2 எண்ணிக்கை பாடல் பாட

பூமன்னு மாது பொருந்திய மார்பன்*  புகழ் மலிந்த- 
பாமன்னு மாறன்*  அடிபணிந்து உய்ந்தவன்*  பல் கலையோர்- 
தாம்மன்ன வந்த இராமானுசன்*  சரணாரவிந்தம்- 
நாம்மன்னி வாழ*  நெஞ்சே!  சொல்லுவோம் அவன் நாமங்களே.   (2)

கள்ளார்  பொழில்  தென்ன‌ரங்கன்*  கமலப் பதங்கள் நெஞ்சில்- 
கொள்ளா*  மனிசரை நீங்கி*   குறையல் பிரான‌டிக்கீழ்- 
விள்ளாத அன்பன் இராமானுசன்*  மிக்க சீலமல்லால்- 
உள்ளாது என் நெஞ்சு*  ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே. (2) 

மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,*  வஞ்ச முக்குறும்பாம்- 
குழியைக் கடக்கும்*  நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* 
பழியைக் கடத்தும்  இராமானுசன் புகழ் பாடி*  அல்லா- 
வழியைக் கடத்தல்*  எனக்கு இனி யாதும் வருத்தம‌ன்றே.  (2)

தாழ்வு ஒன்றில்லா மறை தாழ்ந்து*  தலமுழுதும் கலியே- 
ஆள்கின்ற நாள் வந்து*  அளித்தவன் காண்மின்*  அரங்கர்மௌலி- 
சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல்ல‌ருளால்* 
வாழ்கின்ற வள்ளல்*  இராமானுசன் என்னும் மாமுனியே.  (2)

ஆண்டுகள் நாள் திங்களாய்*  நிகழ்காலம் எல்லாம் மனமே!-
ஈண்டு*  பல்யோனிகள்  தோறும்  உழல்வோம்*  இன்றோர்   எண்ணின்றியே‍‍‍‍‍-
காண்தகு தோவ‌ண்ணல் தென்ன‌த்தி ஊரர் கழலிணைக்கீழ்ப்
பூண்டன்பாளன்*  இராமானுசனைப் பொருந்தினமே.  (2)

உதிப்பன உத்தமர் சிந்தையுள்*  ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி- 
கொதித்திட*  மாறி நடப்பன*  கொள்ளைவன் குற்றம்எல்லாம்-
பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்* 
எதித்தலை நாதன்*  இராமானுசன் தன் இணைஅடியே  (2)

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும்,*  நிறை வேங்கடப்பொற்
குன்றமும்*  வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்*
உன்தனக்கு எத்தனை இன்பந் தரும் உன் இணைமலர்த்தாள்*
என்தனக்கும் அது,*  இராமாநுச! இவை ஈந்தருளே. (2)

கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல்*  கலைப் பெருமான்- 
ஒலிமிக்க பாடலை உண்டு*  தன்னுள்ளம் தடித்து,*  அதனால்-
வலிமிக்க சீயம் இராமாநுசன்*  மறைவாதியராம்* 
புலிமிக்கது என்று,*  இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே.

இடுமே இனிய சுவர்க்கத்தில்*  இன்னும் நரகிலிட்டுச்-
சுடுமே?  அவற்றை*  தொடர்தரு தொல்லை*  சுழல்பிறப்பில்-
நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம்வசத்தே*
விடுமே? சரணமென்றால்,*  மனமே! நையல் மேவுதற்கே? (2)

செழுந்திரைப் பாற்கடல் கண்துயில் மாயன்* திருவடிக்கீழ்-
விழுந்திருப்பார் நெஞ்சில்*  மேவு நல்ஞானி*   நல் வேதியர்கள்-
தொழும் திருப்பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்*
எழுந்திரைத்து ஆடும் இடம்*  அடியேனுக்கு இருப்பிடமே. (2)  

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்* மாலிருஞ் சோலையென்னும்‍- 
பொருப்பிடம்* மாயனுக்கு என்பர் நல்லோர்,* அவை தன்னொடு வந்து‍-
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து*  இன்று அவன்வந்து-  
இருப்பிடம்*  என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே. (2)

இன்புற்ற சீலத்து இராமானுச,*  என்றும் எவ்விடத்தும்- 
என்புற்ற நோய்*  உடல் தோறும் பிறந்து இறந்து*  எண்ணரிய‍‍-
துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்றுண்டு*  உன் தொண்டர்கட்கே‍- 
அன்புற்று இருக்கும்படி,*  என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே. (2) 

அங்கயல்பாய்  வயல் தென் அரங்கன்,*  அணி ஆகமன்னும்- 
பங்கய மாமலர்*  பாவையைப் போற்றுதும்   பத்தியெல்லாம்- 
தங்கியது தென்னத் தழைத்து நெஞ்சே!  நம் தலைமிசையே *
பொங்கிய கீர்த்தி *  இராமாநுசன் அடிப் பூ மன்னவே. (2)