திவ்யதேச பாசுரங்கள்

  2008.   
  மண்நாடும் விண்நாடும்*  வானவரும்  தானவரும் மற்றும்எல்லாம்* 
  உண்ணாத பெருவெள்ளம்*  உண்ணாமல்  தான்விழுங்கி உய்யக்கொண்ட,*

   

  கணணாளன் கண்ணமங்கை நகராளன்*   கழல்சூடி, அவனை உள்ளத்து* 
  எண்ணாத மானிடத்தை*  எண்ணாத போதுஎல்லாம் இனியஆறே.

      விளக்கம்  


  • வனையுள்ளத் தெண்ணாத மானிடத்தை யெண்ணாத போதெல்ல மினியவாறே” என்றருளிச் செய்கின்ற இவ்வாழ்வாருடைய உட்கருத்து யாதெனில்; ஒருவன் பகவத் பாகவதர்களைச் சிந்திக்கவுமாம், சிந்தியாதொழியவுமாம்; பகவத்பரகவத விரோதிகளை நெஞ்சாலும் நினைக்கப் பெறாதிருந்தால் அதுவேபோதும் என்றதாம். இங்கே வியாக்கியான வாக்கியமுங் காண்மின்:-“ஜ்ஞாநமும் வேண்டா; வைஷ்ணவ ஸஹவாஸமும் வேண்டா அவைஷ்ணவாக்ளை நினையாதபோது இனிதென்கை.”


  1848.   
  ஒருநல் சுற்றம்*  எனக்குஉயிர் ஒண்பொருள்* 
  வரும்நல் தொல்கதி*  ஆகிய மைந்தனை*
  நெருநல் கண்டது*  நீர்மலை இன்றுபோய்* 
  கருநெல் சூழ்*  கண்ண மங்கையுள் காண்டுமே  (2)

      விளக்கம்  


  • எம்பெருமானை நேற்று திருநீர்மலையிலே கண்டோம், இன்று திருக்கண்மங்கையிலே காண்போமென்கிறார். திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் பக்கலிலும் திருக்கண்மங்கைப் பத்தராவிப் பெருமாள் பக்கலிலும் பரமபத ப்ரயாணத்திற்கு விடைபெற்றுக் கொள்ளுகிற னென்பது உட்கருத்து. எம்பெருமானொருவனே ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் பரமபந்து - என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருள்தோன்ற “ஒருநல் சுற்றம்“ என்றார். எனக்கு உயிர் -எம்பெருமான் ஸகல ஆத்மாக்களுக்கும் உயிராயிருக்கச் செய்தேயும் இவர் “எனக்கு உயிர்“ என்றதற்குக் கருத்து யாதெனில், உயிரை விட்டுப்பிரிந்த வஸ்து ஒரு கொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டாதாப்போலே * அவனை விட்டகன்று உயிராற்றகில்லாத தம்முடைய உறைப்பைச் சொல்லுகிறபடி. ஒண்பொருள் - உலகத்தில் பொருளானது மரணத்தையுண்டாக்கும், அதாவது -த்ரவ்ய நிமித்தமாகப் பிராணனை விடுவார் பலருண்டே, எம்பெருமானாகிற பொருள் அப்படி அநர்த்த ஹேதுவன்றியே ஸத்தையை யுண்டாக்கும் பொருள் என்றபடி. (வருநல்தொல்கதி) முடிவாக ப்ராப்ய பூமியும் தானே யென்கை. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானைத் திருநீர்மலையிற் சென்று பணிந்தோம் நேற்று, இன்று திருக்கண்ணமங்கையிற் சென்று பணிவோம் என்றாராயிற்று.


