திவ்யதேச பாசுரங்கள்

    1758.   
    பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*
    மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*
    என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  (2)

        விளக்கம்  


    • “மர்மங்களிலே கடாக்ஷியா நின்றார்; பார்த்தபார்வை ஒருகால் மாறவைக்கிறிலர்” என்பது வியாக்கியானம் ‘நம்மைப்பாங்காக அநுபவிப்பதற் குறுப்பான பக்தி இவ்வாழ்வார்க்கு முதிர்ந்ததேர்’ என்று எம்பெருமான் ஆராய்ந்தமையைச் சொல்லிற்றாகக் கொள்க. போகத்திற்குக் கொங்கை முதலிய உறுப்புகள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி பகவதநுபவத்திற்குப் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகள் இன்றியமையாதனவாதலால் ஸ்வாபதேசத்தில் அவற்றைப் பொருளாகக் கொள்க. அவர் நோக்கினவாறே நீ செய்ததென்? என்று தோழி கேட்க, அன்னையென்னோக்கு மென்றஞ்சுகின்றேன் என்கிறாள். அவர் பார்த்த பார்வை யெல்லாம் எனக்குப் பரமபோக்யமாகவேயிருந்தது; ஆனால் இந்த நிலைமையை நம்தாய் காண்பளேல் என்ன பாடு படுத்துவளோ வென்று அஞ்சி நிற்பதே என்கருமமாயிற்றுக்காண் என்கை. ‘நான் பதறி மேல் விழுவேன்; இதனைத் தாய்நோக்கினாளாகில் என்னாகுமோ வென்று அஞ்சி யொழித்தேன்’ என்றவாறு. (அன்னை) பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்புமிகுதியால் அவனிருப்பிடத்துக்குச் செல்ல வேணுமென்றும் மேல்விழுந்து அநுபவிக்க வேணுமென்றும் பதறுமளவில் படிகடந்து புறப்படுகை குலமரியாதைக்குப் பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவாள்; ஸித்தோபாயமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப்பெறுதலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவலைப் பிறப்பித்து அதனால் படிகடந்து நடக்க வேண்டிவந்த வளவில் இது ப்ரபந்நர் குடிக்கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி ‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கவேணம்.’ என்றுசொல்லித் துடிப்பை அடக்கப் பார்க்கிற நம பதத்திற்கூறப்பட்ட உபாய அத்யவஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக ஸ்வாபதேசத்திற் கொள்ளவேணுமென்பது ஆசார்யஹ்ருதயத்தில் விரியும்; ஆகவே, இங்கு “அன்னை என்னோக்கு மென்றஞ்சுகின்றேன்” என்றது – உபாயாத்யவஸாயத்தில் ஊற்றத்தாலே பதறுதல் தவிர்ந்தேன் என்றவாறாம். அச்சோவொருவரழகியவா! = ‘அச்சோ’ என்பது ஆச்சரியக் குறிப்பிடைச்சொல்; எங்கும் என்றுங் கண்டறியாத அழகுடன் ஒருவர் என் கண்ணுக்குத் தோற்றுகிற இவ்வாச்சரியம் வாசரமகோசரம் என்றவாறு. திருநாகை எம்பெருமானாகிய ஸௌந்தர்யராஜனை ஒரு வாறாகக் குறிப்பிடுவதாகவுங் கொள்க.


    1761.   
    வம்புஅவிழும் துழாய் மாலை தோள்மேல்*  கையன ஆழியும் சங்கும் ஏந்தி,* 
    நம்பர்நம் இல்லம் புகுந்து நின்றார்*  நாகரிகர் பெரிதும் இளையர்,*
    செம்பவளம் இவர் வாயின் வண்ணம்*  தேவர் இவரது உருவம் சொலலில்,* 
    அம்பவளத்திரளேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!  

