2 எண்ணிக்கை பாடல் பாட

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்*  விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*
பின்னுருவாய் முன்னுருவில் பிணி  மூப் பில்லாப்*  பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது,*  எண்ணும்-
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்*  புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை*  தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே. (2)

நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!*  நிலாத்திங்கள் துண்டத்தாய்! நிறைந்த கச்சி- 
ஊரகத்தாய்,* ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்!*  உள்ளுவார் உள்ளத்தாய்,*  உலகம் ஏத்தும்- 
 
காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!*  காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு- 
பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்!*  பெருமான் உன் திருவடியே பேணினேனே.  (2)

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய்! என்றும்* கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே! என்றும்* 
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய்! என்றும்* வட திருவேங்கடம் மேய மைந்தா! என்றும்* 
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே! என்றும்* விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய்! என்றும்* 
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே! (2)  

மை வண்ண நறுங் குஞ்சிக் குழல் பின் தாழ* மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட* 
எய் வண்ண வெம் சிலையே துணையா* இங்கே- இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்* 
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்* கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே* 
அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!* அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே! (2)      

செங் கால மட நாராய் இன்றே சென்று* திருக்கண்ணபுரம் புக்கு என் செங் கண் மாலுக்கு* 
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில்* இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை* நாளும்- 
பைங் கானம் ஈது எல்லாம் உனதே ஆகப்* பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன்* தந்தால்- 
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும்* இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே (2)  

அன்று ஆயர் குலமகளுக்கு அரையன்-தன்னை* அலை கடலைக் கடைந்து அடைத்த அம்மான்-தன்னை* 
குன்றாத வலி அரக்கர் கோனை மாள* கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து குலம் களைந்து -
வென்றானை* குன்று எடுத்த தோளினானை* விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்- 
நின்றானை* தண் குடந்தைக் கிடந்த மாலை* நெடியானை-அடி நாயேன் நினைந்திட்டேனே (2)

மின்னு மா மழை தவழும் மேக வண்ணா!* விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று* 
அன்னம் ஆய் முனிவரோடு அமரர் ஏத்த* அருமறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை* 
மன்னு மா மணி மாட மங்கை வேந்தன்* மான வேல் பரகாலன் கலியன் சொன்ன* 
பன்னிய நூல் தமிழ்-மாலை வல்லார்* தொல்லைப்- பழவினையை முதல் அரிய வல்லார் தாமே (2)