  1638.   
  பெரும் புறக்கடலை அடல்ஏற்றினை*  பெண்ணை ஆணை எண்இல் முனிவர்க்குஅருள்- 
  தரும்தவத்தை முத்தின் திரள் கோவையை*  பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை*
  அரும்பினை அலரை அடியேன் மனத்துஆசையை*  அமுதம் பொதிஇன் சுவைக்* 
  கரும்பினை கனியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   

      விளக்கம்  


  • பெரும்புறக்கடலை = ‘புறம்’ என்று இடத்துக்குப் பெயர்; எல்லையில்லாத இடத்தை யுடைத்தான கடல்போன்றவன் : பல்லுயிர்கட்கும் உறைவிடமாயிருந்து கொண்டு கம்பீரத்தன்மையோடு கூடியிருக்குங் கடல்போன்றவன். இனி, புறம் என்பதற்கு ‘வெளிப்பட்டது’ என்கிற பொருளும் உண்டாதலால், பூமியைச் சூழ்ந்திருக்குங் கடல் எல்லாவற்றிற்காட்டிலும் விலக்ஷணமான கடலாயிருப்பவன் என்று முரைப்ப. கடல்போன்றவன் என்னாதே கடல் தானகவே சொன்னது உவமையாகுபெயர். இத்திருமொழி முழுதும் பெரும்பாலும் இங்ஙனேயாம். அடலேற்றினை = செருக்குக் கொண்ட விருஷபம் போலே ஒருவராலும் அடக்கவொண்ணாதவ னென்கை. பெண்ணை = கீழே அடலேறு போன்றிருப்பவனென்றது எதிரம்பு கோப்பவர்கட்கேயன்றி அன்புடையார் திறத்திலே வந்தால் ஸ்த்ரீகளைப் போலே பாரதந்திரியமே வடிவாயிருப்பவ னென்றவாறு. ஆணை = அரசன் அந்தப்புரத்திலே மனைவிக்கு விதேயனாயிருப்பவனாயினும் சீரிய சிங்கா சனத்திலே வந்து வீற்றிருந்தால் ஆண்புலியாயிருப்பனன்றோ; அதுபோல. திருவாய்மொழியில் “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்” என்னா நிற்க, இங்கே ‘பெண்ணை ஆணை’ என்றல் பொருந்துமோ எனின்; பொருந்தும்; ஆணல்லன் பெண்ணல்லன் என்பது திவ்யாத்மஸ்வரூபத்தின் உண்மை நிலையைப் பற்றினது; இங்குச் சொல்வது குணத்தைப்பற்றியது : ஸ்திரீலிங்க புல்லிங்கங்களை யுடையவனென்கிறதன்று. எண்ணில் முனிவர்க்கு அருள்தருந் தவத்தை = ‘முனிவர்’ என்றது தன்னைச் சிந்திப்பவர்கள் என்றபடி; அவர்கள் விஷயத்திலே கிருபை பண்ணுமவன்; அவர்களின் தவப்பயனெ வடிவெடுத்தது போன்றவன். (முத்தின் திரள்கோவையை.) முத்துஸரம்போலே கண்ணாற்கண்டபோதே சிரமமெல்லாம் ஆறும்படியிருக்கிறவன். (பத்தர் ஆவியை.) தன் பக்கலில் பக்தியுள்ளவர்கட்குத் தன்னை விட்டு ஜீவிக்கவொண்ணாதவடி யிருப்பவன். திருநின்றவூர்ப் பெருமாளுடைய திருநாமமும் திருக்கண்ணமங்கைப் பெருமாளுடைய திருநாமமும் பத்தவராவி யென்பதாம். (நித்திலத் தொத்தினை.) ஒருவனுக்கு ஏராளமான முத்துக்குவியல் இருந்தால் ‘நமக்கு நிதியுண்டு’ என்று அவன் விசாரமற்றிருக்கலாமன்றொ; அதுபோல எம்பெருமானும் அன்பர்கட்கு. (அரும்பினை அலரை.) இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமானு :– “இரண்டு அவஸ்தையும் ஒருகாலே சூழ்த்துக் கொடுக்கலாம்படி யிருக்கிறவனை; யுவாகுமார : என்கிறபடியே ஏககாலத்திலே இரண்டவஸ்தையும் சொல்லலாயிருக்கை” என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. இவற்றால், யௌவநமும் கௌமாரமும் எம்பெருமானிடத்தில் குடி கொண்டிருப்பதாகப் பொருள் கூறுவர். அரும்பு என்றது கௌமார நிலைமையைச் சொன்னபடி; அலர் என்றது யௌவந நிலைமையைச் சொன்னபடி என்றும் கூறுவர். இங்கு உதாஹரிக்கப்பட்ட ‘யுவாகுமார:’ என்றப்ரமாணம் ருக்வேதத்தில் (அஷ்ட. 2-8-25.) அத்யயநம் பண்ணப்பட்டு வரும் வாக்யம். வைதிகபதபாடத்தில் ‘யுவா அகுமார:’ என்று பதவிபாகமுள்ளது. ஸ்ரீதேசிகன் பரமபத ஸோபாநத்தில் ஒன்பதாவது பருவத்தின் தொடக்கத்தில் “அகுமார யுவாவாய்” என்றும் பாதுகாஸஹஸ்ரத்தில் என்றும் அருளிச்செய்யக் காண்கின்றோம். இவற்றையெல்லாம் மடியொற்றி ‘யுவா அகுமார:’ என்றே கொள்ளத்தகும்; நம்பிள்ளை முதலானவர்களுடைய திருவுள்ளமும் இங்ஙனொத்ததே. இங்ஙனே பதவிபாகமாயின், ‘கௌமாரமின்றியே யௌவன மாத்ரமே யுள்ளவன்’ என்று பொருளாகுமே; நம்பிள்ளை முதலானாருடைய திருவுள்ளம் அப்படி யில்லையேயென்று சங்கிக்க வேண்டா; அகுமார:’ என்பதற்கு ஈஷத்குமார : (ஸ்வல்பம் கௌமாரமுள்ளவன்) என்று பொருள்; கௌமாரம் கழியத்தக்கதாய் யௌவனம் வந்து குடிபுகத்தக்கதான நடுப் பருவத்தைச் சொன்னவாறு.


