திவ்யதேச பாசுரங்கள்

  1248.   
  போது அலர்ந்த பொழில் சோலைப்*  புறம் எங்கும் பொரு திரைகள்* 
  தாது உதிர வந்து அலைக்கும்*  தட மண்ணித் தென் கரைமேல்*
  மாதவன் தான் உறையும் இடம்*  வயல் நாங்கை*  வரி வண்டு 
  தேதென என்று இசை பாடும்*  திருத்தேவனார்தொகையே. 

      விளக்கம்  


  • இத்திருப்பதியின் திருநாமம் “மாதவப்பெருமாள் ஸந்நிதி” என்றும் ப்ரஸித்தமாக வழங்கிவருதலால் “மாதவன் தானுறையமிடம்” என்றார். தேதென - இசைக்குறிப்பு.


  1249.   
  யாவரும் ஆய் யாவையும் ஆய்*  எழில் வேதப் பொருள்களும் ஆய்* 
  மூவரும் ஆய் முதல் ஆய*  மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்*
  மாவரும்திண் படைமன்னை*  வென்றிகொள்வார் மன்னுநாங்கை* 
  தேவரும் சென்றுஇறைஞ்சுபொழில்*  திருத்தேவனார்தொகையே.         

      விளக்கம்  


  • யாவர் என்ற சொல் உயர்திணைவிகுதி யேற்றதாதலால் ஸகல சேதநப்பொருள்களையுஞ் சொல்லுகிறது. யாவை என்ற சொல் அஃறிணை விகுதியேற்றதாதலால் ஸகல அசேதநப் பொருள்களையுஞ் சொல்லுகிறது. ‘ஆய்’ என்ற இவற்றோடு எம்பெருமானுக்கு ஐக்கியஞ்சொன்னது – சரீரசரீரிபாவத்தா லென்க. மூவருமாய் - பிரமன் என்கிற வேஷம்பூண்டு படைத்தல் தொழிலைச் செய்தும், தானான தன்மையில் காத்தல் தொழிலைச்செய்தும், ருத்ரனான தன்மையில் ஸம்ஹாரத்தொழிலைச் செய்தும் போருகிறவன் என்க. மூர்த்தி - ஸ்வாமி.


  1250.   
  வான்நாடும் மண்நாடும்*  மற்றுஉள்ள பல்உயிரும்*    
  தான்ஆய எம்பெருமான்*  தலைவன் அமர்ந்து உறையும்இடம்*
  ஆனாத பெருஞ்செல்வத்து*  அருமறையோர் நாங்கைதன்னுள்*
  தேன்ஆரும் மலர்ப்பொழில்சூழ்*  திருத்தேவனார்தொகையே. 

      விளக்கம்  


  • “பல்லுயிருந்தானாய வெம்பெருமான்” என்றவிடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை எடுத்துக்காட்டுகிற விசேஷோக்தி வருமாறு :- “தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை ‘உனக்கென்ன வேணும்?’ என்றால், ‘எனக்குக் கலநெல்வேணும்’ என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே யடங்குகையாலே. அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் - ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய்ப் புறம்பு ஒருவரின்றிக்கே உபயவிபூதியும் தன்நிழலிலே யொதுங்கும்படியிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்யவாஸம் பண்ணுகிற தேசம்.” ஆனாத – ஆன்--பகுதி


  1251.   
  இந்திரனும் இமையவரும்*  முனிவர்களும் எழில் அமைந்த* 
  சந்த மலர்ச் சதுமுகனும்*  கதிரவனும் சந்திரனும்*
  எந்தை! எமக்கு அருள் என நின்ரு*  அருளூமிடம் எழில்நாங்கை* 
  சுந்தரநல் பொழில்புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.     

      விளக்கம்    1252.   
  அண்டமும் இவ் அலை கடலும்*  அவனிகளும் குல வரையும்* 
  உண்ட பிரான் உறையும் இடம்*  ஒளி மணி சந்து அகில் கனகம்*
  தெண் திரைகள் வரத் திரட்டும்*  திகழ் மண்ணித் தென் கரைமேல்* 
  திண் திறலார் பயில்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.  

      விளக்கம்    1253.   
  ஞாலம் எல்லாம் அமுது செய்து*  நான்மறையும் தொடராத*    
  பாலகன் ஆய் ஆல் இலையில்*  பள்ளிகொள்ளும் பரமன் இடம்*
  சாலி வளம் பெருகி வரும்*  தட மண்ணித் தென் கரைமேல்* 
  சேல் உகளும் வயல்நாங்கைத்*  திருத்தேவனார்தொகையே.   

      விளக்கம்  


  • The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.


  1254.   
  ஓடாத ஆளரியின்*  உரு ஆகி இரணியனை*      
  வாடாத வள் உகிரால்*  பிளந்து அளைந்த மாலது இடம்*
  ஏடு ஏறு பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
  சேடு ஏறு பொழில் தழுவு*  திருத்தேவனார்தொகையே.

      விளக்கம்  


  • ஏடேறு பெருஞ்செல்வத்து – எம்பெருமானுடைய பெருமையளை ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ பாரதம் முதலிய இதிஹாஸங்களாக ஏடுபடுத்தி வைத்திருப்பது போலப் புத்தகங்களாக எழுதி வைக்கத்தகுந்த பெருஞ்செல்வமுடையார் திருநாங்கூர்வைதிகர்கள் என்கை. ஏடு என்று குற்றத்திற்கும் வாசகமாகையாலே குற்றமற்ற பெருஞ்செல்வத்தினர் என்று முரைப்பர். ஏறுகை – மாண்டுபோகை.


  1255.   
  வார் ஆரும் இளங் கொங்கை*  மைதிலியை மணம் புணர்வான்* 
  கார் ஆர் திண் சிலை இறுத்த*  தனிக் காளை கருதும் இடம்*
  ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து*  எழில் மறையோர் நாங்கைதன்னுள்* 
  சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்*  திருத்தேவனார்தொகையே.

      விளக்கம்  


  • “வாராளு மிளங்கொங்கை” என்றும் பாடமுண்டு. கச்சு அணிந்து ஆளவேண்டும் படியான இளமுலைகளையுடையாள் என்கை.


  1256.   
  கும்பம் மிகு மத யானை*  பாகனொடும் குலைந்து வீழ*     
  கொம்பு-அதனைப் பறித்து எறிந்த*  கூத்தன் அமர்ந்து உறையும் இடம்*
  வம்பு அவிழும் செண்பகத்து*  மணம் கமழும் நாங்கைதன்னுள்* 
  செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்*  திருத்தேவனார்தொகையே.   

      விளக்கம்  


  • வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.


  1257.   
  கார் ஆர்ந்த திருமேனிக்*  கண்ணன் அமர்ந்து உறையும் இடம்* 
  சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத்*  திருத்தேவனார்தொகைமேல்*
  கூர் ஆர்ந்த வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
  ஏர் ஆர்ந்த வைகுந்தத்து*  இமையவரோடு இருப்பாரே.    

      விளக்கம்