்றுள்ளது, அதற்குப் பரபாகமாகத் திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகள் ஜ்வலிக்கின்றன. இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்து சுற்றிலும் சூழ்ந்து வருகின்றது. மற்றுமுள்ளாரும் தொழுது துதிக்கின்றனர். ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி என்ற நாய்ச்சிமார்மூவரும் விட்டுப் பிரியாதே கூடவே எழுந்தருளியிருக்கின்றனர். ஆகவிப்படிப்பட்ட விபவம் பொலியப் புறப்பட்டெழுந்தருளா நின்றான் சித்திரகூடத் தெம்பெருமானென்று கண்ணாரக்கண்டு வாயாரப் பேசினாராயிற்று.


  1177.   
  தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த* 
  வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்* 
  ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்* 
  தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2) 

      விளக்கம்