  1639.   
  மெய்ந்நலத் தவத்தை திவத்தைத் தரும்*  மெய்யை பொய்யினை கையில் ஓர்' சங்குஉடை* 
  மைந்நிறக்கடலை கடல் வண்ணனை*  மாலை- ஆல்இலைப் பள்ளி கொள் மாயனை*
  நென்னலை பகலை இற்றை நாளினை*  நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை* 
  கன்னலை கரும்பினிடைத் தேறலை*  கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே*  

      விளக்கம்  


  • அடியேன் திருக்கண்ணமங்கையில் ஸேவிக்கப்பெற்ற எம்பெருமான் எப்படிப்பட்டவன்? – உண்மையாய் விலக்ஷணமான பக்தியோகத்தை ப்ரவர்த்திப்பித்தவன்; (அல்லது) அப்படிப்பட்ட பக்தியோத்திற்கு விஷயமாகக்கூடியவன்; பரமபதத்தைத் தரவல்ல ப்ரபத்தியோகத்தை ப்ரவர்த்திப்பித்தவன்; (அல்லது) அதற்கு இலக்காமவன்; கீழ்ச் சொன்ன பக்தியோகமும் ப்ரபத்தியோகமு மில்லாதவர்களுக்குத் தன்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களொன்றும் அறியவொண்ணா திருக்குமவன்; கீழ்ச்சொன்ன பக்தி ப்ரபத்திகளை யுடையார்க்குக் காட்சி கொடுக்கும் வடிவையுடையவன் : கடல் போல் காம்பீர்யமுள்ளவன்; ஸர்வஸ்மாத்பான்; சேராதவற்றையும் சேர்ப்பிக்கவல்லவன் என்னுமிடத்தை ஆலிலையிற் பள்ளிகொண்ட வரலாற்றினால் காட்டித்தந்தவன்; இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்களிலும் போக்யதை குன்றாதே யிருந்து, மாஸம் ஸம்வத்ஸரம் என்று சொல்லப்படுகிற காலப்பகுதிகளுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்; கன்னற்கட்டியும் கருப்பஞ்சாறும் போல இனிமைதானே வடிவெடுத்தவன் : இப்படிப்பட்ட பெருமானையாயிற்று அடியேன் திருக்கண்ணமங்கையிற் கண்டதென்கிறார்.