        விளக்கம்  


    • தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்; இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார். இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார். திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது. உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்றாளாயிற்று. கையன ஏந்தி கையிலுள்ளனவாக ஏந்தி என்று முரைக்கலாம். நம்பர் – எல்லாராலும் நம்பத்தகுந்தவர்; “நம்பும மேவும் நசையாகுமமே.” இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு ‘நம் இல்லம் புகுந்து நின்றா


    1763.   
    வெம்சின வேழ மருப்புஒசித்த*  வேந்தர்கொல் ஏந்திழையார் மனத்தைத்,*
    தஞ்சுஉடை ஆளர்கொல் யான் அறியேன்,*  தாமரைக் கண்கள் இருந்தஆறு,*   
    கஞ்சனை அஞ்சமுன் கால் விசைத்த*  காளையர் ஆவர் கண்டார் வணங்கும்,* 
    அஞ்சன மாமலையேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

        விளக்கம்  


    • தோழீ! இவரைப் பார்த்தால் முன்பு கம்ஸன் தனது அரண்மனை வாசலில் மதமூட்டி நிறுத்திவைத்த குவலயாபீடமென்னும் யானையை வென்றொழித்த வேந்தர் போலே யிருக்கின்றார்; அவர்தானோ இவர்! ஆபரணங்களை யணிந்திருக்கும் பெண்களுடைய நெஞ்சை ஆச்ரயமாகவுடைய திருமால் தானோ இவர்! இன்னாரென்று நிச்கயிக்கக் கூடவில்லையே. தாமரைபோன்ற திருக்கண்களிருக்குமழகை என் சொல்வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தினின்று தள்ளித்திருத்தாளாலுதைத்த தனிவீரராகவே இவர் தோற்றுகின்றார்; ‘ந நமேயம்து கஸ்யசித்’ (ஒருவற்கும் தலைவணங்க மாட்டேன்) என்ற இராவணனைப் போன்ற வணங்கா முடிகளும் இவரைக் கண்டவாறே பரவசமாக வணங்கும்படியன்றோ இவருடைய அதிசயமிருப்பது; ஒரு அஞ்சன மலைதான் இங்ஙனே வடிவெடுத்து நிற்கிறதோ! என்னலாம்படி யிருக்கின்றார்காண். வாய்கொண்டு சொல்லவொண்ணாத அழகு படைத்த இவர் திறத்திலே நான் என்னவென்று சொல்லுவேன்! என்கிறாள். “மருப்பொசித்த வேந்தர் கொல்” என்றும் “ஏந்திழையார் மனத்தைத் தஞ்சுடையாளர் கொல்” என்றுமு் இரண்டு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாகவே விவக்ஷிதம்; யானையின் கொம்பை முறித்து அந்த வீரச்செயலைக் காட்டிப் பெண்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட பெருமானோ இவர்! என்றவாறு. ‘ஏந்திழையார்’ என்று பெண்களுக்கு நிரூபகநாமம், இழை – ஆபரணம்.


    1764.   
    பிணிஅவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்*   பேர்அருளாளர் கொல்? யான் அறியேன்,* 
    பணியும் என் நெஞ்சம் இதுஎன்கொல் தோழீ!*  பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்,*
    அணிகெழு தாமரை அன்ன கண்ணும்*  அம்கையும் பங்கயம் மேனிவானத்து,*
    அணிகெழுமாமுகிலேயும் ஒப்பர்*  அச்சோ ஒருவர் அழகியவா! 

