விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*  சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி* 
    பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி* 
    குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி*  வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி* 
    என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்*  இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்.(2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இ உலகம் - இந்த லோகங்களை
அளந்தாய் - (இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி - (உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி - பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு - பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்

விளக்க உரை

உரை:1

பாரதப்போரில் அர்ஜுநன் ‘இரண்டு சேனைகளின் நடுவே தேரைக் கொண்டுபோய் நிறுத்து’ என்ன, அங்ஙனமே செய்த கண்ணபிரான் பெண்களின் வேண்டுகோளை மறுக்க மாட்டாதானாதலால் அவர்களின் பிரார்த்தனைக்கு இசைந்து, ‘பெண்காள்! இதோ புறப்பட்டு வருகிறேன்’ என்று சொல்லித் திருப்பள்ளியறையில் நின்றும் திவ்ய ஸிம்ஹாஸனத்தளவும் வரத்தொடங்க, அதனைக் கண்ட ஆய்ச்சிகள், பண்டு தண்டகாரணிய வாசிகளான முனிவர் ‘இராமபிரானைக் கண்டவுடனே ராஷஸரால் நமக்கு நேரும் பரிபவங்களைச் சொல்லி முறையிட வேணும்’ என்று பாரித்திருந்தவர், இராமபிரானைக் கண்டவாறே ராக்ஷஸ பரிபவங்களை மறந்து மங்களா சாஸநம் பண்ணத்தொடங்கினாற்போல, இவர்களும் தங்கள் மநோர தங்களையெல்லாம் மறந்து ‘இத்திருவடிகளைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லுவது!’ என வருந்தி அத்திருவடிகளை யெடுத்து முடிமேற் புனைந்து கண்களில் ஒற்றிக்கொண்டு, பண்டு உலகளந்தருளினவற்றையும் சகட முதைத்தவாற்றையும் நினைந்து வயிறெரிந்து இத்திருவடிகட்கு ஒரு தீங்கும் நேரா தொழியவேணுமென்று மங்களாசாஸஞ் செய்வதாய்ச் செல்லும் பாசுரம், இது. உலகளந்தருளினபோது அமரர்கள் தங்கள் பிரயோஜநத்தைப் பெற்று அவ்வளவோடே மீண்டனரேயன்றி, ‘இம் மெல்லடிகளைக் கொண்டு காடுமோடையும் அளக்கப் பண்ணினோமே!” என்று வயிறெரிந்து அத்திருவடிகட்குக் காப்பிட்டார் ஆருமில்லை என்கிற குறைதீர இப்போது இவ்வாயர் மாதர் மங்களாசாஸநம் பண்ணுகின்றனரென்க. இவ்வுலகம் என்ற சொல்லாற்றலால் மென்மைபொருந்திய திருக்கைகளை யுடைய பிராட்டிமாரும் பிடிக்கக்கூசும்படி புஷ்பஹாஸ ஸுகுமாரமான திருவடி எங்கே! *உடையங்கடியனவூன்று வெம்பாற்களுடைக்கடிய வெங்கானிடங்கள் எங்கே! என்ற வாறு தோற்றும். அளந்தாய்!- ‘அளந்தான்’ என்பதன் ஈறுதிரிந்த விளி. போற்றி, வாழி, பல்லாண்டு- இவை ஒரு பொருட்சொற்கள். அடிபோற்றி-‘ தாளாலுலக மளந்த அசவுதீரவேணும் என்றபடி.

உரை:2

"இந்திரனை மஹாபலி துன்புற்றிய காலத்தில், இவ்வுலகங்களை இரண்டடியால் அளந்தவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். சீதையைத் தேடிப் போய் தென் இலங்கையை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமைக்கு மகிமையுண்டாகுக. வண்டி உருவில் வந்த சகடாசிரனை உதைத்து வெற்றி கொண்டவனே, உன் புகழ் ஓங்கட்டும். கன்று வடிவாக வ்ந்த அரக்கனை, எரிகருவியாகக் கொண்டு விளாமர வடிவாக வந்த அரக்கனையும் கொன்றவனே! உன் திருவடிகளுக்கு மங்களம். கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து கோவலர்களைக் காத்தவனே! உனக்கு மங்களம். பகைவரை அழிக்கும் உன் வேலுக்கு மங்களம். எப்பொழுதும் உன் வீர செயல்களைக் கூறி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் இங்கு வந்தோம். எங்களுக்கு கருணை புரிவாயாக!"

English Translation

Glory is to your feet that spanned the Earth as Vamana. Glory is to your strength that destroyed Lanka as Kodanda Rama. Glory is to your fame that smote the bedeviled cart as Krishna in the cradle. Glory is to your feet that threw and killed the demon-calf Vatsasura. Glory is to your spear that overcomes all evil. Praising you always humbly we have come to you for boons. Bestow your compassion on us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்