  1640.   
  எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை*  வாசவார் குழலாள் மலைமங்கை தன்- 
  பங்கனைப்*  பங்கில் வைத்து உகந்தான் தன்னை*  பான்மையை பனி மா மதியம் தவழ்* 
  மங்குலை சுடரை வடமாமலை-  உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்- 
  கங்குலை*  பகலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*  

      விளக்கம்  


  • திருக்கண்ணமங்கையெம்பெருமான் எப்படிப்பட்டவன்? ;- வேறு பகலற்ற அடியேன் போல்வார் திறத்திலே நிர்ஹேதுகமாக க்ருபைபண்ணவல்ல ஸ்வாமி; எங்களைப் போலன்றியே ஈச்வராபிமானம் கொண்டாடி யிருக்கிற ருத்ரனைத் தன் திருமேனியினொருபுறத்திலே வைத்து அதுதன்னைத் தன்பேறாக நினைத்து உகந்திருக்கும்படியான சீல குணத்தாற் சிறந்தவன்; இந்த சீல குணந்தான் ஏதோவொரு காலத்தளவி லன்றிக்கே எப்போதும் இதுவே இயல்வாயிருப்பவன்; குளிர்ந்த பூர்ண சந்திரனுடைய ஸஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசத்துக்கும் ஸூர்யனுக்கும் நியாமகன்; வடதிருவேங்கடமலையி னுச்சியை இருப்பிடமாகவுடையவன்; நம்மால் விரும்பி வணங்கப்படுமவன்; போகமனுவிப்பதற்குறுப்பான இராப் பொழுதென்ன, அதற்குப் பொருளீட்டுதற்குறுப்பான பகற் பொழுதென்ன இவ்விரண்டுக்கும் நிர்வாஹகன்; இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.


  1641.   
  பேய்முலைத்தலை நஞ்சுஉண்ட பிள்ளையை*  தெள்ளியார் வணங்கப்படும் தேவனை* 
  மாயனை மதிள் கோவல்இடைகழி*  மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்*
  ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை*  எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை* 
  காசினை மணியை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

      விளக்கம்  


  • பூதனையினுடைய முலைத்தடத்துண்டான விஷத்தை அமுதுசெய்த சிறு குழந்தை யெனினும் தெள்ளியார் பலர் கைதொழுந்தேவனாயிருப்பவன்; திருக்கோவலிடை கழியில் முதலாழ்வார்களோடு நெருக்கிக் கலந்து நித்யயுவாவா யிருக்குமவன்; அந்தணர்களின் சிந்தையிற் புகுந்து அவர்களைத் தன் வழியே நியமித்துக் கொண்டிருக்கிறவன்; இவர்களுடைய சரீரத்தில் உறைந்திருக்கச் செய்தேயும் அதிலுள்ள தோஷங்கள் தன் பக்கலில் தட்டாமல் ஔஜ்ஜ்வல்யமே வடிவாயிருப்பவன்; இப்படிப்பட்ட தன்மையைக் காட்டி என்னை ஆட்படுத்திக் கொண்டவன்; தளர்ந்த காலத்து உதவும் நிதிபோலே ஆபத்பந்துவாயிருக்குமவன்; பொன்னும் மணியும் போலே விரும்பத்தகுந்தவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றே னென்றாராயிற்று.


  1642.   
  ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை*  இம்மையை மறுமைக்கு மருந்தினை,* 
  ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும்  ஐயனை*  கையில்ஆழி ஒன்றுஏந்திய   
  கூற்றினை*  குரு மாமணிக் குன்றினை  நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை* 
  காற்றினை புனலை சென்று நாடி*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*   