        விளக்கம்  


    • “பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல்” என்றதை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள்; கட்டு அவிழும்படி தாமரை மொக்கை விகஸிக்கச்செய்யவல்ல பரம க்ருபாளுவான ஆதித்யனோ இவர்! என்பது முதல் நிர்வாஹம். இவருடைய தேஜஸ்ஸைப் பார்த்தால் ஸாக்ஷாத் ஸூர்யனோ என்னலாம்படி யிருக்கின்றார் என்கை. அன்றியே. ‘பிணி’ என்று வியாதிக்குப் பேராய், வியாதிக்கு மூலமான பாபத்தைச் சொல்லிற்றாகி, பாவம் தொலையப்பெற்ற யோகிகளின் ஹ்ருதய புண்டரீகத்தை வியஸிப்பிக்க வல்ல பரம தயாளுவான எம்பெருமானோ இவர்! என்பது இரண்டாவது நிர்வாஹம். தோழீ! இப்பெரியவரைப் பார்த்தவாறே என்பக்கல் ஒரு நினைவின்றியே இருக்கச்செய்தே என்னெஞ்சானது நிற்கின்றது; தோழீ! உன்னை யறியாமல் எனக்கு வருவதொரு நன்மையில்லையே; அப்படியிருந்தும் உன்னையும் என்னையும் அறியாமலே இங்ஙனே ஒரு நன்மையுண்டான விதம் என்னே! இவர் செய்கிற ச்ருங்கார சேஷ்டைகளோ நெடுநாளாக மிகப் பழகினவர் செய்யுமலைபோலே யிருக்கின்றன. ஆயினும், இதற்கு முன்பு இவரைக் கண்டதாகவும் எனக்கு நினைவில்லை. உற்று நோக்குகிற திருக்கண்களும் அணைக்க முற்படுகிற திருக்கைகளும் திரளச் செறியப் பூத்த தாமரையெனன்லா யிராநின்றன. வடிவோ மேகத்தின் என்னலாம்படி யிருக்கின்றது. லோக விலக்ஷணமான இவரழகுக்கு ஒப்புச் சொல்லலாவதுண்டோ? ஆச்சரியமென்னு மித்தனை – என்றாளாயிற்று


    1766.   
    எண்திசையும் எறிநீர்க் கடலும்*  ஏழ்உலகும் உடனே விழுங்கி,* 
    மண்டி ஓர் ஆல்இலைப் பள்ளி கொள்ளும்*  மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்*
    கொண்டல் நல் மால்வரை யேயும் ஒப்பர்*  கொங்குஅலர் தாமரை கண்ணும்வாயும்* 
    அண்டத்து அமரர் பணிய நின்றார்*  அச்சோ ஒருவர் அழகியவா!   

        விளக்கம்  


    • தோழீ! இப் பெரியவரைக் கண்டவாறே ‘இவர் ஆபத்துக்கு உதவுமவர்’ என்று தோற்ற விராநின்றார்காண். திக்குக்களெட்டிலும் வந்து அலையெறியா நின்றுள்ள கடல்களையும் ஏழுலகங்களையும் ஒருகாலே திருவயிற்றிலே வைத்துப் பிரளயங்கொள்ளாதபடி காத்து ஒரு சிறிய ஆலந்தளிரிலே துயில் கொண்ட ஆச்சர்ய சேஷ்டிதன் என்று தோற்றும்படி யிராநின்றாரிவர். ‘கூடாதவற்றையும் கூடுவிப்பவர் இவர்’ என்று தெரிகி்ன்றது. ஆயினும் இவருடைய ஆச்சர்யங்களை நன்கு அறிகிலேன். வடிவைப் பார்த்தவாறே மேகம்போலவும் மலைபோலவும் சொல்லா யிராநின்றார். திருக்கண்களும் திரு அதரமும் பரிமளங் கமழ்கின்ற தாமரைபோலே யிராநின்றன. மேன்மையைப் பார்த்தவாறே நித்யஸூரிகளும் வந்து ஆச்ரயிக்கும்படி யிராநின்றார். இவருடைய மேன்மைக்குத் தக்க மேன்மையை யுடையவர்களே இவரைக்கிட்டலா மத்தனை யன்றி நமக்குக் கிட்டப்போகாதென்று பின்வாங்க வேண்டியிருந்தாலும் லோக விலக்ஷணமான அழகு பின்வாங்க வொட்டுகிறதில்லை – என்றாளாயிற்று.


    1767.   
    அன்னமும் கேழலும் மீனும்ஆய*  ஆதியை நாகை அழகியாரை,* 
    கன்னிநல் மாமதிள் மங்கை வேந்தன்*  காமரு சீர்க்கலி கன்றி,*  குன்றா-
    இன்இசையால் சொன்ன செஞ்சொல் மாலை*  ஏழும் இரண்டும் ஓர்ஒன்றும் வல்லார்,*
    மன்னவர்ஆய் உலகுஆண்டு*  மீண்டும் வானவர்ஆய் மகிழ்வு எய்துவரே.   (2)

        விளக்கம்  


    • நாகை = நாகப்பட்டணம் என்பதன் மரூஉ. நாகராஜனுக்குப் பிரத்யக்ஷமானதலம் என்பது பற்றி வந்த பெயர் என்ப.