      விளக்கம்  


  • நித்யாநந்தத்தினால் காளைபோல் மேனாணித்திருக்குமவன்; இமயமலையில் திருப்பிரிதியென்னுந் திருப்பதியிலிருக்கு மிருப்பைக்காட்டி என்னை வசப்படுத்திக் கொண்டவன்; இஹலோகத்துப் பலன்களாகிய க்ஷேத்ரபுத்ர களத்ராதிகளையும் ஸ்வர்க்க லோகத்துப் பலன்களையும் விரும்புவார்க்கு அளிக்க வல்லவன்; இதற்குறுப்பாக ஸர்வ சக்தியுக்தன் : தான் விரும்பின வ்யக்திகளைப் பரமபதத்திலே கொண்டு வைக்க வல்லவன்; கையிலே திருவாழி கொண்டு வியாபாரிக்குந் திறத்தினால் எதிரிகட்கு யமன் போன்றவன்; சிறந்த நீலமணிமயமான பர்வதம் போன்ற வடிவையுடையவன்; திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவுகொண்டெழுந்தருளியிருப்பவன்; ஸ்பரிசத்தாலே பரமசுகமளிக்குங் காற்றுப்போலே விரும்பத் தகுந்தவன்; தண்ணீர்போலே உயிர்தரி்ப்பதற்கு ஹேதுவாயள்ளவன்; ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையிற் காணப்பெற்றேன்.


  1643.   
  துப்பனை துரங்கம் படச்சீறிய தோன்றலை*  சுடர் வான் கலன் பெய்தது ஓர் 
  செப்பினை*  திருமங்கை மணாளனை*  தேவனை திகழும் பவளத்துஒளி 
  ஒப்பனை*  உலகுஏழினை ஊழியை*  ஆழிஏந்திய கையனை அந்தணர் 
  கற்பினை*  கழுநீர் மலரும் வயல்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

      விளக்கம்  


  • துப்பு உடையவன் துப்பன்; துப்பாவது நினைத்தபடி செய்து தலைக்கட்டிக் கொள்ளவல்ல ஸாமர்த்தியம்; எம்பெருமானுடைய ஸத்ய ஸங்கல்பத்வத்தைச் சொன்னபடி. துரங்கம் - வடசொல்; விசையாக நடப்பதென்று குதிரைக்குக் காரணப்பெயர். கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் ஒருவனான கேசி யென்பவன் குதிரை யுருவங்கொண்டு ஆயர்களுக்கெல்லாம் மிக்க பயங்கரனாய்க் கனைத்துக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்து வர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இரு பிளவாக வகிர்ந்து தள்ளின னென்ற வரலாறு காண்க. சுடர் வான் கலன்பெய்ததோர் செப்பினை = ஒளிமிக்க சிறந்த திருவாபரணமிட் வைக்கும் செப்பு என்னலாம் எம்பெருமானை. “செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில், தங்கிய பொன் வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்னுந் திருவாபரணங்களை சீர்மை பெறுமிட மென்கை. அன்றியே, ‘சுடர்வான்கலன்’ என்று பிராட்டியாகிற திருவாபரணத்தைச் சொல்லிற்றாகவுமாம்; இதற்கு விவரணம் ‘திருமங்கை மணாளனை’ என்றது. ‘தேவனை’ என்றதற்கு – “பிராட்டியுந்தானுமான சேர்த்தியிலே உண்டான ஒற்றுமஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும் மாளிகைச் சாந்தின் நாற்றமுமாய்க்கொண்டு திருமேனியில் புகர்தோன்ற நின்ற நிலை” என்ற பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியான வாக்கியம் ரஸிக்கத்தக்கது. அந்தணர் கற்பினை = ‘கற்பு’ என்று நீதிநெறிக்கும் கல்விக்கும் பெயர்.


  1644.   
  திருத்தனை திசை நான்முகன் தந்தையை*  தேவ தேவனை மூவரில் முன்னிய 
  விருத்தனை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய
  அருத்தனை*  அரியை பரிகீறிய  அப்பனை*  அப்பில்ஆர் அழல்ஆய் நின்ற 
  கருத்தனை* களி வண்டுஅறையும் பொழில்*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

      விளக்கம்  


  • என்னும் வடசொல் ‘திருத்தன்’ எனத்திரிந்தது. அவாப்த ஸமஸ்த காமனாகையாலே எப்போதும் திருப்தியையுடையவன் என்றபடி. திசைநான்முகன் தந்தையை இவ்வருகுண்டான உலகங்களைப் படைப்பதற்காகப் பிரமனைத் தோன்றுவித்தவ னென்கை. ‘திசைமுகன்’ என்றாவது ‘நானமுகன்’ என்றாவது பிரயோகிக்கவேண்டியிருக்க, ‘திசைநான்முகன்’ என்றது தமிழ் வழக்கு. என்னும் வடசொல் விருத்தன் எனத்திரிந்தது. கண்ணுதல் கூடிய அருத்தன் நுதல்-நெற்றி; நெற்றியிற் கண்ணையுடையவன் ருத்ரன்; அவன் கூடிய த்தையுடையவன். அரி – ஹரி. பரி - குதிரை; கேசியென்னு மசுரன். அப்பில் ஆரழலாய் நின்ற அப்பு – ஜலம்; (வடசொல்) ஜலத்திலுள்ள ஆரழல் - படபாக்நி; அது ஜலாம்சமெல்லாம் தன்னிடத்திலே வந்து சுவறும்படி யிருக்குமாபோலே ஸகல பதார்த்தங்களும் தன் பக்கலிலே வந்து லயிக்கும்படி யிருக்கிறவன் என்கை. என்னும் வடசொல் ‘கருத்தன்’ எனத் திரிந்தது.


  1645.   
  வெம்சினக் களிற்றை விளங்காய் விழக்*  கன்று வீசிய ஈசனை*  பேய்மகள்- 
  துஞ்ச நஞ்சு சுவைத்துஉண்ட தோன்றலை*  தோன்றல் வாள்அரக்கன் கெடத் தோன்றிய-
  நஞ்சினை*  அமுதத்தினை நாதனை*   நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை* 
  கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*

      விளக்கம்  


  • வெஞ்சினக் களிற்றை மிக்க கோபங்கொண்ட மாயானை போன்றவன் எம்பெருமான் என்கிறார்; அடியவர்கள் பக்கல் எம்பெருமானுக்கு அநுக்ரஹம் இருக்கவேண்டியது போல, எதிரிகள் பேரில் நிக்ரஹம் இருக்கவேண்டியதும் ஆவச்யகமாதலால் அதனை அநுஸந்திக்கிறபடி. ஆச்ரித விரோதிகள் திறத்தில் வெஞ்சினக்களிறு போன்றவனென்க. (விளங்காய் இத்யாதி.) முள்ளைக்கொண்டே முள்ளைக்களைவது போல, வத்ஸாஸுரனைக் கொண்டு கபித்தாஸுரன்மேல் வீசி யெறிந்து இருவரையும் ஒன்று சேர முடித்தவன்; பூதனையானவள் மாளும்படி அவளுடைய முலைத் தடத்து நஞ்சை உறிஞ்சியுண்ட மதலை; நானே அரசனென்று மார்பு நெறித்திருந்த இராவணனுக்கு விஷம்போல் தோன்றினவன்; விபீஷணாழ்வான்போல்வார்க்கு அமுதமாயிருப்பவன்; தன்னை விரும்பு மன்பர்க்குச் சென்னிக்கு மலர்ந்த பூவாயிருப்பவன்; கம்ஸனுடைய தீய புந்தியை அவன்றன்னோடே போக்கி, உகவாதாரோடு செவ்வை யழியப் பரிமாறுமவன்; ஆக இப்படிப் பட்டவனைத் திருக்கண்ணமங்கையிற் கண்டே னென்றாராயிற்று. தோன்றல் – சிறுபிள்ளையும் பெருவீரனும். ‘நச்சுவாருச்சிமேல்’ என்ற விடத்து உச்சியைச் சொன்னது அற்றும் அவயவங்கள் எல்லாவற்றுக்கும் உபலக்ஷணம்; திருவாய்மொழியில் (1-9) “இவையுமலையு முவையும்” என்ற திருவாய்மொழியில் “என்னுடைச் சூழலுளானே – உன்னருகலிலானே – என்னொருக்கலையானே – என்னெஞ்சினுளானே – என்னுடைத் தோளிணையானே – என்னுடை நாவினுளானே – என் கண்ணினுளானே – என் னெற்றியுளானே – என்னுச்சியுளானே” என்றவைகாண்க.


  1646.   
  பண்ணினை பண்ணில் நின்றதுஓர் பான்மையை*  பாலுள் நெய்யினை மால்உருஆய் நின்ற- 
  விண்ணினை*  விளங்கும் சுடர்ச் சோதியை*  வேள்வியை விளக்கின்ஒளி தன்னை*
  மண்ணினை மலையை அலை நீரினை*  மாலை மாமதியை மறையோர் தங்கள்- 
  கண்ணினை*  கண்கள் ஆரளவும் நின்று*  கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே*  

      விளக்கம்  


  • உரை:1

   பசுர் வேத்தி சிசுர் வேத்தி வேத்தி காநரஸம் பணீ” (ஸங்கீதத்தின் இனிமைளை நாற்கால் விலங்கு அறியும், குழந்தை அறியும், பாம்பு அறியும்) என்கிறபடியே பண் அனைவர்க்கும் ஸ்ப்ருஹணீயமாயிருப்பது போல எம்பெருமானும் விரும்பத்தக்கவன் என்றபடி. (பண்ணில் நின்றதோர் பான்மையை) ‘பண்ணினை’ என்று கீழ்ச் சொன்னதன் கருத்தே இதற்குமாயினும் எம்பெருமானுடைய போக்யதையைப் பன்னியுரைக்கின்றபடி. இதில் புநருக்திதோஷம் புகாது. (பாலுள் நெய்யினை.) 1. “கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்றுளெங்கும்” என்கிறபடியே பாலினுள்ளே உறைந்திருக்கும் நெய்போலே கரந்த சிலிடந்தொறுமிடந்திகழ் பொருடொறுங் கரந்தெங்கும் பரந்துளன் என்கை. (மாலுருவாய் நின்ற விண்ணினை.) நித்ய விபூதி நிர்வாஹகனாயிருக்குமவனென்கை. ‘மாலுருவாய் நின்ற’ என்றது விண்ணுக்கு விசேஷணம்; பரமபதமானது த்ரிபாத்விபூதி யென்னப்படும்; என்கிற புருஷஸூக்தத்தின்படியே இந்த விபூதியில் எல்லா பூதங்களும் இவனுக்கு நாலத்தொன்று என்னும்படி அறபமாயிருக்கும்; பரமாகாசத்தில் அவனுடைய நித்யமான விபூதி த்ரிபாத் என்னும்படி மும்மடங்காயிருக்கும்; ஆக இந்தப் பரப்பைத் தெரிவிக்கும் இவ்விசேஷணம். (விளங்கும் சுடர்ச் சோதியை.) அங்கே அளவற்ற தேஜோ ரூபமான திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனாய் நிற்பவன். (வேள்வியை.) யஜ்ஞஸ்வரூபி; ஸகல கருமங்களாலும் ஆராதிக்கப்படுமவ னென்றவாறு. (விளக்கினொளிதன்னை.) விளக்கொளியானது தன்னைத்தானே பிரகாசிப்பித்துக் கொண்டு பிறவற்றையும் பிரகாசம் படுத்துமா போலே ஸ்வபர ப்ரகாசகன். (மண்ணினை.) பூமியானது ‘ஸர்வம்ஸஹா’ என்ற பெயர்க்கு ஏற்ப எல்லாவற்றையும் பொறுத்திருப்பது போல, செய்தார் செய்த குற்றங்களை யெல்லாம் பொறுப்பவனென்கை. (மலையை.) இப்படிப்பட்ட தன் ஸ்வபாவம் ஒருவரால் சலிப்பிக்கவொண்ணாமே உறுதிகொண்டிருப்பவ னென்கை. (அலைநீரினை.) பள்ளமான விடங்களிலே பாயுமே தண்ணீர்; குஹப்பெருமாள், விதுரர், மாலாகாரர் போல்வாரிடத்தும் பாயுந்தண்ணீர் எம்பெருமான். (மால்.) இன்பரிடத்தில் வ்யாமோஹமே வடிவாயிருப்பவன்.

   உரை:2

   இசையாகவும், இசைத் தன்மையாகவும் உள்ள எம்பெருமான் பாலில் மறைந்துள்ள நெய் போன்றவன். வானவன்; ஒளிமேனியானவன்; வேள்வியானவன்; ஒளிவிளக்கானவன்; பூமியைப் போல் எல்லோருக்கும் ஆதாரமாய் மலைபோல் நிலையானவன். அலை நீர் போல் கலந்து பரிமாறுபவன். ஞானத்தைத் தருபவன். அந்தணர்கள் கண்களான இவனை என் கண்கள் ஆர, நான் திருக்கண்ண மங்கையில் கண்டு கொண்டேன்.


  1647.   
  கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்று*  காதலால் கலி கன்றி உரைசெய்த* 
  வண்ண ஒண்தமிழ் ஒன்பதோடு ஒன்றுஇவை*  வல்லர்ஆய் உரைப்பார் மதியம் தவழ்*
  விண்ணில் விண்ணவர்ஆய் மகிழ்வு எய்துவர்*  மெய்ம்மை சொல்லில் வெண்சங்கம் ஒன்றுஏந்திய -
  கண்ண!*  நின் தனக்கும் குறிப்புஆகில்-  கற்கலாம்*  கவியின் பொருள் தானே*   (2)

      விளக்கம்  


  • நலமந்த மில்லதோர் நாடாகிய திருநாட்டிற் சென்று காணவேண்டிய பரமபுருஷனை இந்நிலத்தில் தானே திருக்கண்ணமங்கையில் காணப்பெற்றேனென்று அபிநிவேசத்தோடே ஆழ்வாரருளிச் செய்த இத்திருமொழியை நன்கு ஓதியுணருமவர்கள் விண்ணுலகத்தில் தேவர்களாய் விளங்கி மகிழ்வர்கள் என்று பயனரைத்து, அவ்வளவோடே தலைக்கட்ட மாட்டாமல் எம்பெருமானை நோக்கி ஒரு வார்த்தை யருளிச் செய்கிறார் ஈற்றடியில்; எம்பெருமானே! உனக்கும் இதிலே ஆதரமுண்டாகில் எனக்கு சிஷ்யனாயிருந்து கற்றவேண்டுங்காண் என்கிறார். இத்திருமொழியின் இனிமையைக் கண்டவாறே எம்பெருமான்றானும் “கலயாமி கலித்வம்ஸம்” என்று தனியன் தொடங்கி அநுஸந்தித்து அதிகரிக்கப் புகுவன் என்று காட்டினவாறு. அவ்வளவு சீரிய பொருள் குடிகொண்டதாம் இத்திருமொழி. சொல்லின்பமும் பொருளின்பமும் எம்பெருமானையும் வணங்கப்பண்ணு மென்க. “ஸ்வதஸ் ஸர்வஜ்ஞனென்று இறுமாந்திருந்தால் போகாது; என்பாடே அதிகரிக்கில் அறியலாம்” என்றும், “ஒரு வஸிஷ்டன்பாடே ஸாந்தீபிநிபாடே தாழநின்று அதிகரிக்கக் கடவ அவனக்குத் திருமங்கையாழ்வார்பாடே. அதிகரிக்கை தாழ்வோ?” என்றுமுள்ள வியாக்கியாள ஸ்ரீஸூக்திகள் இங்கு அறியத்தக்கன. ராமாவதாரத்தில் வஸிஷ்ட சிஷ்யனென்றும், க்ருஷ்ணாவதாரத்தில் ஸாந்தீபிநி சிஷ்யனென்றும் பேர் பெற்ற பெருமானுக்கு அர்ச்சரவதாரத்தில் பரகால சிஷ்யனென்று பெயர் பெறுகை பெருமையே யாமென்கை.